15. (கதிர்)காமம் கந்தனுக்கே

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

கதிர்காமத்துக்காகத்தான் இலங்கைப் பயணத்திட்டமே. அந்த அளவுக்கு ஆவல் இருந்தாலும், இந்தியாவில் இருந்தப்பவும் இலங்கைல நண்பர்களையும் மக்களையும் சந்திச்சப்பவும் கேள்விப்பட்ட விவரங்கள் எதுவும் நல்லதா இல்ல. கோயிலில் இருந்த தமிழ் அடையாளங்கள் நிறைய அழிக்கப்பட்டதையும் கிட்டத்தட்ட பௌத்தமதக் கோயிலாகவே மாறியிருப்பதையும், கோயில் இடங்கள் பௌத்தர்கள் மட்டுமில்லாம பிற மதத்தினராலும் நிறைய ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும்… கதிர்காமம்னு சொன்னதுமே மக்கள் பெருமூச்சுதான் விட்டாங்க. குறிப்பா பழைய கதிர்காமத்தைப் பாத்த பெரியவர்கள். ஆகையால ஆர்வம் அளவுக்கு மீறி இருந்தாலும் ஏமாற்றத்துக்கு மனதைத் தயார்ப்படுத்திக்கிட்டேன். என்ன இருந்தாலும் எங்கப்பன் முருகன் கோயில். பேரை மாத்தலாம். வழிபாட்டு முறையை மாத்தலாம். வேற சிலையைக் கூட கொண்டு வந்து வைக்கலாம். ஆனா தண்ணொளிச் சுடராக இருக்கும் முருகனை என்ன செய்ய முடியும்? மனசுக்குள்ள நான் முருகான்னு கூப்பிடுறத விட பெரிய பூசையோ வழிபாடோ சடங்கோ என்ன இருக்க முடியும்? அருணகிரி நடந்த எடத்துல நானும் நடந்தேங்குற ஒரு மகிழ்ச்சி போதும்னு முடிவு செஞ்சுட்டுதான் கதிர்காமத்துக்குள்ள நுழைஞ்சேன்.

ஊருக்கு வாசல்லயே ஒரு சாப்பாட்டுக்கடைல டிபன் சாப்டுட்டு நானும் கானாபிரபாவும் கோயிலுக்கு நடந்து போனோம். சாப்பிட்ட கடைல தேன், தினைமாவு, திருநீறு, கற்பூரச்சட்டியெல்லாம் பக்தர்களுக்கு விக்க வெச்சிருந்தாங்க. கோயிலுக்குப் வழியெல்லாம் நிறைய கடைகள். அது இது லொட்டு லொசுக்குன்னு லட்டு லசுக்குன்னு எல்லாமே வித்துக்கிட்டிருந்தாங்க. பூசைப் பொருட்கள் காவடிகள் விக்கிற கடைகளும் இருந்தது. கானாபிரபா கற்பூரக்கட்டி வாங்குனாரு. நானோ வெறுங்கைய வீசீட்டுப் போனேன்.

IMG_9568வருவான் வடிவேலன் படத்துலயும் பைலட் பிரேம்நாத் படத்துலயும் பாத்த மாணிக்க கங்கை இப்ப இல்ல. குறுகி ஒடுது. குப்பைகள் வேற. நிறையப் பேர் குளிக்கிறாங்க. மோகனாம்பாளோட அம்மா வடிவாம்பாளுக்கு மாணிக்கக் கல் கிடைச்ச மாணிக்க கங்கையை வேதனையோட பாத்துக்கிட்டே நடந்தேன். மணல். மணல். மணல். கால் புதையப் புதைய நடந்துதான் போகனும். மாணிக்க கங்கையைத் தாண்டி வண்டிகளை விடுறதில்ல. அந்தப் பக்கமெல்லாம் அத்தனை கருமுகத்துக் குரங்குகள். வம்பு தும்பு செய்யாத பிரசாதப் பையைப் பிடிச்சு இழுக்காத குரங்குகள்.
DSC09712
DSC09706மாணிக்க கங்கையைத் தாண்டி கொஞ்சதூரம் போய் இடப்பக்கம் திரும்பினா அந்தக் கடைசில வேல் நட்டுவச்ச ஒரு வளைவு தெரியும். எனக்கும் தெரிஞ்சது. வளைவின் ரெண்டு பக்கமும் சுவத்துல வரிசையா யானைகள் இருக்கும். சினிமால பாத்தது கண் முன்னாடி நேராத் தெரிஞ்சதும் மனசுக்குள்ள ஒரு துளி சந்தோஷம். மூனு மாசத்துக்கு முன்னாடி நான் கதிர்காமம் போவேன்னு யாராவது சொல்லிருந்தா சிரிச்சிருப்பேன். ஆனா முருகன் கூட்டீட்டு வந்துட்டான்.

