15. (கதிர்)காமம் கந்தனுக்கே

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

கதிர்காமத்துக்காகத்தான் இலங்கைப் பயணத்திட்டமே. அந்த அளவுக்கு ஆவல் இருந்தாலும், இந்தியாவில் இருந்தப்பவும் இலங்கைல நண்பர்களையும் மக்களையும் சந்திச்சப்பவும் கேள்விப்பட்ட விவரங்கள் எதுவும் நல்லதா இல்ல. கோயிலில் இருந்த தமிழ் அடையாளங்கள் நிறைய அழிக்கப்பட்டதையும் கிட்டத்தட்ட பௌத்தமதக் கோயிலாகவே மாறியிருப்பதையும், கோயில் இடங்கள் பௌத்தர்கள் மட்டுமில்லாம பிற மதத்தினராலும் நிறைய ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும்… கதிர்காமம்னு சொன்னதுமே மக்கள் பெருமூச்சுதான் விட்டாங்க. குறிப்பா பழைய கதிர்காமத்தைப் பாத்த பெரியவர்கள். ஆகையால ஆர்வம் அளவுக்கு மீறி இருந்தாலும் ஏமாற்றத்துக்கு மனதைத் தயார்ப்படுத்திக்கிட்டேன். என்ன இருந்தாலும் எங்கப்பன் முருகன் கோயில். பேரை மாத்தலாம். வழிபாட்டு முறையை மாத்தலாம். வேற சிலையைக் கூட கொண்டு வந்து வைக்கலாம். ஆனா தண்ணொளிச் சுடராக இருக்கும் முருகனை என்ன செய்ய முடியும்? மனசுக்குள்ள நான் முருகான்னு கூப்பிடுறத விட பெரிய பூசையோ வழிபாடோ சடங்கோ என்ன இருக்க முடியும்? அருணகிரி நடந்த எடத்துல நானும் நடந்தேங்குற ஒரு மகிழ்ச்சி போதும்னு முடிவு செஞ்சுட்டுதான் கதிர்காமத்துக்குள்ள நுழைஞ்சேன்.

ஊருக்கு வாசல்லயே ஒரு சாப்பாட்டுக்கடைல டிபன் சாப்டுட்டு நானும் கானாபிரபாவும் கோயிலுக்கு நடந்து போனோம். சாப்பிட்ட கடைல தேன், தினைமாவு, திருநீறு, கற்பூரச்சட்டியெல்லாம் பக்தர்களுக்கு விக்க வெச்சிருந்தாங்க. கோயிலுக்குப் வழியெல்லாம் நிறைய கடைகள். அது இது லொட்டு லொசுக்குன்னு லட்டு லசுக்குன்னு எல்லாமே வித்துக்கிட்டிருந்தாங்க. பூசைப் பொருட்கள் காவடிகள் விக்கிற கடைகளும் இருந்தது. கானாபிரபா கற்பூரக்கட்டி வாங்குனாரு. நானோ வெறுங்கைய வீசீட்டுப் போனேன்.

IMG_9568வருவான் வடிவேலன் படத்துலயும் பைலட் பிரேம்நாத் படத்துலயும் பாத்த மாணிக்க கங்கை இப்ப இல்ல. குறுகி ஒடுது. குப்பைகள் வேற. நிறையப் பேர் குளிக்கிறாங்க. மோகனாம்பாளோட அம்மா வடிவாம்பாளுக்கு மாணிக்கக் கல் கிடைச்ச மாணிக்க கங்கையை வேதனையோட பாத்துக்கிட்டே நடந்தேன். மணல். மணல். மணல். கால் புதையப் புதைய நடந்துதான் போகனும். மாணிக்க கங்கையைத் தாண்டி வண்டிகளை விடுறதில்ல. அந்தப் பக்கமெல்லாம் அத்தனை கருமுகத்துக் குரங்குகள். வம்பு தும்பு செய்யாத பிரசாதப் பையைப் பிடிச்சு இழுக்காத குரங்குகள்.
DSC09712
DSC09706மாணிக்க கங்கையைத் தாண்டி கொஞ்சதூரம் போய் இடப்பக்கம் திரும்பினா அந்தக் கடைசில வேல் நட்டுவச்ச ஒரு வளைவு தெரியும். எனக்கும் தெரிஞ்சது. வளைவின் ரெண்டு பக்கமும் சுவத்துல வரிசையா யானைகள் இருக்கும். சினிமால பாத்தது கண் முன்னாடி நேராத் தெரிஞ்சதும் மனசுக்குள்ள ஒரு துளி சந்தோஷம். மூனு மாசத்துக்கு முன்னாடி நான் கதிர்காமம் போவேன்னு யாராவது சொல்லிருந்தா சிரிச்சிருப்பேன். ஆனா முருகன் கூட்டீட்டு வந்துட்டான்.

செருப்பு வைக்க வளைவுக்கு வெளியவே இடம் இருக்கு. செருப்பை விட்டுட்டு நாங்களும் உள்ள நுழைஞ்சோம்.

தமிழ்நாட்டுல இருந்து கதிர்காமம் போறவங்களுக்கு பெரும்பாலும் கோயில் ஏமாற்றமா இருக்கும். தில்லானா மோகனாம்பள் வடிவாம்பாள் அதை வெளிப்படையாவே சொல்றதா எழுதியிருக்காரு கொத்தமங்கலம் சுப்பு.

கோவிலுக்குள் நுழைந்ததும், “என்னங்கா, கோவிலையே காணோமே!” என்றாள் வடிவாம்பாள்.

”உன் உடம்புதான் கோயில். இதயம் தான் இறைவன் இருப்பிடம். கதிர்காமத்திலே நீ கொண்டு வரும் நெஞ்சமே கோயில். அதில் அவனைக் குடிவரச் செய்” என்றார் பரதேசியார்.

“ஊருக்குப் போனாக்க, அங்கே நாலு பேர் கேக்கிறபோது, கதிர்காமத்துக்குப் போய்விட்டு வந்தேன். அங்கே கோவில் அப்பிடி இருக்குது, குளம் இப்பிடியிருக்குதுன்னு என்று சொல்லக்கூட இங்கே ஒன்றுமில்லையே!” என்றாள் வடிவாம்பாள்.

வடிவாம்பாளுக்குத் தோணுறது எல்லாருக்குமே தோணும். ஏன்னா பெரிய கோயில், குளம், மதில், சிலைகள்னு எதுவுமே கதிர்காமத்துல இல்ல.

DSC09726ரொம்ப எளிமையான கோயில். பாத்தா கோயில்னே சொல்ல முடியாது. பாக்க ஒரு ஓட்டுவீடு மாதிரிதான் இருக்கும். கோயில் வாசல்ல இருக்கும் மணிக்கூண்டு பாத்துதான் கோயில்னு புரிஞ்சிக்கனும். அதே மாதிரி கோயிலுக்கு முன்னாடி எரியும் கற்பூரக் கொப்பரை. வர்ரவங்கள்ளாம் அதுல சூடக்கட்டிகளைப் போட்டுப் போட்டு எரிஞ்சிக்கிட்டேயிருக்கு. மக்கள் கைல பூசைத் தட்டு ஏந்தி உள்ள போறாங்க. வெளிநாட்டுப் பயணிகள் கூட்டம் கையில் கேமராவோடு. குறிப்பா வெள்ளைக்காரர்கள். கேமிராவில் எல்லாம் படம் எடுக்குறாங்க. கோயிலுக்குள்ள போறாங்க. அங்கயும் படம் எடுக்குறாங்க. ஆனா பூசை வேளை தொடங்கப் போறப்போ சரியா வெளிய வந்துட்டாங்க. சாமி கும்பிடுறவங்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடாது பாருங்க. நல்ல நாகரீகம்.

IMG_9590நானும் கழுத்துல கேமராவைத் தொங்கப் போட்டுக்கிட்டு தோள்ள backpack தொங்கப்போட்டுக்கிட்டு கோயிலுக்குள்ள போனேன். ஒரு செவ்வக அறை. நடுவில் பாதை விட்டு ரெண்டு பக்கமும் தடுப்புக் கம்பிகள். அஞ்சடி ஆறடி உயரத்துக்கு சேவல் உச்சியில் நிக்கும் குத்துவிளக்குகள். தளும்பும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி திரிபோட்ட விளக்குகள். அப்படியொரு விளக்குக்குப் பக்கம் நின்னேன். முன்னாடி பெரிய திரை. மயில் மேல் முருகன் வள்ளி தெய்வானையோட இருக்கும் படம் வரைந்த திரை. திரைக்குப் பின்னாடி மறைவில் ஒரு அறை.

வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு நமக்குத் தெரியாம காலம் என்னும் திரை மறைக்குது. ஆனாலும் நம்பிக்கை என்னும் பார்வையோட நாம அடுத்த நாளை நோக்கிப் போகிறோம். அது மாதிரி கதிர்காமத்தின் கருவறைக்குள்ள என்ன இருக்குதுன்னு காட்டாம முருகன் படம் வரைஞ்ச திரை மறைக்குது. ஆனா நம்பிக்கையோட பாத்தா உள்ளே மறைந்திருக்கும் கந்தன் நம்முடைய நெஞ்சுக்குள் தெரிவான். செஞ்சந்தன மரச் சிலையாக முருகன் உள்ளே இருக்கிறதாகவும் முருகனுடைய அறுங்கோண இயந்திரம் இருக்கிறதாகவும் மரகதத்துச் சிலையாக முருகன் இருக்கிறதாகவும் பல நம்பிக்கைகள். காத்தும் வெளிச்சமும் போக முடியாத அந்த அறைக்குள்ள மக்களின் எண்ணவோட்டம் போக முடியுறது ஆச்சரியந்தான்.

காலை பத்தரை மணி கதிர்காமத்துல பூசை வேளை. நாங்க போனதும் அந்த வேளைலதான். உள்ள போய் நின்னதும் மக்கள் வரிசையா உள்ள நிறையத் தொடங்கீட்டாங்க. எனக்கும் கருவறைக்கும் நடுவில் ஒரு ஆளுயரக் குத்துவிளக்கு. மறுபக்கம் உள்ளே வந்த மக்கள் கூட்டம். பூசை தொடங்குது. மொதல்ல கோயிலுக்குள்ள கப்புராளை ஒருவர் சிங்கள மொழியில் கதிர்காமக் கடவுளைப் பத்தி சொல்றாரு. நமக்குதான் புரியல. ஆனா புரிஞ்சவங்கள்ளாம் சத்தமில்லாமக் கேக்குறாங்க. அவர் பேசி முடிச்சதும் கணார் கணார்னு மணியோசை. வாய் கட்டிய கப்புறாளை ஒருவர் கையில் பூசைத் தட்டோடு(சட்டி மாதிரி தெரிஞ்சது) கோயிலுக்கு வெளிய நடந்து வர்ராரு. அவருக்கு துணியை விதானமாப் பிடிச்சிக்கிட்டு முன்னும் பின்னும் ஒவ்வொரு ஆள் வர்ராங்க. கோயில் வாசல்ல வெளியவே நின்னு வணங்கிட்டு அப்படியே போயிர்ராரு.

அதுக்கப்புறம் கோயிலுக்குள்ள பூசை தொடங்குது. கப்புறாளை ஒருத்தர் பூசை பண்றாரு. வெளிய பெரிய வெங்கல மணி தொடர்ந்து கணார் கணார்னு அடிக்குது. கோயிலுக்குள்ள சின்னச் சின்ன மணிகள் கலிங் கலிங் கலிங்குன்னு ஒலிக்குது. எனக்கு கண்ணு தெரியாமப் போயிட்ட மாதிரி உணர்வு. என்னன்னு சொல்லத் தெரியல. முருகா முருகான்னு மனசுக்குள்ள சொல்றேங்குறதைத் தவிர வேற எதுவும் எனக்கு நினைவில்ல. பூசை முடிஞ்சதும் எல்லாருக்கும் திருநீறு கொடுத்தாங்க. தீபாராதனையும் காட்டிய நினைவு.

கதிர்காமத்துல திருநீறுங்குறது கதிரைமலையில் விளையுது. அந்தக் கற்களைப் பொடியாக்கிதான் திருநீறாகக் கொடுக்கிறாங்க. வாங்கிப் பூசிக்கிட்டு மிச்சமிருந்தத ஊருக்குக் கொண்டு போகனும்னு எடது கைக்கு மாத்தி வெச்சிருக்கேன். அதுக்குள்ள சட்டியில எதோ பிரசாதம் கொண்டு வந்து கோயிலுக்குள்ளயே கொடுக்க ஆரம்பிச்சாங்க. குடுக்குறது இனிப்பா என்னன்னு தெரியல. ஏன்னா நான் இனிப்பு சாப்பிடுறதில்ல. கதிர்காமம் வரைக்கும் வந்துட்டு இனிப்புப் பிரசாதம் வாங்கி, அதைச் சாப்பிடாமப் போறதான்னு ஒரு யோசனை. ஆனாலும் யோசிக்காம வலது கை நீளுது. ஒரு அள்ளு அள்ளி கை நிறைய சாம்பார் சாதம் வெச்சாரு பிரசாதம் கொடுத்தவரு. கொழகொழன்னு இல்லாம புலாவ் பதத்துல இருந்தது. கைய லேசா அசைச்சாக் கூட சிந்திரும் போல. அவ்வளவு இருந்தது. கூட்டத்துல எப்படி வெளிய கொண்டு போறதுன்னு யோசனை. அதுக்குள்ள கொஞ்சம் சிந்திச்சு. இதுக்கு மேலயும் சிந்த விடக்கூடாதுன்னு அந்த எடத்துலயே நின்னு முழுசா பிரசாதத்தைச் சாப்டுட்டேன்.

சாப்டுட்டு திரும்பிப் பாத்தா கானாபிரபாவும் பிரசாதத்தோட பேசிட்டு இருந்தாரு. கூட்டம் கலையக் கலைய ஒடனே ஒரு விளக்குமாறு கொண்டுவந்து கப்புறாளை ஒருத்தர் துப்புரவாக் கூட்டிப் பெருக்கிட்டாரு. மறுபடியும் கோயில் தரை பளிச். கையிலிருந்த இத்துணூண்டு திருநீறை ஒரு தாள்ள மடிச்சிக்கிட்டேன்.

கோயிலை விட்டு வெளிய வந்ததும் மாணிக்கப்பிள்ளையார் கோயில். அங்கயும் திரைதான். ஆனா கூட்டமில்லாம இருந்தது. அதுனால பெரிய தாள்ள நெறைய திருநீறு கேட்டேன். அங்க இருந்த கப்புறாளை நிறைய எடுத்துக் கொடுத்தாரு. நன்றி சொல்லி தட்டுல காணிக்கை போட்டுட்டு வெளிய வந்தேன். மாணிக்கப்பிள்ளையாருக்குப் பக்கத்துல ஒரு அரசமரம். புத்தருக்கு ஞானம் கிடைச்ச போதிமரத்துக்கிளைய நட்டு வெச்சு வளந்த மரம்னு சொல்றாங்க. கோயில் தொடர்ந்து பௌத்தமயமாகிக்கிட்டே இருப்பது தெரிஞ்சது. மனசையும் உணர்ச்சிகளையும் மூடிட்டு சுத்தி வந்தேன்.

DSC09754பின்னாடி கண்ணகி கோயில் சின்னதா இருக்கு. பக்கத்துல இன்னொரு சின்ன கோயில். உள்ள என்ன சாமின்னு தெரியல. பேர் என்ன எழுதியிருக்குன்னு பாத்தேன். ஸ்ரீ சித்த சூனியம் கம்பாரா ஃபனேன்னு ஆங்கிலத்துல எழுதியிருந்தது. கீழ பாத்தா “ஸ்ரீ மதுரவீரன் கோயில்”னு தமிழ்ல எழுதியிருக்கு.

கதிர்காமத்தை விட்டுப் புறப்படும் முன்னாடி மறுபடியும் உள்ள போயிட்டு வரலாம்னு முருகன் கோயிலுக்கு உள்ள போனேன். கூட்டம் குறைவா இருந்தது. திருநீறு நெறைய வாங்குனா ஊர்ல எல்லாருக்கும் குடுக்கலாமேன்னு மனசுல ஓடிட்டே இருந்துச்சு. பெரிய தாளை எடுத்து நிறைய திருநீறு வேணும்னு சைகைல கேட்டேன். அவர் கிண்ணத்துல இருந்து அப்படியே கொஞ்சம் கொட்டுனாரு. கொட்டீட்டு தட்டுல இருந்த சில்லறையைக் காட்டி “தட்சிணை தட்சிணை”ன்னு சைகல சொன்னாரு. இங்கயுமான்னு நெனச்சிக்கிட்டு இலங்கை ரூவாயைப் போட்டுட்டு திருநீறைப் பொட்டலம் கட்டினேன்.

தொடரும்…

அடுத்த பதிவை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

சில படங்கள் பார்வைக்காக…

Advertisements
Posted in அனுபவங்கள், இறை, இலங்கை, கதிர்காமம், பயணம், முருகன் | Tagged , , , , , , | 6 Comments

14. கதிர்காமக் கனவுகள்

முந்தைய பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

நேரா கொழும்பில் தங்க ஏற்பாடு செஞ்சிருந்த வில்லாவுக்குப் போனேன். ரெண்டாம் மாடியில் அறை. நல்ல வசதியான அறை. கொரியன் ஸ்டைல் ஸ்லைடிங் கதவுகள். வில்லா ஓனரே ரூமுக்கு நேரா வந்துட்டாரு. காலைல நாலு மணிக்கு நான் கதிர்காமம் போறதைச் சொன்னேன். அவருக்கு பயங்கர அதிர்ச்சி. இலங்கை மக்கள் கதிர்காமம் போறதுன்னா ரெண்டு நாள் பயணமாகப் போறாங்க. மொத நாள் போய் தங்கி, அடுத்தநாள் காலைல மாணிக்க கங்கைல குளிச்சிட்டு கதிர்காமம் கோயில்ல சாமியக் கும்பிட்டுட்டு பொறப்பட்டு வந்தா கொழும்புக்கு தூங்குறதுக்குதான் வர முடியும். அதான் நான் ஒரே நாள்ல போயிட்டு வரப்போறேன்னதும் அவருக்கு “இதெல்லாம் நடக்குற வேலையா”ன்னு தோணியிருக்கு.

