12. பத்தினித் தெய்வம்

முந்தைய பகுதியை இங்கு படிக்கவும்.

Cafe 7 அருமையான கடை. டீயும் பிரட் ஆம்லெட்டும் சொன்னேன். WiFi வசதி இருந்ததால சாப்டுக்கிட்டே கொஞ்ச நேரம் டிவிட்டர் வாட்சப்ல பொழுது போக்குனேன். லேசா இருட்டத் தொடங்குற நேரம். வெளிய வந்து ஏரிக்கரையோரமா நடந்தேன். தலதாளன்னு தண்ணி தளும்புற ஏரி. இந்த ஏரிக்குப் பேர் கிரி முகுதா. அதாவது பாற்கடல்னு பொருள். ஆனா இருட்டுல பால் சரியாத் தெரியல. ஏரிக்கு நடுவுல குட்டித் தீவு மட்டும் தெரிஞ்சது. ஏரியோரமா நடக்க பாதை இருக்கு. நடைப்பயிற்சிக்கு நிறைய பேர் வர்ராங்க. சும்மா உலாத்துறதுக்கும் கூட்டம் வருது.
DSC09691
எழுத்தாளர் ரிஷானோட நண்பர் ஒருத்தர் அன்னைக்கு கண்டிக்கு வந்திருக்கிறதாவும் முடிந்தால் அவரை சந்திக்கும்படியும் ரிஷான் சொன்னாரு. அவர் அலுவலக வேலை தொடர்பா வந்திருக்காரு. அவருக்கு மீட்டிங் முடிஞ்சதும் சந்திக்கிறதாகச் சொன்னாரு. நான் அதுவரைக்கும் அங்க இருக்கும் மால் சுத்திப் பாக்கலாம்னு உள்ள போனேன். எட்டு மணிக்கெல்லாம் பாதி கடைகள் மூடியிருந்தது. அன்னைக்கு Valentine’s day eve வேற. எந்தக் கடைல நுழையுறதுன்னு யோசிச்சுக்கிட்டே Glitz கடைக்குள்ள நுழைஞ்சிட்டேன்.

கடைக்குள்ள பாக்குறதெல்லாம் மனசுக்குப் பிடிக்கிற மாதிரியே இருக்கு. ஆனா கடைல கூட்டமே இல்ல. எட்டரைக்கு கடைய மூடிருவாங்களாம். இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. கையும் ஓடல காலும் ஓடல. எதையெதையோ எடுக்கனும்னு ஆசை. ஆனா வேற வழியில்லாம அவசரமா ஒரு பைஜாமா மட்டும் எடுத்துக்கிட்டு வெளிய வந்தேன். கொழும்புல இந்தக் கடையக் கண்டுபிடிச்சு போயே ஆகனும்னு மனசுக்குள்ள குறிச்சு வெச்சுக்கிட்டேன். கண்டிலயே இவ்வளவு நல்லாயிருந்தா, கொழும்புல இன்னும் நிறைய டிசைகள் இருக்கனுங்குறது என்னோட கணக்கு.

அதுக்குள்ள எழுத்தாளர் ரிஷானோட நண்பர் வந்துட்டாரு. அவருக்கு தமிழ் தெரியாது. சிங்களம் தான். தாமதமா வந்ததுக்கு மன்னிப்பு கேட்டாரு. பிறகு வாங்க சாப்பிடப் போலாம்னு சொன்னாரு. மாட்டோம்னு எப்பவாவது சொல்லீருக்கோமா என்ன! ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு போனோம். சூப்பும் நாசிகோரங்கும் ஆர்டர் பண்ணேன். நம்மூர்ல சூப் கிண்ணத்துல வரும். அதைக் குடிக்க முடியாம 1/2ன்னும் 2/3ன்னும் கேப்போம். இங்க என்னடான்னா சட்டி நிறைய சூப் கொண்டு வந்து வச்சாங்க. உள்ள குதிச்சு நீச்சலடிக்கச் சொல்லப் போறாங்களோன்னு மொதல்ல நெனச்சேன். அவ்வளவு இருந்தது. ஒரு வழியா குடிச்சு முடிச்சா கண்ணு கட்டி மயக்கம் வருது. அதுக்குள்ள நாசிகோரங் வந்துருச்சு. பாதி கூட என்னால முடிக்க முடியல. வீணடிச்சிட்டோமேன்னு வருத்தமா இருந்தது.

