பச்சைக் குழந்தை வாசம்

உலகத்திலேயே சுவையான வாசம் எது? சுகமான வாசமுண்டு. சுவையான வாசமுண்டா?

உண்டு. அதுதான் பச்சைக் குழந்தை வாசம்.

பிள்ளை பெற்ற தாயைக் கேட்டுப் பாருங்கள். அவள் சொல்வாள். பிள்ளையைத் தூக்கிச் சுமந்த தந்தையைக் கேளுங்கள் அவன் சொல்வான்.

பாலருந்தும் பருவத்து பசும் குழந்தையை தூக்கம் கலையாமல் மெத்தெனத் தொட்டுப் பொத்திப் பொறுப்பாய்த் தூக்கும் போது நாசியில் ஏறுமன்றோ அந்தச் சுவையான வாசம். அந்த வாசத்தின் நேசத்தில் தன்னையே மறந்து கண்மூடி குழந்தையை முகராதார் யார்?

குழந்தையைச் சுற்றிய மென்பருத்தித் துணியிலும் படுத்திருந்த பஞ்சுப் படுக்கையிலும் சேர்ந்திருக்குமே அந்த வாசம்.

பச்சைக் குழந்தை வாசத்தை அடுத்தவர் ருசித்துக் கண்பட்டு விட்டால்? அதனால் அந்த வாசத்தை தான் மட்டுமே ருசிக்க வேண்டும் என்று எந்தத் தாய்க்கும் தோன்றும்.

மரகதக் குளிகையாய்ப் பாசிப்பயறு, பொன்னிறந்து ஆவாரம்பூ, காற்றையும் கறுப்பையும் விரட்டும் கத்தி வேப்பிலை, பூ மணக்காவிட்டாலும் தான் மணக்கும் வெட்டிவேர் எல்லாம் ஆய்ந்தெடுத்தேன். எடுத்ததெல்லாம் வெள்ளைத் துணியில் போட்டு நிழலிலே காய வைத்தேன். காய்ந்தவற்றையெல்லாம் கழுவிய உரலிலே இட்டு கடம்ப மரத்து உலக்கையால் இடித்தெடுத்தேன். அதையும் மாவாய்ச் சலித்தெடுத்தேன். தங்கத் தூளாய்த் மிளிரும் இந்த நானத்தூளைக் கொண்டுதான் குழந்தையைக் நீராட்டப் போகிறேன்.

பொன்முட்டைப் பொதி போல பத்திரமாய் பாலகனை அள்ளியெடுத்தேன். பலகையில் கால் நீட்டி அமர்ந்து, நீட்டிய காலில் பிள்ளையை இட்டேன். வெடுக்வெடுக்கென்று உதறும் வசம்பு கட்டிய பிஞ்சுக் கைகளையும் காப்பிட்ட கால்களையும் பார்க்கப் பார்க்க பாசத்தில் உயிர் ஊறும்! வைரப் பூவாய்ச் சிமிட்டும் கண்களைக் காணக் காணக் கோடி உலகமும் கிடைத்தாலும் கிடைக்காத பெருமை தோன்றும்! மென்பட்டுத் துணி போல மிருதுவாய் மேனி தொட்டு எண்ணெய் தேய்க்கையிலே கையெல்லாம் பால் சுரக்கும்! இப்படியும் எப்படியும் சொன்னாலும் போதாதே என் செல்வத்தை நீராட்டும் இன்பத்தை! வெதுநீர் மேனி வழிந்தோட செப்பிதழ் வாய் திறந்து குழறும் மொழியெல்லாம் தெய்வத்தின் குரலன்றோ! இன்பத்தின் கடலன்றோ!

பொன்னொளிரும் நானப் பொடியும் பசுமஞ்சள் பொடியும் விரல் கொண்டு கிள்ளி மேனியில் சிவக்கச் சிவக்கத் தேய்த்து பொற்பதுமை ஆக்கினேன் என் செல்வத்தை! மேலும் நீராட்ட நீராட்ட சந்தனம் போட்டுக் கழுவிய பொற்கலனாய் ஒளிருதே என் பிள்ளை. செம்பஞ்சுத் துண்டிலே ஏந்தி வருகையிலே பால்மழலைச் சுவை வாசம் மறைத்து தளிருடலெங்கும் திமிரி எழும் நானத்தூள் வாசம் நாசிக்கும் முக்தி தரும்.