பிறகு அவரே ஒரு வழி சொன்னாரு. நாலு மணிக்கு நான் பொறப்படும் போது பெட்டியை அங்கயே விட்டுட்டு அறைக் கதவுக்கு பூட்டுப் போடாம சும்மா சாத்தி வெக்கனும். சாவியை உள்ள இருக்கும் டேபிள்ல வெச்சிறனும். அவரே காலைல வந்து பெட்டியை எடுத்து பக்கத்துல இருக்கும் இன்னொரு வில்லாவில் இருக்கும் அறைக்கு (எனக்குன்னு ஒதுக்கப்பட்ட அறை) மாத்தீருவாரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். எல்லாம் முருகன் பாத்துக்குவான்.
IMG_9525
நான் நுவரேலியா கண்டின்னு ஊர் சுத்திக்கிட்டிருந்தப்போ யாழ்ப்பாணத்தில் தன்னோட புத்தக வெளியீட்டை (அது எங்கட காலம்) வெற்றிகரமா முடிச்சிட்டு கொழும்பு வந்துட்டாரு. கதிர்காமத்துக்குக் கூட்டீட்டுப் போகப்போறது அவர்தான். அதுக்கு வண்டியும் ஏற்பாடு செஞ்சிட்டாரு. காலைல நாலு மணிக்கு நான் தங்கிருக்கும் எடத்துக்கு வந்து அப்படியே நேரா கதிர்காமம் போறதுன்னு திட்டம். அதுக்கேத்த படி அவரும் சரியா நேரத்துக்கு வந்துட்டாரு.

நான் பெட்டியை உள்ள வெச்சு, சாவியை டேபிள்ள வெச்சு, வேண்டியதை backpackல எடுத்துக்கிட்டு, கதவைச் சும்மா மூடிட்டு பொறப்பட்டாச்சு. இன்னும் எழுந்திருக்காத கொழும்பு. அதுனால வழியில் எந்த நெரிசலும் இல்லாம சல்ல்லுன்னு போக முடிஞ்சது. நேராப் போய் ஹைவேல சேந்தாச்சு. இனிமே இன்னும் வேகமாகப் போகலாம். போற வழியில் ஹைவேயில் நல்ல மோட்டல்கள் இருக்கு. அங்க நிறுத்தி டீயும் வெஜிடபிள் பன்னும் சாப்டோம். போற வழியில் வண்டி ஓட்டி வந்த டிரைவர் கிட்ட பேசி பல விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன்.
DSC09839
ஹைவே கொஞ்சம் தூரம் தான். அதுக்கப்புறம் ஊருக்குள்ள போற வழியில்தான் போகனும். ஆனா… வழியெல்லாம் அவ்வளவு அழகான கடற்கரைகள். விடியக்காலைல பாக்குறதுக்கு சொர்க்கமா இருக்கு. பேசாம கதிர்காமம் போகாம வழியில் ஒரு பீச் ரிசார்ட்ல தங்கலாமான்னு கூட யோசனை வந்தது. அவ்வளவு அருமையான கடற்கரைகள். அதையொட்டிப் போகும் இரயில் பாதைகள். சுனாமி வந்தப்போ அந்த நேரம் போன இரயிலை முழுசா அப்படியே சுருட்டிட்டுப் போயிருச்சாம். சுனாமியால மக்கள் விட்டுட்டுப் போன வீடுகளையும் பாத்தோம்.

அடுத்தவாட்டி இலங்கைக்கு வந்தா இந்தக் கடற்கரை விடுதிகள்ள ரெண்டு மூனு நாள் தங்கனும்னு மனசுல குறிச்சு வெச்சுக்கிட்டேன். திருகோணமலைப் பக்கம் இருக்கும் கடற்கரைகளும் இன்னும் அழகா இருக்குமாம். இலங்கைப் பயணம் போடுற எல்லாரும் ரெண்டு நாளாவது இந்தக் கடற்கரைக்கும் ஒதுக்குங்க.

DSC09838திடீர்னு டிரைவர் எதிர்ப்பக்கமா வந்த ஒரு பெரிய காரைக் காட்டி “மகிந்த எதிர்ப்பக்கமா போறாரு”ன்னு சொன்னாரு. சரின்னு கேட்டுக்கிட்டோம். மகிந்த ராஜபக்‌ஷயோட சொந்த ஊரான அம்பாந்தோட்டை(Hambantota) கதிர்காமம் போற வழியில் தான் இருக்கு. சுனாமி சமயத்துல இலங்கைக்குக் கிடைச்ச நிதியுதவிகளையெல்லாம் அம்பாந்தோட்டைக்கே செலவழிச்சு அந்தப் பகுதியை ரொம்பப் பிரமாதப்படுத்தீட்டாருன்னு சொல்றாங்க. குறிப்பா வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு வந்த நிதியில் கை வெச்சதாச் சொல்றாங்க.

ஒரு ஏர்போர்ட்டே கட்டியிருக்கார்னா பாருங்களேன். மத்தள ராஜபக்‌ஷ பன்னாட்டு விமானநிலையம்(Mattala Rajapaksha International Airport)னு அதுக்குப் பேரு. கொழும்பு ஏர்ப்போர்ட் நெரிசலைக் குறைக்கத்தான் இந்த ஏர்ப்போர்ட்டைக் கட்டினாங்க. அப்படியே சொந்த மாவட்டத்தையும் வளத்துவிட்ட மாதிரி ஆச்சுல்ல. மொதல்ல என்னவோ சில விமானங்கள் இந்தப் பக்கம் வந்திருக்கு. ஆனா வரவர திருப்பதி லட்டு நெல்லிக்காய் ஆன மாதிரி ஒவ்வொன்னா நின்னுருச்சு. மக்கள் வரனும்ல. சும்மா வண்டியை ஓட்ட முடியுமா? இப்போ சில ஏர்டாக்சிகள் இங்க வருது.

அம்பாந்தோட்டைக்கு முன்னாடி மாத்தறை(Matara)ன்னு ஒரு ஊர் வருது. இது ஒரு காலத்துல தென்னிலங்கை சிங்கள அரசின் (Kingdom of Ruhuna) தலைநகரமா இருந்திருக்கு. இங்கயும் பாக்க நிறைய இடங்கள் இருக்கு. மாத்துறை-ங்குற தமிழ்ப் பேர்தான் மருவி மாத்தறை(Matara) ஆயிருச்சுன்னும் சொல்றாங்க. இங்க ரொம்பப் பிரபலமான பாறே தீவா (Rock in Water) புத்தர் கோயில் இருக்கு. இதுக்கு தொங்கும் பாலத்துல நடந்து போகனும். அதே போல நெறைய பழைய அருமையான கட்டிடங்களும் நினைவுச்சின்னங்களும் இருக்கு. இலங்கைல எந்தப் பக்கம் போனாலும் பாக்குறதுக்கு எதாவது இருக்கு. ஆகையால போறதுக்கு முன்னாடியே இந்தந்த எடங்கள்னு திட்டம் போட்டுட்டுப் போனா அருமையாப் பாக்கலாம்.
maxresdefault
சரி. நம்ம இலங்கைல இருந்து அனுமார் மாதிரி ஒரே தாவாத் தாவி தில்லானா மோகனாம்பாளுக்கு வருவோம். இந்தப் படத்தைப் பாக்காதவங்க ரொம்பக் குறைவா இருக்கும். அந்த அளவுக்குப் பிரபலமான படம். இது கொத்தமங்கலம் சுப்பு ஆனந்த விகடனில் எழுதிய நாவல். தடிதடியா ரெண்டு புத்தகமா பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துல வெளியிட்டிருந்தாங்க. 2003ல இந்தப் புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிச்சு வாங்கினேன். படிக்கப்படிக்க அதுக்குள்ள மூழ்கிட்டேன். புத்தகத்துல இரு சிறு பகுதியை மட்டும் எடுத்து திரைக்கதை அமைச்சு படமாக்கினார் ஏ.பி.நாகராஜன். புத்தகத்துல சிக்கல் சண்முகசுந்தரம் மோகனாம்பாள் கூட்டம் இலங்கைக்கெல்லாம் போகும். அங்க போய் கதிர்காம யாத்திரை போவாங்க. அந்த யாத்திரையைப் பத்தி கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருப்பாரு பாருங்க… அடடா. அதப் படிச்சதுல இருந்துதான் எனக்கு கதிர்காமம் போகனும்னு ஆசை வந்ததோ என்னவோ.

Thillana_Mohanambal_film_stillபடத்துல வர்ர அதே சிவாஜி, பத்மினி, பாலையா, தங்கவேலு, சி.கே.சரசுவதி கூட்டத்தை மனசுல வெச்சுக்கோங்க. இந்தக் கூட்டம் கதிர்காமத்துக்கு யாத்திரை போனா எப்படியிருக்கும். பக்தியும் காதலும் வரலாறும் தமிழும் பாட்டும் கலந்து சுவைக்கும் அமுதம். இப்போ தொலைஞ்சு போன கதிரை மலைப் பள்ளு நூலைப் பத்தியும், அதை வெச்சு நடத்தும் கூத்து பத்தியும் விவரமா எழுதியிருப்பாரு கொத்தமங்கலம் சுப்பு. யார் கிட்டயாவது கதிரை மலைப் பள்ளு நூல் இருந்தா தயவு செஞ்சு பகிர்ந்துக்கோங்க.

thillana_mohanambalகதைப்படி சண்முகசுந்தரத்துக்கும் மோகனாவுக்கும் திருமணம் செஞ்சு வைக்க வடிவாம்பாள் ஒத்துக்கிறாங்க. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை ரெண்டு செட்டையும் இலங்கைல கொண்டு வந்து இறக்கி விட்டுருது. அதுக்குக் காரணம் சவடால் வைத்திதான்னு நான் சொல்ல வேண்டியதில்ல. அங்க ஒரு பெரிய மனிதர் ஆதரவு கொடுக்குறாரு. அப்போ கலியுகநந்தி முத்துராக்கு (பாலையா பாத்திரம்) இலங்கை மண்ணில் கால் வெச்சதிலிருந்து ஒரு பொழுதுதான் சாப்பிடுறாரு. என்னன்னு கேட்டதும் இலங்கைக்கு வந்ததும் கதிர்காமம் பாக்காம சாப்பிட மாட்டேன்னு சொல்றாரு. அதுனால எல்லாரும் கூட்டமாப் பொறப்பட்டுப் போறாங்க.

கதிர்காமம் வந்தபிறகு மாணிக்க கங்கைல எல்லாரும் குளிக்கிறாங்க. மோகனாவின் தாயார் வடிவாம்பாள் கால்ல வழவழன்னு எதோ செகப்புக் கல்லு நெல்லிக்கா தண்டி தட்டுப்படுது. யாராவது மிதிச்சு வழுக்கிறப் போறாங்கன்னு தூக்கிப் போடப் போகும் போதுதான் அது மாணிக்கக் கல்லுன்னு தெரியவருது. அதுல ஆறு ரேகைகள் ஓடுறதால அது ஆறுமுகப்  பெருமான் குடுத்ததாகவே நெனைச்சு உருகுற மாதிரி கதை போகும்.

msviswanathanஅதே மாதிரி வருவான் வடிவேலன் படத்துல “நீயின்றி யாருமில்லை விழிகாட்டு முருகா” பாட்டுலயும் கதிர்காமம் கோயில் வரும். பைலட் பிரேம்நாத் படத்துல சிவாஜி காவடி எடுத்துக்கிட்டு “முருகனெனும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம்”னு பாடிக்கிட்டு கதிர்காமம் கோயிலுக்குப் போறதா வரும். இந்த ரெண்டு படத்துக்கும் இசை எம்.எஸ்.வி. தமிழ் சினிமாவில் கதிர்காம முருகனுக்கு இசையமைச்ச பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனுக்கு மட்டும் போகனுங்குறது அந்தக் கதிர்காம முருகனோட விருப்பம் போல.

மேல சொன்னதெல்லாம் என்னோட கதிர்காமக் காதலுக்கு அப்பப்போ நீர் விட்டு வாடாமப் பாத்துக்கிட்ட பன்னீர் ஊற்றுகள். கதிர்காம யாத்திரைன்னு கிவாஜ ஒரு புத்தம் எழுதியிருக்காரு. ஆனா கிவாஜ எழுதியிருக்காருங்குறதத் தாண்டி அந்தப் புத்தகத்துல ரசனையும் சுவையும் எனக்குக் குறைவாக இருந்தது.

இலங்கைக்கு முன்னாடியே ஒரு நண்பர் கூட்டத்தோட போக வாய்ப்பு வந்தது. நல்ல திட்டமிட்ட பயணம். ஆனா அதில் கதிர்காமம் இல்ல. அதைச் சேர்க்க அவங்களோட பயணத்திட்டம் எடம் குடுக்கல. அதுனால நான் வரலைன்னு சொல்லிட்டேன். போக முடியாமப் போச்சேன்னு ரொம்ப மனசு வேதனைல இருந்த சமயத்துலதான் கானாபிரபா வழியா முருகன் இன்னொரு வழியை உண்டாக்கிக் கொடுத்தான். கானாபிரபா கூட்டிப் போய்தான் நான் கதிர்காமம் பார்க்கனும்னு அந்த முருகனே விரும்புனதாக மட்டும் தான் என்னால இப்பவும் நினைக்க முடியுது.

மனசுக்குள்ள கட்டுக்கடங்காத கதிர்காமக் காதலோட திஸ்ஸமாராவைத் தாண்டி கதிர்காமத்துக்குள்ள நுழைஞ்சேன்.

பி.கு – தில்லானா மோகனாம்பாள் பதிப்புரிமை இப்போ பழனியப்பா பிரதர்ஸ் கிட்ட இருந்து விகடனுக்கு கை மாறிருச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆனா புத்தக வடிவில் இன்னும் வரல.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

வருவான் வடிவேலன் படப் பாடல் (நீயின்றி யாருமில்லை விழிகாட்டு)

பைலட் பிரேம்நாத் படப் பாடல் (முருகனெனும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம்)

Posted in அனுபவங்கள், எம்.எஸ்.விசுவநாதன், கதிர்காமம், திரையிசை, பயணம், மெல்லிசைமன்னர் | Tagged , , , , , , , , , , , , | 5 Comments

13. நுவர நுவர நுவர

முந்தைய பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

கண்டி மலைப்பகுதி. அதுல மழையும் சேந்ததால வேகத்தைக் கொறைச்சு கார் ஓட்டினாரு நண்பர். அப்போ அவர் கூட இலங்கையைப் பத்தி நிறைய பேச வேண்டியிருந்தது. பேச்சு சென்னை ஜெயலலிதான்னு திரும்புச்சு. உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசக்கூடாதுன்னு முடிஞ்சவரைக்கும் கட்டுப்பாட்டோட பேசுனேன். வெளிய காமிச்சக்கலைன்னாலும் எனக்குள்ள எமோஷன் இருக்கதான் செஞ்சது. கஷ்டப்பட்டுதான் மறைச்சேன்.
Nilames_in_Perahera_Litho_1841
image002நுவரேலியாவுல இருந்து எப்படி வந்தேன்னு கேட்டப்போ பஸ்ல வந்ததையும், கண்டக்டர் நுவர நுவர நுவரன்னு சொன்னதையும், அந்த ஊரை மட்டும் வழியில் கண்டுபிடிக்க முடியலைன்னும் சொன்னேன். அவர் சிரிச்சிக்கிட்டே கண்டிய சிங்களத்துல நுவரன்னு சொல்வாங்கன்னு சொன்னாரு. தமிழ்லயும் ஆங்கிலத்துலயும் கண்டி. நுவரங்குற சொல்லுக்கு நகரம்னு பொருள். கண்டியோட பழைய அரசாங்கப் பெயர் “செங்கடகல ஸ்ரீவர்தன மகா நுவர(Senkadagala Siriwardhana Maha Nuwara)”. மகா நுவர-ன்னா தலை நகரம். அதுனாலதான் நுவரன்னே சிங்கள மக்கள் சொல்றாங்க.

அப்போ கண்டிங்குற பேர் எப்படி வந்தது? வெள்ளைக்காரன் கைக்கு இலங்கை வந்தப்போ வந்தது. கந்த உத ரத்ன (Kanda Uda Ratna)ன்னா மலையில் உள்ள நிலம்னு பொருள். இத மொதல்ல போர்ச்சுக்கீசியர்கள் கண்டியான்னு சுருக்கி, பின்னாடி பிரிட்டிஷ்காரர்கள் கண்டின்னு நொண்டியடிக்க விட்டுட்டாங்க. தமிழ் மக்களும் கண்டின்னே சொல்லிப் பழகிட்டாங்க.

எழுத்தாளர் ரிஷான் கிட்ட கேட்டப்போ கண்டிக்கு பெயர் வந்த காரணத்தை இப்படிச் சொல்றாரு. ஆனா என்ன மாதிரி இல்லாம நல்ல தமிழ்ல சொல்றாரு. 🙂
பண்டைய கண்டி நகரத்துக்கு அருகாமையிலிருந்த குகையொன்றில் வசித்து தியானம் செய்த ‘செங்கண்ட’ எனும் பெயர் கொண்ட துறவியின் பெயரிலிருந்து செங்கண்ட கல (செங்கண்டவின் மலை) எனும் பெயர் பெற்று காலப்போக்கில் அது மருவி ‘செங்கடகல’ என ஆயிற்று என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மஹநுவர (Mahanuwara) என்றால் தலைநகரம். ‘செங்கடகலபுர’ நாட்டின் தலைநகரமாக இருந்த காலத்தில் மஹநுவர என அழைக்கப்பட்டு, தொடர்ந்து அந்தப் பெயரே இன்றுவரை நிலைத்திருக்கிறது. ‘ஸ்ரீ செங்கண்ட’ எனும் நகரம் பிற நாட்டவர் ஆண்ட காலத்தில் அவர்களால் உச்சரிக்கச் சிரமமான பெயரென்பதால் ‘செங்கண்ட’ –> கண்ட –>  கண்டி ஆகியிருக்கிறது.

DSC02095_10753519.3930513_stdகண்டியைப் பத்தியும் இலங்கை வரலாறு பத்தியும் நண்பர் காரை ஓட்டிக்கிட்டே சில விவரங்கள் சொன்னாரு. அப்புறம் நானும் கொஞ்சம் தேடிப் படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன். சுருக்கமா சில தகவல்கள் உங்களுக்கு.

கண்டிக்கு “மகா நுவர(தலைநகரம்)”னு பேர் இருந்தாலும் சிங்கள அரசுகளோட கடைசித் தலைநகரம் தான் கண்டி. அனுராதபுரம் தான் முதல் தலைநகரம். வெளியிருந்து வந்த தாக்குதல்கள் காரணமா அனுராதபுரத்துல இருந்தா வேலைக்காகாதுன்னு பொலனுருவ, சிகிரியான்னு சுத்திட்டு 14ம் நூற்றாண்டுலதான் கண்டிக்கு வர்ராங்க.