17155745_995384687261578_5827177793056150259_nஅடுத்த நாள் என்ன பண்ணப் போறேன்னு கேட்டாரு. காலைல எந்திரிச்சு கொழும்பு போறதுதான் திட்டம். ஏன்னா அதுக்கு அடுத்த நாள் கதிர்காமம் போகனும். அந்த நண்பருக்கு 12 மணி வரைக்கும் வேலை இருக்குன்னும், அதுக்கப்புறம் அவர் கொழும்புக்கு போறதாகவும், அவர் கார்லயே வரலாம்னும் சொன்னாரு. அவர் சொன்னதும் நல்லாதான் இருந்தது. எப்படியும் 10 மணிக்கு பஸ் ஏறனும்னு முடிவு பண்ணிருந்தேன். 12 மணிக்குப் போறதுல பெருசா ஒன்னும் வித்தியாசம் இருக்கப் போறதில்லைன்னு தோணுச்சு. சரின்னு சொல்லிட்டேன்.

அடுத்தநாள் காலைல எந்திரிச்சா மதியம் 12 வரைக்கும் ஊர் சுத்திப் பாக்க நேரம் இருக்கு. நேரா பாலாஜி தோசைக்கடைக்குப் போய் தோசையும் ஆமை வடையும் (ஆமை சைஸ் இருந்துச்சு) சாப்டேன். டேபிள்ள எதிர்ல உக்காந்து சாப்பிட்டவர் சிங்களம் பேசுறவர்னு ஆளைப் பாத்ததும் தெரிஞ்சது. அவரும் தோசைதான் சொல்லியிருந்தாரு. அவருக்கு லேசா தீய்ஞ்சு போன தோசை. அவர் எதுவும் பேசாம வாளில இருந்த சாம்பாரை ஊத்திச் சாப்பிட ஆரம்பிச்சாரு. கால்வாசி தோசைக்கு மேல முடிச்சிருப்பாரு. சர்வர் வேகமா வந்து மன்னிப்பு கேட்டு, அந்த தோசைய எடுத்துட்டு புதுசா ஒரு தோசை கொடுத்தாரு. சாப்பிட வந்தவர் “இருக்கட்டும் பரவால்ல”ன்னு சொல்லிப் பாத்தாரு. சர்வர் விடவே இல்ல. புது தோசைய கொடுத்துட்டுதான் அந்த எடத்த விட்டே நகர்ந்தாரு.

எந்திரிச்சதிலிருந்தே வானம் மேகமூட்டமா இருந்தது. சாப்டு வெளிய வந்ததும் பொட்டுப் பொட்டா மழை. அடடான்னு நெனச்சிக்கிட்டே, அங்கிருந்த கடைல குடையொன்னு வாங்கினேன். நம்ம நேரம்னு ஒன்னு சொல்வாங்களே. குடைய வாங்குனதும் தூறல் நின்னுருச்சு. பின்னாடி எம்.எஸ்.வி இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் எல்லாரும் சேந்து பிஜிஎம் வாசிக்க, நான் ரொம்ப சோகமா நடந்து போனேன். ஒரு எடத்துல நிறைய மக்கள் எதோ ஒரு கட்டிடத்துக்குள்ள போறதும் வர்ரதுமா இருந்தாங்க. நானும் என்னதான் இருக்குன்னு உள்ள போனேன்.

