16. டாட்டா கதிர்காமம்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

கதிர்காமம் முழுக்கவே பௌத்த மயமாக்கல் நிறையவே தெரியுது. முருகன், கண்ணகி, மதுரைவீரன்னு இருந்தாலும் எல்லாமே பௌத்தமதக் கடவுள்களா மாறியாச்சு.

DSC09759கதிர்காமத்துல முருகனுக்கு மட்டுமில்லாம வள்ளிக்கும் தெய்வயானைக்குமே கோயில் இருக்கு. தெய்வயானை கோயில் சிருங்கேரி சங்கரமடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இங்க பூசை செய்றவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருதாம். ஆனாலும் போற உயிர் ஒருமுறைன்னு இங்கயே இருக்கிறார்னு யாரோ சொன்னாங்க. தெய்வானை கோயில்ல கூட்டமேயில்ல. இன்னும் சொல்லப் போனா யாருமே இல்ல.

வள்ளிக்கு தனிக்கோயில் தள்ளி இருக்கு. அதுக்குப் பக்கத்துல தான் புனிதமான கடம்ப மரம் இருக்கு. ஆனா வள்ளி கோயில் இப்போ பூட்டப்பட்டிருக்கு. என்ன காரணம்னு தெரியல. ஒருவேளை வள்ளிக்கும் மதமாற்றம் நடக்குதோ என்னவோ!

Demonetization இந்தியாவில் வர்ரதுக்கு முன்னாடியே cashless transaction பண்ண கடவுள் கதிர்காமக் கந்தன். இன்னைக்கு e-Hundiன்னு திருப்பதி வடபழனின்னு வர்ரதுக்கெல்லாம் பலப்பல வருடங்களுக்கு முன்னாடி முருகன் பேர்ல செக் எழுதி கதிர்காம உண்டியல்ல போட்டா அது செல்லும். கதிர்காமக் கந்தன் பேங்க் அக்கவுண்டுக்குப் போகும். அப்பயே கந்தக் கடவுள் அப்படியாக்கும்.

kataragama-shrineகதிர்காமம் ஒரு காலத்துல காடா இருந்த இடம். இலங்கையில் இருந்த தமிழ் மக்கள் தான் காட்டுவழியில் நடந்தே வந்து முருகனைக் கும்பிடுவாங்க. வெள்ளைக்காரன் கிட்ட இருந்து சுதந்திரம் கிடைச்ச பிறகு ரோடுகள் போட்ட பிறகு நிறைய சிங்கள மக்கள் அந்தப் பக்கம் குடியேறிட்டாங்க. கோயிலுக்கும் போகத் தொடங்கீட்டாங்க. இன்னைக்கு எல்லாரும் போற கோயிலா இருக்கு.

ஆனாலும் வரலாற்றைத் தேடிப் பாத்தா… சில சுவாரசியாமான விவரங்கள் தென்படுது. இதுல உண்மையும் பொய்யும் எந்தெந்த அளவுங்குறது ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்.

கதிர்காமம் பற்றிக் கேள்விப்பட்ட/படித்த சில பௌத்த நம்பிக்கைகள்…
1. துட்டகமுனு என்ற சிங்கள மன்னனுக்கும் எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் வெற்றி பெற்றதனால் துட்டகமுனு நன்றி செலுத்த ஒரு கோயில் கட்டினான். அதுதான் கதிர்காமம். (ஆனால் இதுபற்றி இலங்கை வரலாறு சொல்லும் மகாவமிசத்தில் குறிப்புகளே இல்லை)

2. புத்தர் ஞானம் அடைந்த பிறகு, இலங்கைக்குச் சென்ற போது கதிர்காமத்துக்கும் சென்று தவம் செய்தார். அப்போது கதிர்காமத்தை ஆட்சி செய்த மஹாசேன என்ற அரசன், புத்தரின் கொள்கையால் கவரப்பட்டு பௌத்தன் ஆனான். இன்னும் மஹாசேன கதிர்காமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த போதிச்சத்துவராக பிறப்பெடுக்கக் காத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு நம்பிக்கை.

3. கதிர்காமத்தில் இருப்பதே ஒரு போதிச்சத்துவர் தான். அவரிடம் முறையிட்டதெல்லாம் நடக்கும் என்று ஒரு நம்பிக்கை.

