கள் குடிக்கலாம் வாங்க – 4

போன பதிவு வரைக்கும் படிச்ச பாடத்த ஒருவாட்டி திரும்பப் பாத்துக்கலாம்.

கள் விகுதி,
1. தொல்காப்பியத்தின் படி அஃறிணைக்கு மட்டும் பன்மையைக் குறிக்கும். உயர்திணைக்கு வராது.
2. கள் விகுதி இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்படும் முறையை வைத்து அது பன்மையைக் குறிக்கும்.
3. காலப் போக்கில் கள் விகுதி உயர்திணைக்கும் ஆகி வந்தது. எ.கா பெண்கள், அடிகள், ஆண்கள்.
4. பேச்சு/ இலக்கிய வழக்கிலும் உயர்திணைக்கு கள் விகுதி பயன்படுவதை பன்னிரண்டாம் நூற்றாண்டில் நேமிநாதமும் பதிமூன்றாம் நூற்றாண்டில் நன்னூலும் இலக்கணப்படுத்துகின்றன.

இதுல எந்தச் சந்தேகமும் இருக்காதுன்னு நம்புறேன். அடுத்த பாடத்தப் பாக்கலாம்.

kal-viguthi-4aஉயர்திணைக்கு மொதல்ல அர் விகுதிதான் பன்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
உழவன் – உழவர்
விறலி – விறலியர்
மறவன் – மறவர்
வீரன் – வீரர்
மாணவன் – மாணவர்
மாணவி – மாணவியர்

என்னதான் கள்ளுண்ணாமைன்னு வள்ளுவர் அதிகாரம் எழுதுனாலும், தமிழ் மக்களுக்கு கள் ரொம்பப் பிடிச்சுப் போச்சு போல. அதுனால எங்கும் கள் எதிலும் கள் போட்டு உயர்திணைப் பன்மைக்கு அர் விகுதியும் போட்டு, அதுக்குப் பின்னாடி கள் விகுதியும் போடத் தொடங்கிட்டாங்க.
எ.கா – உழவர்கள், மாணவர்கள், வீரர்கள், முகவர்கள்.

இப்போ உங்கள்ள யாராவது தமிழ் இலக்கண நூல் எழுதுனா, இதுக்கும் இலக்கணம் சேத்துக்கோங்க. ஏன்னா.. இது மக்கள் பயன்பாட்டுல இருந்தாலும் இலக்கணத்துல இல்ல. 🙂

சரி. நம்ம தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். ஆண்டாள், கம்பர், கண்ணதாசன் தப்பு செஞ்சிட்டாங்கன்னுதான் கதையவே தொடங்குனோம்.

1. வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து (ஆண்டாள்)
2. உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் (கம்பர்)
3. ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் (கண்ணதாசன்)

இந்த மூன்று எடத்துலயும் இவங்க செஞ்சது சரியா தப்பான்னு உங்களுக்கே இப்பத் தெரிஞ்சிருக்கும். கள் விகுதி இல்லாட்டியும் வரி சொல்லும் பொருளை வெச்சு வாரணம் ஆயிரம், உலகம் யாவையும், எத்தனை பாடல் பன்மையைக் குறிக்கும்.

பிரச்சனை இதோட முடிஞ்சதா? இல்லையே. வாழ்த்துக்கள் வாழ்த்துகள்…. இதுக்கும் ஒரு முடிவு சொல்லனுமே. அதோட கள் விகுதி எப்படியெல்லாம் புணரும்னு கொஞ்சம் எளிமையாவும் விளக்கிட்டா பிரச்சனை முடிஞ்சது.

அதுக்கு முன்னாடி… நல்லா மனசுல வெச்சுக்கோங்க. கள் விகுதி சேத்தாதான் பன்மைன்னு இல்ல. சொல்ற முறைல சொன்னா கள் விகுதி இல்லாமலும் பன்மையைக் குறிக்கும். “என் கையெல்லாம் கறை”ன்னு சொல்றப்போ கள் விகுதி இல்லாமலே பன்மை வந்துருது. கள் விகுதிய நீங்க கட்டாயமாகப் பயன்படுத்த விரும்பினாத்தான் கீழ சொல்லியிருக்கும் இலக்கணமெல்லாம் தேவை.