புது நெல் இடித்தெடுத்த பச்சரிசி கருக்கி அரைத்து விளக்கெண்ணெய் குழைத்து குளிர்ச்சியாய் செய்து வைத்த அஞ்சனக் குமிழெடுத்தேன். கருமுத்து மிதக்கும் ஆப்பால் நிறத்து விழி சுற்றி மை தீட்டி அழகூட்டினேன். தென்னாட்டு மாநிறத்து மேனியில் கருஞ்சாந்துப் பொட்டு வைத்தால் பொருந்தாதோ என எண்ணி செஞ்சாந்துப் பொட்டு வைத்தேன். அதைக் கன்னத்திலும் தொட்டு வைத்தேன். நீராட்டிச் சீராட்டிய செல்வத்தைப் பார்த்து மகிழ கண்ணிரண்டு போதாமல் எண்கண் நான்முகனை வைதேன். என் உயிரெல்லாம் ஆனந்த மழை பெய்தேன்.

periyazhvar1சரவணப் பொய்கையிலே பைந்தமிழ் குழவியாம் கந்தனை நீராட்டிய கொற்றவையும் என் போலே மகிழ்ந்தாளோ!  இந்த வில்லிப் புதுவை நகர் சித்தன் என் போலே சீராட்டிச் சிறந்தாளோ! ஆலிலைக் குழந்தையே! ஆனந்த மழலையே! பெற்றால் தான் பிள்ளையா? ஆம். உள்ளத்தில் உன்னன்பைப் பெற்றால்தான் பிள்ளையே.

சேயைத் தாய் காக்கும். அந்தத் தாயைப் பின்னர் சேய் காக்கும். இது மானிடர் மரபு. அது மறந்த நோய் காக்காமல் எனைக் காக்க அனந்தப் பாய் கொண்டவனே பாய்வாய்! வாய் விட்டுக் கேட்கும் முன் காவாய்!

மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ அரங்கத் தணையானே தாலேலோ – பெரியாழ்வார்

மெய் திமிரும் – மேனியில் இருந்து வாசனை வெளிப்பட
நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய – நறுமணப் பொடியும் மஞ்சளும் கலந்து நீராட்ட
அஞ்சனமும் சிந்துரமும் – கண்மையும் செந்தூரமும் தீட்ட
வெய்ய – விரைவாக
கலைப்பாகி – (கலை)மானைப் பாகமாகக் கொண்டுள்ள உமையம்மை
கொண்டு உவளாய் நின்றாள் – இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு உமையாள் உன் முன்னே துணையாக நிற்கின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ – (கொற்றவையே) துணையாக நின்றிருப்பதால், ஐயா நீ அழாதே கண் வளராய்! தாலேலோ!
அரங்கத் தணையானே தாலேலோ – திருவரங்கத்திலே பள்ளி கொண்டிருக்கின்றவனே கண் வளராய்! தாலேலோ!

திருவரங்கத்திலே பாம்பணையிலே பள்ளி கொண்டிருக்கும் செல்வக் குழந்தையே! நீ அழாமல் உறக்கம் கொள்! உனக்குத் துணையாக வீரமாகாளியே நிற்கிறாள். நீ உறங்கி எழுந்ததும் நீராட்டுவதற்கு நானப் பொடியும் மஞ்சளும் கையில் வைத்திருக்கிறாள். அவை மட்டுமா? நீராட்டிய பின் உன் அழகுக் கண்களில் தீட்ட கண்மையும் நெற்றியில் தீட்ட செந்தூரமும் கொண்டு வந்திருக்கிறாள். ஆகையால் நீ எந்தத் துன்பமும் இல்லாமல் அழாமல் நிம்மதியாக உறக்கம் கொள்! தாலே தாலேலோ! தாலே தாலேலோ!
periyazhvar2

பொதுவாக எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் தங்கள் வீட்டுக் குழந்தை நினைவுக்கு வரும். ஆனால் பெரியாழ்வாருக்கு அரங்கனே குழந்தையாகத் தெரிகிறான். அந்த அன்பில் உறங்கும் குழந்தைக்குத் தாயாகித் தாலாட்டுகிறார். அதில் ஒரு தாலாட்டுப் பாசுரம் தான் மேலே சொன்னது.

ஆண்டவனை தாயே தந்தையே என்று அழைத்துப் பரவசம் கொண்டார் பலருண்டு. ஆண்டவனையே சிறு குழந்தையாக்கிச் சீராட்டிச் செல்லம் கொடுத்து தாய்ப் பாசம் காட்டியதாலோ என்னவோ வில்லிபுத்தூர் விட்டுணுசித்தரை பெரியாழ்வார் என்றே இன்றும் போற்றுகிறோம்.