பாத்தாDSC09633… பத்தினி தேவாலயான்னு எழுதியிருக்கு. இதத் தேடிதான நேத்து திக்குத் தெரியாம அலைஞ்சோம்னு நினைவுக்கு வந்தது. அந்தக் கண்ணகியே கொழும்புக்கு பொறப்படவிடாம தடுத்து கோயிலுக்கு கூட்டீட்டு வந்த மாதிரி இருந்தது. நேரா உள்ள போனேன். அப்பதான் பூஜை தொடங்குது. ரெண்டு கைலயும் சிலம்பு பிடிச்ச மாதிரி கண்ணகியோட ஓவியம். அதுதான் திரை. அதுக்குப் பின்னாடி கண்ணகியோட சிலை. ஆனா பூஜை பண்றவர் மட்டும் தான் உள்ள போக முடியும். நாம வெளிய இருந்து கண்ணகி ஓவியம் இருக்கும் திரையை மட்டும் பாக்கனும். மேளம் கொட்டி நாயனம் மாதிரி ஒன்னு வாசிச்சு பூஜை நடக்குது. சிங்களத்துல எதெதோ சொல்றாங்க. மதுராபுரி, கண்ணகி, பத்தினிங்குறது மட்டும் புரிஞ்சது. மக்கள் காணிக்கையா பழங்களை தட்டுல அடுக்கிக் கொண்டு வர்ராங்க. நானும் பூஜை முடியும் வரைக்கும் இருந்துட்டு வெளிய வந்தேன். கோயில்ல இன்னொரு அறைல கண்ணகியோட சிலை இருக்கு. ரெண்டு கைலயும் சிலம்பு பிடிச்ச மாதிரி சிலை.

கண்ணகிக்கு வணக்கம் சொல்லிட்டு வெளிய வந்து கிரி முகுதா ஏரிக்கரையோரமா நடந்தேன். அன்னைக்கு ஊர் முழுக்க காதலர் தினக் கொண்டாட்டங்கள். அப்படியே மாலுக்குள்ள நுழைஞ்சேன். காதலர்களுக்காக நிறைய நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டிருந்தது. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டிருந்தேன். அங்கருந்து கிரி முகுதா ஏரி நல்லா தெரிஞ்சது. மேக மூட்டமும் தளும்பும் ஏரியும் காதலர் தினக் கொண்டாங்களுமா அந்த எடமே சொர்க்கம் மாதிரி இருந்தது. அங்க இருந்த கஃபேல டீ ஒன்னு சொல்லிட்டு சுத்தியும் என்ன நடக்குதுன்னு கவனிச்சிட்டிருந்தேன். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

அப்போ அந்த நண்பர் மொபைல்ல கூப்டு ”சரியா 12.15க்கு YMCA வாசல்ல இருப்பேன்னு” சொன்னாரு. நானும் சரின்னு நடந்து YMCAக்குப் போனேன். காலைலயே செக்கவுட் பண்ணி பெட்டியை ரிசப்ஷன்ல வெச்சிருந்ததால, போய் பெட்டிய எடுத்துக்கிட்டு வாசலுக்கு வந்து நிக்கவும் அவர் வரவும் சரியா இருந்தது. கண்டில ரோடெல்லாம் சின்னச் சின்னதா இருக்கு. அதுனால பெரும்பாலும் வாகன நெரிசல்கள்தான். மாட்டிக்கிட்டோம்னா எப்போ சரியாகும்னு சொல்லவே முடியாது. அதுனாலதான் அவர் 12 மணிக்கே கண்டிய விட்டு வெளியேறனும்னு சொன்னது. சொன்ன மாதிரி பிரச்சனையில்லாம சீக்கிரமா கண்டியை விட்டு வெளிய வந்துட்டோம். அங்க ஒரு தள்ளுவண்டில பழம் வித்துட்டு இருந்தாங்க. அவர் எப்போ கண்டிக்கு வந்தாலும் பழம் வாங்காமப் போக மாட்டாராம்.

17190796_995391527260894_8814506843262273294_nநானும் எறங்கி என்னென்ன பழங்கள்னு பாத்தேன். பழைய திருப்பதி லட்டு அளவுக்குப் பெருசா கொய்யாப்பழம். அப்புறம் மாம்பழம். ரெண்டே பழங்கள்தான். கொய்யாப் பழத்துல கொஞ்சம் நறுக்கிக் கொடுத்தாரு. அவ்ளோ ருசி. பழம் பெருசா சதைப்பற்றோட கடிச்சுச் சாப்பிட நசுக்குநசுக்குன்னு நல்லா இருந்தது. நான் ஒரு நாலு பழம் தனியா வாங்கிக்கிட்டேன். மாம்பழத்தைப் பாத்ததும் சாப்பிட ஆசை. அதுல ஒரு பழம் வாங்கிக்கிட்டேன். ரெண்டு கொய்யாப் பழத்தை துண்டுகளா நறுக்கி போற வழில சாப்பிடறதுக்கு வெச்சுக்கிட்டோம்.

