கேபியும் மூன்று பெண்களும்

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவின் போது தமிழ் மின்னஞ்சலுக்காக எழுதியது.

கேபியும் மூன்று பெண்களும்

balachander_1கதவு தட்டும் ஓசை கவிதாவின் ஞாயிற்றுக் கிழமை மதியத் தூக்கத்தைக் கெடுத்தது. அன்று மட்டும்தான் அவள் பகலில் தூங்க முடியும். எரிச்சலோடு அம்மாவைக் கூப்பிடும் முன் அம்மாவே அறைக்குள் வந்தாள்.

“கவிதா, சிந்து வந்திருக்காங்க. ஒன்னப் பாக்கனுமாம். உள்ள அனுப்பட்டுமா?”

சரி என்று சைகையாலே வரச்சொல்லிவிட்டு மடமடவென எழுந்தாள். அதற்குள் சிந்து அறைக்குள் வந்து வணக்கம் சொன்னாள்.

”மதியத் தூக்கத்துல தொந்தரவு பண்ணீட்டேனா. கொஞ்சம் மனசு சரியில்ல. ஒங்கிட்ட பேசிட்டுப் போலாமேன்னு வந்தேன். இங்க வர்ரேன்னு ஜேகேபி சாருக்குக் கூடத் தெரியாது.”

அமைதியான புன்னகையோடு, “உக்காருங்க. என்ன சாப்டுறீங்க?” என்றாள் கவிதா.

“தண்ணி மட்டும் போதும். காலைல இருந்து ஒரு விஷயம் மண்டைக்குள்ளயே ஓடிட்டு இருக்கு. கேபி சார் போயிட்டார். ஆனா நம்ம மட்டும் இந்த உலகத்துல தொடர்ந்து காலகாலமா இருக்கப் போறோம். அதான் அவரோட பெஸ்ட் கேரக்டர் கவிதாவைப் பாத்து பேசலாம்னு வந்தேன்.”

கவிதாவின் முகத்தில் வேதனை வந்ததையோ போனதையோக் கூட சிந்துவால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்கள் முகத்தில் அமைதி அடுக்குமாடி வீடு கட்டும் போல.

“நானும் கேள்விப்பட்டேன். நீங்க பேச வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“நன்றி கவிதா. கேபி சார் ஒங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலைன்னு வருத்தமா?” படக்கென்று கேட்டுவிட்டாள் சிந்து.

aval_oru_thodarkat_2261020eஎண்ணெயில் விழுந்த அப்பளப்பொரியாய்ச் சிரித்தாள் கவிதா. அது அபூர்வராகங்களாக ஒலித்தது.

“எனக்கு மட்டுமா? ஒங்களுக்குந்தான் கல்யாணம் செஞ்சு வைக்கல அவர். நல்லவேள நூல்வேலி பேபி மாதிரி மாடில இருந்து தள்ளிக் கொல பண்ணலையே. என்ன? சொன்னது தப்பாத் தப்பா?”

சரியாக அம்மா உள்ளே வந்தாள். “கவிதா, செல்வின்னு யாரோ கார்ல வந்திருக்காங்க.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் செல்வி. சின்ன வயசுப் பெண். வயதுக்கு மீறிய பெரிய குங்குமப் பொட்டு. சுற்றிக் கட்டிய பட்டுச் சேலை. தீர்க்கமான கண்கள்.

“மன்னிக்கனும் பேசிக்கிட்டிருக்குறப்போ குறுக்க வந்துட்டேன். நாந்தான் மூன்று முடிச்சு செல்வி. ஏதோ கல்யாணம்னு பேசிக்கிட்டிருந்தீங்களே என்ன அது?”

”நீங்கதான அது. வாங்க வாங்க. சீட்டு விளையாட இன்னொரு கை கெடச்ச மாதிரி ஆயிருச்சு.” சிந்துதான் முதலில் சகஜமானாள். “எனக்கும் கவிதாவுக்கும் படத்துல கல்யாணம் பண்ணி வைக்காம விட்டுட்டாரே கேபி சார்னு பேசிட்டு இருந்தோம். அப்பதான் நீங்க வந்தீங்க.”

“எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரே. அதுலயும் என் மேல தவறா ஆசப்பட்டவனோட அப்பாவையே எனக்குக் கணவனாக்கிட்டாரே. எது எப்படியோ. இப்ப நல்லா இருக்கோம். அந்தப் பையனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வெச்சிட்டேன். சின்னஞ்சிறுசுகளைக் கரையேத்திட்டா கடமை முடிஞ்சிரும்.”