செருப்பு வைக்க வளைவுக்கு வெளியவே இடம் இருக்கு. செருப்பை விட்டுட்டு நாங்களும் உள்ள நுழைஞ்சோம்.

தமிழ்நாட்டுல இருந்து கதிர்காமம் போறவங்களுக்கு பெரும்பாலும் கோயில் ஏமாற்றமா இருக்கும். தில்லானா மோகனாம்பள் வடிவாம்பாள் அதை வெளிப்படையாவே சொல்றதா எழுதியிருக்காரு கொத்தமங்கலம் சுப்பு.

கோவிலுக்குள் நுழைந்ததும், “என்னங்கா, கோவிலையே காணோமே!” என்றாள் வடிவாம்பாள்.

”உன் உடம்புதான் கோயில். இதயம் தான் இறைவன் இருப்பிடம். கதிர்காமத்திலே நீ கொண்டு வரும் நெஞ்சமே கோயில். அதில் அவனைக் குடிவரச் செய்” என்றார் பரதேசியார்.

“ஊருக்குப் போனாக்க, அங்கே நாலு பேர் கேக்கிறபோது, கதிர்காமத்துக்குப் போய்விட்டு வந்தேன். அங்கே கோவில் அப்பிடி இருக்குது, குளம் இப்பிடியிருக்குதுன்னு என்று சொல்லக்கூட இங்கே ஒன்றுமில்லையே!” என்றாள் வடிவாம்பாள்.

வடிவாம்பாளுக்குத் தோணுறது எல்லாருக்குமே தோணும். ஏன்னா பெரிய கோயில், குளம், மதில், சிலைகள்னு எதுவுமே கதிர்காமத்துல இல்ல.

DSC09726ரொம்ப எளிமையான கோயில். பாத்தா கோயில்னே சொல்ல முடியாது. பாக்க ஒரு ஓட்டுவீடு மாதிரிதான் இருக்கும். கோயில் வாசல்ல இருக்கும் மணிக்கூண்டு பாத்துதான் கோயில்னு புரிஞ்சிக்கனும். அதே மாதிரி கோயிலுக்கு முன்னாடி எரியும் கற்பூரக் கொப்பரை. வர்ரவங்கள்ளாம் அதுல சூடக்கட்டிகளைப் போட்டுப் போட்டு எரிஞ்சிக்கிட்டேயிருக்கு. மக்கள் கைல பூசைத் தட்டு ஏந்தி உள்ள போறாங்க. வெளிநாட்டுப் பயணிகள் கூட்டம் கையில் கேமராவோடு. குறிப்பா வெள்ளைக்காரர்கள். கேமிராவில் எல்லாம் படம் எடுக்குறாங்க. கோயிலுக்குள்ள போறாங்க. அங்கயும் படம் எடுக்குறாங்க. ஆனா பூசை வேளை தொடங்கப் போறப்போ சரியா வெளிய வந்துட்டாங்க. சாமி கும்பிடுறவங்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடாது பாருங்க. நல்ல நாகரீகம்.

IMG_9590நானும் கழுத்துல கேமராவைத் தொங்கப் போட்டுக்கிட்டு தோள்ள backpack தொங்கப்போட்டுக்கிட்டு கோயிலுக்குள்ள போனேன். ஒரு செவ்வக அறை. நடுவில் பாதை விட்டு ரெண்டு பக்கமும் தடுப்புக் கம்பிகள். அஞ்சடி ஆறடி உயரத்துக்கு சேவல் உச்சியில் நிக்கும் குத்துவிளக்குகள். தளும்பும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி திரிபோட்ட விளக்குகள். அப்படியொரு விளக்குக்குப் பக்கம் நின்னேன். முன்னாடி பெரிய திரை. மயில் மேல் முருகன் வள்ளி தெய்வானையோட இருக்கும் படம் வரைந்த திரை. திரைக்குப் பின்னாடி மறைவில் ஒரு அறை.

வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு நமக்குத் தெரியாம காலம் என்னும் திரை மறைக்குது. ஆனாலும் நம்பிக்கை என்னும் பார்வையோட நாம அடுத்த நாளை நோக்கிப் போகிறோம். அது மாதிரி கதிர்காமத்தின் கருவறைக்குள்ள என்ன இருக்குதுன்னு காட்டாம முருகன் படம் வரைஞ்ச திரை மறைக்குது. ஆனா நம்பிக்கையோட பாத்தா உள்ளே மறைந்திருக்கும் கந்தன் நம்முடைய நெஞ்சுக்குள் தெரிவான். செஞ்சந்தன மரச் சிலையாக முருகன் உள்ளே இருக்கிறதாகவும் முருகனுடைய அறுங்கோண இயந்திரம் இருக்கிறதாகவும் மரகதத்துச் சிலையாக முருகன் இருக்கிறதாகவும் பல நம்பிக்கைகள். காத்தும் வெளிச்சமும் போக முடியாத அந்த அறைக்குள்ள மக்களின் எண்ணவோட்டம் போக முடியுறது ஆச்சரியந்தான்.

காலை பத்தரை மணி கதிர்காமத்துல பூசை வேளை. நாங்க போனதும் அந்த வேளைலதான். உள்ள போய் நின்னதும் மக்கள் வரிசையா உள்ள நிறையத் தொடங்கீட்டாங்க. எனக்கும் கருவறைக்கும் நடுவில் ஒரு ஆளுயரக் குத்துவிளக்கு. மறுபக்கம் உள்ளே வந்த மக்கள் கூட்டம். பூசை தொடங்குது. மொதல்ல கோயிலுக்குள்ள கப்புராளை ஒருவர் சிங்கள மொழியில் கதிர்காமக் கடவுளைப் பத்தி சொல்றாரு. நமக்குதான் புரியல. ஆனா புரிஞ்சவங்கள்ளாம் சத்தமில்லாமக் கேக்குறாங்க. அவர் பேசி முடிச்சதும் கணார் கணார்னு மணியோசை. வாய் கட்டிய கப்புறாளை ஒருவர் கையில் பூசைத் தட்டோடு(சட்டி மாதிரி தெரிஞ்சது) கோயிலுக்கு வெளிய நடந்து வர்ராரு. அவருக்கு துணியை விதானமாப் பிடிச்சிக்கிட்டு முன்னும் பின்னும் ஒவ்வொரு ஆள் வர்ராங்க. கோயில் வாசல்ல வெளியவே நின்னு வணங்கிட்டு அப்படியே போயிர்ராரு.

அதுக்கப்புறம் கோயிலுக்குள்ள பூசை தொடங்குது. கப்புறாளை ஒருத்தர் பூசை பண்றாரு. வெளிய பெரிய வெங்கல மணி தொடர்ந்து கணார் கணார்னு அடிக்குது. கோயிலுக்குள்ள சின்னச் சின்ன மணிகள் கலிங் கலிங் கலிங்குன்னு ஒலிக்குது. எனக்கு கண்ணு தெரியாமப் போயிட்ட மாதிரி உணர்வு. என்னன்னு சொல்லத் தெரியல. முருகா முருகான்னு மனசுக்குள்ள சொல்றேங்குறதைத் தவிர வேற எதுவும் எனக்கு நினைவில்ல. பூசை முடிஞ்சதும் எல்லாருக்கும் திருநீறு கொடுத்தாங்க. தீபாராதனையும் காட்டிய நினைவு.

கதிர்காமத்துல திருநீறுங்குறது கதிரைமலையில் விளையுது. அந்தக் கற்களைப் பொடியாக்கிதான் திருநீறாகக் கொடுக்கிறாங்க. வாங்கிப் பூசிக்கிட்டு மிச்சமிருந்தத ஊருக்குக் கொண்டு போகனும்னு எடது கைக்கு மாத்தி வெச்சிருக்கேன். அதுக்குள்ள சட்டியில எதோ பிரசாதம் கொண்டு வந்து கோயிலுக்குள்ளயே கொடுக்க ஆரம்பிச்சாங்க. குடுக்குறது இனிப்பா என்னன்னு தெரியல. ஏன்னா நான் இனிப்பு சாப்பிடுறதில்ல. கதிர்காமம் வரைக்கும் வந்துட்டு இனிப்புப் பிரசாதம் வாங்கி, அதைச் சாப்பிடாமப் போறதான்னு ஒரு யோசனை. ஆனாலும் யோசிக்காம வலது கை நீளுது. ஒரு அள்ளு அள்ளி கை நிறைய சாம்பார் சாதம் வெச்சாரு பிரசாதம் கொடுத்தவரு. கொழகொழன்னு இல்லாம புலாவ் பதத்துல இருந்தது. கைய லேசா அசைச்சாக் கூட சிந்திரும் போல. அவ்வளவு இருந்தது. கூட்டத்துல எப்படி வெளிய கொண்டு போறதுன்னு யோசனை. அதுக்குள்ள கொஞ்சம் சிந்திச்சு. இதுக்கு மேலயும் சிந்த விடக்கூடாதுன்னு அந்த எடத்துலயே நின்னு முழுசா பிரசாதத்தைச் சாப்டுட்டேன்.