இலங்கைச் சிங்கள அரசுகளுக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கு. சோழர்கள் பாண்டியனைத் தாக்குனா இலங்கை உதவியிருக்கு. இலங்கையைச் சோழன் தாக்கிய போது பாண்டிய நாடு உதவியிருக்கு. இலங்கைக்கு விஜயன் முதன்முதலா வங்கத்திலிருந்து வந்தப்போ குவேணிங்குற இலங்கையின் பூர்வகுடிப் பெண்ணை மணந்தாலும் அவளை பட்டத்து அரசியாக்காம, பாண்டியன் மகளைத் திருமணம் செய்து அரசியாக்கியதா வரலாறு சொல்லுது. கொண்டான் கொடுத்தான் சம்பந்தம் ரெண்டு நாடுகளுக்கும் இருந்திருக்கு.

gold-coinசோழர்களுக்கு எப்பவும் பாண்டியன் மணிமுடி மேலயும் செங்கோல் மேலயும் எப்பவும் ஒரு கண். அடிக்கடி இதுனால போர் நடந்தது.  பாண்டியர்களும் முடிஞ்ச வரை எதிர்த்தாங்க. இரண்டாம் இராசசிம்மன் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்துல பராந்தக சோழன் படையெடுத்து வெள்ளூர்ப் போர் நடக்குது. அப்போ பாண்டிய மன்னனுக்கு ஆதரவா இலங்கையின் ஐந்தாம் கஜவாகு அனுப்பிய யானைப்படை சக்கசேன தலைமையில் வருது. ஆனா அந்தப் போரில் சோழர்களுக்குதான் வெற்றி. ஆனாலும் மணிமுடியையும் செங்கோலையும் கைப்பற்ற முடியல. இராசிம்மன் இலங்கைக்குத் தப்பிச்சுப் போய் ஐந்தாம் கஜவாகு கிட்ட கொடுத்து வைக்கிறதால சோழர்கள் கைக்குக் கிடைக்கல.

வெள்ளூர்ப் போருக்குப் பின்னாடி பாண்டியர்கள் வலிமை குறைஞ்சதும் அடுத்து இலங்கையைத் தாக்குகிறார்கள் சோழர்கள். ஆனாலும் மணிமுடியையும் செங்கோலையும் கண்டுபிடிக்க முடியல. அதுக்குப் பிறகு ஆதித்த சோழன், சுந்தரசோழன், மதுராந்தகன், இராஜராஜன்னு சோழர்கள் ஓகோன்னு போயிட்டாங்க. சேரனையும் பாண்டியனையும் அழிச்சு மும்முடிச் சோழன்னு பெருமை.

ஆனா பாண்டியன் மணிமுடியை சிங்கள மன்னன் கிட்ட கொடுத்துட்டு திரும்ப வாங்க முடியாததால சோழன் படையெடுத்துப் போனான்னு கல்கி மாத்தி கதையா எழுதீட்டாரு. அதோட தொடர்ச்சியா அகிலனும் சோழன் மணிமுடியை திரும்பக் கொண்டு வந்ததாக கதை எழுதீட்டாரு. ஒன்னும் சொல்றதுக்கில்ல.

வரலாற்று நூல்கள்ள மட்டுமில்லாம இலங்கையின் வரலாறு சொல்லும் மாகவமிசத்திலும் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கு.

இந்த சிங்களரோட மதுரைத் தொடர்பு எந்த அளவுக்குப் போச்சுன்னா… பாண்டியர்கள் வீழ்ந்து சுல்தான்களின் ஆட்சி மதுரைக்கு வந்து, அதுக்குப் பிறகு நாயக்கர்கள் ஆட்சி வந்த பிறகும் மதுரை நாயக்கர்கள் வீட்டிலிருந்து பெண் எடுத்திருக்காங்க. இது தமிழக வரலாறு கூடவே இலங்கை வரலாறும் பிரிக்க முடியாம மாறுது. இது பெண் எடுத்து கொடுக்குறதுல இன்னொரு வசதியும் இருக்கு. அப்போ போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சி செய்த காலகட்டம். அதைத் தடுக்க படையுதவியும் வேணும். திருமண உறவுன்னு இருந்தா படையுதவியும் அரசியல் உதவியும் தானா வரும்.
Capture_of_HM_Sri_Vikrama_Rajasinha_in_1815
வீர மகேந்திரசிங்க என்ற சிங்கள மன்னனும் அப்படி பெண் எடுத்தவர் தான். அவருக்கு நேரடி வாரிசு இல்லை. அதுனால மனைவியோட தம்பி அடுத்த மன்னனாகிறான். அப்படி மன்னன் ஆனவர் தான் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க. அடுத்தடுத்து ரெண்டு மன்னர்கள் வர்ராங்க. இலங்கையோட கடைசி மன்னனா ஸ்ரீவிக்கிரம ராஜசிங்க இந்த வரிசைல வர்ராரு. அவரோட இயற்பெயர் கந்தசாமி (அ) கண்ணசாமி (அ) கண்ணுசாமி. வெள்ளைக்காரர்கள் இலங்கையை ஆக்கிரமிக்கும் போது அவரை சிறை பிடிச்சு தமிழ்நாட்டு வெல்லூருக்கு கொண்டு வர்ராங்க. அங்க சிறையில் இருந்து வாரிசு இல்லாம இறந்து போறாரு. அதுக்கப்புறம் இலங்கைல வெள்ளைக்காரனோட ஆட்சிதான்.

Ceylon_KGVI_50cஇந்தியாவை வாங்குனதுக்கு இலவச இணைப்பா இலங்கையும் கிடைச்சா வெள்ளைக்காரன் சும்மாயிருப்பானா? எப்பேர்ப்பட்ட ஆளு. இந்தியாவில் கத்துக்கிட்ட பிரித்தாளும் திட்டத்த இலங்கைல செயல்படுத்துறான். மக்கள் ஒன்னு சேரக்கூடாதுன்னு சாதி அடிப்படைல பிரிக்கிறான். இனத்தின் அடிப்படைல பிரிக்கிறான். எல்லா மக்களும் கலந்து ஒத்துமையா இருக்குறது கண்ண உறுத்துது. சிங்களர் பெரும்பான்மையா இருக்கும் எடங்கள்ள இருந்த எல்லாரையும் சிங்களரா வகைப்படுத்தினான். பல தமிழர்கள் இதனால சிங்கள அடையாளத்துக்குள்ள வர்ராங்க. இன்னைக்கும் சிங்கள சாதிகளில் கீழ்நிலைல இருக்குறவங்க ஆதியில் தமிழரா இருந்தவங்கன்னு சொல்றாங்க. அந்தப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்ததால அவங்களும் வரலாறு போற போக்கிலேயே போக வேண்டியதாப் போச்சு.

அதே போல தமிழர்கள் பகுதில இருந்த எல்லாரையும் தமிழர்களா வகைப்படுத்துறாங்க. அதுல மலையாளம் பேசும் மக்களும் தெலுங்கு பேசும் மக்களும் அடக்கம். ஆனாலும் எல்லாரும் தமிழர்கள்னு வகைப்படுத்தப்படுறாங்க. தமிழகத்துல அப்படி வாழ்ந்து பழகிட்டதால அவங்களுக்கு தமிழர்களோட சேர்ரது இயல்பா இருந்திருக்கு. இப்பிடி ரெண்டு பிரிச்சிட்டா ஆட்சி செய்றது லேசு. இந்த ரெண்டும் போக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு மக்கள் இலங்கைச் சோனகர் (Sri Lankan Moors) என்று அழைக்கப்படும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்.

இவங்கள்ளாம் போக மிகச் சிறுபான்மையா இருந்த இன்னொரு இனம் மலாய் மக்கள். அதுல குறிப்பா தி சரம்(De Saram) குடும்பம் பத்தியும் தெரிஞ்சிக்கனும். டச்சுக்காரர்களோடு கலந்து உருவான குடும்பம் தி சரம் குடும்பம். ஆங்கிலோ இந்தியன்னு சொல்றோமே. அந்த மாதிரி. ஆனா சாதிய அடுக்கில் இவங்க மேன்மையா கருதப்படல. பல்லக்கில் போக உரிமை கிடையாது. அந்தக் குடும்பத்துல இருந்து 71 வயது பெரியவர் ஒருத்தர் நடந்தே கண்டிக்கு வந்து வெள்ளைக்காரன் கிட்ட வேலைக்கு சேர்ராரு. அவரோட உழைப்பால அவருக்கு முதலியாரா பதிவு உயர்வு கிடைக்குது.

800px-De_Sarams.11751816_largeமுதலியார்னா சாதி இல்லை. பதவி. நிர்வாகம் செய்றதுக்காக போர்ச்சுக்கீசியர்களும் ஆங்கிலேயர்களும் உருவாக்கி வளர்த்துவிட்ட பதவி. சிங்களம் பேசுறவங்களோ தமிழ் முஸ்லீம்களோ கூட அந்தப் பதிவுக்கு வரலாம். ஆனா பேர் தமிழ்ப் பேர்தான். தி சரம் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா அதிகாரத்துக்கு நெருக்கமாகுது. டச்சு புராட்டஸ்டாண்டுகளா இருந்தவங்க Angelicanismக்கு(Under Church of England) மாறுறாங்க. அதிகாரம் இன்னும் நெருக்கமாகுது. இந்த சமயத்துலதான் நாலாவது மகா முதலியாரா இருந்த கிரிஸ்டோபெல் தி சரம்(Christofel de Saram) தன்னோட பேரை வனிகசேகர ஏகநாயக-ன்னு மாத்திக்கிறாரு. என்னதான் பதவி இருந்தாலும் social status வேணுமில்லையா. சொல்லும் போதே அதிரனும்னு நெனச்சிருப்பாரு போல. அப்போ நியூமரலாஜி பாத்து யாரும் சொல்லிருப்பாங்களோ என்னவோ.

பேர மாத்திய நேரத்தில் அதிகாரமும் செல்வாக்கும் வரவர மற்ற சிங்கள உயர் சாதிக் குடும்பங்களோட சம்பந்தம் வெச்சுக்கிறாங்க. 19ம் நூற்றாண்டுல இந்தக் குடும்பத்தோட உறவினர்கள்தான் மிகுந்த செல்வாக்கான முதலியார்களா இருந்திருக்காங்க. இந்த முதலியார்கள்ள இருந்துதான் இலங்கையின் இப்ப இருக்கும் முக்கியமான அரசியல் குடும்பங்கள் உருவாகியிருக்குன்னு சொல்றாங்க. தலையச் சுத்துதா? அதுதான் அரசியல். ஒரு எழுபத்தோரு வயசுப் பெரியவரோட உறுதி எங்க வந்து நிக்குதுன்னு பாருங்க.

மேல சொன்னதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு நண்பரோட கார்ல வர்ரப்போ கிடைச்ச துப்புகள் உதவியா இருந்தது. அண்ணா நூலகமும் இணையமும் தகவல்களைக் கண்டுபிடிக்க இன்னும் உதவியா இருந்தது. நடந்ததையெல்லாம் என்னால முடிஞ்ச வரைக்கும் சுருக்கமா சொல்லியிருக்கேன். இந்தத் தகவல்களை இலங்கைலயும் இந்தியாவிலும் இருக்கும் வரலாறு தெரிஞ்ச நண்பர்கள் கிட்ட கொடுத்து சரிபார்த்த பிறகுதான் பதிவில் சேத்திருக்கேன். ஆனாலும் இதுல எதாவது தவறுகள் திருந்தங்கள் இருந்தா ஆதாரத்தோடு சொல்லவும். திருத்திக்கிறேன்.

இப்படியெல்லாம் கதைச்சிக்கிட்டே கொழும்புக்குள்ள நுழைஞ்சா பயங்கர நெரிசல். தெகிவளை(Dehiwala)ங்குற எடத்துல தங்க இடம் பாத்துச் சொல்லியிருக்காரு எழுத்தாளர் ரிஷான். அடுத்த மூன்று நாள் கொழும்புதான். ஆனா அடுத்த நாள் காலைல நாலு மணிக்கு கதிர்காமம் பொறப்படனும்.

நான் வந்துக்கிட்டேயிருக்கேன்னு சொல்ல ஹோட்டல் மேனேஜருக்கு ஃபோன் பண்ணேன். அப்பதான் அவர் குக்கர்ல குண்டு போடுற மாதிரி என் தலைல குண்டு போட்டு பிரஷரைக் கூட்டுனாரு.

“சார். வேலண்டைன்ஸ் டே வந்ததால வழக்கமா கொடுக்குற ரூம் எல்லாம் புக் ஆயிருச்சு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வேற எடத்துல ரூம் தர்ரேன். நாளைக்கு மதியம் ஒங்கள வழக்கமா கொடுக்குற ரூமை மாத்திக் கொடுக்குறேன்”னு சொல்றாரு. ரெண்டுமே பக்கத்து பக்கத்து எடம் தான். ஆனா அவர் மாத்திக் கொடுக்குறேன்னு சொன்ன மதியம் நான் கதிர்காமத்துல இருப்பேன். திரும்பி வர ராத்திரி எட்டு/ஒம்பது மணி ஆயிரும். என்ன பண்றது?

தொடரும்…

அடுத்த பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , | 8 Comments

12. பத்தினித் தெய்வம்

முந்தைய பகுதியை இங்கு படிக்கவும்.

Cafe 7 அருமையான கடை. டீயும் பிரட் ஆம்லெட்டும் சொன்னேன். WiFi வசதி இருந்ததால சாப்டுக்கிட்டே கொஞ்ச நேரம் டிவிட்டர் வாட்சப்ல பொழுது போக்குனேன். லேசா இருட்டத் தொடங்குற நேரம். வெளிய வந்து ஏரிக்கரையோரமா நடந்தேன். தளதளன்னு தண்ணி தளும்புற ஏரி. இந்த ஏரிக்குப் பேர் கிரி முகுதா. அதாவது பாற்கடல்னு பொருள். ஆனா இருட்டுல பால் சரியாத் தெரியல. ஏரிக்கு நடுவுல குட்டித் தீவு மட்டும் தெரிஞ்சது. ஏரியோரமா நடக்க பாதை இருக்கு. நடைப்பயிற்சிக்கு நிறைய பேர் வர்ராங்க. சும்மா உலாத்துறதுக்கும் கூட்டம் வருது.
DSC09691
எழுத்தாளர் ரிஷானோட நண்பர் ஒருத்தர் அன்னைக்கு கண்டிக்கு வந்திருக்கிறதாவும் முடிந்தால் அவரை சந்திக்கும்படியும் ரிஷான் சொன்னாரு. அவர் அலுவலக வேலை தொடர்பா வந்திருக்காரு. அவருக்கு மீட்டிங் முடிஞ்சதும் சந்திக்கிறதாகச் சொன்னாரு. நான் அதுவரைக்கும் அங்க இருக்கும் மால் சுத்திப் பாக்கலாம்னு உள்ள போனேன். எட்டு மணிக்கெல்லாம் பாதி கடைகள் மூடியிருந்தது. அன்னைக்கு Valentine’s day eve வேற. எந்தக் கடைல நுழையுறதுன்னு யோசிச்சுக்கிட்டே Glitz கடைக்குள்ள நுழைஞ்சிட்டேன்.

கடைக்குள்ள பாக்குறதெல்லாம் மனசுக்குப் பிடிக்கிற மாதிரியே இருக்கு. ஆனா கடைல கூட்டமே இல்ல. எட்டரைக்கு கடைய மூடிருவாங்களாம். இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. கையும் ஓடல காலும் ஓடல. எதையெதையோ எடுக்கனும்னு ஆசை. ஆனா வேற வழியில்லாம அவசரமா ஒரு பைஜாமா மட்டும் எடுத்துக்கிட்டு வெளிய வந்தேன். கொழும்புல இந்தக் கடையக் கண்டுபிடிச்சு போயே ஆகனும்னு மனசுக்குள்ள குறிச்சு வெச்சுக்கிட்டேன். கண்டிலயே இவ்வளவு நல்லாயிருந்தா, கொழும்புல இன்னும் நிறைய டிசைகள் இருக்கனுங்குறது என்னோட கணக்கு.

அதுக்குள்ள எழுத்தாளர் ரிஷானோட நண்பர் வந்துட்டாரு. அவருக்கு தமிழ் தெரியாது. சிங்களம் தான். தாமதமா வந்ததுக்கு மன்னிப்பு கேட்டாரு. பிறகு வாங்க சாப்பிடப் போலாம்னு சொன்னாரு. மாட்டோம்னு எப்பவாவது சொல்லீருக்கோமா என்ன! ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு போனோம். சூப்பும் நாசிகோரங்கும் ஆர்டர் பண்ணேன். நம்மூர்ல சூப் கிண்ணத்துல வரும். அதைக் குடிக்க முடியாம 1/2ன்னும் 2/3ன்னும் கேப்போம். இங்க என்னடான்னா சட்டி நிறைய சூப் கொண்டு வந்து வச்சாங்க. உள்ள குதிச்சு நீச்சலடிக்கச் சொல்லப் போறாங்களோன்னு மொதல்ல நெனச்சேன். அவ்வளவு இருந்தது. ஒரு வழியா குடிச்சு முடிச்சா கண்ணு கட்டி மயக்கம் வருது. அதுக்குள்ள நாசிகோரங் வந்துருச்சு. பாதி கூட என்னால முடிக்க முடியல. வீணடிச்சிட்டோமேன்னு வருத்தமா இருந்தது.

17155745_995384687261578_5827177793056150259_nஅடுத்த நாள் என்ன பண்ணப் போறேன்னு கேட்டாரு. காலைல எந்திரிச்சு கொழும்பு போறதுதான் திட்டம். ஏன்னா அதுக்கு அடுத்த நாள் கதிர்காமம் போகனும். அந்த நண்பருக்கு 12 மணி வரைக்கும் வேலை இருக்குன்னும், அதுக்கப்புறம் அவர் கொழும்புக்கு போறதாகவும், அவர் கார்லயே வரலாம்னும் சொன்னாரு. அவர் சொன்னதும் நல்லாதான் இருந்தது. எப்படியும் 10 மணிக்கு பஸ் ஏறனும்னு முடிவு பண்ணிருந்தேன். 12 மணிக்குப் போறதுல பெருசா ஒன்னும் வித்தியாசம் இருக்கப் போறதில்லைன்னு தோணுச்சு. சரின்னு சொல்லிட்டேன்.

அடுத்தநாள் காலைல எந்திரிச்சா மதியம் 12 வரைக்கும் ஊர் சுத்திப் பாக்க நேரம் இருக்கு. நேரா பாலாஜி தோசைக்கடைக்குப் போய் தோசையும் ஆமை வடையும் (ஆமை சைஸ் இருந்துச்சு) சாப்டேன். டேபிள்ள எதிர்ல உக்காந்து சாப்பிட்டவர் சிங்களம் பேசுறவர்னு ஆளைப் பாத்ததும் தெரிஞ்சது. அவரும் தோசைதான் சொல்லியிருந்தாரு. அவருக்கு லேசா தீய்ஞ்சு போன தோசை. அவர் எதுவும் பேசாம வாளில இருந்த சாம்பாரை ஊத்திச் சாப்பிட ஆரம்பிச்சாரு. கால்வாசி தோசைக்கு மேல முடிச்சிருப்பாரு. சர்வர் வேகமா வந்து மன்னிப்பு கேட்டு, அந்த தோசைய எடுத்துட்டு புதுசா ஒரு தோசை கொடுத்தாரு. சாப்பிட வந்தவர் “இருக்கட்டும் பரவால்ல”ன்னு சொல்லிப் பாத்தாரு. சர்வர் விடவே இல்ல. புது தோசைய கொடுத்துட்டுதான் அந்த எடத்த விட்டே நகர்ந்தாரு.

