3. வடுக்களை வருடிப் பார்த்தோம்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

நாங்க போன வரிசைப்படின்னு இல்லாம என்னென்ன எடங்கள் யாழ்ப்பாணத்துல பாத்தோம்னு சொல்றேன்.

சங்கிலித் தோப்பு

சங்கிலி/சங்கிலியான், இவர் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர். சங்கிலி மன்னனுடைய பரம்பரைக்கு ஆரியச் சக்கரவர்த்தின்னு பேரு. இந்த அரச வம்சம் கிபி 13ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரைக்கு ஆட்சி செஞ்சிருக்காங்க. இவங்களுடைய தோற்றம் பற்றி தெளிவான புரிதல் இல்லை. பாண்டிய மன்னனோட அமைச்சர் இலங்கை வந்து யாழ்ப்பாணத்தை வென்று அரசமைச்சதா ஒரு கருத்து. கலிங்க/கூர்ச்சர மன்னன் ஒருவன் தமிழ்ப் படைகளின் உதவியோட இலங்கை வந்து வெற்றி பெற்று பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டு ஆட்சியமைத்ததா ஒரு கருத்து.

இந்த அரசை அமைத்தவர் கூழங்கை சக்கரவர்த்தி. இவருக்கு ஒரு கை ஊனம்னும் ஒரு கருத்து இருக்கு. இந்த மன்னரோட வழி வந்த பரராசசேகரனின் மகன் தான் சங்கிலி. ஆசைநாயகியின் மகனாக இருந்தாலும் சங்கிலி, பரராசசேகரனின் பட்டத்தரசிகளின் மகன்களைக் கொன்று விட்டு பதவிக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை சொல்கிறது. இது உண்மைன்னு வெச்சுக்கிட்டா அரசியல்ல ஆட்சி மாற்றம் இன்னைக்கு மட்டுமில்ல அன்னைக்குமே அப்பிடித்தான் இருந்திருக்கு போல.

இலங்கைய ஆக்கிரமிச்ச போர்ச்சுக்கீசிகர்களோட கடுமையாகப் போராடியிருக்கிறார். இலங்கைல இருக்கும் மற்ற அரசர்களையும் கூட்டுச் சேத்து போரிடுறாரு. தமிழ்நாட்டுல இருந்து தஞ்சை நாயக்கர் அரசும் உதவுது. ஆண்டுக்கணக்குல கடுமையாகப் போராடினாலும் தோற்றுப் போகிறார் சங்கிலி மன்னர். அவரைக் கோவா கொண்டு வந்து தூக்கில் போட்டுவிடுகிறார்கள்.

16830712_987729774693736_4017933361668053202_nபோர்ச்சுக்கீசியர்கள் மதமாற்றம் மூலமா அரசை நிலைநிறுத்தப் பார்த்ததாகவும், அதனால மதம் மாறியவர்களை எல்லாம் சங்கிலியார் கொன்னுட்டதாகவும் ஒரு கருத்து நிலவுது. போர்ச்சுக்கீசியர்கள் எழுதிய குறிப்புகளின்படி சங்கிலியான் ஒரு கொடுங்கோலன். போர்ச்சுக்கீசியர்களை எளிமையா நாடாளவிடாமச் செஞ்சதால அவங்க குறிப்புகள்ள சங்கிலி மன்னர் கெட்டவரா இருப்பதுல ஆச்சரியப்பட ஒன்னுமில்லை.

இந்தச் சங்கிலி மன்னர் அரண்மனை இப்ப இல்ல. ஆனா அரண்மனை இருந்ததுக்கான அடையாளங்கள் மிச்சம் இருக்கு. அரண்மனையோட நுழைவுவாயில் மட்டும் இன்னும் இருக்கு. அதுக்கு ஒரு தகரக்கூரை போட்டு வெயில் மழை படாம வெச்சிருக்காங்க. அரண்மனை அரசப் பெண்டுகள் குளிக்க ஜமுனா ஏரின்னு ஒரு நீர்நிலை அரண்மனைக்குள்ள இருந்திருக்கு. அந்த ஏரியோட பகுதிகள் இப்பவும் இருக்கு. அந்தக் காலத்துல யமுனைல இருந்து தண்ணி கொண்டு வந்து அந்த ஏரியைப் புனிதப்படுத்தியதால ஜமுனா ஏரின்னு பேர் வந்ததாகவும் சொல்றாங்க.

