கள் குடிக்கலாம் வாங்க – 1

பேச்சுவாக்குல ஒரு நண்பன் “ஆண்டாள் செஞ்ச தப்பை என்னால ஏத்துக்க முடியலன்னு”ன்னு ரொம்ப வருத்தப்பட்டுச் சொன்னான். அப்படி என்னதான் தப்பு செஞ்சுட்டாங்கன்னு கேட்டேன்.

ஆமாண்டா.. ஆண்டாள் மட்டுமில்ல. கம்பரும் அப்படித்தான். கண்ணதாசனும் அப்படித்தான். சேச்சே”ன்னு குமுறி அழுதான்.

ரெண்டு எளனி வாங்கிக் கொடுத்து சமாதானம் ஆனப்புறமா அவங்க செஞ்ச தப்பெல்லாம் எடுத்துச் சொன்னான்.

வாரணம் ஆயிரம் சூழன்னு ஆண்டாள் பிழையோட எழுதீட்டாங்க. வாரணங்கள் ஆயிரம்னுதானே எழுதியிருக்கனும்.

சரி. கம்பரு?

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்னு எழுதியிருக்காரு. உலகங்கள் யாவையும்னு எழுதியிருக்கனும்.

சரிடா.. கண்ணதாசன் உலகங்கள் யாவும் உன் அரசாங்கமேன்னுதானே எழுதியிருக்காரு. அவரையும் ஏன் கொற சொல்ற

ஒரு பாட்டுல உலகங்கள்னு எழுதுனாச் சரியா? ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்கள்னு எழுதாம எத்தனை பாடல்னு தப்பா எழுதியிருக்காரே”ன்னு மறுபடியும் குமுறத் தொடங்குனான்.

சரி.. நீங்க சொல்லுங்க. இவங்க மூனு பேரும் இந்த மூனு பாட்டுலயும் தப்பு செஞ்சிருக்காங்களா இல்லையா? உங்க விடைகளை மனசுல குறிச்சு வெச்சுக்கோங்க. என்னோட அறிவுக்குத் தெரிஞ்சதும் அதுவும் ஒத்துப் போகுதான்னு கொஞ்சம் கொஞ்சமாப் பாக்கலாம்.

கள் விகுதி பொதுவா பன்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுது. மாடுன்னா ஒருமை. மாடுகள்னா பன்மை. ஒருமைக்குப் பயன்படுத்துற சொல்லுல கள் சேத்துட்டா பன்மையாயிரும். இதுக்கான இலக்கணம் என்னன்னு சரியாப் புரிஞ்சிக்கிட்டா பல குழப்பங்கள் தீர்ந்திரும். வாழ்த்துகள்/வாழ்த்துக்கள் குழப்பமும் தான். ஏன்னா.. அதுக்குதானே இணையத்துல சண்டை நடக்குது.

சரி. இலக்கியக் கடல்ல தொபுக்கடீர்னு குதிக்கலாம் வாங்க. கடல்ல குதிக்கப் போறோமேன்னு பயப்படாதீங்க. ஆக்சிஜன் சிலிண்டர் மாஸ்க் எல்லாம் போட்டுக்கிட்டுதான். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஆழத்துக்குப் போகப் போறோம். எங்க.. சிலிண்டர் மாஸ்க் எல்லாம் மாட்டிக்கிட்டீங்களா? பயமாருந்தா என் கையப் பிடிச்சுக்கோங்க. மொதல்ல அலைகள்ள கால நனைச்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா கடலுக்குள்ள போகலாம்.

இருப்பதுலயே பழைய இலக்கண நூல் தொல்காப்பியம். அதுக்கான மூல நூலான அகத்தியம் அழிஞ்சிட்டதால நாம தொல்காப்பியத்துல இருந்தே தொடங்கலாம். அகத்தியத்திலிருந்து மாறுபடுவதாலயும் புது இலக்கணங்களைச் சேர்ப்பதற்காகவும் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கலாம். ஆகையால தொல்காப்பியத்துல இருக்குறதுதான் அப்படியே பழைய அகத்தியத்தில் இருந்திருக்கும்னு நம்ப வேண்டியதில்லை.

இதுக்கு ஓரு எடுத்துக்காட்டு மொதல்ல பாக்கலாம். பிறகு கள் குடிக்கலாம்.