பழம் விக்குற பெரியவருக்கு தமிழ் தெரிஞ்சாலும் தெரியலாம்னு நண்பர் சொன்னாரு. தமிழ்ல ரெண்டு பேச்சு பேசிப் பாத்தேன். அவருக்குப் புரிஞ்சதா புரியலையான்னே தெரியல. அவர் இலங்கை முஸ்லீம்னு சொன்னது மட்டும் புரிஞ்சது. நான் “இண்டியா… இண்ண்ண்ண்டியா”ன்னு அழுத்திச் சொன்னேன். அவர் லேசா சிரிச்ச மாதிரி இருந்தது. ஆனா தாடியும் மீசையும் மறைச்சதால சரியாத் தெரியல. பொறப்படும் போது “அஸ்ஸலாமு அலைகும்”ன்னு சொன்னாரு. நான் பதிலுக்கு லேசா தலையைக் குனிஞ்சு “அலைகும் ஸலாம்”னு சொன்னேன்.

அடுத்து என்ன… கொழும்புக்கு நேரா வண்டிய விட்டோம். எனக்கென்னவோ நண்பர் மெதுவா காரை ஓட்டுற மாதிரியே தோணுச்சு. ரோடு காலியா இருக்கும் போது ஏன் மெதுவாப் போறாருன்னு யோசிச்சேன். பேசாம அவர் கிட்ட காரை வாங்கி ஓட்டலாமான்னு தோணுச்சு. அப்புறந்தான் தெரிஞ்சது இலங்கையில் இருக்கும் வேகக் கட்டுப்பாடு. சாதா ரோடுகளில் 50கிலோமீட்டருக்கு மேல போகக் கூடாதாம். ஹைவேல மட்டும் தான் வேகமாப் போலாமாம். அதுவும் 90 கிமீ வேகம்னு சொன்னாரு. இலங்கைல விபத்துகள் நிறைய நடக்குது. இந்த வேகக்கட்டுப்பாட்டுக்குப் பிறகும் எக்கச்சக்க விபத்துகள்னு சொன்னாரு.

போற வழியெல்லாம் இயற்கைக் காட்சிகள். அவ்வளவு அழகு. அவ்வளவு பசுமை. வழியில மாவனல்லைங்குற ஊர்ல சாப்பிட ஒரு கடைல நிறுத்தினோம். ஆனா அந்தக் கடை பூட்டியிருந்தது. சரின்னு வேறொரு ஊர்ல நிறுத்தி சாப்பிட்டோம். எதையும் வீணாக்கக்கூடாதுன்னு ஒரேயொரு ஃபிரைடுரைஸ் மட்டும் சொன்னேன். சாப்பிட்டு முடிக்க சரியாயிருந்தது. சாப்பிட்டுட்டு வண்டியை எடுத்தா “அங்கல்லாம் மழையா”ன்னு கேட்டு எழுத்தாளர் ரிஷான் மெசேஜ் அனுப்பியிருந்தாரு. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையேன்னு பதில் அனுப்பிச்சேன். பதில் அனுப்பிய நேரம் பாருங்க… மழை. ஒரே மழை. கொட்டும் மழை.

தொடரும்…

அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

சில படங்கள் பார்வைக்கு…

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to 12. பத்தினித் தெய்வம்

 1. Pingback: 11. தலதா மாளிகாவா | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. amas32 says:

  படங்கள் அழகு. நீங்க சொல்றா மாதிரி சாலைகள் ரொம்ப துப்புரவா இருக்கு.பக்கத்தில் இருக்கும் நாடு என்றாலும் நம் மாநிலத்தை விட காய், கனிகள் எவ்வளவு நன்றாக உள்ளன!

  amas32

  • GiRa ஜிரா says:

   ஆமாம்மா. அங்க விவசாயத்துக்கு நல்ல முன்னுரிமை கொடுக்குறாங்க. விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தா நீர்வளம் தானாப் பெருகும்.

 3. Pingback: 13. நுவர நுவர நுவர | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s