4. எல்லாள மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த போது இந்தியாவிலிருந்து வரவழைத்த கதிரா என்ற ஒற்றனை உளவு பாக்க அனுப்பினாராம். அந்த ஒற்றர் தலைவனுக்குக் கீழ் ஆறு பிரிவுகளும், பன்னிரண்டு உட்பிரிவுகளும் இருந்ததாம். இந்த ஒற்றன் கதிராவுக்கு இந்தியாவிலிருந்து தெய்வானை என்று ஒரு மனைவியையும் கொண்டு வந்தானாம். என்னதான் ஒற்று செய்ய வந்தாலும் ஒரு காலகட்டத்தில் கதிரா அங்கு செல்வாக்கும் பலமும் மிகுந்தவன் ஆகிறான். மக்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்கிறான். ஆனால் எல்லாள மன்னன் போரில் மாண்ட பிறகு, கதிரா ஒற்றுத் தொழிலை விட்டுவிடுகிறான். அங்கிருந்த தமிழர்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. கதிரா இறந்த பிறகு பௌத்தர்கள் அவனுக்கு ஒரு கோயில் எழுப்பினார்கள் என்றும் அந்தக் கோயில்தான் கதிர்காமம் என்றும் ஒரு நம்பிக்கை.

5. அசோகருடைய மகள் சங்கமித்திரை புத்தருக்கு ஞானம் கிடைச்ச போதிமரத்திலிருந்து ஒரு கிளையைக் கொண்டு வந்து நட்டு வெச்சதாகவும் நம்பிக்கை. (இரண்டாயிரம் ஆண்டு வாழ்ந்த அரசமரம் எதுவும் கோயில் வளாகத்தில் தென்படவில்லை).

இப்படியாக பல கதைகள் கதிர்காமத்துக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் கதிர்காமத்தின் அதிகாரம் பல கைகள் மாறியிருக்கிறது என்றே தெரிகிறது. எந்த மன்னன் ஆட்சி நடக்கிறதோ அந்த மன்னனின் சார்பான மதத்தலைவர்களிடம் கதிர்காம அதிகாரம் இருந்திருக்கு.

mahadevale_oldpicரொம்பச் சமீபத்திய வரலாற்று எடுத்துக்காட்டு பார்ப்போம். சங்கிலியானுக்குப் பிறகு இலங்கையில் தமிழ் அரசுன்னு தனியா எதுவும் இல்லை. அப்போ போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் அங்கங்க இருந்தது. ஆனா எந்தக் கோயில்னாலும் இடிக்கிறதுதான் அவங்க வேலை. கதிர்காமத்தையும் இடிக்கனும்னு நெனைக்கிறாங்க. ஆனா காட்டுக்குள்ள அவங்களால கோயிலைக் கண்டுபிடிக்க முடியல. தொடர்ந்து அங்க இருந்து தேடவும் முடியல. அதுனால கதிர்காமம் தப்பிக்குது. அப்போ கண்டி அரசு சிங்கள அரசு. அதுனால கதிர்காமம் பௌத்தர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கு. ஒரு கட்டத்தில் கண்டி அரசாங்கம் நாயக்கர்கள் கைக்கு வருது. அதுல கடைசி மன்னன் கண்ணுசாமி என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்க. இந்த மன்னன் தமிழ் பேசும் தெலுங்கு வம்சத்தில் வந்தவன். இந்த மன்னனை தமிழ் மன்னனாகத்தான் இலங்கை மக்கள் பார்க்கிறார்கள். தமிழ் பேசும் காரணத்தாலோ என்னவோ இந்த மன்னன் கதிர்காமத்து அதிகாரத்தை தமிழர்களுக்கு மாற்றச் சொல்லி அங்கிருந்த பௌத்தர்களிடம் கேக்குறான். ஆனால் பௌத்தர்கள் மறுத்திருக்கிறார்கள். அதனால சட்டம் போட்டு கதிர்காமத்தை தமிழர்கள் பொறுப்புக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறான்.

இலங்கைல கடைசி மன்னன் இவன் தான். வெள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு வாரிசு இல்லாம தமிழ்நாட்டில் இறந்து போகிறான். அதுக்கப்புறம் இலங்கைல வெள்ளைக்காரங்க ஆட்சிதான். அவங்க மதப்பிரச்சனைகளுக்குள்ள ரொம்ப தலையிடலை போல. ஆகையால தமிழர்களோட பொறுப்பில் கதிர்காமம் பலகாலமா இருந்திருக்கு.

