9. டாட்டா நுவரேலியா

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

நுவலேரியால இருந்து எங்க போறீங்கன்னு சிவக்குமார் கேட்டாரு. கண்டிக்குப் போகனும்னு சொன்னேன். நுவரேலியாவுல இருந்து கண்டிக்கு ரயில்லயும் போகலாம். போற வழியெல்லாம் அவ்வளவு அழகாயிருக்குமாம். மேட்டுப்பாளையத்துல இருந்து ஊட்டிக்கு போற ரயில்பாதை மாதிரி. ஆனா இன்னும் அழகா இருக்குமாம். என்னதான் சொல்லுங்க… மலைப்பாதைல பஸ்ல வேடிக்கை பாத்துக்கிட்டே போறதை விட ரயில்ல வேடிக்கை பாக்குறது இனிமையான அனுபவம் தான். இந்த ரயிலைப் பத்தி எழுத்தாளர் ரிஷான் சொல்லியிருந்ததால அதுல போக விரும்புறதா சிவக்குமார் கிட்ட சொன்னேன்.
16864237_988849387915108_3802387135262337988_n
நுவரேலியா டவுன்ல இரயில்வே ஸ்டேஷன் கிடையாது. பக்கத்துல நனுஓயா-ங்குற ஊர்ல இருக்கு. ரொம்ப தூரமெல்லாம் இல்ல. ஆட்டோ பஸ் எல்லாம் போற தூரம் தான். நேரா அங்கயே போய் டிக்கெட் வாங்கிறலாம்னு சிவக்குமார் சொன்னாரு. மொதல்ல நுவரேலியா பஸ். அப்புறம் அங்கருந்து நனுஓயா பஸ்.

போற வழியில் தேயிலைத் தோட்டங்களைப் பாக்கலாம். மலையகத் தமிழர்கள் தான் அங்க பெரும்பாலும் வேலை செய்றது. இலங்கைல இருந்து நாம எந்த டீ வாங்கினாலும் அதுல நம்ம தமிழ் மக்களோட உழைப்பு இருக்கு. சில இடங்கள்ள மலை ரொம்பவும் சரிவா இருந்துச்சு. இது எப்படி ஏறி எறங்கி தேயிலை பறிக்கிறாங்களோன்னு ஆச்சரியமா இருந்தது. எல்லாம் தொடர்ந்து பறிக்கிற பழக்கந்தான்னு சொன்னாரு எழுத்தாளர் சிவக்குமார்.
16864935_988849827915064_4479142156823853404_n
வெள்ளைக்காரனைப் பத்திதான் நமக்குத் தெரியுமே. எங்க எதைக் கண்டாலும் அதை எப்படி தன்னோட சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கலாம்னு யோசிக்கிற ஆளாச்சே. இலங்கைல மலைகள் நிறைய இருக்கு. இந்தியாவுல மக்கள் கூட்டம் நிறைய இருக்கு. ரெண்டு எடத்துலயும் ஆட்சி அதிகாரமோ பிரிட்டிஷ்காரனுக்கு நிறைய இருக்கு. இங்கருந்து அங்க போகவும் வரவும் கப்பலும் நிறைய இருக்கு. சும்மாயிருப்பானா? காப்பித்தோட்டம் போட தமிழ்நாட்டுல இருந்து மக்களை அள்ளிக்கிட்டுப் போனான். அதுல ஒரு பகுதி மக்கள் அப்போ தெலுங்கு மலையாளம் பேசுற மக்களாவும் இருந்திருக்காங்க. ஆனா இப்ப எல்லாரும் ஒன்னாக் கலந்து தமிழர்கள்தான். அவ்வளவுதான் அவங்களுக்கும் தெரியும்.

620b802fd7678120aec63e429f802407காப்பித்தோட்டம் மொதல்ல போட்டாலும் ஒரு கட்டத்துல சீக்குகள் நிறைய வந்து காப்பிச் செடியெல்லாம் அழிஞ்சு போச்சாம். அப்பதான் தேயிலைத் தோட்டம் போட்டிருக்கான் வெள்ளைக்காரன். அன்னைக்கு அவன் தொடக்கி வெச்சது இன்னைக்கு வரைக்கும் இலங்கைக்கு பொருளாதார முதுகெலும்பா இருக்கு. ஆனால் அந்தத் தோட்டத் தொழிலாளர்களோட நிலமை?! அதே மலை. அதே சரிவு. அதே தேயிலை. ஆனா அடுத்த தலைமுறை படிச்சு மத்த வேலைகளுக்கு போகத் தொடங்கிட்டாங்க. இவங்களைப் பத்தி நிறைய சொல்லலாம். ஆனா இப்போ வேண்டாம்.

