கள் குடிக்கலாம் வாங்க – 2

போன பதிவுல கள் விகுதி பத்திய தொல்காப்பிய இலக்கணத்தை முதல் பாடமாப் பாத்தோம்.

1. கள் விகுதி அஃறிணைப் பெயர்களுக்கு மட்டுமே பன்மையைக் குறிக்கக் கூடியது.
2. கள் விகுதி இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பொருத்து அது பன்மையைக் குறிக்கலாம்.

நல்லது. இந்த இலக்கணத்தை எப்படியெல்லாம் இலக்கியங்கள்ள பயன்படுத்தியிருக்காங்கன்னு எடுத்துக்காட்டுகள் பாக்கலாமா…

மொதல்ல குறுந்தொகை.
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே (குறுந்தொகை, நெய்தல் திணை, பதுமனார்)

ஊரு சனம் தூங்கிருச்சே… ஊதக் காத்தும் அடிச்சிருச்சே.. பாவி மனம் தூங்கலயே”ன்னு பதுமனார் பாடியிருக்காரு. அதுல “மாக்கள்”னு அஃறிணைக்கு கள் விகுதியைப் பயன்படுத்தியிருக்காரு.

அதே குறுந்தொகைல இன்னொரு எடத்துல கள் விகுதி இல்லாம பன்மையைப் பாக்கலாம்.
அவரோ வாரார் முல்லையும் பூத்தன (குறுந்தொகை, முல்லைத்திணை, உரையூர் முதுகொற்றன்)

எளிமையான வரிதான். அவர் இன்னும் வரல. முல்லையும் பூத்தன.
இதுல முல்லைக்கு கள் விகுதி இல்ல. ஆனா ”பூத்தன”ன்னு சொன்னத வெச்சு பன்மையைப் புரிஞ்சிக்கலாம்.

அடுத்து புறநானூறு
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும் – (ஈயென இரத்தல்/கழைதின் யானையார்/புறநானூறு)

பசுக்களும் விலங்குகளும் போய் கலக்கி நீர் குடிச்ச தன்மையை உடைய ஊருணியைப் பற்றிச் சொல்றாரு கழைதின் யானையார். “ஆவும் மாவும்“னு கள் விகுதி இல்லாமச் சொன்னாலும் அந்த வரிகளோட பொருளைப் புரிஞ்சிக்கிறப்போ அது பன்மையைக் குறிப்பது நமக்குப் புரிஞ்சிருது.

சங்க இலக்கியங்கள் இப்படியிருக்க… இன்னும் கொஞ்சம் ஆழமா கடலுக்குள்ள இறங்கி அடுத்து வந்த சங்கம் மருவிய காலத்துக்குப் போகலாம்.

thiruvalluvar_statue_kanyakumariஐயன் திருவள்ளுவர் என்ன சொல்றார்னா…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (திருக்குறள் / அறத்துப்பால் / கடவுள் வாழ்த்து)

அகர முதல எழுத்துகள் எல்லாம்னு சொல்லல. அகர முதல எழுத்தெல்லாம் தான். கள் விகுதி இல்லாமலே பன்மை நமக்குப் புரியுது.

ஆனா இன்னொரு குறள்ள கள் விகுதி போடுறாரு ஐயன்.
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் (திருக்குறள் / பொருட்பால் / கேள்வி)

என்ன… எல்லாம் அஃறிணையா இருக்கு. உயர்திணைக்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு பாக்கலாமா?
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது ( திருக்குறள் / பொருட்பால் / கேள்வி)

கேள்வியர் அல்லார்“னு சொல்றப்போ கேள்வியருக்கு கள் விகுதி பயன்படுத்தல. ஏன்னா அர் விகுதி சேரும் போது உயர்திணைப் பெயர்கள்ள பன்மை வந்துரும். நண்பர் குழாம், வாசகர் வட்டம், காவலர் குடியிருப்புன்னு சொல்றப்போ அர் விகுதி பன்மையைச் சுட்டுது.

வள்ளுவர் கொஞ்சம் எடக்கு மொடக்கான ஆள். எல்லாரும் நாலு வரில நெடுவெண்பா எழுதிய காலத்துல தொல்காப்பியம் சொன்ன ஏழு சீர்கள் கொண்ட குறுவெண்பால பாட்டு எழுதிய மாதிரி, கள் விகுதியை வெச்சு சின்னதா விளையாண்டிருக்காரு.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது (திருக்குறள் / பொருட்பால் / கயமை)

வாய்ப்புக் கிடைக்காததால மட்டும் தப்பு செய்யாம இருக்குறவங்களைப் பத்தி வள்ளுவர் சொல்றாரு. அப்படிப்பட்டவன் நல்லவனா? இல்லை. ஏன்னா… வாய்ப்பு வந்தால் அவன் தப்பு செய்வான். அதுனால அவன் கீழோன்.

கீழோன்னா உயர்திணைல வந்துருது. ஆனா வள்ளுவர் எப்படிச் சொல்றாரு பாருங்க. அச்சமே கீழ்களது ஆசாரம். கீழ்கள்னு கள் விகுதி போட்டுச் சொல்றாரு. ஏன்? கெட்டவன அவரு மனுசனாவே மதிக்கல. அஃறிணையாத்தான் பாக்குறாரு. அதான் அந்தக் கள் விகுதி. ஒரே அடில ஒன்றர டன் வெயிட்னா இதுதான். நம்ம எல்லாருக்குமே செம அடி.