ஆனா இலங்கைக்கு சுதந்திரம் கிடைச்ச பிறகு நிலமை மாறுது. அப்போ யார் கதிர்காமம் கோயிலைப் பராமரிக்கிறதுன்னு பிரச்சனைகள் வருது. இலங்கை அரசு கதிர்காமம் கோயிலை முழுசா எடுத்து பௌத்தர்கள் கிட்ட கொடுத்துருது. கண்ணுசாமி (எ) ஸ்ரீவிக்கிரம ராஜசிங்க மட்டும் தான் சட்டம் போடுவாரா? பிரதம மந்திரிகளுக்கு சட்டம் போடத் தெரியாதா? கதிர்காமம் கோயில் அங்கிருந்த கிரி வெஹர-ங்குற பௌத்த மடத்துக்குக் கீழ் வருது. எப்படி புத்தரோட புனிதப் பல் கோயிலுக்கு ஒரு நிலமே(அறங்காவலர்) இருந்து நிர்வாகம் பண்றாரோ அதே மாதிரி கதிர்காமக் கோயிலுக்கும் நிலமே ஒருத்தர் இருந்து நிர்வாகம் பண்றாரு. பிறகென்ன… கொஞ்சம் கொஞ்சமா தமிழ் வழிபாட்டு முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, கோயில் தேராவாத பௌத்தத்துக்குள்ள கொண்டுவரப்படுது. அதுமட்டுமில்லாம கோயிலுக்கு வரும் பௌத்தர்கள் கூட்டமும் பெருகுது. இன்னைக்கும் பாத்தா, தமிழர்களை விட பௌத்தர்கள் தான் நிறைய வர்ராங்க.

கதிர்காமம் வரும் அடியவர்கள் தங்கியிருக்கவும் அன்னமளிக்கவும் செய்த இராமகிருஷ்ண மடத்தையும் இன்னும் சில மடங்களையும் அரசாங்கம் எடுத்து பௌத்தர்கள் கையில் கொடுத்தாச்சு. ஆக தமிழர்கள் அங்க போனா தங்க மடமில்லை.

சரி. இதோட நிறுத்திக்குவோம்.

இப்படியாக கதிர்காமத்தை சுத்திப் பாத்துட்டு வண்டிக்கு வந்தோம். அடுத்து போன இடம் செல்லக் கதிர்காமம். இதுவும் மாணிக்க கங்கை ஓரமா இருக்கும் கோயில். இது பிள்ளையார் கோயில். இது தமிழர்கள் பொறுப்பில்தான் இருக்கு. அதுக்குப் பக்கமா படியேறி மேல போனா சின்னதா ஒரு முருகன் கோயில். எளிமையா இருந்த கோயில் இப்போ இல்ல. ஆனா பௌத்தமயமான கோயில்தான் இருக்கு. செல்லக் கதிர்காமம் பிள்ளையார் கோயில்ல இப்போ வேலை நடந்துக்கிட்டிருக்கு. கதிர்காமம் வர்ர கூட்டத்துல பலர் இங்கயும் வர்ராங்க. பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்து போன இடம் கதிரை மலை.
1947katiramalai-summit4001947katiramalai-climb-400
கதிரை மலைதான் உண்மையான கதிர்காமம். இந்த மலை மேல ஒரு வேல். அவ்வளவுதான் அந்தக்கால கோயில். மலையில் ஏறிப் போய் முருகான்னு கும்பிட்டு வர்ரதுதான் வழிபாடு. போகப் போக மலையேறப் படிகள். அதுக்குப் பிறகு வந்ததுதான் மாணிக்ககங்கை ஓரமா இருக்கும் கதிர்காமம்னு சொல்றாங்க.
DSC09794
கதிரைமலைப் படிகளை தமிழர்கள் காலில் செருப்போடு ஏறும் வழக்கம் இல்லை. ஆனா இப்போ எல்லாரும் போறதால அந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இப்போ மலைக்கு மேல போக ஜீப் வந்துருச்சு. கூட்டம் சேரச் சேர வண்டியை எடுக்குறாங்க. ஆனா நாங்க போன நேரம் கூட்டமேயில்ல. என்ன பண்றதுன்னு யோசிச்சோம். அப்போ எங்க கூட வந்த டிரைவர் அங்க சிங்களத்துல பேசி ஒரு விஷயம் கண்டுபிடிச்சாரு. அஞ்சு பேருக்கு டிக்கெட் வாங்கினாலே வண்டியை எடுக்கலாமாம். ஆனா நாங்க ரெண்டு பேரு. டிரைவரையும் சேத்தா மூனு பேரு. மிச்ச ரெண்டு பேர் எப்போ வருவாங்கன்னும் தெரியாது. சரின்னு அஞ்சு பேருக்கு டிக்கெட் எடுத்தோம்.