ஐவகை நிலங்களைப் பற்றிச் சொல்லும் போது எது தலைநிலம்னு கூட ஒரு சர்ச்சை இருக்கு. தொல்காப்பியத்தோட அகத்திணையில் ஐவகை நிலங்களைப் பட்டியல் போடும் போது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலைன்னுதான் வரிசை சொல்றாரு தொல்காப்பியர். “மாயோன் மேய காடுறை உலகம்”தான் முதல்ல. “சேயோன் மேய மைவரை உலகம்” அடுத்துதான். காடுறை உலகம் முல்லை. மைவரை(கரிய மலைகள்) உலகம் குறிஞ்சி.

தொல்காப்பியத்தின் படி இதுதான் வரிசை. சந்தேகமே இல்ல. ஆனா அஞ்சு நிலங்களையும் பட்டியல் போட்ட பிறகு ஒரு வரி சொல்றாரு.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே – (தொல்காப்பியம் / பொருளதிகாரம் / அகத்திணையியல்)

அதென்ன “எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”?

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற வரிசையில் சொல்வது போலவும் சொல்லப்படுமே.

இது நான் சொல்ற பொருள் மட்டுமல்ல. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணார் சொல்லும் பொருள். அப்படின்னா… வேறு வரிசையிலும் சொல்லும் முறை இருந்திருக்கிறதுன்னு பொருள். அப்படியான வேற எந்த வரிசைல சொல்லியிருக்கலாங்குறத உங்களோட முடிவுக்கே விடுறேன். இது பத்தி பின்னொரு நேரத்தில் பெரிய பதிவாகவே பாக்கலாம். இப்பத் தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா…. இது போன்ற குறிப்புகள் அகத்தியத்திலிருந்து தொல்காப்பியர் சிறிது மாற்றியிருக்கலாம் அல்லது புதுமை செய்திருக்கலாம். தமிழ் இலக்கணத்தைத் தொல்காப்பியம் செழுமைப்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் அகத்தியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறதுங்குறது தொல்காப்பியத்தோட சிறப்பு.

தொல்காப்பியத்தோட காலம் கி.மு எட்டாம் நூற்றாண்டுன்னு ஒரு கருத்தும் கி.மு மூன்றாம் நூற்றாண்டுன்னு ஒரு கருத்தும் இருக்கு.

இருக்கட்டும். இப்ப நம்ம கள்ளை ஆராயலாம்.

தொல்காப்பிய இலக்கணம் கள் விகுதியை அஃறிணைப் பெயர்களுக்கு மட்டுமே உரியதுன்னு சொல்லுது. உயர்திணைப் பெயர்களுக்கு கள் விகுதியே கிடையாது.

தொல்காப்பியம் / சொல்லதிகாரம் / பெயரியல் / அஃறிணைப் பெயர்கள்
169. கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே
கொள் வழி உடைய பல அறி சொற்கே

அதாவது அஃறிணைப் பெயர்களோடு கள் விகுதி சேருகையில் அது பன்மையைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டா…
விலங்கு – விலங்குகள்
பறவை – பறவைகள்
குரங்கு – குரங்குகள்
மரம் – மரங்கள்

இதச் சொன்ன தொல்காப்பியர் இன்னொரு இலக்கணமும் சொல்றாரு. அதுவும் அடுத்த வரியிலேயே

தொல்காப்பியம் / சொல்லதிகாரம் / பெயரியல் / அஃறிணைப் பெயர்கள்
170. அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
என்ன பெயரும் அத் திணையவ்வே

அதாவது அஃறிணைப் பெயர்கள்ள கள் விகுதி இல்லாட்டியும் பன்மையைக் குறிக்குமாம். என்ன தல சுத்துதா?

கள் போட்டா பன்மைன்னு பளிச்சுன்னு தெரிஞ்சிரும். கள் போடாட்டி அது ஒருமையா பன்மையான்னு குழப்பம் வந்துறாதா? வராதுன்னு அடிச்சுச் சொல்றாரு தொல்காப்பியர்.

கள் இல்லாத அஃறிணைப் பெயர் ஒருமையா பன்மையான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது? அதுக்கு அந்த வரியைத் தெளிவாப் படிக்கனும். தொல்காப்பியத்தின் முதல் வரியை எடுத்துக்காட்டா வெச்சே இதை விளக்குறேன்.

தொல்காப்பியம் / எழுத்ததிகாரம் / எழுத்துகளின் வகை
எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப

இது தமிழ் எழுத்துகள் எத்தனைன்னு சொல்ற முதல் இலக்கணம். எழுத்து எனப்படுவது அகரம் முதல் னகரம் வரையான முப்பதும் ஆகும்.