கடைசியா சிலப்பதிகாரத்துல இருந்து ஒரு எடுத்துக்காட்டு.

மரகதமணித் தாள் செறிந்த மணிக் காந்தள் மெல் விரல்கள் (சிலப்பதிகாரம், புகார்க்காண்டம், கானல் வரி, மாதவி யாழ் வாசிக்கும் பாங்கு)

kal-1கானல் வரிக்காட்சி. நல்லாப் போயிட்டிருந்த வாழ்க்கைல மாதவிக்கும் கோவலுக்கும் பிரிவு வரப்போகுது. இந்திரவிழவு நடக்குது. மாதவியானவள் யாழை எடுத்து மீட்டுகிறாள். காந்தள் மலர் மாதிரியான விரல்களால யாழ் நரம்புகளை மீட்டி இசைக்கிறாள். அதைக் குறிக்க “காந்தள் மெல் விரல்கள்”னு சொல்றாரு.

இதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு. எல்லாப் புலவர்களும் தொல்காப்பியர் சொன்ன இலக்கணத்தை ஒழுங்காகாகப் பின்பற்றி பாட்டெழுதியிருக்காங்க. அப்படியே விட்டிருக்கலாம். ஆனா இளங்கோவடிகள் ஒரு புரட்சி பண்றாரு. தொல்காப்பியர் சொன்ன இலக்கணத்தையே மீறுறாரு.

இலக்கணத்தை மீறலாமா?

தாராளமாக மீறலாம். ஆனா பொருத்தமா மீறனும்.

இலக்கண நூல் முதல்ல வந்திருக்குமா? மொழி முதல்ல வந்திருக்குமான்னு? இத யோசிச்சா இதுக்கான விடை கிடைக்கும்.

இலக்கணம் தான் மொதல்ல வந்திருக்கும்னு நீங்க நெனச்சா… அது தப்பு. மொழியோ கலையோ… முதல்ல மக்களிடம் தான் உருவாகும். காலப் போக்குல ஒரு ஒழுங்குக்காக இலக்கணங்கள் உருவாகும். மொழி செழுமையாகச் செழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றது போல இலக்கணமும் அதை ஏற்றுக் கொண்டு பதிவு செய்யும். மொழிக்கு மட்டுமல்ல ஆடல் பாடல் ஆகிய கலைகளுக்கும் இது பொருந்தும்.

கள் விகுதி அஃறிணைக்குத்தான்னு தொல்காப்பியர் சொன்னதை எல்லாரும் ஏத்துக்கிட்டாலும், காலப்போக்குல கள் விகுதி உயர்திணைப் பெயர்களுக்கும் மக்கள் புழக்கத்துக்கு வந்துருது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள்னு பயன்படுத்தத் தொடங்குறாங்க. பொதுமக்களோட பயன்பாட்டுக்கு வந்த வழக்கத்தை இலக்கியத்திலும் புலவர்கள் கொண்டு வந்தார்கள். சிலப்பதிகாரத்தில் பெண்கள் அடிகள்னு உயர்திணைக்கும் கள் விகுதியைப் பயன்படுத்தினார் இளங்கோவடிகள். சீத்தலைச்சாத்தாரும் மணிமேகலையில் அதைப் பின்பற்றினார்.

நல்லாக் கவனிங்க. இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் உயர்திணைக்கு கள் விகுதியைப் பயன்படுத்தும் போது எந்த இலக்கண நூலிலும் அதுக்கான இலக்கணம் இல்ல. ஒருவேளை காக்கைப்பாடினியார் எழுதி மறைந்துபோன காக்கைப்பாடினியம் என்ற இலக்கண நூலில் இருந்திருக்கலாம். ஆனால் அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லை.

தொல்காப்பியத்துல இல்லாட்டியும் இந்தப் புதுவழக்கம் புலவர்களால ஒப்புக்கொள்ளப்பட்டு பல நூற்றாண்டுகளாப் பயன்பாட்டில் இருக்கு.

அப்போ தொல்காப்பியத் தமிழ் இலக்கணம் காலாவதியாயிருச்சா? அதப் புரிஞ்சிக்கனும்னா தமிழ் இலக்கண நூல்களைப் பத்திப் புரிஞ்சிக்கனும்.

தொடரும்… அடுத்த பதிவைப் படிக்க..

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இலக்கணம், குறுந்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to கள் குடிக்கலாம் வாங்க – 2

 1. Pingback: கள் குடிக்கலாம் வாங்க – 1 | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. amas32 says:

  உண்மையிலேயே காந்தள் மலர்களின் இதழ்கள் பெண்ணின் விரல்களை {நகப் பூச்சுடன்} ஒத்து இருக்கின்றன :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   ஆமா. மருதாணி வெச்ச விரல் மாதிரி இருக்குன்னு எனக்கும் தோணுச்சு.

 3. Pingback: கள் குடிக்கலாம் வாங்க – 5 | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s