14. கதிர்காமக் கனவுகள்

முந்தைய பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

நேரா கொழும்பில் தங்க ஏற்பாடு செஞ்சிருந்த வில்லாவுக்குப் போனேன். ரெண்டாம் மாடியில் அறை. நல்ல வசதியான அறை. கொரியன் ஸ்டைல் ஸ்லைடிங் கதவுகள். வில்லா ஓனரே ரூமுக்கு நேரா வந்துட்டாரு. காலைல நாலு மணிக்கு நான் கதிர்காமம் போறதைச் சொன்னேன். அவருக்கு பயங்கர அதிர்ச்சி. இலங்கை மக்கள் கதிர்காமம் போறதுன்னா ரெண்டு நாள் பயணமாகப் போறாங்க. மொத நாள் போய் தங்கி, அடுத்தநாள் காலைல மாணிக்க கங்கைல குளிச்சிட்டு கதிர்காமம் கோயில்ல சாமியக் கும்பிட்டுட்டு பொறப்பட்டு வந்தா கொழும்புக்கு தூங்குறதுக்குதான் வர முடியும். அதான் நான் ஒரே நாள்ல போயிட்டு வரப்போறேன்னதும் அவருக்கு “இதெல்லாம் நடக்குற வேலையா”ன்னு தோணியிருக்கு.

பிறகு அவரே ஒரு வழி சொன்னாரு. நாலு மணிக்கு நான் பொறப்படும் போது பெட்டியை அங்கயே விட்டுட்டு அறைக் கதவுக்கு பூட்டுப் போடாம சும்மா சாத்தி வெக்கனும். சாவியை உள்ள இருக்கும் டேபிள்ல வெச்சிறனும். அவரே காலைல வந்து பெட்டியை எடுத்து பக்கத்துல இருக்கும் இன்னொரு வில்லாவில் இருக்கும் அறைக்கு (எனக்குன்னு ஒதுக்கப்பட்ட அறை) மாத்தீருவாரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். எல்லாம் முருகன் பாத்துக்குவான்.
IMG_9525
நான் நுவரேலியா கண்டின்னு ஊர் சுத்திக்கிட்டிருந்தப்போ யாழ்ப்பாணத்தில் தன்னோட புத்தக வெளியீட்டை (அது எங்கட காலம்) வெற்றிகரமா முடிச்சிட்டு கொழும்பு வந்துட்டாரு. கதிர்காமத்துக்குக் கூட்டீட்டுப் போகப்போறது அவர்தான். அதுக்கு வண்டியும் ஏற்பாடு செஞ்சிட்டாரு. காலைல நாலு மணிக்கு நான் தங்கிருக்கும் எடத்துக்கு வந்து அப்படியே நேரா கதிர்காமம் போறதுன்னு திட்டம். அதுக்கேத்த படி அவரும் சரியா நேரத்துக்கு வந்துட்டாரு.

நான் பெட்டியை உள்ள வெச்சு, சாவியை டேபிள்ள வெச்சு, வேண்டியதை backpackல எடுத்துக்கிட்டு, கதவைச் சும்மா மூடிட்டு பொறப்பட்டாச்சு. இன்னும் எழுந்திருக்காத கொழும்பு. அதுனால வழியில் எந்த நெரிசலும் இல்லாம சல்ல்லுன்னு போக முடிஞ்சது. நேராப் போய் ஹைவேல சேந்தாச்சு. இனிமே இன்னும் வேகமாகப் போகலாம். போற வழியில் ஹைவேயில் நல்ல மோட்டல்கள் இருக்கு. அங்க நிறுத்தி டீயும் வெஜிடபிள் பன்னும் சாப்டோம். போற வழியில் வண்டி ஓட்டி வந்த டிரைவர் கிட்ட பேசி பல விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன்.
DSC09839
ஹைவே கொஞ்சம் தூரம் தான். அதுக்கப்புறம் ஊருக்குள்ள போற வழியில்தான் போகனும். ஆனா… வழியெல்லாம் அவ்வளவு அழகான கடற்கரைகள். விடியக்காலைல பாக்குறதுக்கு சொர்க்கமா இருக்கு. பேசாம கதிர்காமம் போகாம வழியில் ஒரு பீச் ரிசார்ட்ல தங்கலாமான்னு கூட யோசனை வந்தது. அவ்வளவு அருமையான கடற்கரைகள். அதையொட்டிப் போகும் இரயில் பாதைகள். சுனாமி வந்தப்போ அந்த நேரம் போன இரயிலை முழுசா அப்படியே சுருட்டிட்டுப் போயிருச்சாம். சுனாமியால மக்கள் விட்டுட்டுப் போன வீடுகளையும் பாத்தோம்.

