5. டாட்டா யாழ்ப்பாணம்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

554027ஒரு தாய்க்கும் தந்தைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. எல்லாப் பெண் குழந்தைகளப் போலத்தான் பிறப்பு. ஆனால் அந்தக் குழந்தை தனக்குப் போட்டுக்கொண்ட பாதை மேன்மையை நோக்கியதாக இருந்தது. தமிழைப் படித்து தமிழிலேயே இதயம் துடித்து, அந்தத் துடிப்பை மாணாக்கர்களுக்கு எடுத்துச் சென்ற ஆசிரியையாகவும் விளங்கியது. தமிழ்ச் செம்மலாகவும் சிவத்தமிழ்ச்செல்வியாகவும் வாழ்ந்து ஆசிரியப்பணியைச் செவ்வனே செய்து முடித்து ஓய்வு பெறும் வேளையிலே, அவருக்கு புதிகாக பொறுப்பொன்று வந்தது.

ஆண்கள் மட்டுமே அதுவரை ஏற்றுக்கொண்டிருந்த அந்தப் பொறுப்பு முதன்முதலாக ஒரு பெண்ணிடம் வருகிறது. தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தின் பொறுப்புதான் அது. நாம் பேசிக்கொண்டிருப்பது ஈழத்தின் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றியாகும். அறங்காவலர் பொறுப்பு அவருக்குக் கிடைத்த ஆண்டு 1977. அப்போது அவருக்கு அகவை ஐம்பத்திரண்டு.

ladyஒரு பெண் கையில் தன்னுடைய கோயில் அறங்காவலர் பொறுப்பைக் கொடுத்து பல பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தாள் அந்த துர்க்கையம்மன். கோயிலை கும்பிடும் இடமாக மட்டும் வளர்க்காமல், சமூகநலக்கூடமாகவும் மாற்றினார். ஆதரவற்ற சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் புதுவாழ்வு கொடுப்பதற்காக துர்க்காபுரம் மகளிர் இல்லம் தொடங்கினார். பிணியில் கொடியது பசிப்பிணி. யாருக்காவது பசிக்கு உணவில்லை என்றால் உலகை அழிப்பேன் என்று கவிஞர்கள் பாடியிருக்கலாம். ஆனால் அழிப்பதை விட ஆக்கமே சிறந்தது என்று நினைத்து அன்னபூரணி அன்னதானக்கூடம் அமைத்தார் இவர். ஆதரவான வாய்ச் சொல்லை விட ஒருவாய்ச்சோறுதான் பசியாற்றும் என்பது அன்னை உள்ளத்துக்குத்தானே தெரியும். ஈழப்போரில் தம்முடைய சொந்த மண்ணிலேயே தவிக்கவிடப்பட்ட முதியோர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

சமூகப்பணி மட்டுமா செய்தார்? கோயிலை முன்னிலும் சிறப்பாக்கி கோபுரமும் தேரும் வனமும் குளமும் அமைத்துப் பராமரித்தார். தான் இருக்கும் வரை தொண்டு மட்டுமே செய்து வந்த அந்த அன்பு உள்ளம் 2008ம் ஆண்டு துர்க்கையம்மன் திருவடியில் அமைதியடைந்தது. அப்போது கானா பிரபா எழுதிய இரங்கல் பதிவை இங்கு படிக்கலாம். அந்தத் தெல்லிப்பழைக்குதான் அடுத்து போனோம்.
IMG_8411
IMG_8430அன்னைக்கு வெள்ளிக்கிழமை. கோயில்ல பெண்கள் சர்க்கரைப்பொங்கல் வெச்சுக்கிட்டிருந்தாங்க. வெல்ல வாசமும் அரிசி வேகும் வாசமும் இல்லாத பொல்லாத பசியைக் கிளறுச்சு. துர்க்கையம்மனைக் கும்பிட்டுட்டு வெளிய வந்தா ஒரு பெண்மணி எல்லாருக்கும் சர்க்கரைப் பொங்கல் கொடுத்துக்கிட்டிருந்தாங்க. சிவப்பரிசியில் செய்த சர்க்கரைப்பொங்கல். செவசெவன்னு மினுமினுன்னு இருந்தது. நம்ம ஊர் மாதிரி சின்ன உருண்டையா கொடுக்காம வாழையிலைய ரெண்டு கைலயும் சேத்து விரிச்சு பெரிய அகப்பைய அள்ளியெடுத்து கொடுத்துக்கிட்டிருந்தாங்க. நாந்தான் இனிப்பே சாப்பிடுறதில்லையே. அவங்க சாப்பிடக் கூப்பிட்ட அன்பை விடவா சக்கரைப்பொங்கல் இனிப்பா இருந்திருக்கும்?!

