4. திருவிழாவும் தெரு உலாவும்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

DSC09418அன்னைக்கு தைப்பூசம். இணுவில் கந்தசாமி கோயில்ல மஞ்சத்திருவிழா. தேர் இழுக்க ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு. பொதுவா தேர்த்திருவிழா காலைல நடக்குமாம். தைப்பூசத்துக்கு மட்டும் மாலைத் தேர். அதுவும் விளக்குகளால அலங்கரிக்கரிக்கப்பட்ட தேர். அதுனால  கோயிலுக்குப் போற வழியை போலிஸ் அடைச்சிட்டாங்க. நடந்து போகலாம். சைக்கிள் பைக்ல போகலாம். ஆனா ஆட்டோ காரெல்லாம் போகக்கூடாது. அட… போகனும்னாலும் அங்க எடமில்ல. அவ்வளவு கூட்டம். ரெண்டு பக்கமும் திருவிழாக் கடைகள்.

நாங்க உள்ள வரமுடியலைன்னு சொன்னதும் கானா பிரபவே வெளிய காங்கேசன் துறை ரோட்டுக்கு வந்தாரு. இன்னொரு குறுக்குச்சாலை வழியா அவர் கூட்டீட்டுப் போன எடம் மடத்துவாசல் பிள்ளையாரடி. அதாவது மடத்துவாசல் பிள்ளையார் கோயில். இடம்னு சொல்றதுக்கு அடிங்குற சொல்லை யாழ்ப்பாணத்துல பாவிக்கிறாங்க. பாவிக்கிறாங்கன்னா தெரியும்தானே? அதுவும் யாழ்ப்பாணப் பயன்பாடுதான்.

கானா பிரபாவைத் தெரிஞ்சவங்களுக்கு மடத்துவாசல் பிள்ளையாரடியைத் தெரியாம இருக்கவே இருக்காது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேல அவர் இணையத்துல எழுதும் வலைப்பூ(blog)வுக்கு மடத்துவாசல் பிள்ளையாரடின்னே பேரு. தங்களுடைய புலத்தின் அடையாளங்களை இணையம் வழியா பதிவு செய்து கொண்டு வருகின்றவர். கலை மொழி இசை மாந்தர்கள் நிகழ்வுகள் வரலாறுன்னு யாழ்ப்பாணம் குறித்து இவர் எழுதாததே இல்லைன்னு சொல்லலாம். இணையத்துல வாசிக்கிறவங்க கானா பிரபாங்குற ஜன்னல் வழியாகப் பாத்துதான் யாழ்ப்பாணம் பத்தியும் இலங்கை பத்தியும் தெரிஞ்சிக்கிறோம்னு சொன்னா மிகையில்ல. அதுனாலதான் மடத்துவாசல் பிள்ளையாரடியைப் பார்க்க நான் ஆசப்பட்டேன்.

நாங்க போன நேரம் மடத்துவாசல் பிள்ளையாரடியில் சின்னதா ஒரு தேரில் பிள்ளையாரை ஏத்தி ஊர்வலம் கொண்டு போனாங்க. பக்கத்துல இருக்கும் இணுவில் கந்தசாமி கோயிலுக்கு ஊர்க்கூட்டம் போயிட்டதால இங்க தேர்த்திருவிழா சிறிய அளவுல நடந்தது.

ஆட்டோ ஓட்டிவந்த பிரீத்தனுக்கு ஒரு ரெண்டு மணி நேரம் ஓய்வு கொடுத்தாச்சு. அவரும் பக்கத்துல சொந்தக்காரங்களைப் பாக்கப் போயிட்டாரு. நாங்க நடந்தே இணுவில் கோயிலுக்குப் போனோம். அப்பத்தான் தேரை நிலையிலிருந்து வெளிய இழுத்தாங்க. நூற்றாண்டு பழமையான தேர். நல்ல பராமரிப்பு.
16807379_987777641355616_379678203027880137_n
எத்தன ஆண்டுகள்னு சொல்லத் தெரியல… கடைசியா தூத்துக்குடில பாத்தேனா கரூர்ல பாத்தேனான்னு நினைவில்லை. ஊர்ப்பக்கத்து திருவிழாவை உயிர்ப்போடு பாக்க யாழ்ப்பாணம் வரைக்கும் வந்திருக்கேன். திருவிழாவில் கலந்துக்கிறது எவ்வளவு பெரிய கொண்டாட்டம், தெரியுமா? நான் சொல்றதெல்லாம் ஒன்னொன்னா மனக்கண்ல பாத்துக்கிட்டே வாங்க. அந்தச் சூழலோட இன்பம் புரியும்.