அடுத்தவாட்டி இலங்கைக்கு வந்தா இந்தக் கடற்கரை விடுதிகள்ள ரெண்டு மூனு நாள் தங்கனும்னு மனசுல குறிச்சு வெச்சுக்கிட்டேன். திருகோணமலைப் பக்கம் இருக்கும் கடற்கரைகளும் இன்னும் அழகா இருக்குமாம். இலங்கைப் பயணம் போடுற எல்லாரும் ரெண்டு நாளாவது இந்தக் கடற்கரைக்கும் ஒதுக்குங்க.

DSC09838திடீர்னு டிரைவர் எதிர்ப்பக்கமா வந்த ஒரு பெரிய காரைக் காட்டி “மகிந்த எதிர்ப்பக்கமா போறாரு”ன்னு சொன்னாரு. சரின்னு கேட்டுக்கிட்டோம். மகிந்த ராஜபக்‌ஷயோட சொந்த ஊரான அம்பாந்தோட்டை(Hambantota) கதிர்காமம் போற வழியில் தான் இருக்கு. சுனாமி சமயத்துல இலங்கைக்குக் கிடைச்ச நிதியுதவிகளையெல்லாம் அம்பாந்தோட்டைக்கே செலவழிச்சு அந்தப் பகுதியை ரொம்பப் பிரமாதப்படுத்தீட்டாருன்னு சொல்றாங்க. குறிப்பா வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு வந்த நிதியில் கை வெச்சதாச் சொல்றாங்க.

ஒரு ஏர்போர்ட்டே கட்டியிருக்கார்னா பாருங்களேன். மத்தள ராஜபக்‌ஷ பன்னாட்டு விமானநிலையம்(Mattala Rajapaksha International Airport)னு அதுக்குப் பேரு. கொழும்பு ஏர்ப்போர்ட் நெரிசலைக் குறைக்கத்தான் இந்த ஏர்ப்போர்ட்டைக் கட்டினாங்க. அப்படியே சொந்த மாவட்டத்தையும் வளத்துவிட்ட மாதிரி ஆச்சுல்ல. மொதல்ல என்னவோ சில விமானங்கள் இந்தப் பக்கம் வந்திருக்கு. ஆனா வரவர திருப்பதி லட்டு நெல்லிக்காய் ஆன மாதிரி ஒவ்வொன்னா நின்னுருச்சு. மக்கள் வரனும்ல. சும்மா வண்டியை ஓட்ட முடியுமா? இப்போ சில ஏர்டாக்சிகள் இங்க வருது.