மலைச்சரிவான பாதை. சரிவுன்னா சரிவு. அப்படியொரு சரிவு. செங்குத்தா மலைல ஏறுது ஜீப்பு. அப்பப் பாத்து மேல இருந்து இன்னொரு ஜீப்பு கீழ வருது. மேல போனாலும் கீழ போனாலும் முருகன் கிட்டதான் போய்ச் சேருவோம்னு மனசத் தேத்திக்கிட்டு ஜீப்ல உக்காந்திருந்தேன். ஆனா ஜீப் ஓட்டிய டிரைவர் அதப்பத்தியெல்லாம் கவலைப்படமா சல்ல்ல்லுன்னு ஓட்டிட்டுப் போனாரு. நான் துணிச்சலா பின்னாடி திரும்பிப் பாத்திருப்பேன்னு நெனைக்கிறீங்க? பயத்துல அசையாம உக்காந்தா அங்க இங்க திரும்புற கெட்ட பழக்கம் எனக்கெல்லாம் கெடையவே கெடையாது. பக்கத்துல இருந்த கானா பிரபா கிட்டக் கூட எதுவும் பேசல. மலை உச்சிக்குப் போன பிறகுதான் மூச்சே விட்டேன்.
IMG_9663
DSC09797முந்தி வேல் இருந்த எடத்துல இப்போ வேல் இல்ல. வேலைப் புதைச்சு அது மேல சிவன் கோயில் கட்டியாச்சு. பௌத்த சிவன் கோயில்தான். ஆனா வர்ரவங்களுக்கு முருகனைக் காட்டனுமே. அதுனால படி முடியுற எடத்துலயே ஒரு முருகன் கோயிலைக் கட்டியாச்சு. இதுவும் பௌத்த முருகன் தான். விவரம் தெரிஞ்ச ஆட்கள் சிவன் கோயில் வரைக்கும் போய் அங்கதான் வேல் இருந்துச்சுன்னு பாப்பாங்களே! அதை எப்படித் தடுக்குறது? புதுசாக் கட்டிய முருகன் கோயிலுக்கும் வேலைப் புதைச்சுக் கட்டிய சிவன் கோயிலுக்கும் நடுவுல ஒரு பௌத்த ஸ்தூபியைக் கட்டியாச்சு. முருகனைப் பாத்துட்டு திரும்புனா பௌத்த ஸ்தூபிதான் தெரியும். அதுக்கப்புறம் ஒன்னுமில்லைன்னு மக்கள் திரும்பிருவாங்கள்ளயா. அதுதான் டெக்னிக். கூட வந்த டிரைவர் சொன்னதால நாங்க அந்த எடத்தையும் போய்ப் பாத்தோம். பதிவில் இருக்கும் பழைய படத்தைப் பாருங்க. அதுல மலை மேல் எந்தக் கட்டிடமும் இருக்காது. ஒரு மணி மட்டும் தொங்கவிடப்பட்டிருக்கும். வேலைச் சுற்றி மக்கள் கூட்டம் இருக்கும்.
DSC09816
அந்த உச்சியிலிருந்து பாத்தா இந்தியப் பெருங்கடல் தெரியுது. அழகான இலங்கைக் காடுகள் தெரியுது. கதிர்காமம் முருகன் கோயில் தெரியுது. இது மாதிரியான இடங்களுக்கு வந்தா மனசுக்கு ஒரு அமைதி வருது. இயற்கைக்கு முன்னாடி நாமள்ளாம் தூசுங்குற அடக்கமும் வருது. ஆனாலும் அஞ்சு புலன்களும் ஆட்டுவிக்குற படி நாமளும் ஆடிக்கிட்டுதான் இருக்கோம்.

கதிரைமலைன்னு தமிழ்ல சொன்னாலும், சிங்களத்துல வேடிச்சி கந்து-ன்னு சொல்றாங்க. வேடர்களின் மலைன்னு பொருள். கந்துங்குற சொல்லுக்கு தமிழிலும் மலைன்னுதான் பொருள். வேடிச்சி கந்துங்குறதே தமிழ்ப் பெயராத்தான் இருக்கனும்னு நெனைக்கிறேன். முருகன் வள்ளியோட காதல் நிகழ்வுகள் நடந்த இடம் கதிரைமலை/கதிர்காமம்னு சொல்லப்படுது. வேடர்கள் பூசைதான் முன்னாடியெல்லாம் கதிர்காமத்துல. “வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே”ன்னு அருணகிரிநாதரும் திருப்புகழ்ல பாடியிருக்காரு. இந்த வேடர்கள் கூட இப்போ சிங்களவர்களாக மாறிட்டாங்கன்னு சொல்றாங்க.