16641020_987781048021942_234204585641599485_nமகிழ்ச்சியோட வந்திருக்கும் மக்கள் கூட்டம், வேடிக்கை பார்க்கும் குழந்தைகள், தின்பண்டக் கடைகள், பலூன்/விளையாட்டுச் சாமான் விற்பவர்கள், தேங்காய் பழம் பூ விற்பவர்களும் வாங்கும் கூட்டமும், பல நிறங்களில் மின்விளக்கு அலங்காரங்கள், மேளச் சத்தம், நாயன நாதம், பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், அங்கங்கே பக்திப்பாடல் பாடும் அடியார்கள், மைக் செட்டில் சுகி சிவத்தின் இஷ்டத்துக்கான பேச்சு, தீ விளையாட்டுகள், தேங்காய் உடைக்கும் ஓசை, மக்கள் கதைக்கும் ஓசை, எங்கும் நிறைந்திருந்த பரவச மனநிலை. சுசியம் / பூந்தி / முறுக்கு / வடை என்று வாங்கித் திங்கும் வாசனை. சுருக்கமாச் சொன்னா சொர்க்கம். இணுவில் கந்தசாமிக்கும் மக்களுக்கும் கூட்டிப் போன கானா பிரபாவுக்கும் கோடிக்கோடி நன்றி.

தைப்பூச மஞ்சத்துக்கு கோயிலுக்குள் இருந்து வள்ளி தெய்வானையோடு முருகன் வந்து தேரேறினான். தேர் முழுக்க இப்போ மின்விளக்கு அலங்காரம். ஊர் கூடி இழுக்க இழுக்க முருகன் கோயிலைச் சுற்றி வந்தான். நான் கூட்டத்துக்குள்ள புகுந்து அங்குட்டும் இங்குட்டுமாப் போய் கானா பிரபாவைத் தொலைச்சிட்டேன். எல்லாம் பாத்து முடிச்ச பிறகு அவரைக் கூப்டுக்கலாம்னு அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தாச்சு.

தீ விளையாட்டு வீரவிளையாட்டுகளையெல்லாம் கூட்ட நெரிசல்ல பாக்க முடியல. என்ன செய்யலாம்னு யோசிச்சா ஒன்னும் புலப்படல. அப்புறம் பாத்தா எதோ கட்டுறதுக்காக போட்டு வெட்ட இரும்புச் சாரம்/ஏணி இருந்தது. அதுல ஏறி அனுமார் மாதிரி உக்காந்துக்கிட்டேன். அங்கருந்து எல்லாப் பக்கமும் நல்லாப் பாக்க முடிஞ்சது. குன்றேறி யானைப் போர் காணல்னு வள்ளுவர் சொன்ன மாதிரி பாத்தேன். அப்படி உக்காந்து நான் பாத்துக்கிட்டு இருந்ததை கானா பிரபா பாத்துட்டாரு. அவரோட கேமராவும் பாத்துருச்சு.
16807168_987780561355324_8954850840588651325_n
தேர் மறுபடியும் நிலைக்கு வந்தபிறகு நான் ஹோட்டலுக்கு வந்துட்டேன். அடுத்த நாள் காலைல போக வேண்டிய இடங்கள் இருக்கே. இராச்சாப்பாடு சரியான அளவு ஆர்டர் பண்ணினேன். அதுனால வீணாகலை. என்னன்னு கேக்குறீங்களா? இடியாப்பமும் சம்பலும். அதுவும் சிவப்பரிசி இடியாப்பம். அடுத்த நாள் காலைலயும் பஃபேல எதெத எவ்வளவு எடுக்கனும்னு புரிதல் வந்திருந்தது.
16832093_987782908021756_2588010034822707803_n
யாழ்ப்பாணத்தின் இரண்டாம் நாள் முதல்ல போன எடம் கீரிமலை. யாழ்ப்பாணத்துல இருந்து காங்கேசன்துறை போற வழியில் இருக்கு. 2009க்கு முன்னாடின்னா கீரிமலைப் பகுதிக்குப் போயிருக்க முடியாதாம். ஏன்னா வழியிலுள்ள எடங்கள் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்றாங்க. மக்கள் தங்கள் வீடுகளை விட்டுட்டு இந்தப் பக்கம் வந்துட்டாங்களாம். ஆனாலும் சிலருக்கு சொந்த வீட்டைப் பாக்கும் ஆசை உந்தித் தள்ள ராத்திரியோட ராத்தியாப் பாத்துட்டு வந்துறலாம்னு போவாங்களாம். போனவங்க போனவங்கதான். கண்ணிவெடி துப்பாக்கிச்சூடுன்னு…. முருகா!
16864506_987782761355104_860423365529533800_n
கீரிமலை நகுலேசுவரம் கோயிலைப் பாத்துட்டு கடற்கரைக்குப் போனோம். ரொம்ப அழகான துப்புரவான கடற்கரை. பேனா மையை ஊத்திக் கலக்கிவிட்ட நிறத்தில் கடல். கடற்கரை முழுக்க சுண்ணாப்புப்பாறைகள். அந்தச் சுண்ணாம்புப் பாறைகளை அரசாங்கம் இயந்திரம் வெச்சு சுரண்டிக்கிட்டிருந்தது. அழகுபடுத்துறதுக்குன்னு சொல்றாங்க. கீரிமலை கடற்கரைல மக்கள் நீத்தார் கடன் செய்ய வர்ராங்க. அந்தத் துறைல உடைஞ்ச மண் சட்டிகள் கரையொதுங்கியிருந்ததைப் பார்த்தேன். கீரிமலை கடற்கரையை எடுத்துப் பராமரிச்சு இன்னும் கொஞ்சம் வசதிகள் செய்தா நல்ல சுற்றுலாக் கடற்கரையா மாறும்.