தேயிலைத் தோட்டங்களையும் அங்க வேலை செய்ற மக்கள் வசிக்கும் லயம்(சின்ன வரிசை வீடுகள்) வீடுகளையும் பாத்துக்கிட்டே நனுஓயா வந்து சேந்தோம். மதிய டிரெயின் கண்டிக்கு பொறப்பட வேண்டிய நேரம். ஸ்டேஷன்ல நல்ல கூட்டம். வெளிநாட்டு மக்கள் நிறையப் பேர். நேரா கவுண்ட்டருக்குப் போய் அடுத்த நாள் காலை டிரெயினுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்னு கேட்டேன். அவர் சொன்ன பதில் ஒன்னும் புரியல. என்னோட அரைகுறை ஆங்கில அறிவை மூளைக்குள்ள தீவிரமா ஆராயவிட்டு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டேன்.

ஸ்டேஷன்ல கரண்ட் இல்லையாம். அதுனால டிக்கெட் புக் பண்ண முடியாதாம். எப்ப கரண்ட் வரும்னு தெரியாதாம். சுத்தம்.

வேற எதாவது வழில டிக்கெட் புக் பண்ண முடியுமான்னு கேட்டேன். “Come morning. Buy ticket.”னு பதில் வந்தது. டிரெயினே காலைலதான். காலைல வந்து எடுத்தா unreservationலதான் எடுக்கனும். டிக்கெட் இருக்கா இல்லையான்னு கூட அவரால பாத்துச் சொல்ல முடியாதாம். அதுக்கு மேல அவர் கிட்ட இலக்கியம் பேச விருப்பமில்லை.

அடுத்த நாள் திங்கட்கிழமை. திங்கக்கிழமை காலைல டிரெயின்னா எவ்வளவு கூட்டம் இருக்கும்னு என்னால நெனச்சுப்பாக்க முடிஞ்சது. ரஸ்க் சாப்புடுற மாதிரி ரிஸ்க் எடுக்கலாமான்னு யோசிச்சுப் பாத்தேன். கூட்டம் எக்கச்சக்கமா இருந்து நெரிசல்ல மாட்டுன ரஸ்க் ஆயிருக்கூடாதுன்னு, கண்டிக்கு ரயில்ல போற ஆசைய தேயிலைத் தோட்டத்துலயே உரமாப் போட்டுட்டேன்.

lipton-bandara-eliya-tea-estate-in-ceylonபிறகு சாப்பிடலாம்னு நுவரேலியா வந்தோம். சிவக்குமாரும் ரொஷானும் ஸ்கூல் நேரத்துக்கு ஏத்தமாதிரி சாப்டு பழகிட்டாங்க. கிட்டத்தட்ட brunch timeல அவங்க கொஞ்சம் சாப்டுறதால, மதியச் சாப்பாடுங்குறது கிட்டத்தட்ட 4 அல்லது 5 மணிக்குதான். ஆனாலும் எங்கூட சாப்பிட வந்தாங்க. சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். பிறகு அவங்கள பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்பீட்டு நான் ஆட்டோ பிடிச்சு ஹோட்டலுக்கு வந்தேன். இராத்திரி சாப்புடுறதுக்கு முதநாள் மாதிரியே வெஜிடபிள் பன்னும் flavoured yogurtம் வாங்கிக்கிட்டேன். அடுத்த நாள் காலைல எட்டு மணிக்கு செக்கவுட் பண்ணப் போறதா சனாகா கிட்ட படுக்கப் போறதுக்கு முன்னாடியே ஞாபகப்படுத்தினேன். பஸ்டாண்டுக்குப் போக ஆட்டோவும் தேவைன்னு சொன்னேன். அதெல்லாம் பாத்துக்கலாம்னு சொன்னாரு சனகா.