அம்பாந்தோட்டைக்கு முன்னாடி மாத்தறை(Matara)ன்னு ஒரு ஊர் வருது. இது ஒரு காலத்துல தென்னிலங்கை சிங்கள அரசின் (Kingdom of Ruhuna) தலைநகரமா இருந்திருக்கு. இங்கயும் பாக்க நிறைய இடங்கள் இருக்கு. மாத்துறை-ங்குற தமிழ்ப் பேர்தான் மருவி மாத்தறை(Matara) ஆயிருச்சுன்னும் சொல்றாங்க. இங்க ரொம்பப் பிரபலமான பாறே தீவா (Rock in Water) புத்தர் கோயில் இருக்கு. இதுக்கு தொங்கும் பாலத்துல நடந்து போகனும். அதே போல நெறைய பழைய அருமையான கட்டிடங்களும் நினைவுச்சின்னங்களும் இருக்கு. இலங்கைல எந்தப் பக்கம் போனாலும் பாக்குறதுக்கு எதாவது இருக்கு. ஆகையால போறதுக்கு முன்னாடியே இந்தந்த எடங்கள்னு திட்டம் போட்டுட்டுப் போனா அருமையாப் பாக்கலாம்.
maxresdefault
சரி. நம்ம இலங்கைல இருந்து அனுமார் மாதிரி ஒரே தாவாத் தாவி தில்லானா மோகனாம்பாளுக்கு வருவோம். இந்தப் படத்தைப் பாக்காதவங்க ரொம்பக் குறைவா இருக்கும். அந்த அளவுக்குப் பிரபலமான படம். இது கொத்தமங்கலம் சுப்பு ஆனந்த விகடனில் எழுதிய நாவல். தடிதடியா ரெண்டு புத்தகமா பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துல வெளியிட்டிருந்தாங்க. 2003ல இந்தப் புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிச்சு வாங்கினேன். படிக்கப்படிக்க அதுக்குள்ள மூழ்கிட்டேன். புத்தகத்துல இரு சிறு பகுதியை மட்டும் எடுத்து திரைக்கதை அமைச்சு படமாக்கினார் ஏ.பி.நாகராஜன். புத்தகத்துல சிக்கல் சண்முகசுந்தரம் மோகனாம்பாள் கூட்டம் இலங்கைக்கெல்லாம் போகும். அங்க போய் கதிர்காம யாத்திரை போவாங்க. அந்த யாத்திரையைப் பத்தி கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருப்பாரு பாருங்க… அடடா. அதப் படிச்சதுல இருந்துதான் எனக்கு கதிர்காமம் போகனும்னு ஆசை வந்ததோ என்னவோ.

Thillana_Mohanambal_film_stillபடத்துல வர்ர அதே சிவாஜி, பத்மினி, பாலையா, தங்கவேலு, சி.கே.சரசுவதி கூட்டத்தை மனசுல வெச்சுக்கோங்க. இந்தக் கூட்டம் கதிர்காமத்துக்கு யாத்திரை போனா எப்படியிருக்கும். பக்தியும் காதலும் வரலாறும் தமிழும் பாட்டும் கலந்து சுவைக்கும் அமுதம். இப்போ தொலைஞ்சு போன கதிரை மலைப் பள்ளு நூலைப் பத்தியும், அதை வெச்சு நடத்தும் கூத்து பத்தியும் விவரமா எழுதியிருப்பாரு கொத்தமங்கலம் சுப்பு. யார் கிட்டயாவது கதிரை மலைப் பள்ளு நூல் இருந்தா தயவு செஞ்சு பகிர்ந்துக்கோங்க.

thillana_mohanambalகதைப்படி சண்முகசுந்தரத்துக்கும் மோகனாவுக்கும் திருமணம் செஞ்சு வைக்க வடிவாம்பாள் ஒத்துக்கிறாங்க. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை ரெண்டு செட்டையும் இலங்கைல கொண்டு வந்து இறக்கி விட்டுருது. அதுக்குக் காரணம் சவடால் வைத்திதான்னு நான் சொல்ல வேண்டியதில்ல. அங்க ஒரு பெரிய மனிதர் ஆதரவு கொடுக்குறாரு. அப்போ கலியுகநந்தி முத்துராக்கு (பாலையா பாத்திரம்) இலங்கை மண்ணில் கால் வெச்சதிலிருந்து ஒரு பொழுதுதான் சாப்பிடுறாரு. என்னன்னு கேட்டதும் இலங்கைக்கு வந்ததும் கதிர்காமம் பாக்காம சாப்பிட மாட்டேன்னு சொல்றாரு. அதுனால எல்லாரும் கூட்டமாப் பொறப்பட்டுப் போறாங்க.