ரொம்பக் கொழப்பாம முடிஞ்ச வரைக்கும் எளிமையாச் சொல்றேன். அதுவும் படிப்படியா….

ஓரெழுத்துச் சொற்கள்

பொதுவா ஓரெழுத்துச் சொற்கள் எல்லாமே நெடிலாக இருக்கும். இல்லாட்டி ஐயின் சார்பெழுத்தா இருக்கும்
எ.கா ஆ, கோ, தீ, பா, பை, கை, மை

நெடிலா இருந்துச்சுன்னா கொஞ்சம் கூட யோசிக்காம ஒற்று சேர்க்கனும்.
எ.கா ஆக்கள், பாக்கள், மாக்கள்

ஐயின் சார்பெழுத்துச் சொல்லா இருந்தா ஒற்று வராது.
எ.கா பைகள், கைகள், மைகள்

ஈரெழுத்துச் சொற்கள்

முதலெழுத்தைப் பாருங்க. அது நெடிலா இருந்தா க்-ஒற்று வராது.
காடு – காடுகள்
வீடு – வீடுகள்
ஓசை – ஓசைகள்
பூசை – பூசைகள்
நாய் – நாய்கள்
பேய் – பேய்கள்
தூசு – தூசுகள்….. சொல்லிக்கிட்டே போகலாம்.

அப்போ முதலெழுத்து குறிலா இருந்தா க்-ஒற்று வருமா? வரும். ஆனா வராது.

முதலெழுத்து குறில் + இரண்டாம் எழுத்து மெய்யெழுத்து – க்-ஒற்று மிகாது.
கண் – கண்கள்
புண் – புண்கள்
எண் – எண்கள்
சொல் – ????? பயப்படாதீங்க. ரெண்டாவது எழுத்து ல் வந்தா றகரமாக மாறிரும். சொற்கள். புல் – புற்கள், கல் – கற்கள், வில் – விற்கள்

முதலெழுத்து குறில் + இரண்டாவது எழுத்து இ/ஐ சார்பெழுத்தா இருந்தால் க்-ஒற்று வராது.
இகரச் சார்பெழுத்து – > சதி – சதிகள், நதி – நதிகள், துதி – துதிகள், பதி – பதிகள்
ஐகாரச் சார்பெழுத்து -> வசை – வசைகள், திசை – திசைகள், வகை – வகைகள், கணை – கணைகள்

அட… அப்ப எங்கதாங்க க்-ஒற்று வரும்?

முதலெழுத்து குறிலாக இருந்து, இரண்டாவது எழுத்து வல்லின உகரமாக (கு சு டு து பு று) இருந்தால் க்-ஒற்று மிகும்.
பசு – பசுக்கள்
திசு – திசுக்கள்
முசு – முசுக்கள்
கொசு – கொசுக்கள்

விதின்னு ஒன்னு இருந்தா விதிவிலக்குன்னு ஒன்னு இருக்குறதுதான் விதி போல.
நாள் – இது எப்படி கள் விகுதியோட புணரும்?
முதலெழுத்து நெடிலா இருந்தா க்-ஒற்று மிகாது. கோள் – கோள்கள் மாதிரி. அப்போ நாள் ஒருமை. நாள்கள் பன்மை.

ஒடனே சிலர் சண்டைக்கு வருவாங்க நாட்கள் தான் சரின்னு. ஒன்னும் யோசிக்க வேண்டாம். நாள்கள் நாட்கள் ரெண்டுல ஒங்களுக்கு எது பிடிக்குதோ அதையே பயன்படுத்துங்க.

