கள் குடிக்கலாம் வாங்க – 5

இதுவரை நாம் படித்த பாடங்கள்

பாடம் 1 – பன்மை விகுதி பற்றி தொல்காப்பிய இலக்கணம்
பாடம் 2 – பழைய இலக்கியங்களில் பன்மைப் பயன்பாடு
பாடம் 3 – தமிழ் இலக்கண நூல்கள் பற்றிய அறிமுகம்
பாடம் 4 – கள் விகுதி புணர்ச்சிக்கான இலக்கணம்

பொதுவாகவே கள் விகுதியைப் பயன்படுத்தும் போது க்-ஒற்று மிகாத போது, ரெண்டு இடங்கள்ள ஒற்று மிகுவதைப் பார்த்தோம்.
1. ஈரெழுத்துச் சொற்கள்ள குறிலைத் தொடரும் குற்றியலுகரம் (பசு, கொது, உடு) வந்தால் ஒற்று மிகும் (பசுக்கள், கொதுக்கள், உடுக்கள்)
2. மூன்றெழுத்து/மேற்பட்ட எழுத்துகளில் வன்றொடர் குற்றியலுகரம் கள்ளோடு சேருகையில் ஒற்று மிகலாம் (வாழ்த்துகள், வாழ்த்துக்கள், முத்துகள், முத்துக்கள்)

அதென்ன குறிலைத் தொடரும் குற்றியலுகரம் + வன்றொடர்க் குற்றியலுகரத்தில் மட்டும் ஏன் மிகும்/மிகலாம்?  அங்கயும் மத்த எடங்கள் மாதிரி மிகாம இருந்திருக்கலாம்ல? எல்லாருக்குமே நிம்மதியா இருந்திருக்கும் நானும் அஞ்சு பதிவு போட வேண்டியிருக்காது.

ஏன் ஏன் ஏன் இப்பிடி?

அதுக்குக் காரணம் நிலைமொழி குற்றியலுகரமாக இருக்க வருமொழி வல்லினமாக இருந்தால் ஒற்று மிகும் என்ற இலக்கணம் தான் காரணம்.

குற்றியலுகரம் – மொழி இறுதியில் உகர வல்லினம் வருதல் (கு சு டு து பு று).
எ.கா. கன்று, பேச்சு, அஞ்சு, பட்டு
அப்படி வர்ரப்போ அந்தக் கடைசி வல்லின உகரம் அரை மாத்திரை குறைந்து ஒலிக்கும். கன்(று), அஞ்(சு), பட்(டு)

வன் தொடர்க் குற்றியலுகரம் – சொல்லின் கடைசியெழுத்தான குற்றியலுகரத்தின் முன்னால் அதே எழுத்தின் ஒற்று வருவது.
எ.கா. அக்கு, பற்று, பாட்டு, பேச்சு, வாழ்த்து, தப்பு

குற்றியலுகரத்துக்குத் தொல்காப்பியம் சொல்லும் புணர்ச்சி இலக்கணங்களையெல்லாம் கீழ கொடுத்திருக்கேன்.

தொல்காப்பியம் / எழுத்ததிகாரம் / குற்றியலுகரப் புணரியல் / குற்றியலுகரத்தின் இயல்பு
410. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை இயற்கை நிலையலு முரித்தே.

தொல்காப்பியம் / எழுத்ததிகாரம் / குற்றியலுகரப் புணரியல் / குற்றுகரத்தின் பொதுப் புணர்ச்சி
415. வன்றொடர் மொழியும், மென்றொடர் மொழியும்,
வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகுமே

தொல்காப்பியம் / எழுத்ததிகாரம் / குற்றியலுகரப் புணரியல் / குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி
427. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே

புரிதலுக்காக மேல உள்ள வரிகளைக் கொடுத்திருக்கேன். நீங்க ரொம்பவும் குழப்பிக்காதீங்க. மறுபடியும் சொல்றேன். கள் விகுதி போட்டாதான் பன்மைன்னு எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனா கள் போட்டா நல்லாருக்கும்னு தோணுச்சுன்னா போன பதிவில் சொன்னதெல்லாம் நினைவுல வெச்சுக்கோங்க.

இனிமே வாழ்த்துகள்/வாழ்த்துக்கள் சந்தேகமே வரக்கூடாது. வாழ்த்து வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எல்லாமே சரிதான்.

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்து – இலக்கணப்படி மிகச் சரியே.
நூறு முத்து கோத்த மாலையை அணிவித்தேன் – இலக்கணப்படி மிகச் சரியே.

kal-viguthi-4cசரி. வாழ்த்துக்கள்/வாழ்த்துகள் ரெண்டுமே தப்பில்லைன்னா ஏன் சண்டை வருது?

அதுக்குக் காரணம் மயக்கம். கள் குடிச்சா என்ன வரும்? மயக்கம் தான் வரும். அதையும் கொஞ்சம் விளக்கமாப் பாக்கலாம்.