IMG_8428கீரிமலைல இருந்து தெல்லிப்பழைக்கு வர்ர வழியில் பல வீடுகள் எலும்புக்கூடுகளாய். ஆள் இல்ல. அரவம் இல்ல. அப்படியே கெடக்கு. தப்பிச்சு வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம். யாருமே தப்பிக்காமப் போயிருக்கலாம். ஒரு சிலர் தப்பிச்சு இந்த எடமே வேண்டாம்னு போயிருக்கலாம். இன்னும் வேறென்னென்னவோ காரணமாகவும் இருக்கலாம். அதுனாலதானோ என்னவோ ஊரில் நெரிசலோ கூட்டமோ தள்ளுமுள்ளுகளோ இல்ல. பழகுன வரைக்கும் மக்கள் ரொம்ப இனிமையாப் பழகுறாங்க. தமிழ்நாட்டுல இருந்து வந்தா எதோ தாய்வழிச் சொந்தம் வீட்டுக்கு வந்த மாதிரிதான் பழகுனாங்க. நான் பாத்த பேசுன மக்களோட பேர்கள் எனக்கு நினைவில்லை. ஆனா அவங்க மலர்ந்த முகம் இன்னும் பளிச்சுன்னு நினைவிருக்கு.

அதே நேரத்துல தமிழ் சினிமாவைப் பாத்து வாள்வெட்டுக் கலாச்சாரமும் புதுசா வந்திருக்கு. ரவுடி கேங்குகள் கூட்டமா உருவாக்கி அவங்களுக்குள்ளயே அடிதடி வெட்டுகுத்துன்னும் தொடங்கியிருக்கு ஊர்மக்கள் வருத்தப்பட்டாங்க. எவ்வளவோ இழந்தாச்சு மக்களே. போதும்.

IMG_8431யாழ்ப்பாணத்துல இருந்து எங்க போறதுன்னு யோசனை. நேரா கண்டி போகலாமா… அங்கிருந்து காலி போகலாமான்னு யோசனைகள். ஆனா நெறைய பேரு நுவரேலியா நுவரேலியான்னு சொல்லி அங்கயே அடுத்து போகலாம்னு முடிவு பண்ணேன். யாழ்ப்பாணத்துல இருந்து நுவரேலியாவுக்கு இராத்திரி பஸ் இருக்கு. ஆனா அது சாதா பஸ். அதைவிட கொழும்பு போய் பஸ் எடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க. சுத்து வழிதான். ஆனா நல்ல ரோடு. கொழும்புக்குன்னா ஏசி பஸ் கிடைக்கும். இதையெல்லாம் யோசிச்சு காலைல கீரிமலைக்குப் பொறப்படும் போதே யாழ்ப்பாணம் பஸ்டாண்டுல இராத்திரி கொழும்பு போற பஸ்சுக்கு டிக்கெட் எடுத்தாச்சு. இலங்கைப் பணத்துல ஆயிரத்து நூறு ரூபாய்.

மதியம் யாழ்ப்பாணம் வந்து சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கத் திட்டம் போட்டிருந்தேன். அளவா சாப்பிட்டு வளமாத் தூங்கிட்டிருந்தேன். அப்போ சந்திக்க வந்தார் இயக்குநர் ம.தி.சுதா. எழுத்தாளர் ரிஷான் ஷெரிப் சொல்லி என்னை யாழ்ப்பாணத்தைச் சுத்திக்காமிக்க பைக் எடுத்துட்டு வந்துட்டாரு. இந்த நட்பெல்லாம் கிடைக்க நான் என்ன செஞ்சேன்னு தெரியலையே.