கொஞ்சம் இயற்கைக் காட்டியையெல்லாம் ரசிச்சிட்டு மறுபடியும் ஜீப்ல கீழ எறங்குனோம். ஏறும்போது பாதாளம் முதுகுக்குப் பின்னாடி இருந்தது. எறங்கும் போது நேரா கண்ணுக்கு முன்னாடி. “எனக்கு பயமே இல்லையே…. ஹிஹிஹி”ன்னு மனசுக்குள்ள சிரிச்சிட்டே கீழ எறங்கியாச்சு. போன முறை கானா பிரபா கதிர்காமம் வந்தப்போ கதிரைமலை ஏற முடியாமப் போச்சாம். இந்த முறை ஏறக்கிடைச்சது அவருக்கும் மகிழ்ச்சி.

சாப்பாட்டு வேளை தாண்டப் போகுது. சாப்பிடனும்னு இப்பதான் தோணுது. நேரா வண்டியை கொழும்பு ரோட்டில் விட்டோம். வழியில் நல்ல சாப்பாட்டுக் கடை எதுவும் இல்லாததால ஒரு ரிசார்ட்டுக்குள்ள போய் Sri Lankan Buffet சாப்டோம். கொஞ்சம் வித்யாசமா இருந்தது. ஆனா சாப்பிட நல்லாதான் இருந்தது. நான் சாப்பாட்டுக்கெல்லாம் வஞ்சனை வைக்கிறதே இல்ல. திருப்தியா சாப்டேன். அடுத்து கொழும்பு போக எவ்வளவு நேரமாகுமோ! வழியில் எதுவும் கெடைக்குமோ கெடைக்காதோ!

வழியில் இயற்கைக் காட்சியெல்லாம் பாத்துக்கிட்டே வந்தோம். இலங்கைக்குப் பொறப்படுறதுக்கு முன்னாடி கானாபிரபா, “இந்த ஆண்டு இலங்கையில் கடும் வறட்சி. அதுனால போற எடத்துல எப்படியிருக்குமோ”ன்னு எச்சரிச்சாரு. ஆனா இலங்கைல உள்ள கடும் வறட்சியைப் பாத்தா, மைடியர் மார்த்தாண்டன் படத்துல பிரபுவைப் பாத்து கவுண்டமணி “வாங்க ஏழைகளா”ன்னு கிண்டல் பண்ற மாதிரி கிண்டல் பண்ணத் தோணுச்சு. வழக்கத்தை விட மழை இந்த ஆண்டு குறைவுதான். இது தொடர்ந்தா இலங்கைக்கு கஷ்டம் தான். நீர்நிலைகள் நிறைய இருக்கு. மழைநீர் சேமிக்கனுங்குற எண்ணம் இருக்கு. அதான் மழை குறைஞ்சதும் எச்சரிக்கை அடையுறாங்க.

அதே நேரத்துல இலங்கை வளர்ச்சிங்குற பாதைல நடக்கத் தொடங்கியிருக்கு. இது இலங்கையோட இயற்கை வளத்துக்கு ஊறாக இருக்குமா ஊற்றாக இருக்குமாங்குறது போகப் போகத்தான் தெரியும். இதையெல்லாம் யோசிச்சிக்கிட்டே கொழும்பு வந்து சேந்தோம்.

இந்தப் பதிவை முடிக்கும் போது, கதிர்காமத்துக்கு என்னைக் கூட்டீட்டுப் போனா கானாபிரபாவுக்கு இன்னொரு வாட்டி நன்றி சொல்லிக்கிறேன். அவரையும் அவர் குடும்பத்தினரையும் கண்கண்ட கந்தக் கடவுள் எப்பவும் துணையிருந்து காக்கட்டும்.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இறை, இலங்கை, கதிரைமலை, கதிர்காமம், பயணம், முருகன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 16. டாட்டா கதிர்காமம்

  1. Pingback: 15. (கதிர்)காமம் கந்தனுக்கே | மாணிக்க மாதுளை முத்துகள்

  2. Pingback: 17. அழகி ஒருத்தி எழநி விக்கிற கொழும்பு வீதியிலே | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s