செந்தில்நாதன் – 2 – தமிழ்க்கொழம்பு

போன வாரம் செந்தில்நாதனாகிய அடியேன் ஒரு நண்பரோடு வெட்டிப் பேச்சு பேச வேண்டியிருந்தது. பக்கத்துஅப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர்தார். அவன் இவன் என்றே பேசிப் பழக்கம். பொழுது போகவில்லையென்றால் எதையாவது பேசுவது எங்கள் வழக்கம். செவிக்கு உணவோடு இடையிடையே எதையாவது அரைப்பதும் எங்கள் வழக்கம். இரண்டு வீடுகளிலிருந்தும் தொல்லை விட்டதென்று எதையாவது கொண்டு வைத்து விடுவார்கள். அரை மணி ஒரு மணி என்று தொடங்கி ஐந்து ஆறு மணி நேரங்கள் கூட ஓடியிருக்கிறது.

அவன் சைவம். நான் அசைவம். அவனது பெயர் சங்கரராமன். ஆனால் சாப்பாட்டுராமன் என்று சொல்வதே மிகப் பொருத்தம். நானும் அந்தப் பெயருக்குப் பல காலமாக போராடுகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும்  அவனிடம் தோற்றுப் போகிறேன். அதனால் என்ன? திறமையிடம் தோற்பதில் தவறில்லை. 🙂

சங்கர்ராமன் aka சங்கரன் ஒரு வத்தக்குழம்புப் பிரியன். வத்தக்குழம்புக்காக உயிரையும் விடும் சித்தம் அவனுக்கு இருந்தது. அனுமார் போல தன்னுடைய மனைவியிடம் திருமணமான அன்றே நெஞ்சத்தைத் திறந்து வத்தக்குழம்பிற்கு அவன் கொடுத்திருக்கும் இடத்தைக் காட்டினானாம். அதிலிருந்து அந்த அம்மையார் வத்தக்குழம்புகளை வகைவகையாக ஆக்கிப் போட்டு கணவனை கைக்குள் வைத்திருக்கிறார்.

அப்படிப்பட்டவனோடு சின்ன சண்டை. வத்தக்கொழம்பு பெரியதா? மோர்க்கொழம்பு பெரியதா?

இந்தக் கேள்விக்கு நளமகாராஜனும் பீமனும் கூட விடை சொல்ல முடியாது. ஆனாலும் கலியுக பீமனாகிய அவனும் கலி”கால” நளனாகிய நானும் விடை கண்டுபிடிக்க விவாதித்தோம்.

“என்னய்யா மோர்க்கொழம்பு? மஞ்சள் மஞ்ஞேர்னு? கொழம்புன்னா ஒரு நிறம் ஒரு திடம் ஒரு மணம் இருக்க வேண்டாமா? இந்த மூணும் நெறஞ்ச ஒரே கொழம்பு வெத்தக்கொழம்புதான். தெரியுமா?” அவனே தொடங்கினான்.

“மஞ்சளும் ஒரு நெறந்தான. மோர்க்கொழம்பு எங்கயாச்சும் நீர்க்க இருக்கா? அது தயிர்க்கொழம்பு மாதிரிக் கெட்டியாத்தான இருக்கு. என்ன சொன்னாலும் மோர்க்கொழம்புக்கு ஒரு மணம் இருக்கத்தான் செய்யுது. விதவிதமாக் காய்கள் போட்டும் போடாமலும் செய்யக்கூடியது மோர்க்கொழம்புதான.” இது நான்.

“என்ன விதவிதமான காய்கள்? வெண்டக்கா, சேப்பங்கெழங்குன்னு வழுவழுக் காய்கள். இல்லைன்னா நீர்க்காயான தடியங்காய் (சங்கர்ராமன் கல்லிடைக்குறிச்சி. வெள்ளைப்பூசணியைத் தடியங்காய் என்றுதான் சொல்வான். மஞ்சள் பூசணிதான் பூசணி. கட்டுக்கட்டாக ஊரிலிருந்து அப்பளங்கள் வரும். அதில் கொஞ்சம் நமக்கும் வரும்.). பெங்களூர் பக்கம் போனா வெள்ளரிக்காயைப் போட்டு உயிரை வாங்குவான். தெரியாதா ஒம்ம மோர்க்கொழம்பு மகிமை.”

“அதெல்லாஞ் சரிதான். இதுல ஒரு காயுமே வத்தக்கொழம்புக்கு ஆகாதே.”