அதே போல முள். முட்கள் ரொம்பவே பரவலாகப் பயன்படுத்தப் பட்டிருக்கு. அதையே நீங்களும் பயன்படுத்தலாம்.

மூன்றெழுத்து+அதற்கும் மேலுள்ள சொற்கள்

ஓரெழுத்துச் சொற்களுக்கு லேசாயிருந்தது. ஈரெழுத்துச் சொற்களுக்கும் லேசுதான். ஒரேயொரு எடத்துலதான் ஒற்று மிகுந்தது. மூன்றெழுத்து நான்கெழுத்து அஞ்செழுத்துல்லாம் எப்படியிருக்கப் போகுதுன்னு பக்பக்குன்னு இருக்கா? கவலையே படாதீங்க. இதுவும் ரொம்பவே லேசு.

மூன்றெழுத்து அல்லது அதுக்கு மேல எழுத்துகள் இருந்தால், கள் விகுதி சேரும் போது பொதுவா க்-ஒற்று மிகவே மிகாது. ஆனால் சில இடங்களில் மிகலாம்.

அதென்ன மிகலாம்? மிகுந்தாலும் சரிதான். மிகாட்டியும் சரிதான்.

ரெண்டாவது எழுத்து ஒற்றெழுத்தான்னு பாருங்க. இல்லைன்னா கவலையே இல்ல. க்+ஒற்று மிகாது.
பதவி – பதவிகள்
கனவு – கனவுகள்
தேவதை – தேவதைகள்
காவல் – காவல்கள்

ஒருவேளை.. ரெண்டாவது எழுத்து ஒற்றெழுத்தா வந்துருச்சுன்னா? சட்டுன்னு சொல்லோட கடைசி எழுத்தைப் பாருங்க. அது வல்லின உகரச் சார்பெழுத்தா இருக்கா? அதாவது கு சு டு து பு று. அப்படி இருந்தால் க்-ஒற்று மிகலாம். மிகாவிட்டாலும் சரியே.

முத்து – முத்துகள் / முத்துக்கள்
மூச்சு – மூச்சுகள் / மூச்சுக்கள்
வாத்து – வாத்துகள் / வாத்துகள்
பாட்டு – பாட்டு / பாட்டுக்கள்
தோப்பு – தோப்புகள் / தோப்புக்கள்
கடைசியா… வாழ்த்து – வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்

kal-viguthi-4bஇங்க விதிவிலக்குன்னு எதுவும் இல்லையா? இருக்குது. இருக்குது.
பொருள் – பொருட்கள் / பொருள்கள் – இரண்டுமே சரி. ஆனா துகள்? துகள்கள் தான். துகள் மேலே சொன்ன இலக்கணத்துக்குள்ள அடங்கிரும். ஆனா பொருள் அடங்காது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லைங்குறதால அதுக்கு மட்டும் VIP மரியாதை போல.

அவ்வளவுதாங்க கள் விகுதியின் புணர்ச்சி இலக்கணம். அடுத்த பாகம் வரை காத்திருந்தா இந்தத் தொடரை முடிச்சிறலாம்.

ஐயோ… அப்போ இன்னும் இந்தத் தொடர் முடியலையா??????????????? மயக்கம் வருதுல்ல? அதப் பத்தியும் அடுத்த பாகத்துல பாக்கப் போறோம்.

தொடரும் பதிவைப் படிக்க….

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம் and tagged , . Bookmark the permalink.

4 Responses to கள் குடிக்கலாம் வாங்க – 4

 1. Pingback: கள் குடிக்கலாம் வாங்க – 3 | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. Pingback: கள் குடிக்கலாம் வாங்க – 5 | மாணிக்க மாதுளை முத்துகள்

 3. amas32 says:

  இந்தப் பகுதி போன பகுதியைவிட புரிந்துகொள்ள எளிமையாக உள்ளது :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிமா. அடுத்த பகுதி இன்னும் எளிமையா இருக்கும் 😃

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s