16864110_987729761360404_6416945241835221798_nஇப்ப ஜமுனா ஏரியைச் சுத்தி மக்கள் ஆக்கிரமிச்சு வீடுகளைக் கட்டீட்டாங்க. அதுனால இனிமே என்னவாகுங்குறது நல்லூர்க் கந்தசாமிக்குதான் வெளிச்சம்.  இந்த ஏரியைச் சுத்தி கொஞ்ச நாளைக்கு முன்னாடி அகழ்வாராய்சி நடந்திருக்கு. நிறைய பழைய தடையங்கள் கிடைச்சதுமே, ஆராய்ச்சியை நிறுத்திட்டாங்களாம். என்ன… கீழடி நினைவுக்கு வருதா? இதுதான் உலகம்.

சங்கிலி மன்னனுக்கு ஒரு சிலையும் இருக்கு. இந்தச் சிலைக்குப் பின்னாடியும் பெரிய கதை இருக்கு. 1974ல மொதன்மொதலா ஒரு சிலைய அப்போதைய யாழ்ப்பாண மேயர் துரையப்பா திறந்து வெச்சிருந்திருக்காரு. 2011ல அந்தச் சிலைய இடிச்சிட்டு புதுசா ஒரு சிலையை அப்ப இருந்த மேயர் யோகேசுவரி பற்குணராஜாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் திறந்து வெச்சிருக்காங்க. எல்லாம் அரசியல்தான் காரணம். சரி.. அத்தோட போச்சா… திடீர்னு ஒரு நாள் சங்கிலி மன்னர் கைல நெட்டுக்குத்தலா இருந்த வாளைக் காணோமாம். யார் எடுத்திருப்பாங்கன்னு ஒலகத்துக்கே தெரியும். உலகே மாயம் வாளே மாயம்னு ஊரே சோகமா இருந்த சமயத்துல தானா மாயமான அந்த வாள் தானாவே மறுபடியும் வந்திருச்சு. ஆனா முன்ன மாதிரி நெட்டுக்குத்தலா இல்லாம அம்மாவைப் பாத்த தமிழ்நாட்டு அமைச்சர்கள் மாதிரி சாஞ்சி இருக்கு. எதோ காரணத்தால எனக்கு நிறுத்தி படம் புடிச்சிக்கனும்னு தோணல.

16807825_987752558024791_6814786284049566301_nமந்திரி மனைன்னு ஒரு பழைய வீடு இருக்கு. பேர்ல இருந்து யாரோ மந்திரி வாழ்ந்த வீடுன்னு புரிஞ்சிக்கலாம். யாழ்ப்பாண அரசு காலத்துல கட்டப்பட்ட வீடு. எப்படியோ போர்ச்சுக்கீசியர்கள் கிட்ட இருந்து தப்பிச்சிருச்சு. வீடு வசதியா இருக்குன்னு அவங்களே பயன்படுத்தியிருக்கலாம். அதுக்குப் பிறகு டச்சுக்காரர்கள் காலத்துலயும் சிலபல மாறுதல்கள் செய்யப்பட்டு பொழைச்சு வந்த வீடு இப்போ பாழடைஞ்சு இருக்கு. எதுவும் பராமரிப்பு நடக்குற மாதிரி தெரியல. உள்ள தமிழ் சினிமாப் பாட்டு வரிகளையெல்லாம் சொவத்துல கிறுக்கியிருக்கு. எந்தக் காதலன் செய்த வேலையோ!

நாங்க போனப்போ சினிமாப் பட ஷூட்டிங்குக்கு ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருந்தது. வீட்டுக்கு முன்னாடி இருந்த எடத்துல பூந்தொட்டிகள் அதுகள் இதுகள்னு அடுக்கிக்கிட்டிருந்தாங்க. படத்துல கதாநாயகியோட வீடா இந்த இடம் வரப்போகுதாம். ஷீட்டிங் சமயத்துல மாடெல்லாம் உலாத்த விடுவாங்களாம். வீட்டுக்கு முன்பகுதி மட்டும் இங்க எடுத்துட்டு வீட்டுக்கு உள்பகுதியெல்லாம் வேற எங்கயோ எடுத்துருவாங்க போல இருக்கு. நல்ல பழைய வீடு. வாழ்ந்து கெட்ட வீட்டைப் பாத்த வயித்தெரிச்சலோட வெளிய வந்தோம்.