சாப்டுட்டு திரும்பிப் பாத்தா கானாபிரபாவும் பிரசாதத்தோட பேசிட்டு இருந்தாரு. கூட்டம் கலையக் கலைய ஒடனே ஒரு விளக்குமாறு கொண்டுவந்து கப்புறாளை ஒருத்தர் துப்புரவாக் கூட்டிப் பெருக்கிட்டாரு. மறுபடியும் கோயில் தரை பளிச். கையிலிருந்த இத்துணூண்டு திருநீறை ஒரு தாள்ள மடிச்சிக்கிட்டேன்.

கோயிலை விட்டு வெளிய வந்ததும் மாணிக்கப்பிள்ளையார் கோயில். அங்கயும் திரைதான். ஆனா கூட்டமில்லாம இருந்தது. அதுனால பெரிய தாள்ள நெறைய திருநீறு கேட்டேன். அங்க இருந்த கப்புறாளை நிறைய எடுத்துக் கொடுத்தாரு. நன்றி சொல்லி தட்டுல காணிக்கை போட்டுட்டு வெளிய வந்தேன். மாணிக்கப்பிள்ளையாருக்குப் பக்கத்துல ஒரு அரசமரம். புத்தருக்கு ஞானம் கிடைச்ச போதிமரத்துக்கிளைய நட்டு வெச்சு வளந்த மரம்னு சொல்றாங்க. கோயில் தொடர்ந்து பௌத்தமயமாகிக்கிட்டே இருப்பது தெரிஞ்சது. மனசையும் உணர்ச்சிகளையும் மூடிட்டு சுத்தி வந்தேன்.

DSC09754பின்னாடி கண்ணகி கோயில் சின்னதா இருக்கு. பக்கத்துல இன்னொரு சின்ன கோயில். உள்ள என்ன சாமின்னு தெரியல. பேர் என்ன எழுதியிருக்குன்னு பாத்தேன். ஸ்ரீ சித்த சூனியம் கம்பாரா ஃபனேன்னு ஆங்கிலத்துல எழுதியிருந்தது. கீழ பாத்தா “ஸ்ரீ மதுரவீரன் கோயில்”னு தமிழ்ல எழுதியிருக்கு.

கதிர்காமத்தை விட்டுப் புறப்படும் முன்னாடி மறுபடியும் உள்ள போயிட்டு வரலாம்னு முருகன் கோயிலுக்கு உள்ள போனேன். கூட்டம் குறைவா இருந்தது. திருநீறு நெறைய வாங்குனா ஊர்ல எல்லாருக்கும் குடுக்கலாமேன்னு மனசுல ஓடிட்டே இருந்துச்சு. பெரிய தாளை எடுத்து நிறைய திருநீறு வேணும்னு சைகைல கேட்டேன். அவர் கிண்ணத்துல இருந்து அப்படியே கொஞ்சம் கொட்டுனாரு. கொட்டீட்டு தட்டுல இருந்த சில்லறையைக் காட்டி “தட்சிணை தட்சிணை”ன்னு சைகல சொன்னாரு. இங்கயுமான்னு நெனச்சிக்கிட்டு இலங்கை ரூவாயைப் போட்டுட்டு திருநீறைப் பொட்டலம் கட்டினேன்.

தொடரும்…

அடுத்த பதிவை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

சில படங்கள் பார்வைக்காக…

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இறை, இலங்கை, கதிர்காமம், பயணம், முருகன் and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to 15. (கதிர்)காமம் கந்தனுக்கே

 1. Pingback: 14. கதிர்காமக் கனவுகள் | மாணிக்க மாதுளை முத்துகள்

 2. amas32 says:

  கதிர்காமத்திலேயும் திரை தானா? சிலை வடிவில் முருகனை தரிசிக்க முடியாதா? கொஞ்சம் ஏமாற்றமாக உள்ளது.

  amas32

  • GiRa ஜிரா says:

   கதிர்காமத்தின் தத்துவமே முருகனை மனதுக்குள் காண்பதுதான். அதனால்தான் அங்கு சிலையோ வேலோ இருப்பதில்லை. திரை போட்ட அறைதான்.

 3. Anuprem says:

  அழகான படங்களுடன் கதிர் காம கந்தன் தரிசனம் அருமை….

 4. Pingback: 16. டாட்டா கதிர்காமம் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s