நல்லாக் கவனிங்க. எழுத்தெனப்படுப-ன்னுதான் தொல்காப்பியர் சொல்றாரு. ஆனா அகரம் முதலான உயிரெழுத்துகள் பன்னிரண்டும் ககரம் தொடங்கி மெய்யெழுத்துகள் பதினெட்டும் சேர்ந்த முப்பதும் சொல்லும் போது “எழுத்தெனப்படுப”ங்குறது பன்மையைக் குறிக்கிறது நமக்குப் புரிஞ்சிருது.

ஒன்னு தெரியுமா? தொல்காப்பியரோட இந்த இலக்கணத்த நாம இன்னைக்கும் பேச்சு வழக்குல பயன்படுத்துறோம்.

என்னோட தோட்டத்துல செடியெல்லாம் நல்லா வளந்துருச்சு.
வாங்குன ரோஜாப்பூவெல்லாம் வாடிப்போச்சு.
அந்தக் கடைல வாங்குற நகையெல்லாம் நல்ல தரமாயிருக்கு.

மேல சொன்ன மூனு வரிகள்ளயும் செடியெல்லாம், பூவெல்லாம் நகையெல்லாம்னுதான் வருது. ஆனா அது பன்மையைக் குறிக்குது. ஒருவகைல நம்மையறியாமலே தொல்காப்பிய இலக்கணத்தைப் இன்னும் பயன்படுத்துறோம். எழுதுனவன் பல நேரங்கள்ள ஏட்டைக் கெடுத்திருந்தாலும், தமிழ் மொழியோட இலக்கணச் செழுமை இன்னும் பேச்சு வழக்குல சிதையாம இருக்குறது சிறப்புதான். பெருமைப்பட்டுக்கோங்க.

சரி. கள் விகுதி பத்தி தொல்காப்பியம் என்ன சொல்லுது? இந்த ரெண்டையும் நல்லாப் பதிய வெச்சுக்கோங்க. இதுதான் முதல் பாடம்.
1. கள் விகுதி அஃறிணைப் பெயர்களுக்கு மட்டுமே பன்மையைக் குறிக்கக் கூடியது.
2. கள் விகுதி இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பொருத்து அது பன்மையைக் குறிக்கலாம்.

அடுத்த பதிவில் தொடரும்……

பி.கு
இந்தத் தொடர் பதிவில் நான் படித்த இலக்கிய இலக்கண நூல்களை வைத்து என்னுடைய கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். இதில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஏற்றுக்கொள்ளும்படியான மேற்கோள்களோடு இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன். பதிவிலும் திருத்தம் செய்கிறேன். முடிந்தவரையில் மேற்கோள்களோடு உங்கள் எதிர்கருத்தை எடுத்துச்சொல்லுங்கள்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம் and tagged , , , . Bookmark the permalink.

10 Responses to கள் குடிக்கலாம் வாங்க – 1

 1. Pingback: கள் குடிக்கலாம் வாங்க – 2 | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. amas32 says:

  Super Gira! அப்ப ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ சரியா? நீங்கள் இங்கே பன்மைக்குக் கள் சேர்க்காவிட்டாலும் பொருள் வரும் என்று விளக்கியிருக்கிறீர்கள். நான் மேலே குறிப்பிட்டப் பாடலில் உல்டாவாக வருகிறது.

  எனக்கு இந்தத் தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   ஒவ்வொரு பூக்களுமே இலக்கணப்படி தவறுதாம்மா.

   எல்லாருக்கும் புரியனும்னு முடிஞ்ச வரைக்கும் எளிமையாச் சொல்லியிருக்கேன் 🙂

 3. குடிக்க வந்தாச்சு 🙂

  • GiRa ஜிரா says:

   வாங்க டீச்சர் வாங்க. மற்றொரு பயணத்தை வெற்றிகரமா முடிச்சிட்டு வந்திருக்கீங்க. வாழ்த்துகள். 🙂

 4. samayavelk says:

  அருமை. இப்படி எளிமையாக பாடம் எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 5. Pingback: கள் குடிக்கலாம் வாங்க – 5 | மாணிக்க மாதுளை முத்துகள்

 6. Kamala says:

  எல்லோருக்கும் பயன்படும் தொடர். தவறாமல் படிப்பேன்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s