சட்டநாதர் கோயிலும் சங்கிலித் தோப்பில் இருக்கு. சட்டநாதர்னதும் சட்டப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க பூசை போடக் கெளம்பாதீங்க. சட்டைநாதர் கோயில் தான் சரியான பேரு. ஆரியச் சக்கரவர்த்தி நல்லூர் நகரை அமைச்ச போது வடக்குப் பக்க காவலுக்கு இந்தக் கோயிலை அமைச்சாராம். ஆனா டச்சுக்காரர்கள் அழிச்ச பிறகு மறுபடியும் எடுத்துக்கட்டியிருக்காங்க.

இதையெல்லாம் பாத்துட்டு புல்லுக்குளம், முனீஸ்வரன் கோயில், துரையப்பா விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைவுத்தூண், மணிக்கூண்டெமெல்லாம் பாத்தோம். அடுத்து பாத்த எடம் என் மனசுக்குள்ள நீங்காத முள்ளாக மாறிய இடம்.

1974ம் ஆண்டு. நாலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்துல நடத்தனும்னு முடிவு செய்றாரு வணக்கத்துக்குரிய சேவியர் தனிநாயகம் அடிகளார். அப்போ மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்துல நடத்த வசதிப்படாது/சூழல் சரியில்லைன்னு சொல்லியிருக்காரு. ஆனா இலங்கை அரசாங்கம் மாநாட்டை நடத்த உதவுறோம்னு சொல்லுது. வாய் வார்த்தை கைல காசாவோ உறுதியான உதவியாவோ வரல. ஆனாலும் மாநாட்டுப் பணிகள் அருமையா நடக்குது. யாழ்ப்பாணம் முழுக்க தமிழ் ஆர்வலர்கள் கூட்டம் அள்ளுது.

f1001177-2மாநாட்டின் கடைசிநாள் கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்துல எடம் போதாம வெளிய திடல்ல நடத்துறாங்க. லேசா இருள் கவிந்த மாலை நேரம். சிலுசிலுன்னு கடல் காத்து. மாநாட்டுலயோ தமிழ்த் தென்றல். மக்கள் கூட்டம் திடலைத் தாண்டி ரோடு வரைக்கும் வந்துருச்சு. அந்த வழியா வந்த போலிஸ் அதிகாரியால தாண்டிப் போக முடியல. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இதெல்லாம் சாதாரணம். அதிகாரிக்கோ கடுப்பு. மாநாடு கேக்க வந்த மக்கள் கூட்டம் எங்க போய் எப்படி விலகும்?

போலிஸ் கூட்டம் ஆயுதங்களோட வருது. திடீர்த் தாக்குதல். துப்பாக்கிச் சூடு. இருட்டு வேளை. கூட்ட நெரிசல். துப்பாக்கிச் சூடு வேற. அந்த இடம் எப்படியிருந்திருக்கும்னு கொஞ்சம் நெனச்சுப் பாருங்க. குண்டுக்கு விழுந்த பலிகள் ஒரு பக்கம். நெரிசல்ல விழுந்த பலிகள் ஒரு பக்கம். மின்சாரக் கம்பிகள் அறுந்துவிழுந்ததால பலிகள் ஒரு பக்கம். அப்பப்பா… நெனைக்கவே நெஞ்சம் பதறுது.

மேல சொன்ன நிகழ்வு நடந்த எடத்துல நின்னு இதை நெனச்சுப் பாக்க எப்படியிருந்திருக்கும்னு பாருங்க. ஆண்டவா!!!!