நடுவில் மாமி ரெண்டு காபி கொண்டு வந்தார்கள். இதமாகத் தொண்டையை நனைத்து விட்டு சங்கர்ராமன் தொடர்ந்தான்.

“காய்கறி போட்டாதான் கொழம்பா? வத்தக் கொழம்புன்னா சுண்டக்கா வத்தல்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுலயே நெறைய வகைகள் உண்டும் ஓய். சொல்றேன். கேட்டுக்கோ. கொழம்பு முருகன்னா சுண்டையும் மணத்தக்காளியும் வள்ளி தெய்வானை மாதிரி பொருத்தம். மோர்மொளகா போட்டும் வைக்கறதுண்டு. காரம் பிடிச்சா அதுவும் பிடிக்கும். அது மட்டுமில்லை. ஊர்ப்பக்கம் அதலக்காய் கெடைக்கும். (சின்ன பாவக்காய் போல கசப்பான காய்) அதுல வத்தல் பண்ணாலும் பிரம்மாதம்.”

நடுவில் வீட்டிலிருந்து இரண்டு தட்டுகளில் முந்திரி பக்கோடா வந்தது. ஒன்றை சங்கரனிடம் தள்ளினேன்.

மாமி வீட்டில் விதவிதமான வத்தல்கள் காய்வதற்கான காரணம் எனக்குப் புரிந்தது. சாப்பாட்டால் சங்கரனை அடித்து ஜெயிக்க முடியாது என்று புரிந்தது. அது அவன் பலம். சங்கப்பாட்டை எடுத்து விட்டால்தான் நான் பிழைக்க முடியும் என்று தெரிந்தது.

“வத்தக் கொழம்பு நேத்து வந்தது. மோர்க்கொழம்பு ரெண்டாயிரம் வருஷமா தமிழர்கள் வாழ்வோட பிண்ணிப் பிணைஞ்சிருக்கு. மோர்க்கொழம்புதான் உண்மையிலேயே தமிழ்க் கொழம்பு” என்று எடுத்து விட்டேன். சங்கரனின் ஆர்வத்தைக் கிளறி விட்டேன்.

“என்னது சங்கப்பாட்டுல மோர்க்கொழம்பா? அதென்னப்பா பாட்டு. அதுல வத்தக்கொழம்பு புளிக்கொழம்பெல்லாம் வரலையா?”

“மோர்க்கொழம்பு செய்றது எப்படீன்னே ஒரு பாட்டு இருக்கு. அந்தக் காலத்துல மோர்க்கொழம்புக்குத் தீம்புளிப்பாகர்னு பேரு. அதுவொரு பழைய பாட்டு. நம்ம என்.சொக்கன் இதப் பத்தி அவரோட 365பா வலைப்பூவுல ( http://365paa.wordpress.com/2011/12/21/168/ ) போட்டிருக்காரே. நான் கூட அதுக்குப் பின்னூட்டமெல்லாம் போட்டிருக்கேன். அதெல்லாம் நீ எங்க படிக்கிற. இதான் அந்த லிங்க். நேரம் கெடைக்கிறப்போ பாரு.”

“அதெல்லாம் சரி. எனக்கு இவ்வளவு வேகமால்லாம் எதையும் படிக்க முடியாது. அதுவும் பழைய பாட்டு. நீயே சொல்லி விளக்கம் சொல்லீரு. பட்டுன்னு புரிஞ்சிக்கிறேன்.”

சரியென்று சங்கரனுக்குப் பாட்டை விளக்கினேன். முதன்முறையாக சங்கரனிடம் மோர்க்கொழம்பு வெற்றி பெற்றது. 🙂

அந்தப் பாட்டையும் சங்கர்ராமனுக்குச் சொன்ன விளக்கத்தையும் கீழே படித்துக் கொள்ளுங்கள். இதைப் படித்து விட்டு வத்தக்கொழம்பு மீன்கொழம்பெல்லாம் கூடத் தமிழ்க் கொழம்புதான் என்று சிலபலர் தரவுகள் காட்ட வாய்ப்புண்டு. என்னைப் பொருத்த வரையில் தமிழன் சோற்றில் ஊற்றிப் பிசையும் எல்லாக் குழம்பும் தமிழ்க் குழம்புதான். வாழ்க தமிழ்க் குழம்புகள். 🙂

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!
நூல்: குறுந்தொகை (#167)
பாடியவர்: கூடலூர் கிழார்

இந்தப் பாட்டுல எவ்வளவு விவரங்கள் இருக்கு தெரியுமா? அடேங்கப்பா. பாட்டு சொல்லும் நேரடியான பொருள் இருக்க, மேலும் பலப்பலச் சொல்லிக் கொடுக்கிறது.