கதிர்காமம் வந்தபிறகு மாணிக்க கங்கைல எல்லாரும் குளிக்கிறாங்க. மோகனாவின் தாயார் வடிவாம்பாள் கால்ல வழவழன்னு எதோ செகப்புக் கல்லு நெல்லிக்கா தண்டி தட்டுப்படுது. யாராவது மிதிச்சு வழுக்கிறப் போறாங்கன்னு தூக்கிப் போடப் போகும் போதுதான் அது மாணிக்கக் கல்லுன்னு தெரியவருது. அதுல ஆறு ரேகைகள் ஓடுறதால அது ஆறுமுகப்  பெருமான் குடுத்ததாகவே நெனைச்சு உருகுற மாதிரி கதை போகும்.

msviswanathanஅதே மாதிரி வருவான் வடிவேலன் படத்துல “நீயின்றி யாருமில்லை விழிகாட்டு முருகா” பாட்டுலயும் கதிர்காமம் கோயில் வரும். பைலட் பிரேம்நாத் படத்துல சிவாஜி காவடி எடுத்துக்கிட்டு “முருகனெனும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம்”னு பாடிக்கிட்டு கதிர்காமம் கோயிலுக்குப் போறதா வரும். இந்த ரெண்டு படத்துக்கும் இசை எம்.எஸ்.வி. தமிழ் சினிமாவில் கதிர்காம முருகனுக்கு இசையமைச்ச பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனுக்கு மட்டும் போகனுங்குறது அந்தக் கதிர்காம முருகனோட விருப்பம் போல.

மேல சொன்னதெல்லாம் என்னோட கதிர்காமக் காதலுக்கு அப்பப்போ நீர் விட்டு வாடாமப் பாத்துக்கிட்ட பன்னீர் ஊற்றுகள். கதிர்காம யாத்திரைன்னு கிவாஜ ஒரு புத்தம் எழுதியிருக்காரு. ஆனா கிவாஜ எழுதியிருக்காருங்குறதத் தாண்டி அந்தப் புத்தகத்துல ரசனையும் சுவையும் எனக்குக் குறைவாக இருந்தது.

இலங்கைக்கு முன்னாடியே ஒரு நண்பர் கூட்டத்தோட போக வாய்ப்பு வந்தது. நல்ல திட்டமிட்ட பயணம். ஆனா அதில் கதிர்காமம் இல்ல. அதைச் சேர்க்க அவங்களோட பயணத்திட்டம் எடம் குடுக்கல. அதுனால நான் வரலைன்னு சொல்லிட்டேன். போக முடியாமப் போச்சேன்னு ரொம்ப மனசு வேதனைல இருந்த சமயத்துலதான் கானாபிரபா வழியா முருகன் இன்னொரு வழியை உண்டாக்கிக் கொடுத்தான். கானாபிரபா கூட்டிப் போய்தான் நான் கதிர்காமம் பார்க்கனும்னு அந்த முருகனே விரும்புனதாக மட்டும் தான் என்னால இப்பவும் நினைக்க முடியுது.

மனசுக்குள்ள கட்டுக்கடங்காத கதிர்காமக் காதலோட திஸ்ஸமாராவைத் தாண்டி கதிர்காமத்துக்குள்ள நுழைஞ்சேன்.

பி.கு – தில்லானா மோகனாம்பாள் பதிப்புரிமை இப்போ பழனியப்பா பிரதர்ஸ் கிட்ட இருந்து விகடனுக்கு கை மாறிருச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆனா புத்தக வடிவில் இன்னும் வரல.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

வருவான் வடிவேலன் படப் பாடல் (நீயின்றி யாருமில்லை விழிகாட்டு)

பைலட் பிரேம்நாத் படப் பாடல் (முருகனெனும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம்)

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், எம்.எஸ்.விசுவநாதன், கதிர்காமம், திரையிசை, பயணம், மெல்லிசைமன்னர் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to 14. கதிர்காமக் கனவுகள்

  1. Pingback: 13. நுவர நுவர நுவர | மாணிக்க மாதுளை முத்துகள்

  2. amas32 says:

    இலங்கைப் பயணக் கட்டுரை என்றாலும் அதில் எத்தனை எத்தனை விஷயங்களைத் தொட்டு விடுகிறீர்கள்! சூப்பர். கதிர்காமத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன் 🙂

    amas32

  3. Pingback: 15. காமம் கந்தனுக்கே | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s