ரெண்டு நாளா ஊர் சுத்தியதையெல்லாம் ம.தி.சுதா கிட்டச் சொல்லி, ரெஸ்டாரண்டுல டீ குடிச்சுக்கிட்டே கதைச்சோம். அதாங்க… பேசுனோம். அருமையான உரையாடல். நல்ல ஆர்வமுள்ள இவரைப் போன்ற இளைஞர்கள் இன்னும் நல்லா முன்னுக்கு வரனும். ம.தி.சுதாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். என்னைப் பாக்க வர்ரப்போ ஈழத்து மாவுருண்டை கொண்டுவந்திருந்தாரு. அதை இந்தியாவுல வீட்ல எல்லாருக்கும் கொடுக்கனும்னு ரொம்பப் பத்திரமா எடுத்து வெச்சு கொண்டு வந்தேன்.

IMG_9790இலங்கைல எந்த ஹோட்டல்ல தங்கினாலும் மொதல்லயே செக்கவுட் நேரம் கேட்டு வெச்சுக்கோங்க. சில எடங்கள்ள காலைல 10.30க்கு செக்கவுட். எனக்கோ எட்டரைக்குதான் பஸ். அதுனால கூட அரைநாள் வேணும்னு கேட்டு வாங்கினேன். அதுக்கு பாதிக்கட்டணம் தான். முடிஞ்ச வரைக்கும் மொதல்லயே சொல்லிருங்க. கடைசி நேரத்துல கேட்டு… அந்த அறைய வேற யாருக்கோ வெச்சிருந்தாங்கன்னா அவ்வளவுதான்.

பஸ்ல சாப்புடுறதுக்கு வெஜிடபிள் பன் ரெண்டு வாங்கிக்கிட்டேன். தண்ணி பாட்டிலும் தான். தனியார் பஸ் நிக்கிற எடத்துக்கு வந்து எறங்குறப்போ இருட்டிருச்சு. இனி பயணம் தனியாதான். இலங்கையின் வடக்கு முனையிலிருந்து தென்மேற்கு வரைக்கும் தனியாத்தான் போகனும். புறக்கோட்டைனு தமிழ்ல சொல்லப்படுற Pettah பேருந்து நிலையத்துல எறங்கி நுவரேலியாவுக்கு நான் பஸ் ஏறனும். பேட்டா வந்ததும் சொல்றேன்னு பஸ் நடத்துநர் சொன்னாரு.

பக்கத்துல ஒரு சின்னப்பையன். 18… 19… வயசு இருக்கும். மொபைல் போன நோண்டிக்கிட்டே வந்தான். இருட்டுல அவன் மொபைல் அவ்வளவு பளிச்சுன்னு கண்ணப் பறிக்குது. சார்ஜ் சர்ருன்னு எறங்காதான்னு நெனைக்கிறப்பவே எங்கிட்ட அவன் “பவர் பேங்க் இருக்கா”ன்னு கேட்டான். நான் யாரு எவரு… தெரியாத ஆள் கிட்ட கேக்கலாமான்னெல்லாம் அந்தப் பையனுக்கு யோசனை இல்லை. மொபைலை நோண்டனும். அவ்வளவுதான். பவர் பேங்க் கேட்டப்போ, ”நான் இந்த அளவுக்கெல்லாம் மொபைலை நோண்டுறதில்லை”ன்னு சொல்ல நெனச்சேன். ஆனா இல்லைன்னு மட்டும் சொன்னேன். அதுக்குள்ள பஸ்ல படம் போட்டாங்க.