இலக்கணப்படி எல்லாமே சரியா எழுதுனாலும் சில நேரங்கள்ள அது சொல்ல வந்த பொருளை வேற மாதிரி மாத்திச் சொல்லிரும். அதுக்குப் பேர்தான் மயக்கம்.

ஒரு சினிமாப் பாட்டு. ராஜகுமாரன் படத்துல வாலி எழுதிய “என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை” பாட்டு.

அந்தப் பாட்டுல “அந்தி மஞ்சள் நிறத்தவளை”ன்னு ஒரு வரி வரும். அந்தி மஞ்சள் நிறம் கொண்டவளைன்னு பொருள். ஆனா அதை அந்தி மஞ்சள் நிறத் தவளைன்னும் பொருள் எடுத்துக்கலாம். இலக்கணப்படி மிகச் சரி. இப்படி சொல்ல வந்த பொருளும் கொடுத்து இன்னொரு தேவையில்லாத பொருளைக் கொடுக்குறதுதான் மயக்கம்.

வாழ்த்துக்கள்னு சொல்றப்போ வாழ்த்துவதாகவும் எடுத்துக்கலாம். வாழ்த்துவதற்காகக் கொடுக்கப்படும் கள்ளுன்னும் பொருள் எடுத்துக்கலாம். சீட்டுக்கள் சீட்டுக்காகக் கொடுக்கப்படும் கள். இப்படியெல்லாம் தப்பா எடுத்துக்க வாய்ப்பிருக்கு. அதுனால வாழ்த்துக்கள்னு எழுதுவதைத் தவிர்க்கனும்னு சொல்றாங்க. நல்லாக் கவனிங்க. தவிர்க்கனும்னு சொல்றாங்க.

நாள்கள் தான் சரி. நாட்கள்னு எழுதுனா நாட்பட்ட கள்ளுன்னு பொருள் வந்துருதுன்னும் சொல்றதும் இத வெச்சுத்தான்.

ஆனா பூவுக்குப் பன்மை பூகள்னு எழுதாம பூக்கள்னு எழுதுறோம். பூக்கள்னா பூவிலிருந்து எடுக்கப்பட்ட கள்ளுன்னும் பொருள் வருதே. பசுக்கள்னா பசுவிலிருந்து பெறப்பட்ட கள்ளுன்னும் பொருள் வருதே. அப்போ மட்டும் மயக்கம் தப்பில்லையா?

என்னையைக் கேட்டா… ரொம்ப யோசிக்காதீங்க. எண்ணங்கள்னு எழுதினா பன்மையையும் குறிக்கும். எண்ணம் கள் போன்றதுன்னும் பொருள் வரும். இந்த மாதிரியான மயக்கங்களை வெச்சுத்தான் புலவர்கள் செய்யுள்ள நிறைய விளையாண்டிருப்பாங்க. ஆகையால எதையும் கண்டுக்காம ஒங்களுக்குப் பிடிச்ச மாதிரி எழுதுங்க. இதுவரைக்கும் விளக்குன இலக்கணத்துக்குள்ள உக்காருதான்னு மட்டும் பாத்துக்கோங்க.

மேல விளக்கமாச் சொன்ன இலக்கணத்தைக் கொஞ்சம் எளிமையா இந்தப் படத்துல பாத்துக்கோங்க. இது எதுவுமே புரியலையா? விடுங்க. ஒங்களுக்கு ஒரு லேசான வழி சொல்லித்தாரேன். அதப் பதிவுல கட்டக் கடைசியாச் சொல்லித் தாரேன்.

kal-viguthi-5aபொதுவாகவே தமிழ்ச் சொற்கள் மேல குடுத்திருக்குற இலக்கண அட்டவணைக்குள் உக்காந்திரும். வடமொழிச் சொல்லாவோ வேற மொழிச் சொல்லாவோ இருந்தா என்ன செய்றது? அதுக்கு இலக்கணம் இருக்கா?

வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ்ல பேசும் போதோ எழுதும் போதோ தமிழ் இலக்கணப்படியே பயன்படுத்துங்க. ஏன்னா.. நீங்க பேசுறதும் எழுதுறதும் தமிழ். அந்தந்த மொழியில் எழுதுறப்போ அந்தந்த இலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு எழுதுங்க. ஆங்கிலத்துல எழுதும் போது ஆங்கில இலக்கணத்தைப் பின்பற்றுவது போல தமிழ்ல எழுதுறப்போ தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றனும். அவ்வளவுதான். தமிழுக்காக மற்ற மொழி இலக்கணங்கள் தங்களை மாத்திக்காத போது தமிழ் இலக்கணம் மற்ற மொழிச் சொற்களுக்காக மாத்திக்க வேண்டியதில்லை.

திருஷ்டி – இதுவொரு வடமொழிச்சொல். இதோட பன்மை என்ன? கள் விகுதி இல்லாமலும் பன்மையாகப் பயன்படுத்தலாம். கள் விகுதி சேக்கனும்னா, மேல இருக்கும் அட்டவணைப்படி திருஷ்டிகள். அவ்வளவுதான்.