கனிமப்பாறைகள் நிறைய கிடைக்கிறதால அந்த எடத்துல ஒரு சிமெண்ட் ஆலை கட்டியிருக்காங்க. காங்கேசன்துறைல சிமெண்ட் ஆலையான்னு யாரோ ஒரு நல்லவருக்குத் தோணியிருக்கு. இந்த ஆலைய மூடிட்டு தீவுக்குள்ள வேற பக்கமா ஆலையைக் கட்டியிருக்காங்க. ஆனா மூலப்பொருட்கள் இங்கருந்து போயிருக்கு. உற்பத்திச் செலவு கூடுனாலும் கூடீட்டுப் போகட்டும், ஆனா இந்தப் பக்கம் சிமெண்ட் ஆலை இருந்து நாலு பேருக்கு வேலை கிடைச்சிறக்கூடாதுன்னு நல்லெண்ணம். ஒருவகைல அதுவும் நல்லதுன்னுதான் சொல்றாங்க. அந்த ஆலையால மக்களுக்கு சுகாதாரக்கேடு வந்ததாகவும் இப்ப கொறஞ்சிட்டதாகவும் சொல்றாங்க.

16681649_987782068021840_5731673176083586123_nதிரும்ப வர்ர வழியில் நல்லிணக்கபுரம் இருந்தது. அரசாங்கம் வீடிழந்தவங்களுக்கு மீள்குடியேற்றத்துக்குக் கட்டிக் கொடுத்த வீடுகள். அங்கயும் மக்கள் இருக்காங்க. பேர்ல இருக்கும் நல்லிணக்கம் எல்லா வகையிலும் இருந்தாச் சரின்னு மட்டுந்தான் அந்நேரம் யோசிக்க முடிஞ்சது.

அடுத்து போன எடம் மாவிட்டபுரம். சோழநாட்டு இளவரசி ஒருத்திக்கு குதிரைமுகம் என்னும் நோய் இருந்திருக்கு. இங்க வந்து அந்த நோய் நீங்கியதால முருகனுக்குக் கோயில் கட்டியிருக்காங்க அந்த இளவரசி. குதிரைமுகம் நோய் விட்ட இடம்னு பொருள் வரும்படியா மா(குதிரை) விட்ட புரம்னு ஊர்ப்பேர் அமைஞ்சதா ஒரு நம்பிக்கை. அந்தக் கோயிலுக்கு முருகன் சிலையை சோழ நாட்டிலிருந்து கொண்டு வந்தப்போ, முருகன் இறங்கிய துறைதான் காங்கேசன் துறை.

நாங்க போன நேரம் கோயில் மூடியிருந்தது. கோயிலுக்குள்ள எரிஞ்ச (எரிக்கப்பட்ட) தேர் இருக்குதாம். அதைப் பாக்க முடியாமப் போச்சு. வெளிய இருந்தே முருகனுக்கு வணக்கம் சொல்லிட்டு யாழ்ப்பாணத்துக்கு வண்டியைத் திருப்பினோம்.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இணுவில், இலங்கை, பயணம், யாழ்ப்பாணம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 4. திருவிழாவும் தெரு உலாவும்

  1. amas32 says:

    எரிக்கப்பட்ட தேரை பார்க்காததும் நல்லது தான். மன வேதனை தான் அதிகமாகும். நம் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் எத்தனை நெருங்கிய உறவு தொன்று தொட்டு இருந்து வந்திருக்கு! முருகன் அதே நல்லிக்கணத்தை மீண்டும் நிறுவட்டும். அவனுக்கு கோடி வணக்கம் வைப்போம்.

    amas32

  2. மக்களுக்கு சேவை செய்வதைக் காட்டிலும் வரலாற்றை மாற்றியமைப்பதற்கே அரசர்களும், அரசுக்களும் பகீரதப் பிரயத்தப்படுகின்றன.

  3. Pingback: 5. டாட்டா யாழ்ப்பாணம் | மாணிக்க மாதுளை முத்துகள்

  4. Pingback: 5. டாட்டா யாழ்ப்பாணம் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s