எந்திரிச்சதிலிருந்தே வானம் மேகமூட்டமா இருந்தது. சாப்டு வெளிய வந்ததும் பொட்டுப் பொட்டா மழை. அடடான்னு நெனச்சிக்கிட்டே, அங்கிருந்த கடைல குடையொன்னு வாங்கினேன். நம்ம நேரம்னு ஒன்னு சொல்வாங்களே. குடைய வாங்குனதும் தூறல் நின்னுருச்சு. பின்னாடி எம்.எஸ்.வி இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் எல்லாரும் சேந்து பிஜிஎம் வாசிக்க, நான் ரொம்ப சோகமா நடந்து போனேன். ஒரு எடத்துல நிறைய மக்கள் எதோ ஒரு கட்டிடத்துக்குள்ள போறதும் வர்ரதுமா இருந்தாங்க. நானும் என்னதான் இருக்குன்னு உள்ள போனேன்.

பாத்தாDSC09633… பத்தினி தேவாலயான்னு எழுதியிருக்கு. இதத் தேடிதான நேத்து திக்குத் தெரியாம அலைஞ்சோம்னு நினைவுக்கு வந்தது. அந்தக் கண்ணகியே கொழும்புக்கு பொறப்படவிடாம தடுத்து கோயிலுக்கு கூட்டீட்டு வந்த மாதிரி இருந்தது. நேரா உள்ள போனேன். அப்பதான் பூஜை தொடங்குது. ரெண்டு கைலயும் சிலம்பு பிடிச்ச மாதிரி கண்ணகியோட ஓவியம். அதுதான் திரை. அதுக்குப் பின்னாடி கண்ணகியோட சிலை. ஆனா பூஜை பண்றவர் மட்டும் தான் உள்ள போக முடியும். நாம வெளிய இருந்து கண்ணகி ஓவியம் இருக்கும் திரையை மட்டும் பாக்கனும். மேளம் கொட்டி நாயனம் மாதிரி ஒன்னு வாசிச்சு பூஜை நடக்குது. சிங்களத்துல எதெதோ சொல்றாங்க. மதுராபுரி, கண்ணகி, பத்தினிங்குறது மட்டும் புரிஞ்சது. மக்கள் காணிக்கையா பழங்களை தட்டுல அடுக்கிக் கொண்டு வர்ராங்க. நானும் பூஜை முடியும் வரைக்கும் இருந்துட்டு வெளிய வந்தேன். கோயில்ல இன்னொரு அறைல கண்ணகியோட சிலை இருக்கு. ரெண்டு கைலயும் சிலம்பு பிடிச்ச மாதிரி சிலை.

கண்ணகிக்கு வணக்கம் சொல்லிட்டு வெளிய வந்து கிரி முகுதா ஏரிக்கரையோரமா நடந்தேன். அன்னைக்கு ஊர் முழுக்க காதலர் தினக் கொண்டாட்டங்கள். அப்படியே மாலுக்குள்ள நுழைஞ்சேன். காதலர்களுக்காக நிறைய நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டிருந்தது. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டிருந்தேன். அங்கருந்து கிரி முகுதா ஏரி நல்லா தெரிஞ்சது. மேக மூட்டமும் தளும்பும் ஏரியும் காதலர் தினக் கொண்டாங்களுமா அந்த எடமே சொர்க்கம் மாதிரி இருந்தது. அங்க இருந்த கஃபேல டீ ஒன்னு சொல்லிட்டு சுத்தியும் என்ன நடக்குதுன்னு கவனிச்சிட்டிருந்தேன். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

அப்போ அந்த நண்பர் மொபைல்ல கூப்டு ”சரியா 12.15க்கு YMCA வாசல்ல இருப்பேன்னு” சொன்னாரு. நானும் சரின்னு நடந்து YMCAக்குப் போனேன். காலைலயே செக்கவுட் பண்ணி பெட்டியை ரிசப்ஷன்ல வெச்சிருந்ததால, போய் பெட்டிய எடுத்துக்கிட்டு வாசலுக்கு வந்து நிக்கவும் அவர் வரவும் சரியா இருந்தது. கண்டில ரோடெல்லாம் சின்னச் சின்னதா இருக்கு. அதுனால பெரும்பாலும் வாகன நெரிசல்கள்தான். மாட்டிக்கிட்டோம்னா எப்போ சரியாகும்னு சொல்லவே முடியாது. அதுனாலதான் அவர் 12 மணிக்கே கண்டிய விட்டு வெளியேறனும்னு சொன்னது. சொன்ன மாதிரி பிரச்சனையில்லாம சீக்கிரமா கண்டியை விட்டு வெளிய வந்துட்டோம். அங்க ஒரு தள்ளுவண்டில பழம் வித்துட்டு இருந்தாங்க. அவர் எப்போ கண்டிக்கு வந்தாலும் பழம் வாங்காமப் போக மாட்டாராம்.

17190796_995391527260894_8814506843262273294_nநானும் எறங்கி என்னென்ன பழங்கள்னு பாத்தேன். பழைய திருப்பதி லட்டு அளவுக்குப் பெருசா கொய்யாப்பழம். அப்புறம் மாம்பழம். ரெண்டே பழங்கள்தான். கொய்யாப் பழத்துல கொஞ்சம் நறுக்கிக் கொடுத்தாரு. அவ்ளோ ருசி. பழம் பெருசா சதைப்பற்றோட கடிச்சுச் சாப்பிட நசுக்குநசுக்குன்னு நல்லா இருந்தது. நான் ஒரு நாலு பழம் தனியா வாங்கிக்கிட்டேன். மாம்பழத்தைப் பாத்ததும் சாப்பிட ஆசை. அதுல ஒரு பழம் வாங்கிக்கிட்டேன். ரெண்டு கொய்யாப் பழத்தை துண்டுகளா நறுக்கி போற வழில சாப்பிடறதுக்கு வெச்சுக்கிட்டோம்.

பழம் விக்குற பெரியவருக்கு தமிழ் தெரிஞ்சாலும் தெரியலாம்னு நண்பர் சொன்னாரு. தமிழ்ல ரெண்டு பேச்சு பேசிப் பாத்தேன். அவருக்குப் புரிஞ்சதா புரியலையான்னே தெரியல. அவர் இலங்கை முஸ்லீம்னு சொன்னது மட்டும் புரிஞ்சது. நான் “இண்டியா… இண்ண்ண்ண்டியா”ன்னு அழுத்திச் சொன்னேன். அவர் லேசா சிரிச்ச மாதிரி இருந்தது. ஆனா தாடியும் மீசையும் மறைச்சதால சரியாத் தெரியல. பொறப்படும் போது “அஸ்ஸலாமு அலைகும்”ன்னு சொன்னாரு. நான் பதிலுக்கு லேசா தலையைக் குனிஞ்சு “அலைகும் ஸலாம்”னு சொன்னேன்.

அடுத்து என்ன… கொழும்புக்கு நேரா வண்டிய விட்டோம். எனக்கென்னவோ நண்பர் மெதுவா காரை ஓட்டுற மாதிரியே தோணுச்சு. ரோடு காலியா இருக்கும் போது ஏன் மெதுவாப் போறாருன்னு யோசிச்சேன். பேசாம அவர் கிட்ட காரை வாங்கி ஓட்டலாமான்னு தோணுச்சு. அப்புறந்தான் தெரிஞ்சது இலங்கையில் இருக்கும் வேகக் கட்டுப்பாடு. சாதா ரோடுகளில் 50கிலோமீட்டருக்கு மேல போகக் கூடாதாம். ஹைவேல மட்டும் தான் வேகமாப் போலாமாம். அதுவும் 90 கிமீ வேகம்னு சொன்னாரு. இலங்கைல விபத்துகள் நிறைய நடக்குது. இந்த வேகக்கட்டுப்பாட்டுக்குப் பிறகும் எக்கச்சக்க விபத்துகள்னு சொன்னாரு.

போற வழியெல்லாம் இயற்கைக் காட்சிகள். அவ்வளவு அழகு. அவ்வளவு பசுமை. வழியில மாவனல்லைங்குற ஊர்ல சாப்பிட ஒரு கடைல நிறுத்தினோம். ஆனா அந்தக் கடை பூட்டியிருந்தது. சரின்னு வேறொரு ஊர்ல நிறுத்தி சாப்பிட்டோம். எதையும் வீணாக்கக்கூடாதுன்னு ஒரேயொரு ஃபிரைடுரைஸ் மட்டும் சொன்னேன். சாப்பிட்டு முடிக்க சரியாயிருந்தது. சாப்பிட்டுட்டு வண்டியை எடுத்தா “அங்கல்லாம் மழையா”ன்னு கேட்டு எழுத்தாளர் ரிஷான் மெசேஜ் அனுப்பியிருந்தாரு. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையேன்னு பதில் அனுப்பிச்சேன். பதில் அனுப்பிய நேரம் பாருங்க… மழை. ஒரே மழை. கொட்டும் மழை.

தொடரும்…

அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

சில படங்கள் பார்வைக்கு…

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , | 4 Comments

11. தலதா மாளிகாவா

முந்தைய பகுதியை இங்கு படிக்கலாம்.

IMG_9064YMCAல இருந்து நேராப் போய் இடது பக்கம் திரும்பி நேராப் போனா தலதா மாளிகாவா வந்துரும். இதையெல்லாம் மொதல்லயே கூகிள் மேப்ல பாத்து வெச்சுட்டேன். அதுனால நடந்து அப்படியே போனேன். சின்ன தெருக்கள். ஆனா துப்புரவா இருக்கு. இலங்கைல பொதுவாவே எனக்கு இந்தத் துப்புரவு ரொம்பப் பிடிச்சது.

நல்ல வெயில்ல நடந்து போயிட்டிருக்கும் போது வலது பக்கம் பாத்தா ”ஸ்ரீ மகா கத்ரகாம தேவாலயா”ன்னு இருக்கு. கதிர்காமத்த சிங்களத்துல கத்ரகாமான்னு சொல்வாங்கன்னு தெரியும். ஒருவேளை இதுவும் முருகன் கோயிலோன்னு நெனச்சேன். மயில் தெரியுது. பாம்பு தெரியுது. எதோ பேர் தெரியாத தெய்வங்கள் தெரியுது. ஆனா மயில் மேல முருகன் தெரியல. அதுதான் இதுவா இதுதான் அதுவான்னு ஒரு குழப்பம். உள்ள போய்ப் பாத்துறலாமான்னு நெனச்சேன். வேண்டாம்னு ஒடனே நெனச்சேன். அப்புறம் உள்ள ஆட்கள் போறதப் பாத்துட்டு நானும் ஒரு ஆர்வத்துல உள்ள போனேன். உள்ள வேலும் மயிலுமா முருகன் படம் தெரிஞ்சது. சரின்னு செருப்பை கவுண்ட்டர்ல விட்டுட்டு கோயிலுக்குள்ள போனேன்.

உள்ள தமிழ் முருகன் இல்ல. சிங்கள முருகன் தான் இருந்தான். இருந்தாலும் ரெண்டு கும்புடு போட்டேன். அங்க இருந்தவர் எல்லாருக்கும் நெத்தில திருநீற்றுப் பொட்டு வெச்சாரு. நானும் கோயிலைச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தேன். நெத்தில இருக்குற திருநீற்றுப் பொட்டோட நடக்கலாமா வேண்டாமான்னு ஒரு யோசனை. ஏன்னா… அடுத்து போற எடம் புத்தர் கோயிலாச்சே. எனக்குப் பிரச்சனையில்லை. ஆனா யாருக்கு எங்க பிரச்சனைன்னு சொல்ல முடியாதே. தமிழ்நாட்டுல சாந்தோம் சர்ச்சுக்குள்ளயே என்ன ஒரு தடவ உள்ள விடல. இலங்கைல வந்து எதுக்கு வம்புன்னு நெத்தில இருந்த திருநீற்றை அழிச்சிட்டேன்.
IMG_9066
கண்டி பழமையும் புதுமையும் கலந்து நல்லா இருந்தது. அப்படியே நடந்து தலதா மாளிகாவா வாசலுக்கு வந்தேன். உள்ள போகனும்னா முட்டிக்குக் கீழ துணி மறைச்சிருக்கனும். தோள் முழுக்க மறைச்சிருக்கனும். ஷார்ட்ஸ் போட்டு வந்த வெள்ளக்காரங்களுக்கு இடுப்புல கட்டிக்கிறதுக்கு நூறு நூற்றம்பது ரூபாய்க்கு துணி விக்கிறாங்க. அதே மாதிரி நிறைய பூக்கள் விக்குறாங்க. காணிக்கைப் பொருளா அழகா அடுக்கப்பட்ட பூக்களைக் கொண்டு போறாங்க. இளஞ்சிவப்பு அல்லியும் ஊதா நிறத்துக் குவளையும் நிறைய இருக்கு.  பாக்கப் பாக்க கண்ணு குளுந்து போகுது.
17191053_995377397262307_1775031727312162624_n
தலதா மாளிகாவாவுக்கு உள்ள போக இலங்கை மக்களுக்கு இலவசம். வெளிநாட்டுக்காரங்கன்னா ஆயிரம் ரூபா டிக்கெட். தென்கிழக்கு ஆசிய நாடுகள்ள இருந்து வந்தவங்கன்னா எழுநூறு ரூபா. என்னப் பாத்ததும் “which country”ன்னு கேட்டாரு கவுண்ட்டர் ஆள். இந்தியான்னு சொன்னதும் எழுநூறு ரூபாய் டிக்கெட்டை கிழிச்சாரு.

16996383_995377273928986_8838340047901278716_nடிக்கெட் வாங்கிட்டு செருப்பை அதுக்கான எடத்துல குடுத்துட்டு உள்ள போனேன். நல்ல பராமரிப்பு. 98-குண்டுவெடிப்புக்குப் பிறகு முழுசும் எடுத்து சரி செஞ்சிட்டாங்க. புது ஓவியங்கள் பளிச்சுன்னு இருக்கு. உள்ள நுழைஞ்சதும் மொதல்ல கீழ்த்தளத்துலயே புத்தருடைய பல் இருக்கும் கருவறை இருக்கு. யானைத் தந்தமெல்லாம் வெச்சு அலங்கரிச்சிருக்காங்க.  கருவறைக்குள்ள என்ன இருக்குன்னு பாக்க முடியாத படி ஒரு திரை தொங்குது. ஃபோட்டோ எடுத்துக்கலாம். ஆனா கருவறைக்கு முதுகு காட்டிக்கிட்டு செல்பி மட்டும் எடுக்கக் கூடாது. இங்க மட்டுமல்ல.. பொதுவாவே எல்லா எடத்துலயும் அதான் சட்டம்.

இந்தக் கருவறைக்கு மேல தங்க விதானம் இருக்கு. வரிசையா அடுக்கிய தங்கத்தாமரைகள் கொண்ட விதானம். கீழ இருந்து பாக்க அவ்வளவு அழகு. கோயிலோட மேல்தளத்துல புத்த பிக்குகள் உக்காந்து வழிபாடு பண்றாங்க. நான் போனப்போ ஜப்பான் நாட்டிலிருந்து ஒரு கூட்டமா வந்து புத்த பிக்குகள் முன்னாடி உக்காந்து எதோ வழிபாடு பண்ணிட்டிருந்தாங்க. உள்ளூர் மக்கள்ளாம் கெடைச்ச எடத்துல உக்காந்து அவங்களுக்குத் தெரிஞ்ச பாட்டைச் சொல்லி தியானம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. நானும் ஒரு அஞ்சு நிமிஷம் உக்காந்து எந்திரிச்சேன்.  அதுக்குள்ள கூட்டம் எக்கச்சக்கமா வந்து உக்காந்துருச்சு. யார் மேலயும் கால் படாம பாத்துப் பாத்து நடந்து வெளிய வந்தேன்.
17156338_995377027262344_1651423668401704442_n
கருவறைக்குப் பேரு ஹந்துன் குனம. இதுக்குப் பின்னாடிதான் அருங்காட்சியகம் இருக்கு. அதோட கீழ்த்தளம் வழிபாடு செய்ற எடம். அங்க புனிதப்பல் தொடர்பான கதைகள் ஓவியங்களா வெச்சிருக்காங்க. அந்த ஓவியங்கள்ள பாண்டிய மன்னனை பூச்செண்டால அடிச்சு சோழனை வில்லனா காட்டியிருக்காங்க. கண்டி வரலாறு சொல்றப்போ பாண்டியர்-சிங்கள மன்னர் உறவு பத்தி சுருக்கமாச் சொல்றேன். பொன்னியின் செல்வன்ல கல்கி ராஜராஜசோழன் இலங்கைல தொண்டு செஞ்ச மாதிரி எழுதியிருக்காரு. ஆனா வரலாறு என்னவோ வேற மாதிரி சொல்லுது.

அங்க இருந்த ஒரு ஓவியத்துல, பாண்டிய மன்னன் ஒருவன் தவறுதலாகப் புரிஞ்சிக்கிட்டு புத்தரோட புனிதப்பல்லை அழிக்க நினைச்சானாம். ஆனா அப்போ புனிதப் பல் அப்படியே ஜிவ்வுன்னு வானத்துல பறந்து ஒளிவீசுச்சாம். ஒடனே பரவசமைஞ்ச பாண்டியன் மனம் மாறி புத்தரோட பல்லை வணங்கினானாம். இதுதான் பாண்டியனை செண்டால அடிச்ச கதை. சோழர்கள் எங்கள்ளாம் வர்ராங்களோ… ”அதெல்லாம் தீ வைக்குறது. விகாரை இடிக்கிறது. புத்த பிக்குகளைத் துன்புறுத்துறது” மாதிரியான ஓவியங்கள்தான்.

அருங்காட்சியகத்தோட மேல் பகுதிக்குப் போனேன். பழைய பொருட்களையெல்லாம் வெச்சிருந்தாங்க. அதுல ஒரு மாடில இருந்து பாத்தா தங்கத்தாமரை விதானம் நல்லா தெரியும். ஆனா அந்த ஜன்னல தொறக்கக்கூடாது. அந்நேரம் சில வெள்ளைக்கார டூரிஸ்ட்டுகள் வந்திருந்தாங்க. அங்க இருந்தவன் அவங்களுக்கு கைடு மாதிரி உள்ள எல்லாம் சுத்திக் காமிச்சு (காசு வாங்கீட்டுதான்) அந்தக் குறிப்பிட்ட ஜன்னலயும் தொறந்து காமிச்சான். அவங்க ஃபோட்டோ எடுத்ததும் படக்குன்னு மூடிட்டான். காசேதான் கடவுளடான்னு எம்.எஸ்.வி என்னைக்கோ பாடீட்டாரு. இதெல்லாம் எந்த மூலைக்கு!