அடுத்த நாள் கண்டில தங்குறதுக்கு YMCAல பேசி வெச்சிருந்தாரு எழுத்தாளர் ரிஷான். அங்கிருந்து போக வேண்டிய எடங்கள் எல்லாமே நடக்குற தூரம். சாப்பாட்டுக் கடைகளும் பக்கத்துல இருக்கு. அதுனால அதுதான் நல்லதுன்னு சொன்னாரு. ஊர்க்காரங்க சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான. நானும் நல்லா தூங்கி எந்திருச்சு அந்தக் குளிர்லயும் குளிச்சு (வெந்நீர்லதான்) முடிச்சு சனகா போட்டுக் கொடுத்த டீயைக் குடிச்சேன். சமிந்தவே அவரோட வண்டில என்ன ஏத்திக்கிட்டுப் போய் பஸ்டாண்டுல எறக்கிவிட்டாரு.

போறப்போ, “ஏன் நுவரேலியால எல்லா எடமும் பாக்கல?”ன்னு கேட்டாரு. Adam’s peak, World’s end மாதிரியான அருமையான இடங்கள் இருக்கு. அங்கல்லாம் போகனும்னா நிறைய நடக்கனும். மலையேறனும். Trekking போறவங்களுக்கு அருமையான எடம். விடியறதுக்கு முன்னாடியே போனா அருமையா இருக்கும். முத நாள் ஹோட்டலுக்கு ஒரு சைனாக்காரங்க கூட்டம் வந்திருந்தாங்க. அவங்கள்ளாம் நான் பொறப்படுற அன்னைக்கு காலைல World’s end பாக்குறதுக்காக 5 மணிக்கு முன்னாடி எந்திரிச்சு குளிக்காமக் கொள்ளாமப் போயிருப்பதையும் சமிந்த சொன்னாரு.

“அது பாருங்க சமிந்த… நான் இயல்பாவே சோம்பேறி. அதான் மலையேறுவது கடல்ல நீந்துறது காட்டுல ஓடுறது மாதிரியான வேலையெல்லாம் செய்றதில்லன்னு சொன்னேன். உக்காந்துக்கிட்டே மலையேற முடியும்னா சொல்லுங்க, ஒடனே போயிட்டு வர்ரேன்”னு சொன்னேன். இப்பிடியும் ஒருத்தனாங்குற மாதிரி சிரிச்சாரு. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். அது ஆணவச் சிரிப்புன்னு அன்னைக்கே எம்.எஸ்.வி பாட்டு போட்டுட்டாரு. ஒலகம் சிரிக்கும்னு பாத்தா சோம்பேறியா இருக்கும் சுகம் கிடைக்குமா?

adamspeak1Adam’s peakக்குக்கு எல்லா மதமும் உரிமை கொண்டாடுது. அந்த மலையோட உச்சியில ஒரு பாதச்சுவடு இருக்கு. அது சிவனோட பாதம்னு ஒருத்தரும், புத்தரோட பாதம்னு ஒருத்தரும், குரான் சொல்லும் ஆதம் (முதல் மனிதன்) பாதம்னு ஒருத்தரும், ஆதாம்/புனித தாமஸ் பாதம்னு ஒருத்தரும் உரிமை கொண்டாடிட்டு இருக்காங்க. இன்னைக்கு வரைக்கும் தீர்வு ஓயல. இராவணன் இலங்கைய ஆட்சி செஞ்சப்போ அவனோட தலைநகர் இதுதான்னு ஒரு நம்பிக்கை. இங்கருது பாத்தா இராவணனுக்கு சீதா எலியாவுல சீதை உக்காந்திருந்தது தெரிஞ்சதாம். ரொம்ப அழகான மலை. ஆனா மலைல படிலதான் ஏறனும். அதான் சீச்சீ இந்த மலை புளிக்கும்னு நான் மொதல்லயே முடிவு எடுத்துட்டேன்.

பேச்சு வாக்குல இன்னொரு தகவலும் தெரிஞ்சிக்கிட்டேன். சமிந்தவுக்கு உள்ளூர்க்காரங்களுக்கு ரூம் கொடுக்க தயக்கங்கள் இருக்கு. குறிப்பா கோடை காலத்துல இலங்கை மக்கள் நிறைய வருவாங்களாம். ஆனா உள்ளூர்க்காரங்க பொதுவா தண்ணி அடிக்கதான் வர்ராங்கங்குற மாதிரி அவர் வருத்தப்பட்டு சொன்னாரு. நம்மூர்லயும் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு ஏலகிரின்னு மக்கள் தண்ணி டிரிப் அடிக்கிறாங்களே. அப்படித்தான் அங்கயும் போல.