இந்தப் பாடலில் பெரியாழ்வார் உமையாளை கலைப்பாகி என்றழைக்கிறார். பொதுவாக சிவனுடைய கையில் கலைமான் இருப்பதாகச் சொல்வது வழக்கு. ஆனால் அந்தச் சிவனின் இடப்பாகமாகவே அம்மை இருப்பதால் அந்த மானையும் உமையாளுக்கே பாகமாக்கி கலைப்பாகி என்று அழைக்கிறார் பெரியாழ்வார்.

இந்தப் பாடலில் நானப் பொடி என்று குறிப்பிடப்படுவது ஸ்நானப் பொடி என்று இன்று அழைக்கப்படுகின்ற பொடியேதான். ஆனால் ஸ்நானம் என்ற சொல்லில் உள்ள ஸ் என்ற எழுத்தை எடுத்துவிட்டுச் சொல்வதல்ல நானம்.

நானம் என்ற சொல்லுக்கு வாசனை நறுமணம் புனுகு என்றெல்லாம் பொருளுண்டு. ஆக நானப் பொடி என்பதற்கு வாசனைப் பொடி என்றே பொருள் கொள்ள வேண்டும். ஸ்கந்தனுக்கும் கந்தனுக்கும் பொருள் வேறுபாடு இருப்பது போல ஸ்நானத்துக்கும் நானத்துக்கும் பொருள் வேறுபாடு உண்டு. ஸ்நானம்(குளியல்) செய்வதற்குப் பயன்படுத்தப் பட்டாலும் நானப் பொடிக்குப் பொருள் வேறு. அருணகிரி காலம் வரைக்கும் நானம் என்ற சொல் புழக்கத்தில் இருந்திருக்கிறது. நானம் நாள்மலர் நறை அகில் நாவி தேன் நாறும் சோனை வார் குழல் என்று கம்பரும் நானம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

பெரியாழ்வார் குறிப்பிடும் நானப்பொடி இன்றும் திருவில்லிபுத்தூரில் கிடைப்பது வியப்பு தான்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in ஆழ்வார், இறை, திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு and tagged , , , , . Bookmark the permalink.

8 Responses to பச்சைக் குழந்தை வாசம்

 1. nparamasivam1951 says:

  படித்த பின் நன்கு புரிகின்றது. உமை அம்மனையும் பெருமாளையும் ஒருங்கிணைத்து பெரியாழ்வார் பாடியுள்ளார்.

  • GiRa ஜிரா says:

   ஆமா. உடன் பிறந்தவளும் ஒரு வகையில் தாய்தானே.

   • nparamasivam1951 says:

    எனது முக நூலில் பச்சை குழந்தை வாசம் பகிர்ந்தேன். எதிர்பாரா இடங்களில் இருந்து எல்லாம் வரவேற்பு, லைக்குகள். அனைத்தும் உங்களுக்கே.

    • GiRa ஜிரா says:

     அருமை. அவற்றை அப்படியே தமிழுக்கும் பெரியாழ்வாருக்கும் மாற்றிவிடுகிறேன் 🙂

 2. amas32 says:

  சின்னக் குழந்தைகளை எப்பவும் வாயால் முத்தமிட மாட்டோம், முகர்ந்து பார்த்து அன்பைப் பகிர்வோம். முத்தமிட்டால் கூட அதன் பஞ்சு கன்னங்களுக்கு வலிக்குமோ என்பதும் ஒரு காரணம், முகர்த்தாலே பேரின்பம் என்பதும் மற்றொரு காரணம்.
  இராகவன் அருமையான பாசுரத்தை எடுத்து விளக்கம் அளித்துள்ளீர்கள். பெரியாழ்வார் இறைவனுக்குக் கண் திருஷ்டி பட்டுவிடுமென்று பல்லாண்டு பாடியவராச்சே! அவர் அரங்கனை தாலாட்டி, சீராட்டி மகிழ்வதைப் பாசுரம் வாயிலாகக் கேட்பது நாம் பெற்ற பேறு. மிக்க நன்றி.

  amas32

  • GiRa ஜிரா says:

   உச்சிதனை முகர்ந்தால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடின்னு பாரதி பாடியதும் அதுதான் போல.

 3. JAYASHREE says:

  Ragava PERUMAI HOLKIRAEN. NEE VAZHGAVALAMUDAN

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s