116149_Pradeep Nilanga Dala Nilameஇன்னைக்கு இந்தக் கோயில் ஒரு அதிகார மையம் மாதிரியே செயல்படுதுன்னு சொன்னாத் தப்பில்லை. இந்தக் கோயில் நிர்வாகம் பண்றவருக்கு (அறங்காவலர்) தியவதன நிலமே(Diyawadana Nilame)ன்னு பேரு. இந்தப் பதவியோட காலகட்டம் பத்து ஆண்டுகள். ஒருத்தர் ரெண்டு முறை பதவியில் இருக்கலாம். இதுவொரு நியமனப் பதவி. அப்போ அதுக்குப் பின்னாடி எவ்வளவு அரசியல் இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க. குறிப்பிட்ட சில மடங்களின் புத்த குருமார்கள்கள் இந்தப் பதவி யாருக்குப் போகனும்னு முடிவு செய்றாங்க. இப்போ இருக்கும் தியவதன நிலமே 2005ல் பதவிக்கு வந்திருக்காரு. முதல் பதவிக்காலம் முடிஞ்சு ரெண்டாம் முறையும் பதவிக்கு வந்திருக்காரு. இவருடைய அப்பா மாலத்தீவுக்கான இலங்கைத் தூதரா இருக்காராம். அரசியலோட பிண்ணிப் பிணைஞ்சிருக்கு இந்தப் பதவி. இவங்களோட உடையமைப்பு இந்தியாவில் எங்கயுமே பாக்காதது மாதிரியான உடையமைப்பு. இது எங்கருந்து வந்திருக்கும்னு இன்னும் யோசிக்கிறேன். ஆனா தெரியல.

இலங்கை மக்களும் கோயில்கள்ள விளக்கேத்தி வைக்கிறாங்க. அதுக்குன்னு தனியிடம் ஒதுக்கியிருக்காங்க. அதையெல்லாம் பாத்துட்டு அப்படியே நடந்து வந்தேன். அங்க ஒரு எடத்துல தலதா மாளிகாவாவோட வரைபடம் வெச்சிருந்தாங்க. அத அப்படியே மேயும் போதுதான் பத்தினி தேவாலயாங்குற பேர் கண்ணுல பட்டுச்சு. கயவாகு காலத்துல இலங்கைக்கு பத்தினி தெய்வம் கண்ணகியோட வழிபாடு வந்துருச்சுன்னு தெரியும். கண்ணகி கோயில் ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சதும் போகனும்னு ஆசை. தோராயமா மேப் பாத்துட்டு அந்தப் பக்கமாப் போனேன். ஆனா என்னால கண்டுபிடிக்க முடியல. எதோ ரெண்டு கோயில் இருந்தது. எனக்கென்னவோ அது ஆம்பளை சாமி மாதிரி தெரிஞ்சது. அவங்க சாமி கும்பிட்டவங்க கிட்ட என்ன சாமின்னு கேட்டேன். அவங்களும் கொஞ்சம் யோசிச்சிட்டு பக்கத்துல யார் கிட்டயோ கேட்டு “நாதா”ன்னு பேர் சொன்னாங்க. நமக்குக் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நெனச்சுக்கிட்டேன்.

வெளிய வந்ததும் ஒரு டீ குடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. அங்க Cafe 7ன்னு ஒரு கடை கண்ல பட்டுச்சு. அதவிட முக்கியமா Free Wifi-னு போட்டிருந்தது கண்ல பட்டது.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கவும்.

அன்புடன்,
ஜிரா

சில படங்கள் பார்வைக்கு…

16996129_995377160595664_1669397412456493978_n

16996406_995377267262320_3582035770090577148_n

17103578_995376877262359_7424544847124491842_n

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , | 10 Comments

10. கண்டிக்கு வந்த வண்டி

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

கிண்டிக்கு டிக்கெட் கேக்க இதென்ன கோட்டூர்புரத்துல தாம்பரம் போற 21ஜி பஸ்சா? நான் கிண்டின்னு சொன்னதும் அந்தப் பையன் ஒன்னும் புரியாம என்னப் பாத்தான். இந்த வாட்டி கண்டின்னு சரியா கேட்டு டிக்கெட் வாங்கினேன். ஒரு ஊர் பேர் கூட ஒழுங்காச் சொல்லத் தெரியாம ஊர் சுத்த வந்துட்டான்னு என்னப் பத்தி நெனச்சாலும் நெனச்சிருப்பான். இதெல்லாம் நமக்குத் தூசு. எவ்வளவு பாத்திருப்போம்.
IMG_8996
சிங்களர்களுக்கும் நம்மள மாதிரி மந்திர தந்திர யந்திரங்கள்ள நம்பிக்கை உண்டு போல. பஸ்ல டிரைவர் பக்கத்துல “என்னைப் பார் யோகம் வரும்” மாதிரி அதிர்ஷ்ட எந்திரம், கைல இருந்து காசு கொட்டுற மகாலட்சுமி படம்னு வெச்சிருந்ததப் பாத்தேன். அது சரி. காசு வேண்டாம்னு எந்தக் கழுதை சொல்லும்?

பஸ் இப்போ மலைல இருந்து கீழ எறங்குது. இந்தப் பக்கமும் நிறைய தேயிலைத் தோட்டங்கள். நிறைய பேர் தேயிலைத் தோட்டங்களுக்கும் தேயிலை ஃபேக்டரிகளுக்கும் டூர் போறாங்க. Adam’s peak, world’s end போகதது எனக்கு வருத்தமாயில்ல. ஆனா தேயிலை ஃபேக்டரி போயிருக்கலாமோன்னு தோணிட்டே இருந்தது. சரி. அடுத்தவாட்டி பாத்துக்கலாம். அதே மாதிரி ரோட்டோறமா நிறைய காய்கறிக் கடைகள். நுவரேலியாவுல காய்கறிகள் ரொம்ப பிரபலமாம். உள்ளூர் மக்கள் நுவரேலியா வந்தா அங்கருந்து காய்கறிகள் வாங்காமப் போக மாட்டாங்களாம். குறிப்பா உருளைக்கிழங்கும் கேரட்டும். அங்க விளையுற உருளைக்கிழங்குக்கும் மத்த ஊர் உருளைக் கிழங்குக்கும் வேறுபாடு இருக்காம். நானும் கடைகள்ள பாத்தேன். வேறுபாடு இருந்துச்சு. அதுவும் என் கண்ணுக்கே தெரிஞ்சது. நுவரேலியா கடைகள்ள உருளைக்கிழங்கும் கேரட்டும் கழுவாம மண்ணு ஒட்டியிருந்தது. மத்த ஊர்ல கழுவியிருந்தது. என்னோட ஞானக்கண்ணுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.

IMG_9028வழில ஒரு எடத்துல பஸ் நின்னது. அங்க அம்மன் கோயில் ஒன்னு. பட்டுன்னு கண்டக்டர் பையன் எறங்கி உண்டியல்ல காசு போட்டு கும்புட்டுட்டு வந்தான். இதே மாதிரி மலேசியா பெனாங்குல புது வண்டிகளுக்கு முனீஸ்வரன் கோயில்லதான் பூஜை போடுவோம்னு சைனாக்கார டிரைவர் சொன்னது நினைவுக்கு வந்துச்சு. எல்லாம் சரிதான். பிரச்சனைன்னு வந்தாத்தான்…. சரி. நிறுத்திக்கிறேன்.

நல்லா வேகமா வந்துட்டான். 12 மணிக்கெல்லாம் கண்டி பஸ்டாண்டு வந்துருச்சு. வழில குறிச்சு வெச்சிருந்த ஊரெல்லாம் ஒவ்வொன்னா வந்தது. ஆனா நான் குறிச்சு வெச்ச பேர்களுக்கும் உண்மையான பேர்களுக்கும் லேசா வித்தியாசம் இருந்தது. (நாசமா நீ போனியா / நேசமணி பொன்னைய்யா). ஒரேயொரு ஊர் மட்டும் வரல. நுவர நுவர நுவரன்னு மார்கழி கச்சேரி மாதிரி ராகம் போட்ட ஊர் மட்டும் வரல. கூகிள் மேப்ல போய் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். (இத மனசுல வெச்சுக்கோங்க. பின்னாடி வரும்.) வழில கவனிச்ச சில தகவல்கள். ரம்போடங்குற ஊர்ல ஒரு குகைப்பாதை(tunnel) இருக்கு. பெரட்டாசின்னு ஒரு ஊர் இருக்கு. அதுக்கும் புரட்டாசிக்கும் தொடர்பிருக்குமான்னு தெரியல.

பஸ்டாண்டுல எறங்குனதுமே நகைக்கடை தொறக்க வந்த சினிமா நடிகையைக் கண்ட ரசிகர்கள் மாதிரி ஆட்டோக்காரங்க பின்னாடியே வந்தாங்க. அதுல ஒரு ஆட்டோக்காரன், பாக்க சின்னப் பையன் மாதிரி இருந்தான், “யூ பாகிஸ்தான்?”னு கேட்டான். நுவரேலியால மலை உச்சீலயே இண்டியான்னு கேட்டாங்க. பாதி மலை எறங்குனதும் பாகிஸ்தானி ஆயிட்டேன் போல. “என்ன பாகிஸ்தானியான்னு கேட்டியே, பாகிஸ்தான்ல இருந்து யாரும் வந்தா சவுதி அரேபியாவான்னு கேப்பியா?”ன்னு மனசுக்குள்ள மட்டும் நெனச்சுக்கிட்டு  YMCA போகனும்னு சொன்னேன். 200ரூபா கேட்டேன். அது அதிகம் தான். ஆனா வெயில் நேரத்துல பேரம் பேச விரும்பல. சரின்னு ஆட்டோல ஏறி உக்காந்தேன். உள்ளூர்க்காரங்கன்னா 70/80 ரூபாய்க்குப் போற தூரம் போல. என்ன இருந்தாலும் நான் ஃபாரினர் இல்லையா. அதான் 200ரூபாய்.
17190761_995375970595783_5835712381990179310_n
ஒரு நோட்டைக் கொடுத்து முன்னாடி வந்த கஸ்டமர்கள் அவனுக்கு பாராட்டுப் பத்திரம் எழுதுனதைச் சொன்னான். நானும் சம்பிரதாயத்துக்கு நாலு பக்கம் பொரட்டிப் பாத்தேன். அவனே ஊர் சுத்திக் காட்டுறதாவும் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவும்னு சொன்னான். ஃபோன் நம்பரும் சொன்னான். எதுக்கும் இருக்கட்டும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன். YMCAல எறங்குறப்போ ”200 பத்தாது. கூட அம்பரு ரூவா வேணும். ஒன் வே”ன்னு சொல்லி பேசுனான். என்னவோ எனக்கு ஒரு கோவம் வந்துருச்சு. “This is not fair”னு கோவமாச் சொன்னேன். “Ok. ok. no problem”னு 200ரூவா மட்டும் வாங்கீட்டுப் போயிட்டான்.

16996336_995375923929121_2377350356355240031_nYMCAல போய் மொதல்ல செக்கின் பண்ணேன். ரெண்டாவது மாடில ரூம். ஆனா லிஃப்ட் இல்ல. பெட்டியைத் தூக்கவும் ஆள் இல்ல. நானே என்னோட வீரதீரப் பராக்கிரமத்தால என்னோட பெட்டியைத் தூக்கீட்டு அதவிடக் கனமான என்னையும் தூக்கீட்டு மாடி ஏறுனேன். ஏசி கெடையாது. தேவையும் படல. ஒரு நாள் தூங்குறதுக்கு மட்டும் என் ஒராளுக்குப் போதும். ஒரு நாள் வாடகை இலங்கைப் பயணத்துல 2000ரூபா. பாதுகாப்பான எடமும் கூட. ஆனா உள்ள தண்ணி அடிக்கக்கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடு உண்டு.

குளிச்சிட்டு சாப்பிடப் போனேன். YMCAக்கு எதுக்கவே Dinemoreனு ஒரு கடை. அங்கதான் சாப்டேன். Continental junk food தான்.

ஊர்ல எங்கருந்து பாத்தாலும் ஒரு குன்று மேல புத்தர் உக்காந்திருக்குறது தெரியுது. நல்ல பெரிய சிலை. அத ரெண்டு போட்டோ எடுத்துக்கிட்டேன். மதியம் மொதல் வேலையா தளத மாளிகாவா-வுக்குப் போக முடிவு செஞ்சேன். அதாவது புத்தர் பல்லை புனிதமாக வணங்கும் எடம். அந்தப் பல்ல நாம பாக்க முடியாது. மூடிவெச்சிருப்பாங்க. பெரஹராங்குற ஊர்வலத்துக்கு மட்டும் வெளிய எடுக்குறாங்க. புத்தர் பல்லோட ஃபோட்டோ எதுவும் கிடைக்குதான்னு மொதல்லயே கூகிள்ள தேடிப் பாத்தேன். சில படங்கள் கிடைச்சது. புத்தரோட பல்லுன்னு குறிப்பிடப்படுறது என் விரலளவுக்கு இருந்தது. சரி. எல்லாம் நம்பிக்கைதானே. அது இல்லைன்னா ஒலகமே இயங்காமப் போயிருமே. பல் மருத்துவர்களோட கருத்து என்னங்குற ஒங்க ஊகத்துக்கு விட்டுட்டு இலங்கை நூல்கள் என்ன சொல்லுதுன்னு சுருக்கமாப் பாப்போம்.

The Tooth of Buddha_ Kandy 1920 - Ceylonபுத்தருடைய புனித உடலை குஷிநகரில்(உத்திரப்பிரதேசம், இந்தியா) சந்தனக்கட்டைகளை அடுக்கி இறுதிக்கடன்களை செய்திருக்கிறார்கள். அப்போது புத்தருடைய இடது கோரைப்பல்லை கெமா என்னும் சீடர் எடுத்து பத்திரப்படுத்தியிருக்கிறார். பிறகு அது தந்தபுரி என்னும் ஊரில் அரசர்களின் பாதுகாப்புப் பொருளாக இருந்திருக்கிறது. தந்தபுரி என்ற ஊர் ஒடிஷாவில் இன்று பூரி என்று அழைக்கப்படுவதாகக் கருதுகிறார்கள். அந்தப் புனிதப் பல்லை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் நாட்டை ஆளும் தகுதியும் புனிதமும் உடையவர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான்காம் நூற்றாண்டில், கலிங்கநாடு ஒரு பெரும் போரைச் சந்தித்திருக்கிறது. அது புனிதப்பல்லை கைப்பற்றுவதற்காக நிகழ்ந்த போரென்று நான் சொல்ல வேண்டியதில்லை.

Princess_Hemamali_&_Prince_Danthaஅப்போது கலிங்கத்தை ஆண்ட குகசிவா என்ற அரசன் புனிதப்பல்லை தன்னுடைய மகள் ஹேமமாலியிடம் கொடுத்து இலங்கைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லச் சொல்கிறார். ஹேமமாலியும் அவளது கணவன் தந்தாவும் பிராமணர்களைப் போல மாறுவேடம் அணிந்து இரகசியமாகப் புறப்படுகிறார்கள். தன்னுடைய தலைமுடிக்குள் புனிதப்பல்லை பாதுகாப்பாக வைத்திருக்கிறாள் ஹேமமாலி. அப்போது இலங்கையின் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஸ்ரீமேகவண்ண என்ற மன்னன் ஆண்டு வந்திருக்கிறான். அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு புனிதப்பல்லை பெற்றுக் கொண்டு அதற்கு ஒரு கோயிலும் எழுப்பி பாதுகாக்கிறான்.

படையெடுப்புகளால் அனுராதபுரம் அழிக்கப்பட்ட பிறகு, புத்தரின் புனிதப் பல்லானது பொலனுருவ, தம்பதெனியா, கம்போல, கோட்டே என்று ஒவ்வொரு தலைநகரமாக பாதுகாக்கப்பட்டு கடைசியில் இன்று கண்டியில் இருக்கிறது. இந்தப் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்கள்தான் சிங்கள அரசர் என்ற நிலை வந்ததாலோ என்னவோ, தங்களது அரண்மனைக்கு அருகிலேயே புனிதப் பல் கோயிலை நிறுவியிருக்கிறார்கள்.

அந்தக் கோயிலுக்குதான் மொதல்ல போகனும்னு நெனச்சேன். YMCAல இருந்து நடக்குற தூரம். ஆனா முருகக் கடவுளோட எண்ணம் வேற மாதிரி இருந்தது.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கவும்.

அன்புடன்,
ஜிரா

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , , | 3 Comments

9. டாட்டா நுவரேலியா

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

நுவலேரியால இருந்து எங்க போறீங்கன்னு சிவக்குமார் கேட்டாரு. கண்டிக்குப் போகனும்னு சொன்னேன். நுவரேலியாவுல இருந்து கண்டிக்கு ரயில்லயும் போகலாம். போற வழியெல்லாம் அவ்வளவு அழகாயிருக்குமாம். மேட்டுப்பாளையத்துல இருந்து ஊட்டிக்கு போற ரயில்பாதை மாதிரி. ஆனா இன்னும் அழகா இருக்குமாம். என்னதான் சொல்லுங்க… மலைப்பாதைல பஸ்ல வேடிக்கை பாத்துக்கிட்டே போறதை விட ரயில்ல வேடிக்கை பாக்குறது இனிமையான அனுபவம் தான். இந்த ரயிலைப் பத்தி எழுத்தாளர் ரிஷான் சொல்லியிருந்ததால அதுல போக விரும்புறதா சிவக்குமார் கிட்ட சொன்னேன்.
16864237_988849387915108_3802387135262337988_n
நுவரேலியா டவுன்ல இரயில்வே ஸ்டேஷன் கிடையாது. பக்கத்துல நனுஓயா-ங்குற ஊர்ல இருக்கு. ரொம்ப தூரமெல்லாம் இல்ல. ஆட்டோ பஸ் எல்லாம் போற தூரம் தான். நேரா அங்கயே போய் டிக்கெட் வாங்கிறலாம்னு சிவக்குமார் சொன்னாரு. மொதல்ல நுவரேலியா பஸ். அப்புறம் அங்கருந்து நனுஓயா பஸ்.

போற வழியில் தேயிலைத் தோட்டங்களைப் பாக்கலாம். மலையகத் தமிழர்கள் தான் அங்க பெரும்பாலும் வேலை செய்றது. இலங்கைல இருந்து நாம எந்த டீ வாங்கினாலும் அதுல நம்ம தமிழ் மக்களோட உழைப்பு இருக்கு. சில இடங்கள்ள மலை ரொம்பவும் சரிவா இருந்துச்சு. இது எப்படி ஏறி எறங்கி தேயிலை பறிக்கிறாங்களோன்னு ஆச்சரியமா இருந்தது. எல்லாம் தொடர்ந்து பறிக்கிற பழக்கந்தான்னு சொன்னாரு எழுத்தாளர் சிவக்குமார்.
16864935_988849827915064_4479142156823853404_n
வெள்ளைக்காரனைப் பத்திதான் நமக்குத் தெரியுமே. எங்க எதைக் கண்டாலும் அதை எப்படி தன்னோட சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கலாம்னு யோசிக்கிற ஆளாச்சே. இலங்கைல மலைகள் நிறைய இருக்கு. இந்தியாவுல மக்கள் கூட்டம் நிறைய இருக்கு. ரெண்டு எடத்துலயும் ஆட்சி அதிகாரமோ பிரிட்டிஷ்காரனுக்கு நிறைய இருக்கு. இங்கருந்து அங்க போகவும் வரவும் கப்பலும் நிறைய இருக்கு. சும்மாயிருப்பானா? காப்பித்தோட்டம் போட தமிழ்நாட்டுல இருந்து மக்களை அள்ளிக்கிட்டுப் போனான். அதுல ஒரு பகுதி மக்கள் அப்போ தெலுங்கு மலையாளம் பேசுற மக்களாவும் இருந்திருக்காங்க. ஆனா இப்ப எல்லாரும் ஒன்னாக் கலந்து தமிழர்கள்தான். அவ்வளவுதான் அவங்களுக்கும் தெரியும்.