”என்ன விடச் சின்னப் பொண்ணா இருக்கீங்க. கடமையைப் பத்தி பாடமே எடுப்பீங்க போல இருக்கே.” கவிதாவின் கிண்டல்.

“கடமைன்னாலே கவிதானே. அதுக்கப்புறம் வந்தவங்கதானே நாங்கள்ளாம்.”

“செல்வி சொல்றது உண்மைதான். கடமையைப் பொறுத்த வரைக்கும் உங்களுக்குப் பிறகுதான் மத்தவங்க. எனக்குத்தான் கடமையே இல்லை. ஒரு ஃப்ரீ பேர்ட். நானொரு சிந்து. காவடிச் சிந்து”

“இதுல ஒன்னு கவனிச்சிங்களா? நம்ம மூனு பேருக்குள்ள ஒவ்வொருத்தரும் ஒருவிஷயத்துல ஒத்துப் போறோம். இன்னொருத்தரோட ஒத்துப்போகல.” புதிர் போட்டுப் பேசினாள் செல்வி.

படக்கென்று பிரகாசமானாள் சிந்து. “ஆமா. செல்வி சொல்றது சரிதான். நானே சொல்றேன்.

kbகவிதாவுக்கும் செல்விக்கும் அடுத்தவங்க கொழந்தைங்கள தன்னோட கொழந்தைகளைப் பாத்துக்க வேண்டியிருக்கு. எனக்கு எந்தப் பொறுப்பும் இல்ல.

செல்விக்கும் எனக்கும் இல்லறசுகம்னா என்னன்னு தெரியும். கவிதாவுக்கு அந்த வாய்ப்பு இல்ல.

கவிதாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகல. செல்விக்குக் கல்யாணம் ஆயிருச்சு.”

”மிச்சத்த நான் சொல்றேன்” என்று தொடர்ந்தாள் செல்வி.

“கவிதாவுக்கும் சிந்துவுக்கும் அம்மா உண்டு. அந்தவகையில் இருந்த ஒரே அக்காவையும் இழந்த அனாதை நான்.

எனக்கும் கவிதாவுக்கும் பி.சுசீலா பாடியிருக்காங்க. சிந்துவுக்கு சித்ரா.”

“முடிச்சிட்டீங்களா? நம்ம மூனு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்ன தெரியுமா?”

செல்வியும் சிந்துவும் கவிதாவை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

“ஒரு ஒற்றுமை இல்ல. ரெண்டு ஒற்றுமை இருக்கு.

மூனு பேருமே காதலிச்சிருக்கோம். ஆனா அந்தக் காதல் கைகூடல.”

அந்த அறையில் சட்டென்று அமைதி அடர்ந்தது.

”சரி. கேபி சாரோட மத்த கதாநாயகிகள்ள யாரா இருந்திருக்கலாம்னு நீங்க ஆசைப்படுறீங்க? எனக்கு பைரவி அக்கா மாதிரி இருக்க ஆசை. கணவனே உலகம்னு வாழ்றதும் ஒரு சந்தோஷந்தானே.” சிந்து சட்டென்று சூழ்நிலையை மாற்றினாள்.

“எனக்கு வறுமையின் நிறம் சிவப்பு தேவியாகனும். ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்காளே.” கனவில் மூழ்கினாள் கவிதா.

”எனக்கு அழகன் படத்துல வர்ர பிரியா ரஞ்சன் பிடிக்கும். அவங்களும் என்ன மாதிரி ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரக் கல்யாணம் பண்ணிருக்காங்க. ஆனா பிரியா ரஞ்சன் அவரைத்தான்  மனசாரக் காதலிச்சாங்க. என்ன மாதிரி காதலனைப் பறிகொடுக்கல.” செல்வியின் சிந்தனைகள் துடித்தோடின.

மொத்தத்தில் மூவருமே காதலில் வெற்றி பெறவே விரும்பியிருக்கிறார்கள். கேபி சார், பாவம் அவங்க மூனு பேரும்.

”சரி. கேபி சாரைப் பாத்து எதாச்சும் சொல்லனும்னா என்ன சொல்வீங்க?” கவிதா ஒரு புதுக்கேள்வியை எழுப்பினாள்.

sindhu_bhairavi_dvdசட்டென்று பட்டுச் சேலையால் மையிட்ட கண்களைத் துடைத்துக் கொண்டாள் செல்வி. “என் காதலனத்தான் தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுக் கொன்னீங்க. சரி. என் அக்கா என்ன பாவம் சார் பண்ணாங்க? வாழ்க்கைல எதுவுமே அனுபவிக்காத ஒரு தியாகி. நெருப்பு சுட்ட முகம். அவளையும் தற்கொலை செய்ய வெச்சி என்ன விட்டுப் பிரிச்சிட்டீங்களே கேபி சார். இது நியாயமா?” அக்காவை நினைத்து அழுதாள் செல்வி.