அந்த எடத்துல மொதல்ல நினைவுத்தூண் வெச்சிருக்காங்க. அந்த நினைவுத்தூணும் தானா நொறுங்கி விழுந்திருக்கு. மறுபடியும் நினைவுத்தூண் அமைச்சு சுற்றுச் சுவரும் தோரண வாயிலும் கட்டியிருக்காங்க.
16807392_987755944691119_3818898377752675624_n
வருத்தம் விலகாம அடுத்து போன எடம் யாழ்ப்பாண நூல்நிலையம். தெற்காசியாவிலேயே சிறந்ததாக இருந்த நூலகம். கயவர் இட்ட தீ கவர்ந்த நூலகம். உயிர்த்தெழுந்து நிற்கிறது. மனம் கரியாகிப் போனவர்களால் எத்தனையோ சுவடிகளும் ஏடுகளும் நூல்களும் கரியாகிப் போக வருத்தப்படாத நல்ல இதயம்தான் எது! ஆனால் அந்த நூலகத்தை முழுதாய் கண்ணால் கண்டதில் மகிழ்ச்சி. ஆனாலும் இழந்த 97000 நூல்களும் இழந்ததுதான்!

f1001177-4நூலகத்துல வகுப்பு எதோ நடந்ததால உள்ள போக முடியல. அதுனால அப்படியே கடற்கரையோரமாப் போய் டச்சுக்காரன் கோட்டையையும் பாத்தாச்சு. ஏற்கனவே உச்சிவேளை தாண்டி சாப்பாட்டு வேளையும் தாண்டிப் போனதால அத்தோட சுத்தலை முடிச்சுக்கிட்டோம். நான் ஹோட்டலுக்கு வந்துட்டேன். சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு பொழுது சாஞ்சதும் திருவிழா பாக்குற திட்டம்.

மதியம் சாப்பிடும் போதும் சாப்பாட்டை மிச்சம் வெச்சிட்டேன். யாழ்ப்பாணத்து சாப்பாட்டு அளவு இன்னும் பழக்கத்துக்கு வரல. சாப்டு நல்லாத் தூங்கி எந்திரிச்சு குளிச்சேன். அலைஞ்சதுக்கும் வெயிலுக்கும் இதம்.

கானா பிரபா வந்து கூட்டீட்டுப் போறேன்னு சொன்னாரு. வரக்கூடாதுன்னு கடுமையா சட்டதிட்டம் போட்டுட்டு நானே ஆட்டோ பிடிச்சுப் புறப்பட்டேன். இந்த வாட்டி ஆட்டோ ஸ்டேண்டுல பிரீத்தன் இருந்தாரு. நான் வந்ததும் அவரே ஆட்டோ எடுத்துட்டு வந்துட்டாரு. இப்போ போக வேண்டிய இடம் இணுவில். அங்க மடத்துவாசல் பிள்ளையாரடி. எங்கயோ கேள்விப்பட்ட பேர் மாதிரி இருக்கா? இங்க போய்ப் பாருங்க.

போற வழியில நல்லா பேசிக்கிட்டே வந்தாரு பிரீத்தன். யாழ்ப்பாணத்துக் கடைகளையும் தெருக்களையும் வேடிக்கை பாத்துக்கிட்டே இணுவில் நோக்கிப் போனேன். இந்தியாவில் நெரிசல்ல வண்டி ஓட்டிப் பழகிட்டு கூட்டமில்லாத யாழ்ப்பாணத்துச் சாலைகள்ள போறது நல்லாயிருந்தது. ரொம்ப அகலமான சாலைகளா இல்லாட்டியும் நல்ல தரமான சாலைகளா இருந்தது.

இணுவில் கந்தசாமிகோயில் வளைவுல திரும்பி நேரா உள்ள வரச்சொல்லியிருந்தாரு கானா பிரபா. ஆனா வளைவுல ஒரு போலீஸ் ஜீப் நின்னு அந்தப் பக்கம் வழியை மறிச்சு, எந்த வண்டியையும் உள்ள விடல. காங்கேசன்துறை ரோட்டோரமா ஆட்டோவை ஒதுக்கி நிறுத்தினோம்.

தொடரும்…

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இலங்கை, பயணம், யாழ்ப்பாணம் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to 3. வடுக்களை வருடிப் பார்த்தோம்

  1. Pingback: 2. யாழ் மண்ணில் | மாணிக்க மாதுளை முத்துகள்

  2. amas32 says:

    வரலாறு சுவையாக சொல்லியிருக்கீங்க, என்றும் அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்தது தான்.
    சஸ்பென்ஸோட நிறுத்தியிருக்கீங்க, ஐயாம் வெயிட்டிங் 🙂

    amas32

  3. Pingback: 4. திருவிழாவும் தெரு உலாவும் | மாணிக்க மாதுளை முத்துகள்

  4. அருமையான தகவல்கள்.. நேரில் பார்த்த உணர்வை தந்தது..

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s