620b802fd7678120aec63e429f802407காப்பித்தோட்டம் மொதல்ல போட்டாலும் ஒரு கட்டத்துல சீக்குகள் நிறைய வந்து காப்பிச் செடியெல்லாம் அழிஞ்சு போச்சாம். அப்பதான் தேயிலைத் தோட்டம் போட்டிருக்கான் வெள்ளைக்காரன். அன்னைக்கு அவன் தொடக்கி வெச்சது இன்னைக்கு வரைக்கும் இலங்கைக்கு பொருளாதார முதுகெலும்பா இருக்கு. ஆனால் அந்தத் தோட்டத் தொழிலாளர்களோட நிலமை?! அதே மலை. அதே சரிவு. அதே தேயிலை. ஆனா அடுத்த தலைமுறை படிச்சு மத்த வேலைகளுக்கு போகத் தொடங்கிட்டாங்க. இவங்களைப் பத்தி நிறைய சொல்லலாம். ஆனா இப்போ வேண்டாம்.

தேயிலைத் தோட்டங்களையும் அங்க வேலை செய்ற மக்கள் வசிக்கும் லயம்(சின்ன வரிசை வீடுகள்) வீடுகளையும் பாத்துக்கிட்டே நனுஓயா வந்து சேந்தோம். மதிய டிரெயின் கண்டிக்கு பொறப்பட வேண்டிய நேரம். ஸ்டேஷன்ல நல்ல கூட்டம். வெளிநாட்டு மக்கள் நிறையப் பேர். நேரா கவுண்ட்டருக்குப் போய் அடுத்த நாள் காலை டிரெயினுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்னு கேட்டேன். அவர் சொன்ன பதில் ஒன்னும் புரியல. என்னோட அரைகுறை ஆங்கில அறிவை மூளைக்குள்ள தீவிரமா ஆராயவிட்டு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டேன்.

ஸ்டேஷன்ல கரண்ட் இல்லையாம். அதுனால டிக்கெட் புக் பண்ண முடியாதாம். எப்ப கரண்ட் வரும்னு தெரியாதாம். சுத்தம்.

வேற எதாவது வழில டிக்கெட் புக் பண்ண முடியுமான்னு கேட்டேன். “Come morning. Buy ticket.”னு பதில் வந்தது. டிரெயினே காலைலதான். காலைல வந்து எடுத்தா unreservationலதான் எடுக்கனும். டிக்கெட் இருக்கா இல்லையான்னு கூட அவரால பாத்துச் சொல்ல முடியாதாம். அதுக்கு மேல அவர் கிட்ட இலக்கியம் பேச விருப்பமில்லை.

அடுத்த நாள் திங்கட்கிழமை. திங்கக்கிழமை காலைல டிரெயின்னா எவ்வளவு கூட்டம் இருக்கும்னு என்னால நெனச்சுப்பாக்க முடிஞ்சது. ரஸ்க் சாப்புடுற மாதிரி ரிஸ்க் எடுக்கலாமான்னு யோசிச்சுப் பாத்தேன். கூட்டம் எக்கச்சக்கமா இருந்து நெரிசல்ல மாட்டுன ரஸ்க் ஆயிருக்கூடாதுன்னு, கண்டிக்கு ரயில்ல போற ஆசைய தேயிலைத் தோட்டத்துலயே உரமாப் போட்டுட்டேன்.

lipton-bandara-eliya-tea-estate-in-ceylonபிறகு சாப்பிடலாம்னு நுவரேலியா வந்தோம். சிவக்குமாரும் ரொஷானும் ஸ்கூல் நேரத்துக்கு ஏத்தமாதிரி சாப்டு பழகிட்டாங்க. கிட்டத்தட்ட brunch timeல அவங்க கொஞ்சம் சாப்டுறதால, மதியச் சாப்பாடுங்குறது கிட்டத்தட்ட 4 அல்லது 5 மணிக்குதான். ஆனாலும் எங்கூட சாப்பிட வந்தாங்க. சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். பிறகு அவங்கள பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்பீட்டு நான் ஆட்டோ பிடிச்சு ஹோட்டலுக்கு வந்தேன். இராத்திரி சாப்புடுறதுக்கு முதநாள் மாதிரியே வெஜிடபிள் பன்னும் flavoured yogurtம் வாங்கிக்கிட்டேன். அடுத்த நாள் காலைல எட்டு மணிக்கு செக்கவுட் பண்ணப் போறதா சனாகா கிட்ட படுக்கப் போறதுக்கு முன்னாடியே ஞாபகப்படுத்தினேன். பஸ்டாண்டுக்குப் போக ஆட்டோவும் தேவைன்னு சொன்னேன். அதெல்லாம் பாத்துக்கலாம்னு சொன்னாரு சனகா.

அடுத்த நாள் கண்டில தங்குறதுக்கு YMCAல பேசி வெச்சிருந்தாரு எழுத்தாளர் ரிஷான். அங்கிருந்து போக வேண்டிய எடங்கள் எல்லாமே நடக்குற தூரம். சாப்பாட்டுக் கடைகளும் பக்கத்துல இருக்கு. அதுனால அதுதான் நல்லதுன்னு சொன்னாரு. ஊர்க்காரங்க சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான. நானும் நல்லா தூங்கி எந்திருச்சு அந்தக் குளிர்லயும் குளிச்சு (வெந்நீர்லதான்) முடிச்சு சனகா போட்டுக் கொடுத்த டீயைக் குடிச்சேன். சமிந்தவே அவரோட வண்டில என்ன ஏத்திக்கிட்டுப் போய் பஸ்டாண்டுல எறக்கிவிட்டாரு.

போறப்போ, “ஏன் நுவரேலியால எல்லா எடமும் பாக்கல?”ன்னு கேட்டாரு. Adam’s peak, World’s end மாதிரியான அருமையான இடங்கள் இருக்கு. அங்கல்லாம் போகனும்னா நிறைய நடக்கனும். மலையேறனும். Trekking போறவங்களுக்கு அருமையான எடம். விடியறதுக்கு முன்னாடியே போனா அருமையா இருக்கும். முத நாள் ஹோட்டலுக்கு ஒரு சைனாக்காரங்க கூட்டம் வந்திருந்தாங்க. அவங்கள்ளாம் நான் பொறப்படுற அன்னைக்கு காலைல World’s end பாக்குறதுக்காக 5 மணிக்கு முன்னாடி எந்திரிச்சு குளிக்காமக் கொள்ளாமப் போயிருப்பதையும் சமிந்த சொன்னாரு.

“அது பாருங்க சமிந்த… நான் இயல்பாவே சோம்பேறி. அதான் மலையேறுவது கடல்ல நீந்துறது காட்டுல ஓடுறது மாதிரியான வேலையெல்லாம் செய்றதில்லன்னு சொன்னேன். உக்காந்துக்கிட்டே மலையேற முடியும்னா சொல்லுங்க, ஒடனே போயிட்டு வர்ரேன்”னு சொன்னேன். இப்பிடியும் ஒருத்தனாங்குற மாதிரி சிரிச்சாரு. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். அது ஆணவச் சிரிப்புன்னு அன்னைக்கே எம்.எஸ்.வி பாட்டு போட்டுட்டாரு. ஒலகம் சிரிக்கும்னு பாத்தா சோம்பேறியா இருக்கும் சுகம் கிடைக்குமா?

adamspeak1Adam’s peakக்குக்கு எல்லா மதமும் உரிமை கொண்டாடுது. அந்த மலையோட உச்சியில ஒரு பாதச்சுவடு இருக்கு. அது சிவனோட பாதம்னு ஒருத்தரும், புத்தரோட பாதம்னு ஒருத்தரும், குரான் சொல்லும் ஆதம் (முதல் மனிதன்) பாதம்னு ஒருத்தரும், ஆதாம்/புனித தாமஸ் பாதம்னு ஒருத்தரும் உரிமை கொண்டாடிட்டு இருக்காங்க. இன்னைக்கு வரைக்கும் தீர்வு ஓயல. இராவணன் இலங்கைய ஆட்சி செஞ்சப்போ அவனோட தலைநகர் இதுதான்னு ஒரு நம்பிக்கை. இங்கருது பாத்தா இராவணனுக்கு சீதா எலியாவுல சீதை உக்காந்திருந்தது தெரிஞ்சதாம். ரொம்ப அழகான மலை. ஆனா மலைல படிலதான் ஏறனும். அதான் சீச்சீ இந்த மலை புளிக்கும்னு நான் மொதல்லயே முடிவு எடுத்துட்டேன்.

பேச்சு வாக்குல இன்னொரு தகவலும் தெரிஞ்சிக்கிட்டேன். சமிந்தவுக்கு உள்ளூர்க்காரங்களுக்கு ரூம் கொடுக்க தயக்கங்கள் இருக்கு. குறிப்பா கோடை காலத்துல இலங்கை மக்கள் நிறைய வருவாங்களாம். ஆனா உள்ளூர்க்காரங்க பொதுவா தண்ணி அடிக்கதான் வர்ராங்கங்குற மாதிரி அவர் வருத்தப்பட்டு சொன்னாரு. நம்மூர்லயும் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு ஏலகிரின்னு மக்கள் தண்ணி டிரிப் அடிக்கிறாங்களே. அப்படித்தான் அங்கயும் போல.

பஸ்டாண்ட்டு பக்கத்துல ஹெல போஜூன் கிட்ட எறங்கி சுடச்சுட இட்லி சாப்டு தெம்பா கண்டி பஸ் பிடிக்கப் போனேன். நல்லவேளையா ஏசி மினி பஸ் இருந்தது. அதுக்கு முன்னாடி ஒரு பையன் நின்னுக்கிட்டு ”ரம்போட புஸ்ஸெல்லவ கம்போல பெரதினிய நுவர நுவர நுவர”ன்னு ராகம் போட்டுக்கிட்டிருந்தான். எனக்கு “குறுக்குச்சால எப்போதென்றான் எட்டயாரம் கோயில்பட்டி சாத்தூர் விருதுநகர்”னு காதுக்குள்ள கேட்டது. பஸ்ல கண்டின்னு தமிழ்லயும் இங்கிலீஷ்லயும் எழுதியிருந்ததைப் பாத்துட்டு அந்தப் பையன் கிட்ட “கண்டி”ன்னு சொன்னேன். அவனும் ஆமான்னு தலைய ஆட்டுனான்.

நானும் ஏறி கதவு பக்கத்துல கால நீட்டுற மாதிரி நல்ல எடமாப் பாத்து உக்காந்தேன். அந்தப் பையன் ராகம் போட்டுச் சொல்ற ஊர் பேரெல்லாம் முடிஞ்ச வரைக்கும் மனசுல பதிய வைக்க முயற்சி பண்ணேன். என் காதுக்குள்ள விழுந்த மாதிரி மொபைல்ல எழுதி வெச்சுக்கிட்டேன். எதுக்கா? போறப்போ அந்த ஊரெல்லாம் வருதான்னு பாக்கதான். பொழுது போகனும்ல. கொஞ்ச நேரத்துல பஸ் நிறைஞ்சிருச்சு. சரியா 9.30க்கு பஸ் பொறப்பட்டுச்சு.

ராகம் போட்டு ஊர் பேர் பாடுன பையன் தான் கண்டெக்டர். எங்கிட்ட வந்து டிக்கட்டுன்னு நின்னான்.

அந்த நேரம் பாத்து சரஸ்வதி தேவிக்கு என்னோட விளையாடனும்னு ஆசை வந்துருச்சு போல. வாயத் தொறந்து டிக்கெட் கேக்கும் போது என்னோட நாக்கை கலைமகள் லேசா பெறட்டி விட்டதால “கிண்டி”ன்னு சொன்னேன்.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கவும்.

அன்புடன்,
ஜிரா

 

Posted in அனுபவங்கள், இலங்கை, நுவரேலியா, பயணம் | Tagged , , , | 5 Comments

8. சீதையின் பாதையில்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

இலங்கை அரசின் விவசாயத்துறை “ஹெல போஜுன்”ன்னு ஒரு அமைப்பை உருவாக்கி இலங்கையோட பாரம்பரிய உணவுகளைப் பிரபலமாக்குது. குறிப்பா சுற்றுலாப் பயணிகள் வர்ர ஊர்கள்ள இந்த சாப்பாட்டுக்கடைகளை அமைச்சிருக்காங்க. பாரம்பரிய உணவுகள்னு சொன்னா சிங்கள உணவுகளோடு தமிழ் உணவுகளும் அடக்கம். தரமான உணவு. குறைந்த விலை. நல்ல சுவை. எல்லாத்துக்கும் மேல சுடச்சுடக் கிடைக்குது. இதை பெண்கள்தான் நடத்துறாங்க. இது முழுக்க முழுக்க மரக்கறி உணவுவகைகள் மட்டுமே கிடைக்கும் இடம். அதுனால அசைவம் சாப்பிடாதவங்களுக்கும் இது ஒரு அருமையான எடம். இந்த எடத்த அறிமுகப் படுத்திய எழுத்தாளர் ரிஷானுக்கு நன்றி. நன்றி.
16831154_988847424581971_3168331233207124250_n
இந்தியாவை விட்டுப் பொறப்பட்டு நாலு நாள்தான் ஆச்சு. அதுக்குள்ள ஊர்ச்சாப்பாடுக்கு ஏக்கம் வந்துருச்சு. அதுனால காணாததைக் கண்ட மாதிரி தோசையும் உழுந்தவடையும் வாங்கினேன். நான் இன்னும் கொஞ்சம் வேணும்னு தேங்காச் சட்டினி கேட்டு வாங்குனதப் பாத்து, தோசை வாங்கிட்டு இருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி, thumbs up காமிச்சு நல்லாருக்கும்னு சொன்னாங்க. இதையெல்லாம் தினம் திங்குறவன்னு அவங்களுக்குச் சொல்லி அவங்க சந்தோஷத்தைக் கெடுக்க விருப்பமில்லாம புன்னகைச்சுட்டு வந்தேன்.
16832294_988847257915321_6919117568756467239_n
பிஞ்சுப் பலா கட்லட், வாழைப்பூ கட்லட், கொண்டைப் பலகாரம் (பணியாரத்துக்கு கொண்டை வெச்ச மாதிரி), வண்டு (வண்டு மாதிரி சின்னதா ஒரு தலை இருந்தது), கிரிபாத் (ரொம்பப் பிரபலமான பாற்சோறு), அவிச்ச சுண்டல், கேழ்வரகு கேக்னு இன்னும் நிறைய வகைகள் இருந்தது. வில்வம் பூ பானம்னு ஒன்னு இருந்தது. பிறகொன்னு கீரையைத் தண்ணி சேத்து அரைச்ச மாதிரி பச்சையா இருந்தது. பேர் மறந்துருச்சு. நல்லாருக்கும்னு சிவக்குமாரும் ருஷானும் சொன்னதால அதையும் வாங்கிக் குடிச்சேன். நல்லாதான் இருந்தது. பச்சைக்கீரை வாடையோட வடிகஞ்சி கலந்த மாதிரியான சுவை. அடுத்த நாள் காலைலயும் ஹெல போஜுனுக்கே வரனும்னு முடிவு பண்ணீட்டேன். இடத்தைச் சொல்லிக் கொடுத்த ரிஷானுக்கு நன்றி.

சாப்பிட்டதும் மூனு பேரும் பஸ் பிடிக்கப் போனோம். சீதா எலியாங்குற எடத்துக்குப் போறோம். எந்த பஸ் என்னன்னு யார் கண்டா… விவரம் தெரிஞ்சவங்க கூட இருக்கும் போது பின்னாடியே போனாப் பத்தாதா? ஆனாலும் சொல்றேன் குறிச்சிக்கோங்க. ஹக்கல பூங்கா (Hakgala Botanical Garden) வழியாகப் போற எல்லா பஸ்சும் போகும். நுவரேலியா பஸ்டாண்டுல இருந்து அஞ்சே அஞ்சு கிலோமீட்டர் தான்.

16864655_988848931248487_1077014867640402391_nசீதா எலியா-ன்னு சிங்களத்தில் சொல்ற எடத்தை தமிழ் மக்கள் சீதையம்மன் கோயில்னு சொல்றாங்க. இங்கதான் சீதையை இராவணன் சிறை வெச்சிருந்ததா சொல்றாங்க. சீதையம்மன் கோயில்னு சொன்னாலும் இங்க சீதைக்குத் தனிக் கோயில் கிடையாது. இராம இலட்சுமனர்களோடதான் கோயில். அனுமாருக்கு தனியா கோயில் இருக்கு. இந்தக் கோயில் 2000ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கு. அதுக்கு முன்னாடி இங்க கோயில் எதுவும் இல்லாம இருந்திருக்கு. ஆனா இந்தக் கோயிலைக் கட்டினா சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கலாம்னு சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்குத் தோணியிருக்கு. ஆனா இங்கதான் கோயில் கட்டனுமான்னு ஏதோ சர்ச்சை வந்திருக்கும் போல.

16864222_988849027915144_1894834320435877075_nஅப்போ மத்திய இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் கோயில் அறங்காவலாரகவும் இருந்த வி.இராதாகிருஷ்ணன் சில ஆதாரங்களைக் காட்டி அனுமதி வாங்குறாரு. அசோகமரங்கள் நெருக்கமா இருப்பாதலயும் சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டதும் அவர் சொன்ன முதல் ஆதாரம். அடுத்து அங்க கண்டெடுக்கப்பட்ட சிலைகள்ள ஒன்னு சீதையின் சிலையாகத்தான் இருக்கனும்னு அவர் காட்டிய இரண்டாவது ஆதாரம். அதுனால அந்த எடத்துல ஏற்கனவே கோயில் இருந்து அழிஞ்சிருக்கனுங்கூறது அவரோட வாதம். இது ரொம்ப விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாச்சு. முன்னாடி கோயில் எதுவும் இருந்ததுக்கு திடமான ஆதாரமா இல்லையேன்னு பேச்சுகள் நடந்திருக்கு. பிறகு சிலபல தடைகளுக்குப் பிறகு 2000ம் ஆண்டு இந்தக் கோயிலைக் கட்டுறாங்க. ஒரு சில குடும்பங்கள் இதனால இடம்பெயர்ந்து போகவேண்டியிருந்ததுன்னு சொல்றாங்க. இது நான் கேள்விப்பட்ட வரலாறு.