ஆங்கிலச் சொல்லான பஸ்சுக்குப் பன்மை பஸ்கள்னு எழுதலாம். கிஸ்சுக்கு கிஸ்கள்னு எழுதலாம். பஸ்ஸஸ் கிஸ்ஸஸ்னு எழுதுவதைத் தவிர்த்தல் நலம். சுட்டீஸ் குட்டீஸ்னு சில பத்திரிக்கைகள்ள எழுதுறாங்க. அது கண்டிப்பா தமிழுக்கு நல்லதில்ல. தொடர்ந்து அந்த மாதிரி எழுதுனா பிற்காலத்துல ஸ் விகுதியும் பன்மையைக் குறிக்கும்னு யாராவது புது இலக்கணம் எழுதினாலும் எழுதித் தொலைக்க நேரிடலாம். அதுனாலதான் பேருந்து முத்தம்ன்னு எழுதுறது நல்லது. பஸ் கிஸ்சுன்னுதான் எழுதனும்னு விரும்பினா இலக்கணத்துக்குள்ள கொண்டு வந்து பயன்படுத்துங்க.

ஒரு வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்த வேண்டியிருக்கு. ஆனா எந்த இலக்கணத்தைப் பயன்படுத்துறதுன்னு தெரியல. அப்போ என்ன பண்றது? ஒற்று மிகுந்து கள் போட்டாலும் சரி. ஒற்று மிகாமல் கள் போட்டாலும் சரி. எந்தத் தப்பும் இல்ல.

இப்போ பதிவோட கட்டக்கடேசிக்கு வந்துட்டோம். ஒரு எளிமையான வழி சொல்லித் தர்ரேன்னு சொன்னேன். ஒங்களுக்கு இலக்கணமெல்லாம் மனப்பாடம் செய்யக் கடினமா இருக்கா? எவ்வளவு படிச்சாலும் மறந்து மறந்து போகுதா? இந்தத் தொடர்ல இதுவரைக்கும் சொன்னது கூட மறந்து போச்சா? அப்ப என்ன பண்றது?

நீங்களா வாய் விட்டுச் சொல்லிப் பாருங்க. க் போட்டுச் சொல்லிப் பாருங்க. போடாமலும் சொல்லிப் பாருங்க. எது பல்ல ஒடைக்காம லேசா இருக்கோ, அதைப் பயன்படுத்துங்க. அப்படிப் பண்ணினால் அது தானாகவே மேல இருக்கும் அட்டவணைக்குப் பொருத்தமா வந்திரும்.

பசுகள் – சொல்ல நல்லாவே இல்ல
பசுக்கள் – சொல்ல நல்லா இருக்கு

காசுகள் – சொல்ல எளிமையா இருக்கு
காசுக்கள் – அவ்ளோ நல்லா இல்ல

நதிகள் – சொல்ல நல்லா இருக்கு
நதிக்கள் – சொல்ல நல்லா இல்ல

முத்துகள் – சொல்ல நல்லா இருக்கு
முத்துக்கள் – சொல்ல நல்லா இருக்கு

ஆய்வுகள் – சொல்ல நல்லா இருக்கு
ஆய்வுக்கள் – சொல்ல நல்லா இல்ல

படகுகள் – சொல்ல நல்லா இருக்கு
படகுக்கள் – சொல்ல நல்லா இல்ல

இப்படியே சொல்லிப் பாருங்க. செந்தமிழும் நாப்பழக்கம் தான். சொல்ல எளிமையாகவும் பொருத்தமாகவும் இருந்தால் அது இலக்கணப்படியே இருப்பதற்கான வாய்ப்பு நூற்றுக்கு தொன்னூற்றொம்பது விழுக்காடு உண்டு.

எல்லாம் இருக்கட்டும். வாழ்த்துகள்/வாழ்த்துக்கள்ள நானென்ன பயன்படுத்துறேன்னு நீங்க கேக்கவே இல்லையே. நானே சொல்லீர்ரேன்.

நான் பெரும்பாலும் வாழ்த்துகள் தான். சொல்லிச் சொல்லிப் பழகிருச்சு. பல நேரங்கள்ள வாழ்த்துன்னு மட்டும் பயன்படுத்துவதும் உண்டு.
முத்துகள், முத்துக்கள், வாத்துகள், வாத்துக்கள் – இதெல்லாம் எழுதும் வரிக்கேற்ப பயன்படுத்துவேன். விலக்குகள் எதுவும் இல்லை.

ஒருமை – பன்மை
உயர்திணை – அஃறிணை
இலக்கண நூல்கள்
கள் விகுதி
ஒற்று மிகும் / மிகா / மிகலாம் இடங்கள்னு நிறையவே இலக்கணக் கள் குடிச்சிட்டோம். கூடச் சேந்து ”கம்பெனி” கொடுத்ததுக்கு நன்றி / நன்றிகள் பல 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம் and tagged , . Bookmark the permalink.

3 Responses to கள் குடிக்கலாம் வாங்க – 5

  1. Pingback: கள் குடிக்கலாம் வாங்க – 4 | மாணிக்க மாதுளை முத்துகள்

  2. அருமை!

    வாழ்த்து(க்)கள் 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s