அதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்

உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் பொதுவானது ரெண்டு இருக்கு. இந்த ரெண்டும் இல்லைன்னு யாராவது சொன்னா அது பொய்.

1. இடர் (துன்பம்)
2. ஐயம் (சந்தேகம்)

கோடிக்கோடியா கொட்டி வைக்க இடமில்லாம இருப்பான். அவனுக்கும் எதாவது இடர் இருக்கும். சங்ககாலத்தில் கொற்கையிலிருந்த புரவிகளுக்கு ஒரு இடர் இருந்ததாம். முத்துக் குளிக்கும் கொற்கை செல்வச் செழிப்பான ஊர். அங்கிருக்கும் புரவிகளுக்கு புல்லுக்கும் புண்ணாக்குக்குமா பஞ்சம்? அதுவும் பாண்டிய மன்னன் தேரில் கட்டி ஓட்டும் புரவி. அப்புரவி சும்மா நடந்தாலே பெருமையாக நடக்கும். பாண்டியன் தேரில் கட்டிய புரவின்னா எவ்வளவு பீடுநடை போடும்!!! ஆனாலும் அதுக்கு ஒரு இடர். அந்தப் புரவிகள் நடக்கும் போது கால் குளம்பில் பொடிப்பொடி முத்துகள் ஏறி சிக்கிக்கொண்டு நடக்கவிடாமல் வடுக்களை உண்டாக்கி இடர் படுத்துமாம். “முத்தம் கவர்நடைப் புரவி கால் வடுத்த புக்கும் நற்றேர் வழுதி கொற்கை”ன்னு அகநானூறு வெண்கண்ணனார் சொல்றாரு. மத்த ஊர் குதிரைகளுக்கெல்லாம் கால்ல மண்ணோ கல்லோ ஏறி துன்பம்னா… கொற்கைப் புரவிக்கு முத்தினால் துன்பம்.

நெருஞ்சி முள்ளோ தங்க ஊசியோ! குத்துவது குத்தியே தீரும். எவ்வளவு வசதி வாய்ப்புகள் பதவிகள் இருந்தாலும் கொற்கைப் புரவி போல எதாவது இடர் இருந்துக்கிட்டே இருக்கும். அதுதான் வாழ்க்கை.

mrugan-3அடுத்தது ஐயம். இந்த நொடியில் உங்க மனசுக்குள்ள ஒரு சந்தேகம் ஓடிக்கிட்டிருக்கும். இது முடியுமா முடியாதா நடக்குமா நடக்காதா கிடைக்குமா கிடைக்காதா? இந்த ஐயங்களிலேயே பெரிய ஐயம் வருங்காலத்தைப் பத்திதான் இருக்கும். “எவ்வளவோ பாத்துட்டோம். இதப் பாத்துற மாட்டோமா”ன்னு அறிவு சொல்லும். ஆனாலும் எங்கயோ ஒரு மூலையில் சின்ன சந்தேகம் இருக்கும்.

நம்முடைய வாழ்க்கை அப்படியே நிக்காத தேர் மாதிரி போயிக்கிட்டே இருக்க விடாம முட்டுக்கட்டை போடுறது இது ரெண்டுதான்.

நாம கலங்கியிருக்கும் போது வேண்டப்பட்ட நல்ல மனிதர்கள் கையப் பிடிச்சிக்கிட்டாலே தெம்பா இருக்கும். ஆண்டவனோட கையையும் காலையும் பிடிச்சிக்கிட்டா? கடவுள் இருக்காரு இல்லைங்குறது ஒரு வாதம். ஆனா நாம சொன்னா காது கொடுத்து கேக்கவாவது ஒருத்தர் இருக்காரேங்குற நம்பிக்கைதான் பலம்.

அதைத்தான் “இதயம்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே”ன்னு அருணகிரிநாதர் “அதிரும் கழல் பணிந்து” திருப்புகழில் சொல்றாரு.

அதிருங் கழல் பணிந்து உன் அடியேன் உன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந் தனிலிருந்து கிருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

காலில் அணிந்திருக்கும் கழலின் ஓசையை வைத்தே நடையின் தன்மையைச் சொல்லிவிடலாம். அச்சநடை, அன்னநடை, ஆசைநடை, ஆவேசநடை, அரசநடைன்னு கழலோசை காட்டிக் கொடுத்துவிடும்.

முருகன் நம்மை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியான அடிகள். அப்படி நடந்துவரும் போது கழல் அதிரும். அப்படியான கழல் அணிந்த முருகனின் அடியவன் முருகனிடத்திலே அவனையே புகல் என்று அடைய வேண்டுமானால், இடரும் ஐயமும் நீங்க வேண்டும். மனதில் எந்தத் துன்பமும் சந்தேகமும் இல்லாமல் இருந்தால்தான் இறைவனைப் புகலடைய முடியும். அந்த இடரும் சங்கையும்(சந்தேகம்) நீங்க வேண்டுமானால் முருகக் கடவுள் இதயத்திலிருந்து அருள் செய்ய வேண்டும். அதைத்தான் பாட்டின் முதல்வரியாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.

எதிர் அங்கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமைபாலா
பதி எங்கிலும் இருந்து விளையாடிப்
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே!

ஆடல்வல்லானாகிய சிவபெருமான் ஆடும் போது யாரும் எதிராட முடியாதாம். அந்த மாதொரு பாகனுடைய ஒரு பாகமாக இருக்கும் உமையவளின் மைந்தனாகிய முருகனே! நீ எப்படிப் பட்டவன் தெரியுமா? ஒவ்வொரு ஊரிலும்(பதி) இருந்து விளையாடி பல குன்றுகளிலும் அமர்ந்த பெருமாள் நீ!

எளிமையான திருப்புகழ்தான். பாடுவதற்கான சந்தமும் எளிமைதான்.

CZ-Muruganஅதிருங் கழல்ப ணிந்து …… னடியேனுன்
         அபயம் புகுவ தென்று …… நிலைகாண
இதயந் தனிலி ருந்து …… கிருபையாகி
         இடர்சங் கைகள்க லங்க …… அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி …… நடமாடும்
         இறைவன் தனது பங்கி …… லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து …… விளையாடிப்
         பலகுன் றிலும மர்ந்த …… பெருமாளே!

கொடுமுடி திரு தியாகராஜ தேசிகர் குரலில் இந்தத் திருப்புகழை இந்தச் சுட்டியில் தேடிக் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அகநானூறு, அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கொற்கை, தமிழ்ப் பெரியோர், திருப்புகழ், பக்தி, முருகன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s