நாங்க போன நேரம் கூட்டமில்லாம இருந்தது. அதுனால பொறுமையாகப் பாக்க முடிஞ்சது. கோயில் முழுக்க புதுசா பெயிண்ட் அடிச்சிருக்காங்க. யார் தேர்ந்தெடுத்தாங்கன்னு தெரியல… காவி நிறமும் பொன்னிறமும் கலந்து கோயிலுக்கு பெயிண்ட் அடிச்சிருக்காங்க. பழைய படங்கள்ள கோயில் நல்லா அழகா இருக்கு. அப்படியே விட்டிருந்திருக்கலாமோன்னு தோணுச்சு.

16830828_988848957915151_4069926968187622854_nஇங்க இருக்கும் மண் கருப்பா இருப்பது அனுமார் இலங்கையை எரிச்சதாலன்னு சொல்றாங்க. இங்க சில குழிகள் இருக்கு. சிலர் அதை சீதையோட காலடித்தடம்னு சொல்றாங்க. சிலர் அனுமாரோட காலடித்தடம்னு சொல்றாங்க. இங்க ஓடும் ஆற்றுத்தண்ணி இந்த எடத்துல மட்டும் சுவையில்லாம இருக்குதாம். சீதையால சபிக்கப்பட்டதால சுவையில்லாமப் போச்சாம். கொஞ்சம் தூரம் தள்ளிப் போய் குடிச்சாதான் ஆத்துத் தண்ணியில் சுவை தெரியுமாம். நான் குடிச்சுப் பாக்கல. அதுனால அது சரியா தப்பான்னு தெரியல. சமீபத்துல மே-18, 2016ல், கால்தடம்னு சொல்லப்படும் அடையாளங்களுக்குப் பக்கத்துல சீதையை அனுமார் சந்திச்சு கணையாழி கொடுக்குறது மாதிரி சிலை நிறுவியிருக்காங்க. அதை ஆர்ட் ஆப் லிவ்விங் ரவிஷங்கர் தொறந்து வெச்சிருக்காரு.

சீதா எலியாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஹக்கல தாவரவியல் பூங்கா. நுவரேலியா போனா கண்டிப்பாகப் போக வேண்டிய ஒரு எடம். நாங்க நடந்தே போனோம். நல்ல சாலை. அழகான மலைச்சரிவு. குளுமையான சூழல். நடக்கச் சுகமா இருந்தது. மக்கள் நிறைய வர்ரதால சாலையை விரிவுபடுத்தியிருக்காங்க. சாலையை விரிவுபடுத்துறதுல மண்சரிவுகளும் நிறைய ஏற்படுது. குறிப்பாக மழைக்காலங்கள்ள நிறைய மண்சரிவுகள் ஏற்பட்டு அங்கிட்டிருந்து இங்கும் இங்கிட்டிருந்து அங்கும் போக முடியாதபடி ஆயிருமாம். மண்சரிவு ஏற்பட்ட எடத்தை வழியில் பாத்தோம். ஆயிரம் தான் சொல்லுங்க. இயற்கைக்கு முன்னாடி மனிதன் தூசு. மனிதனுக்கான ஆப்பை இயற்கை உக்காந்து பொறுமையா செதுக்கிக்கிட்டிருக்குன்னு நான் உறுதியா நம்புறேன். என்னைக்கோ எப்பவோ…
16830699_988849184581795_1893144185640306669_n
இலங்கையின் இரண்டாவது பெரிய தாவரவியல் பூங்கா ஹக்கல பூங்கா. இது பிரிட்டிஷ்காரர்களால நிறுவப்பட்டு இன்னமும் அவர்களால பராமரிக்கப்படும் பூங்கா. என்ன செடி வைக்கிறது… என்ன மரம் நடுறது… என்ன வகையான பூக்களை வளக்குறதுன்னு இங்கிலாந்து அரச குடும்பம் தான் முடிவு செய்யுதாம். பணம் கொடுத்துப் பராமரிக்குதான். நடக்கத் தெம்பிருந்தா பொழுது போக்க அருமையான எடம். இதுக்குன்னே ஒரு நாள் ஒதுக்கிப் போனா ஒவ்வொன்னா பாத்து இரசிக்கலாம். இயற்கை பிடிக்கும், ஆனா ரொம்ப நடக்க முடியாதுன்னா… சுருக்கமா பாத்துட்டு திரும்பிறலாம். உள்ள நிறைய குரங்குகள் இருக்கு.
16832400_988849157915131_7909320781607089967_n
சிவக்குமாரும் ருஷானும் ஏற்கனவே நிறைய வாட்டி வந்த எடம் தான். ஆனா இந்த வாட்டி என் கூட வந்து மாட்டிக்கிட்டாங்க. சளசளன்னு பேசிப் பேசி அவங்கள பயமுறுத்தினேன். இனிமே இந்தியால இருந்து யாராவது வந்தா எவ்வளவு பயப்படனும்னு அவங்களுக்குப் புரிய வெச்சேன். இதெல்லாம் பெருமையா? கடமை. கடமை. அதுலயும் குறிப்பா தாவரவியல் பெயர்களுக்கு காரணத்தை அடிச்சு விட்டேன். நான் கதைக்கல. மாறா கதையளக்குறேன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நான் நல்லவனா மாறிட்டேன். 🙂

16831160_988849091248471_8906319833955347460_nகோடைகாலத்துல மலர்க்கண்காட்சியெல்லாம் நடக்குமாம். அப்போ மொத்தப் பூங்காவுமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரி இருக்குமாம். அதுக்கான ஏற்பாடுகளை இப்பவே தொடங்கிட்டாங்க. சின்னச் சின்ன செடிக்கெல்லாம் கூரை போட்டு அளவா வெயில் படுற மாதிரி வளக்குறாங்க. நாங்க போனது ஞாயிற்றுக் கிழமைங்குறதால பள்ளி/கல்லூரிகள்ள இருந்து நிறைய சுற்றுலா கூட்டீட்டு வந்திருந்தாங்க. பூங்காவே கலகலப்பாயிருந்தது.

நிறைய பசங்க தலைல ரெண்டு பக்கமும் ஒட்ட முடிய வெட்டிட்டு நடுமண்டைல ஒரு கொண்டை போட்டுக்கிறாங்க. இப்ப அங்க ரொம்பப் பிரபலமான முடியலங்காரமாம். அதுக்குப் பேரு மாத்தளை வெட்டாம். அந்த ஊர்ப் பசங்க கண்டுபிடிச்சது போல.

பூங்காவை முடிச்சிட்டு நேரா நுவரேலியா போற பஸ்சுல ஏறுனோம். சரியான பசி நேரம். அது எனக்கு மட்டுந்தான்னு அப்புறந்தான் தெரிஞ்சது.

தொடரும்…

அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Posted in அனுபவங்கள், நுவரேலியா, பயணம் | Tagged , , , , , | 11 Comments

7. ஏரிக்கரைப் பூங்காற்றே, போறவழி தென்கிழக்கோ

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

16730631_988846254582088_7415144359417402479_n.jpgஒரு டீ குடிக்கத்தான் ஆசப்பட்டு போனேன். அதுகூட பால் இல்லாத கருப்பு டீ. துளி கூட ஜீனியில்லாம. ஆனா பாருங்க… Tea Potதான் மெனுல இருந்தது. ஒத்தையாள் எவ்வளவுதான் குடிக்கிறது? கேளுங்கள் தரப்படும்னு ஏசுநாதரே சொல்லியிருக்காரேன்னு… “ஒரெயொரு கப் டீ கெடைக்குமா?”ன்னு கேட்டேன். என்னவோ யோசிச்சுப் பாத்துட்டு “கிடைக்கும்”னு சொன்னாரு அங்க இருந்தவரு. வாங்கி வகையாக் குடிச்சிட்டு அடுத்து ஏரிக்கரையோரமா போகலாம்னு முடிவு செஞ்சேன்.

விக்டோரியா பார்க்ல இருந்து நடக்குற தூரம் தான்னு சொல்வாங்க. யாழ்ப்பாணத்துல இருந்து கதிர்காமமே பாதையாத்திரை போறவங்களுக்கு நடக்குற தூரம் தான். அதெல்லாம் நமக்கெதுக்குன்னு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினேன். இருநூறு ரூபா கொடுத்த நினைவு. ஆட்டோ ஓட்டிய பையன் தமிழ்ப் பையன். என் மூஞ்சில எழுதி ஒட்டிருந்திருக்கும் போல. நல்லா தமிழ்ல கதைச்சிட்டு வந்தான். ஏரில எறக்கிவிடும் போது டிக்கெட் எடுக்குறப்போ தமிழ்ல கேளுங்கன்னு சொன்னான். ஏன்னா வெளிநாட்டுக்காரங்களுக்கு டிக்கிட் விலை கூட.
16807762_988846507915396_1562941859308290789_n
ஆனா டிக்கெட் கொடுக்குற எடத்துல இருக்குறவங்க ரொம்பவே கெட்டிக்காரங்க. நான் போய் நின்னதுமே என்னவோ கேட்டாங்க. எனக்குப் புரியல. “What”னு கேட்டேன். ”Two Hundred”னு சொல்லி வெளிநாட்டுக்காரங்களுக்கான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தாங்க. வர்ரவன் உள்ளூரா வெளியூரான்னு கண்டுபிடிக்க எதோ கேள்வியைக் கேக்குறது. அதுக்கு அவன் பதில் சொல்றதை வெச்சு சரியான டிக்கெட் கொடுக்குறதுன்னு அருமையான டெக்னாலஜி.

16681476_988846677915379_7881051752256724973_nஏரிக்கு Gregory Lakeனு பேரு. சர் வில்லியம் கிரிகொரி-ங்குற பிரிட்டிஷ் கவர்னர் அந்த ஏரியை உருவாக்கியதால அந்தப் பேரு. டிக்கெட்ட வாங்கீட்டு உள்ள நுழையுறப்போதான் நான் செஞ்ச தப்பு எனக்குப் புரிஞ்சது. ஹோட்டலை விட்டுப் பொறப்படும் போது ஜாக்கெட்டை எடுக்காம வந்துட்டேன். ஏரிக்குள்ள வந்தபிறகு திரும்பப் போயா எடுத்துட்டு வரமுடியும்? சரி. பாக்குற வரைக்கும் பாப்போம்னு தொடர்ந்து போனேன். ரொம்ப அழகா பராமரிக்கிறாங்க.

அவ்வளவு தண்ணியைப் பாத்ததும் மனசு அப்படியே அமைதியாயிருச்சு. நம்ம ஒடம்புல 70சதவீதம் தண்ணிதான் இருக்காம். அதுனாலதான் தண்ணி இருக்குற எடத்துல பாத்தா நமக்கு ஒரு சந்தோஷம் வருதாம். அதுலயும் நம்மூர் மக்களுக்கு பிரிந்தவர் கூடினால் மாதிரியான சந்தோஷம் வரும் போல.

மக்களும் ஒரே கொண்டாட்ட கோலகலமா இருக்காங்க. படகு சவாரி, water scooterனு நிறைய நீர் விளையாட்டுகள். கொழும்புல இருந்து இந்த ஏரிக்கு நேரா Air Taxi இருக்கு. அப்படியே கொண்டு வந்து தண்ணில எறக்குவாங்க. நல்ல அனுபவமா இருக்கும். என்ன…. செலவுதான் கொஞ்சம்….

ஏரியோட பரமாரிப்பும் புல்தரை பராமரிப்பும் மிக அருமை. பூச்செடிகள் வளர அதுக்கு வெயில் நேரா படாத மாதிரி கூரைக்கொட்டகை. குழந்தைகளை கவர மிக்கி மௌஸ், டொனால்ட் டக் மாதிரியான சிலைகள். நடக்க விரும்புறவங்களுக்கு ஏரியோரமா பாதை. குதிரைச்சவாரி விரும்பிகளுக்கு குதிரைகள். எல்லாமே அங்க இருந்தது. குறை சொல்லியே ஆகனும்னா… கழிப்பறை வசதி. இல்லாமல் இல்ல. ஆனா தேவையான அளவு இல்லை. தேவையான எடங்கள்ளயும் இல்லை. எங்கருக்குன்னு தேடித்தேடி எனக்கு மயக்கமே வந்துருச்சு. கண்டுபிடிச்சுப் போனா அங்க நிக்குது ஏடிஎம் வாசல் கியூ மாதிரி. இவ்வளவு பண்றவங்க அதயும் ஒழுங்காப் பண்ணலாம். சின்னக் கொழந்தைகளோட வயசானவங்களோட வர்ரவங்க நெலமையை யோசிச்சுப் பாக்கனும். ஒரு மூலைல இருந்து இன்னொரு மூலைக்கு நடக்குறதுக்குள்ள….
16864110_988846751248705_5256601938286866391_n
ஜாக்கெட் கொண்டு போகாததால ஒரு கடைல குளிர் கூட சண்டை போடுறதுக்காக சுடச்சுட கருப்பு டீயும் உருளைச் சுருளும் வாங்கி ஏரியைப் பாத்து உக்காந்தேன். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது. ஒரு கடைக்கு நம்ம போற வரைக்கும் நாயும் பேயும் கூடப் போகாது. நம்ம போனதும் கோயில்ல சுண்டல் வாங்குற கூட்டம் மாதிரி கூட்டம் அள்ளும். இத்தனைக்கும் கூட்டமான கடைகளை விட்டுட்டு ஆளில்லாத கடைக்கு வந்தேன். சரி, நம்ம கைராசின்னு பெருமை பட்டுக்க வேண்டியதுதான்.

ரொம்ப இருட்டி குளிரும் முன்னாடி ஹோட்டலுக்கு திரும்ப முடிவு பண்ணேன். ஹோட்டல்ல ரெஸ்டாரண்ட் இல்லாததால பஸ்டாண்ட் பக்கத்துல இருந்து எதாவது வாங்கீட்டுப் போகலாம்னு முடிவு. ஆறிப்போன சோற்றை வாங்கி அது குளிர்ல வெறச்சி ஊசி மாதிரி மாறி சாப்பிடுறப்போ தொண்டையைக் குத்திக்க வேண்டாங்குற முடிவுக்கு வந்தேன். அங்க ஒரு கடைல  வெஜிடபிள் பன்னும் ஹாட் டாகும் வாங்கிக்கிட்டேன். பக்கத்துல இருந்த சூப்பர் மார்க்கெட்ல தண்ணியும் தயிரும் வாங்கலாம்னு நொழைஞ்சேன். இலங்கைல தயிரே சாப்பிட மாட்டாங்குறாங்க. எனக்கு தயிர் இல்லைன்னா அவ்வளவுதான். சூப்பர் மார்க்கெட்டுலயும் தயிர் கிடைக்கல. வேறவழியில்லாம flavoured yogurt வாங்கிக்கிட்டேன். தயிர் மேல ஒங்களுக்கு அப்படியென்ன கோவம் இலங்கை மக்களே?

வரும் போது விடுவிடுன்னு நடந்து வந்துட்டோமேன்னு போறப்பவும் நடந்தே போகலாம்னு நெனச்சது தப்புன்னு நடக்கும் போதுதான் தெரிஞ்சது. போகும்போது மலை ஏறனுமே. இதென்ன பழனி மலையா திருத்தணியா? ஆனா ஒன்னு… என் நுரையீரல்ல இருந்த கார்பன் டை ஆக்சைடு மொத்தமும் அன்னைக்கு வெளிய வந்திருக்கும். வழில இருந்த செடிகொடிகளுக்கு சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சு.

நுவரேலியான்னு சொன்னாலே மொதல்ல நமக்கெல்லாம் நினைவுக்கு வரவேண்டியது மலையகத் தமிழர்கள். நுவரேலியா ஊர் மட்டுமல்ல, அந்த மலையில் இருக்கும் பல ஊர்களும் தேயிலைத் தோட்டங்களும் சாலை வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் மலையகத் தமிழர்களின் உழைப்பால் உண்டானது. ஆனால் அந்த மக்கள் முன்னேறினார்களா என்பது விவாதத்துக்கும் சிந்தனைக்கும் உரியது. இப்ப உள்ள தலைமுறையினர் படிச்சு வெளிய வரத் தொடங்கிட்டாங்க. ஆனாலும் இன்னும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வுக்கு நிறைய உதவிகளும் ஆதரவுகளும் தேவைப்படுதுங்குறது புரிஞ்சது.

யாழ்ப்பாணத்துத் தமிழர்களுக்கும் இவங்களுக்கும் வேறுபாடு தெரியுது. பேச்சு வழக்கு சாப்பாட்டு வழக்கம் தோற்றம்னு நிறைய சொல்லலாம். யாழ்ப்பாணக் கோயில்கள்ள ஆண்கள் சட்டையைக் கழட்டீட்டுதான் போகனும். ஏன்னு கேட்டா யாருக்கும் தெரியல. அது அப்படியே அவங்களுக்குப் பழகியிருக்கு. ஆனா கோயில்ல ஒரு அளவு வரைக்கும் சட்டையோட போகலாம். அங்கருந்தே சாமி கும்பிட்டுட்டு வந்துக்கலாம். உள்ள போகனும்னா சட்டையைக் கழட்டனும். நிறைய பேர் பாதி தூரத்துல இருந்தே சட்டையோட சாமி கும்பிட்டத நல்லூர்லயும் தெல்லிப்பழைலயும் பாத்தேன். இது தெரியாம ஒரு கோயில்ல சட்டையோட உள்ள வரைக்கும் போய் சாமி கும்பிட்டாச்சு. நல்லவேளையா யாரும் கேக்கல. வெளிய வந்தப்புறந்தான் விவரம் தெரிஞ்சது. கோயில்ல கூட்டம் இல்லாததால எஸ்கேப் எசக்கிமுத்து. கோயில் எதுன்னு சொல்ல மாட்டேன். அந்தக் கோயிலைப் பத்தி முந்தைய பதிவுகள்ள சொல்லல. 🙂 நுவரேலியாவுல அந்த மாதிரியான கட்டுப்பாடுகளோ நிறைய சடங்குகள் உள்ள கோயில்களோ இல்ல.

மலையகத் தமிழ் எழுத்தாளர் சிவக்குமார் சண்முகத்தின் நட்பு நுவரேலியாவில் கெடைச்சது. அதுக்குக் காரணம் இலங்கை எழுத்தாளர் ரிஷான் ஷெரிப். சிவக்குமார் நுவரேலியா பக்கத்துல இருப்பதால அவரை எனக்கு அறிமுகப்படுத்தினாரு. சமூக அக்கறையுள்ள எழுத்தாளர் சிவக்குமார். இவரோட எழுத்துகள் படிமங்களால வடிவமைக்கப்பட்டது. நிறைய விருதுகளும் வாங்கியிருக்காரு. இவர் ஒரு பள்ளி ஆசிரியர். “கனத்த எருமையைப் போல மூச்சு விட்டான்”னு எழுதுனது என் மனசுல ஆழமாகப் பதிஞ்சிருச்சு. அந்தக் கதையோட இந்த வரியைப் படிக்கிறப்போ அதோட பரிமாணம் புரியும். ரெண்டாம் நாள் காலைல அவரைச் சந்திப்பதாகத் திட்டம்.
16830908_988845444582169_6577248210858111502_n
எழுத்தாளர் ரிஷான் இன்னொரு தகவலும் சொன்னாரு. விக்டோரியா பூங்கா வாசலைத் துண்டி நாலஞ்சு எட்டு அந்தப் பக்கம் போனா அம்மா உணவகம் மாதிரி அரசு உணவகம் தன்னார்வலப் பெண்கள் மூலமா நடக்குதான். அங்க ரொம்ப நல்லாயிருக்கும்னு சொல்லி அடுத்த நாள் காலைல அங்க சாப்பிடச் சொன்னாரு. அடுத்த நாள் காலைல அங்க போயே ஆகனும்னு முடிவு கட்டினேன்.