பஸ்டாண்ட்டு பக்கத்துல ஹெல போஜூன் கிட்ட எறங்கி சுடச்சுட இட்லி சாப்டு தெம்பா கண்டி பஸ் பிடிக்கப் போனேன். நல்லவேளையா ஏசி மினி பஸ் இருந்தது. அதுக்கு முன்னாடி ஒரு பையன் நின்னுக்கிட்டு ”ரம்போட புஸ்ஸெல்லவ கம்போல பெரதினிய நுவர நுவர நுவர”ன்னு ராகம் போட்டுக்கிட்டிருந்தான். எனக்கு “குறுக்குச்சால எப்போதென்றான் எட்டயாரம் கோயில்பட்டி சாத்தூர் விருதுநகர்”னு காதுக்குள்ள கேட்டது. பஸ்ல கண்டின்னு தமிழ்லயும் இங்கிலீஷ்லயும் எழுதியிருந்ததைப் பாத்துட்டு அந்தப் பையன் கிட்ட “கண்டி”ன்னு சொன்னேன். அவனும் ஆமான்னு தலைய ஆட்டுனான்.

நானும் ஏறி கதவு பக்கத்துல கால நீட்டுற மாதிரி நல்ல எடமாப் பாத்து உக்காந்தேன். அந்தப் பையன் ராகம் போட்டுச் சொல்ற ஊர் பேரெல்லாம் முடிஞ்ச வரைக்கும் மனசுல பதிய வைக்க முயற்சி பண்ணேன். என் காதுக்குள்ள விழுந்த மாதிரி மொபைல்ல எழுதி வெச்சுக்கிட்டேன். எதுக்கா? போறப்போ அந்த ஊரெல்லாம் வருதான்னு பாக்கதான். பொழுது போகனும்ல. கொஞ்ச நேரத்துல பஸ் நிறைஞ்சிருச்சு. சரியா 9.30க்கு பஸ் பொறப்பட்டுச்சு.

ராகம் போட்டு ஊர் பேர் பாடுன பையன் தான் கண்டெக்டர். எங்கிட்ட வந்து டிக்கட்டுன்னு நின்னான்.

அந்த நேரம் பாத்து சரஸ்வதி தேவிக்கு என்னோட விளையாடனும்னு ஆசை வந்துருச்சு போல. வாயத் தொறந்து டிக்கெட் கேக்கும் போது என்னோட நாக்கை கலைமகள் லேசா பெறட்டி விட்டதால “கிண்டி”ன்னு சொன்னேன்.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கவும்.

அன்புடன்,
ஜிரா

 

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அனுபவங்கள், இலங்கை, நுவரேலியா, பயணம் and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to 9. டாட்டா நுவரேலியா

  1. Pingback: 8. சீதையின் பாதையில் | மாணிக்க மாதுளை முத்துகள்

  2. amas32 says:

    நமக்கு எப்பவும் ஊர் நியாபகம் தானே😂 அதான் கண்டு கிண்டி ஆயிடிச்சு 😊

    amas32

  3. nparamasivam1951 says:

    இலங்கை போன்ற இடம் சென்று, கண்டி யை “கிண்டி” என்பதா? ரொம்ப துணிச்சல் போல. ஆனால், உட்கார்ந்து கொண்டே மலையேறும் முறை யாரேனும் தெரிவித்தால் உடன் எனக்கு மறக்காமல் தெரிவியுங்கள். நானும் அதே டைப், அதனாலே.

  4. Pingback: 10. கண்டிக்கு வந்த வண்டி | மாணிக்க மாதுளை முத்துகள்

  5. பிரிட்டிஸ்காரன் காலத்துல நாம பிறக்கலை, இல்லனா நாங்கலாம் உட்கார்ந்துட்டேதான் மலைசரிவுல ஏறி இறங்கி தேயிலை பறிப்போம்னு அடம்பிடிச்சு, சீ.. சீ.. இந்த தேயிலை புளிக்கும்னு அவனயே சொல்லவெச்சு ஊரவிட்டே துரத்திருப்போம் 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)