“உனக்கு அக்கான்னா எனக்கு அண்ணன். அவன் குடிகாரனாவே இருந்திருக்கலாம். அவன் திருந்தி நல்லவன் ஆனதுக்குப் பரிசா அவனைக் கொல பண்றது? திருந்து திருந்துன்னு ஆயிரம் தடவை அவன் கிட்ட சொல்லிருக்கேன். அப்படித் திருந்தி வர்ரப்போ எங்கிட்ட இருந்து அவனப் பிரிச்சிட்டீங்களே கேபி சார். குடிகாரனா உயிரோடயிருந்திருந்தா அவன் தெய்வம் தந்த வீடு வீதியிருக்குன்னு நிம்மதியாயிருந்திருப்பானே!” கவிதாவின் கேள்வி இது.

”கூடப் பொறந்தவங்களப் பிரியுறதுக்கே இவ்வளவு வேதனை. நான் பெத்த கொழந்தைய பிரிஞ்சிட்டு வந்திருக்கேன். ஜேகேபி சாரைப் பிரிஞ்சப்பக் கூட எனக்கு அவ்வளவு வலிக்கல. ஆனா பெத்த கொழந்தைய பரிசாக் குடுத்துட்டு வந்தப்போ உயிரே போயிருச்சு. பெத்த மகனைப் பிரியுற அளவுக்கு எனக்கு முற்போக்குத்தனம் தேவையா கேபி சார்?”

தட்டில் காபியோடு உள்ளே வந்தாள் அம்மா.

“மொதல்ல மூனு பேரும் அழுறத நிறுத்துங்க. நம்ம இப்படிதான்னு தலைல எழுதுறவன் பிரம்மாவாம். சினிமா பாத்திரங்களான நம்ம தலைல எழுதுன பிரம்மா கேபி சார். சரியோ முறையோ.. வாழ்க்கைல முன்னோக்கிதான் பாக்கனும். பழசையே பேசிட்டு இருந்தா வீணாப் போயிருவோம்.

ஓடிப் போன புருஷன் வருவாரான்னு காந்திருந்தேன். சாமியாரா வந்தாரு. குடிகாரனான மகன் திருந்துவானான்னு பாத்தேன். செத்தே போயிட்டான். எனக்கு மட்டும் இழப்பு இல்லையா. அதெல்லாம் அழுதாச்சு. உள்ள மருமக தையல் மிஷின்ல தச்சுக்கிட்டிருக்கா. பேரப்புள்ளைங்க விளையாண்டுட்டு சாப்பாட்டுக்கு வந்துரும். மடமடன்னு சமைக்கனும். அவங்கவங்க எடுத்த முடிவுகள் சரிதான். பழச யோசிக்காம அடுத்தடுத்த வேலைகளைப் பாருங்க. அதுக்கு முன்னாடி காபியக் குடிங்க.

கவிதாவும் சிந்துவும் செல்வியும் காபி டம்ளரை எடுத்துக் கொண்டார்கள். ஒரு மெல்லிய அமைதியில் கொஞ்சம் கொஞ்சமாகக் காபியைக் குடித்தார்கள்.

வசந்தகால நதிகளிலே… வைரமணி நீரலைகள்.. நீரலைகள் மீதினிலே… நெஞ்சிரண்டின் நினைவலைகள்!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கே.பாலச்சந்தர், திரைப்படம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கேபியும் மூன்று பெண்களும்

 1. stavirs says:

  hahaha yappa.. i wish kalki joined them 🙂

  2016-10-17 23:08 GMT+08:00 மாணிக்க மாதுளை முத்துகள் :

  > GiRa ஜிரா posted: “இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் மறைவின் போது தமிழ்
  > மின்னஞ்சலுக்காக எழுதியது. கேபியும் மூன்று பெண்களும் கதவு தட்டும் ஓசை
  > கவிதாவின் ஞாயிற்றுக் கிழமை மதியத் தூக்கத்தைக் கெடுத்தது. அன்று மட்டும்தான்
  > அவள் பகலில் தூங்க முடியும். எரிச்சலோடு அம்மாவைக் கூப்பிடும்”
  >

 2. Pingback: கேபியும் மூன்று பெண்களும் — மாணிக்க மாதுளை முத்துகள் – தமிழ்பண்ணை.நெட்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s