தங்கியிருந்த எடத்தோட சொந்தக்காரர் சமிந்தா விடியக்காலை அஞ்சரைக்கு மணிக்கு எந்திரிச்சு மாடிக்குப் போனா அருமையா இருக்கும்னு சொன்னாரு. பாவம். நான் அஞ்சரை மணியைப் பாத்து அஞ்சரை வருஷம் ஆச்சுன்னு அவருக்குத் தெரியல. அதுவும் அந்தக் குளிர்ல அஞ்சரைக்கு நான் எந்திரிச்சிட்டா ஒட்டுமொத்த உலகமும் திருந்திறாதா?!? அதுக்கு நான் காரணமா இருக்கலாமா?
16864135_988847431248637_2029964097691859550_n
ஆனாலும் காலைல ஏழு மணிக்கெல்லாம் எந்திரிச்சு மாடிக்குப் போனேன். சும்மாச் சொல்லக்கூடாது. இராவணன் மாதிரி பத்து தலை இருந்தாத்தான் அந்த அழகையெல்லாம் இரசிக்க முடியும். அந்த அழகை சொல்லச் சொல்ல ஒரு வாய் வலிச்சாலும் இன்னொரு வாய் சொல்லும். அஞ்சரை மணிக்கு சூரிய உதயம் உண்மையிலேயே அழகாத்தான் இருந்திருக்கும்னு நெனச்சுக்கிட்டேன். சமிண்டாவை ஒரு டீ போடச் சொல்லி மாடிக்குக் கொண்டு போய் உக்காந்து குடிச்சிக்கிட்டே மெய்மறந்தேன். இந்த மாதிரி சோம்பேறித்தனமா இருக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு இப்ப ஒங்களுக்கும் புரிஞ்சிருக்குமே. 🙂

பிறகு குளிச்சு முடிச்சுட்டு மறுபடியும் அந்த இடுக்குப் பாதைல எறங்கி நடந்து பஸ்டாண்டுக்குப் போனேன். சிவக்குமார் அவர் கூட வேலை பார்க்கும் இன்னொரு ஆசிரியர் ரோஷன் கூட வந்திருந்தாரு. இலங்கைல ரோஷன் ரொம்பப் பிரபலமான பேர். இது பௌத்தர்கள், தமிழ் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பேரா இருக்குது. ரோஷன், ருஷன், ரிஷான்னு சின்னச்சின்ன மாறுபாடுகளோட பயன்படுத்துறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். சரியா இலங்கை மக்களே?

எங்க சாப்பிடப் போகலாம்னு சிவக்குமார் கேட்டாரு. எதோ அரசாங்க உணவுவிடுதி இருக்காமேன்னு ரிஷான் சொன்னதைச் சொன்னேன். ”சரி. வாங்கன்னு” நேரா அங்க கூட்டீட்டுப் போனாரு.
16832141_988847074582006_4069098327498215848_n
தொடரும்…

அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Posted in அனுபவங்கள், இலங்கை, நுவரேலியா, பயணம் | Tagged , , , | 6 Comments

6. மலையக மலைப்புகள்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

என்னோட மனக்கணக்குப்படி அஞ்சு மணிக்கு கொழும்பு வந்து சேருவேன். ஆறு மணிக்கு பஸ் கெடைச்சாக்கூட மதியத்துக்குள்ள நுவரேலியா போயிருவேன். ஆனா மூனே முக்காலுக்கே கொழும்பு வந்தாச்சு. இனி என்னன்னு யோசிச்சுக்கிட்டே பெட்டிய இழுத்துக்கிட்டு பேட்டா பஸ்டாண்டுக்குள்ள போனேன். மதுரை பஸ்டாண்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருந்தது. ஆனா ஓரளவுக்கு துப்புரவா இருந்தது. அப்பத்தான் சில பஸ்கள் டுர்ருடுர்ருன்னு கெளம்புச்சு. பாத்தா கண்டி போற வண்டி. நுவரேலியா நுவரேலியான்னு நாலஞ்சு பேர் கிட்ட கேட்டேன். அவங்க கை காட்டுன வழில take diversionகளா எடுத்து எடுத்து மறுபடியும் முன்னாடி இருந்த பிளாட்பாரத்துக்கே வந்துட்டேன்.
IMG_8439
அங்க ஒரு கண்டக்டர் எதோவொரு ஊர் பேரைச் சொல்லிக் கத்திக்கிட்டேயிருந்தாரு. அவர் கிட்ட போய் நுவரேலியான்னு கேட்டேன். கையக் காட்டுனாரு. சரின்னு அவர் காட்டுன வழில கொஞ்சம் முன்னாடி போய் நின்னேன். என்ன நெனச்சாரோ பக்கத்துல வந்து இன்னும் தெளிவா கொஞ்சம் தள்ளியிருந்த போர்டை காட்டி “4.15 coming. 4.50 going”ன்னு சொன்னாரு. அவர் சொன்னது புரிஞ்சதால நன்றி சொல்லிட்டு அந்த பிளாட்பாரத்துல போய் நின்னேன்.

நுவரேலியா போற பஸ் எண் 79. ஆனா அது 8ம் எண் பஸ் நிக்கிற எடுத்துக்கும் 6ம் எண் பஸ் நிக்கிற எடத்துக்கும் நடுவுல இருக்கு. ஒரே கொழப்பம்டான்னு நெனச்சிக்கிட்டேன். மணி நாலேகால் தாண்டி நாலரைய நெருங்கினாலும் பஸ் வர்ர வழியக்காணோம். அதுக்குள்ள பஸ்சுக்கு கூட்டம் வந்துருச்சு. ஒரு வழியா நாலு முப்பத்தஞ்சுக்கு மினி ஏசிபஸ் வந்தது. நல்லவேளையா உக்கார எடமும் கிடைச்சது. சரியா நாலு அம்பதுக்கு பஸ் எடுத்துட்டான். நானூற்று அம்பது ரூபா டிக்கெட். தூங்கித் தூங்கி நுவரேலியா போகும் போது மணி 8.50. எதிர்பாத்ததுக்கு முந்தியே வந்ததுல ஒரு மகிழ்ச்சி.
IMG_8447
மொதல்ல பசியாத்தலாம்னு வரிசையா கடைகளைப் பாத்துக்கிட்டே வந்தேன். ஸ்ரீ அம்பாள்ஸ் ஓட்டல்னு தமிழ்ல எழுதி ஒரு கடை. நேரா உள்ள நொழஞ்சேன். பாத்தா இட்டிலி தோசைன்னு மக்கள் சுடச்சுடச் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. ஆகான்னு ஒரு தோசையைக் கொண்டு வரச்சொல்லீட்டு உக்காந்தேன். ஒரு தட்டுல சுடச்சுட ரெண்டு தோசை, ரெண்டு பருப்புவடை, ரெண்டு உழுந்துவடை, ரெண்டு போண்டான்னு வந்து முன்னாடி வெச்சாங்க. எதெது வேணுமோ அதது எடுத்துக்கலாம். ஒவ்வொன்னாக் கூப்பிட்டுக் கேக்க வேண்டாம் பாருங்க. சட்னி சாம்பார் வேற மேசைலயே வெச்சிட்டாங்க. மலையகத் தமிழர்கள் இருக்கும் எடங்குறதால சாப்பாட்டில் கொஞ்சம் தமிழ்நாட்டு ருசி வருது.

சொன்னா நம்ப மாட்டீங்க. ஆனாலும் நம்பித்தான் ஆகனும். நுவரேலியாவுல எறங்கி சாப்பிடக் கடை தேடும் போது மொதல்ல என் காதுல பி.சுசீலா குரல் கேட்டது. எல்லாம் மாயைன்னு நெனைக்கிறப்போ இன்னும் தெளிவாக் கேட்டது. பின்னாடியே டி.எம்.எஸ் வந்துட்டாரு. பாத்தா… நம்ம எம்.எஸ்.வி பாட்டு. எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. ”இறக்கும் மனிதர்கள். இறவாப் பாடல்கள்.”னு எம்.எஸ்.வி சொல்லிட்டே இருந்தது உண்மைதான்

தங்குறதுக்கு Panorama Accomodations அப்படீங்குற எடத்துல முடிவு செஞ்சிருக்கு. அத நடத்துறவர் பேரு சமிந்தா (Chaminda). அவருக்கு ஃபோன் பண்ணா பஸ்டாண்டு பக்கத்துலயே இருந்தாரு. அவரே ஆட்டோ பிடிச்சுக் கொடுத்தாரு. இந்த விடுதி மலைச்சரிவுல இருக்கு. அங்கிருந்து நுவரேலியா ஊர் நல்லா அழகாத் தெரியுது. சமீபத்துலதான் தொடங்கியிருக்காங்க. ஹோட்டல் மாதிரி இல்லாம வில்லா மாதிரி நடத்துறாங்க. வாசல்ல எறங்கும் போதே உள்ள இந்திப் பாட்டுகள் ஓடீட்டிருந்தது. குறிப்பா தொன்னூறுகளின் இறுதில வந்த பாட்டுகள். சனகா(Chanaka) தான் அந்தப் பாட்டுகளைக் கேட்டுட்டிருந்தது. சமிந்தாவுக்கு உதவியா இருக்காரு. சின்னப் பையன் தான். எங்கயோ படிக்கிறதாச் சொன்னாரு. எங்கன்னு மறந்து போச்சு.

IMG_8467என்ன வரவேத்து உக்கார வெச்சுட்டு டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாரு. இந்திப் பாட்டுகளின் இரசிகராம். இப்ப வர்ர பாட்டெல்லாம் அவ்வளவு நல்லால்லைன்னாரு. எனக்கு இந்தி தெரியுமான்னு கேட்டாரு. நான் இந்தி பேசுனா இந்தியாவே தெறிச்சிரும்னு அவருக்குத் தெரியல. அதுனால அடக்கதோட யாராவது பேசுனா கொஞ்சம் புரியும்னு சொன்னேன்.

கொஞ்சம் குளிச்சு ஓய்வெடுத்துட்டு மதியம் சாப்பாட்டுக்கு ஊருக்குள்ள போய் ரெண்டு எடம் பாக்கலாம்னு திட்டம். சனகா கிட்ட போய் இங்கருந்து பஸ்டாண்டு போக ஆட்டோ கெடைக்குமான்னு கேட்டேன். அஞ்சு நிமிஷத்துல நடந்து போற தூரத்துக்கு எதுக்கு ஆட்டோன்னு சொல்லி மலைச்சரிவான ஒரு பாதையைக் காட்டினாரு. நானும் அந்தச் சரிவுல எறங்குனேன். ஒரு ஆள் போகலாம். இன்னொரு ஆள் எதுக்க வந்த ரெண்டு பேரும் ஒதுங்கி வழிவிட்டுக்கனும். அப்படியொரு ஒத்தையடிச் சரிவு. ரெண்டு பக்கவும் வீடுகள். பல வீடுகள்ள தகர ஷீட் கூரையாப் போட்டிருந்தாங்க. இது எப்படி குளிருக்குத் தாங்கும்னு தெரியல. ரொம்பக் குளிறாது?

அஞ்சு நிமிஷத்துல அந்த வழில பஸ்டாண்டுக்குப் போகனும்னா குடுகுடுன்னு ஓடுனாத்தான் உண்டு. எனக்கு பத்துப் பதினஞ்சு நிமிஷமாச்சு. அட… பராக்கு பாத்துக்கிட்டே நடந்தேன்னு நெனச்சுக்கோங்களேன்.

IMG_8484எழுத்தாளர் ரிஷான் ஒரு குறிப்பிட்ட கடையைச் சொல்லி, “எது கேட்டாலும் ருசியா செஞ்சு கொடுப்பாங்க”ன்னு சொன்னாரு. குளிருக்கு சூடாச் சாப்பிடுற ஆசைல அந்தக் கடைக்குப் போனேன். சாப்பிடக் கொண்டு வந்து வெச்சதெல்லாம் ஆறிப்போயிருந்தது. பரிமாறிய பெரியவர் கிட்ட “எதாவது சாப்பிடக் கேட்டா அந்நேரம் செஞ்சு கொடுக்க மாட்டீங்களா?”ன்னு தமிழ்லயே கேட்டேன்.

“அந்நேரமெல்லாம் செஞ்சு கொடுத்தா கட்டுப்படியாகாது. காலைலயே எல்லாம் செஞ்சு வெச்சிருவோம்”னு சொன்னாரு. சரின்னு கேட்டுக்கிட்டு சாப்பிட்டேன். சாப்பாட்டுல குறையெல்லாம் இல்ல. ஆனாலும் குளிரெடுக்குற மலையூர்ல இருந்துக்கிட்டு மக்கள் சூடில்லாத சாப்பாட்டைச் சாப்புடுறது கொஞ்சம் புதுசாத்தான் இருந்துச்சு.

அதே மேஜைல ஒரு ஜப்பான்காரரும் சாப்பிட்டுட்டிருந்தாரு. அவர் கிட்ட ரெண்டொரு பேச்சு பேசினேன். Ten no Chasukeங்குற ஜப்பானியப் படம் பாத்திருப்பதாகவும் ரொம்பப் பிடிக்கும்னு சொன்னேன். அவர் லேசா முகம் மலர்ந்தாப்புல இருந்தது. மத்தபடி அவர் முகத்தை வெச்சு என்ன மனநிலைல இருக்காருன்னு கண்டுபிடிக்க முடியல. சாப்பாடு பிடிச்சுச் சாப்பிடுறாரா இல்லையான்னு கூட கண்டுபிடிக்க முடியல. ஜப்பான்காரங்கள்ளாம் இப்படித்தான் இருப்பாங்களோ? முன்னப்பின்ன ஜப்பான் போயிருந்தாத்தான தெரியும்.

நுவரேலியாவுல மொதல்ல போன எடம் விக்டோரியா பார்க். 1897ல் ஜெர்மன் இளவரசி நுவரேலியாவுக்கு வந்திருக்காங்க. அந்த ஆண்டுதான் இங்கிலாந்து அரசி குயின் விக்டோரியாவோட வைரவிழா ஆண்டு. அதாவது அறுபது வயசு ஆச்சு. அதைக் கொண்டாடுறதுக்காக ஒரு ஓக் மரத்தை நட்டு இந்தப் பூங்காவை ஜெர்மன் இளவரசி தொடங்கி வெச்சிருக்காங்க. ஒத்தை மரத்தை நட்டுத் தொடங்கினாலும் பலப்பல செடிகொடிகள் மரங்களைக் கொண்டு வந்து பூங்காவை அருமையா அமைச்சிருக்காங்க அப்போ இலங்கைய ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்கள். பச்சைப் பசுமையான புல்தரைகளும் குளுகுளுக்குளுமையும் சுகம் சுகம்.

IMG_8532இலங்கை மக்களுக்கு பார்க் டிக்கெட் முப்பதோ நாப்பதோ ரூபாய். வெளிநாட்டுக்காரங்களுக்கு முந்நூறு இலங்கை ரூபாம். நம்மூர் மதிப்புக்கு நூத்து நாப்பது ரூபாய். ஓய்வான மனநிலையோட உள்ள போனீங்கன்னா வெளிய வரவே மாட்டீங்க. நான் உள்ள போனப்போ ஒரு பெரிய மலைப்பாம்பு புல்தரைல கெடந்தது. மக்கள் சுத்திநின்னு… கொஞ்சம் எடவெளி விட்டுத்தான்… பாத்துக்கிட்டிருந்தாங்க. என்னன்னு ஆங்கிலத்தில கேட்டேன். யாருக்கும் தெரியல. ஆனாலும் ஒரு ஆர்வத்துல மலைப்பாம்ப பாத்துக்கிட்டிருந்தாங்க. பூங்காவில் வேலை செய்ற ஒரு செக்யூரிட்டி லேடி கிட்ட என்னன்னு கேட்டேன். போட்டோ போட்டோன்னு பதில் வந்தது. அந்நேரம் ஒரு கைலி கட்டிய ஆள் அந்தப் பாம்பை அப்படியே அள்ளி வேற எடத்துக்கு எடுத்துட்டுப் போய் விட்டு பக்கத்துல உக்காந்துக்கிட்டாரு. எல்லாரும் வேடிக்கை பாத்தாங்களே ஒழிய யாரும் போட்டோ எடுத்துக்கலை.

நான் மொதல்ல பாம்பு பத்திக் கேட்டவரு என்னப் பாத்ததும் “Are you India?”ன்னு ஆர்வாமா கேட்டாரும். நானும் “Yes. I am India.”ன்னு சொன்னேன். “Oh good. India. From Delhi?”ன்னு அடுத்த கேள்வியக் கேட்டாரு. இதென்னடா வம்பாப்போச்சுன்னு நெனச்சுக்கிட்டேன். இப்ப எந்த ஊர்ல இருந்து வந்திருக்கோம்னு சொல்றதா வேண்டாமான்னு ஒரு யோசனை. பொத்தாம்பொதுவா “I am from South India”ன்னு சொல்லி வெச்சேன். அதுக்கும் அவரு சந்தோஷமா தலைய ஆட்டுனாரு. இதுக்கு மேல நின்னா ரொம்பப் பேச்சுக் கொடுப்பாருன்னு அப்படியே நகந்து போயிட்டேன்.
IMG_8542
அந்தச் சூழல் ரொம்ப நிம்மதியா இருந்ததால படம் புடிக்கிறதுல நேரத்தை வீணாக்காம புல்தரைல சாஞ்சு படுத்துக்கிட்டேன். தூங்கல. எதுவும் பெருசாச் சிந்திக்கல. ஆனாலும் நேரம் போனதே தெரியல. கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய வந்தேன். வெளிய வர்ர எடத்துல Victoria Park Cafe இருக்கு. எனக்கு அப்பப்போ வண்டிக்கு பெற்றோல் போடுற மாதிரி பிளாக் டீ/கிரீன் டீ ஊத்திக்கிட்டேயிருந்தா வண்டி நிக்காம ஓடிக்கிட்டேயிருக்கும். அதுனால ஒரு டீ குடிக்கலாம்னு உள்ள போனேன்.

தொடரும்…

அடுத்த பதிவை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Posted in அனுபவங்கள், கொழும்பு, நுவரேலியா, பயணம் | Tagged , , , , , | 4 Comments