இன்னொரு முக்கியமான தகவல். நீங்க இலங்கைக்குப் பயணத்திட்டம் போடுறப்போ பௌர்ணமி நாள் வருதான்னு பாத்துக்கோங்க. பெரும்பாலான சிங்களர் வாழும் பகுதியில் பௌர்ணமின்னா எல்லாம் மூடியிருக்கும். நான் யாழ்ப்பாணத்துல இருந்த ரெண்டாம் நாள் பௌர்ணமி. அதுனால எனக்கு வசதியாப் போச்சு. மத்த எடங்கள்ள வங்கிகள் கூட அன்னைக்கு திறந்திருக்காதாம்.

நம்மூர்ல ஒரு உருப்படாத சாப்பாட்டுக்கடைல பஸ்ச நிறுத்துவாங்கள்ள… அதே மாதிரிதான் இலங்கைலயும் நடக்குது. பயணமாகப் போறவங்க அங்கல்லாம் சாப்பிடாம தவிர்ப்பது நல்லது. தண்ணியும் கைலயே கொண்டு போறது இன்னும் நல்லது. இந்தியாவுலயும் இப்பல்லாம் அதத்தான செய்றோம்.

திடீர்னு தூக்கத்துல முழிச்சிப் பாத்தா ரெண்டு மணிக்கு மேல இருக்கும். எதோ பேர் தெரியாத ஊர்ல பெரஹரா நடக்குது. அதாவது பௌத்த ஊர்வலம். யானைக்கு சீரியல் பல்பு அலங்காரமெல்லாம் செஞ்சு, பாரம்பரிய ஆடைகளைப் போட்டுக்கிட்டு, தண்டக்கா தண்டக்கான்னு கொட்டு தட்டிக்கிட்டு போனாங்க. எப்படியோ… அதையும் பாத்தாச்சு. இனி கண்டில நடக்குற பெரஹராவை ஒரு வாட்டி போய்ப் பாத்துறனும். ரொம்பப் பிரமாதமா இருக்குமாம். ஆனா அதுக்கு மொதல்லயே டிக்கெட் வாங்கி சீட்டு பிடிச்சு வெச்சுக்கனும். இல்லாட்டி இருட்டுல எருமையப் பாத்த கதைதான்.

மறுபடியும் தூங்கி எந்திரிச்சுப் பாத்தா பஸ் கொழும்புக்குள்ள சுத்திக்கிட்டிருக்கு. பேட்டா பஸ்டாண்ட் முன்னாடி நான் எறங்கும் போது மணி மூனே முக்கால். ஆகா…

தொடரும்…

அடுத்த பதிவைப் படிக்க இங்கு சுட்டவும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், தெல்லிப்பழை, பயணம், யாழ்ப்பாணம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to 5. டாட்டா யாழ்ப்பாணம்

 1. amas32 says:

  //இல்லாட்டி இருட்டுல எருமையப் பாத்த கதைதான்// LOL
  நல்லா சுத்தி வந்திருக்கீங்க. சீதை வாழ்ந்த இடத்தைப் பத்தி தெரிஞ்சிக்க காத்திருக்கிறேன் :-}

  amas32

 2. Pingback: 4. திருவிழாவும் தெரு உலாவும் | மாணிக்க மாதுளை முத்துகள்

 3. //மத்த எடங்கள்ள ஏடிஎம் கூட அன்னைக்கு திறந்திருக்காதாம்//
  ஏ.டி.எம் எப்பவும் மூட மாட்டாங்கண்ணே.

  • GiRa ஜிரா says:

   அப்படியா? நான் பாத்த சில ஏடிஎம்கள் மூடியிருந்ததே. ஏன்னு கேட்டப்போ இதான் சொன்னாங்க.

 4. Pingback: 6. மலையக மலைப்புகள் | மாணிக்க மாதுளை முத்துகள்

 5. mathisutha says:

  பேசிக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்கள் மிகவும் பிரயோசனமாக உணர்ந்தேன் அண்ணா…. ரிசான் இல்லாட்டில் இந்தச் சந்திப்பு எனக்கு கிடைத்திருக்காது.

  • GiRa ஜிரா says:

   உங்களைச் சந்தித்ததும் உரையாடியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

 6. பேருந்து நடத்துனர்கள் பவர்பேங்க் சர்வீஸை கொண்டுவரும் நாள் வெகுதொலைவில் இல்லை 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s