காலம் காட்டும் கண்ணாடி மாதிரி. அந்தக் காலகட்டத்துல எப்படி இருந்துச்சுன்னும் புரிஞ்சிக்கலாம். அதே மாதிரி எப்பவுமே மாறாமலும் இருக்குற சிலதுகளையும் இந்தப் பாட்டு சொல்லிக் கொடுக்குது.

ஆயிரந்தான் சொல்லுங்க… பொண்ணுங்க செல்லமா வளர்ர எடம் பொறந்த வீடுதான். இப்பவும் பொண்ணுங்க பொறந்த வீட்டுக்குப் போனாத்தான் இயல்பா இருப்பாங்க. மாமனார் மாமியார் வேற ஊர்ல இருந்தா, அங்க போறப்ப ஒரு மாதிரி கவனமாத்தான் இருப்பாங்க. இதை யாரும் மறுக்கவே முடியாது. அப்படிப் பொண்ணுங்க யாராவது மறுத்தீங்கன்னா… ஒங்களுக்குள்ளயே ஒரு வாட்டி இதக் கேட்டுப் பாருங்க. அண்ணன் அண்ணி இருக்குற வீட்டுக்குப் போனா வேணா அந்த இயல்பு முழுமையா இல்லாம இருக்கும். அப்பா-அம்மா வீடுன்னா ஒரே ஜாலிதான். இல்லையா?

அப்படிச் செல்லமா இருந்த வீட்ட விட்டுட்டு கல்யாணமாகித் தனிக் குடித்தனம். ஒரு மாசம் ஆகுது. மக தனியாப் போனாளே.. என்ன பண்றாளோ போவோம்னு அம்மா நெனப்பாங்க. அப்பத்தான் அதே ஊர்ல இருக்குற அண்ணியோ, தங்கையோ, அக்காவோ, அத்தையோ, சித்தியோ நினைவுக்கு வருவாங்க. போய்ப் பாருங்கன்னு அவங்ககிட்டச் சொன்னா அவங்களும் போயிட்டு வந்து மக குடும்பம் நடத்துற அழகைச் சொல்வாங்க.

அப்படித்தான் இந்தப் பாட்டுல ஒரு செவிலித்தாய் போய்ப் பாத்துட்டு வந்துட்டு தாய் கிட்ட “ஒம்மக நல்லா சந்தோசமாத்தான் இருக்கா”ன்னு சொல்றாங்க. அதான் பாட்டு. கை அழுக்காகுறது கண்ணுல தண்ணி வர்ரதெல்லாம் துன்பமில்லை. அப்படியெல்லாம் இருந்தாலும் நல்லாத்தான் இருக்கான்னு பொருள். ஏன்னா அந்தப் பொண்ணப் பெத்தவளும் அதத்தான செஞ்சிருக்கிட்டிருக்கனும்!

சரி. பாட்டுக்கு வருவோம்.

முளிதயிர்
இது பழைய தயிர். இளந்தயிர்  கட்டியா இருந்தாலும் கொஞ்சம் லொடலொடன்னு இருக்கும். விரல விட்டேக் கலக்கீரலாம். புளிப்பே இருக்காது. ஒரு நாள் ஆச்சுன்னா புளிப்பு வந்துரும். நீர்ச்சத்து வத்திக் கெட்டியாகும். அப்படியான தயிர்தான் முளிதயிர். அதுதான் கொழம்புக்கும் ஆகும். வீட்டுல சமைக்கிறவங்க கிட்ட மோர்க்கொழம்புக்குப் புதுத் தயிர் ஊத்துவாங்களா பழைய தயிர் ஊத்துவாங்களான்னு கேளுங்க. விவரம் புரியும்.

இன்னும் ஒத்துக்க முடியலையா? சரி. இலக்கணப்படியே வர்ரேன். முளின்னா என்ன? காய்தல். முளி இலைன்னு இந்தப் பாவுல ( http://365paa.wordpress.com/2011/12/14/161/ ) ஏற்கனவே பாத்திருக்கோமே. காய்ந்த இலை. எது காய்ந்த இலை? இளம் இலையா? பழம் இலையா? பழசுதானே? அது மாதிரிதான் இங்க.

காய்ந்தன்னு வருதேன்னு சொல்லக் கூடாது. தயிரை யாரும் காய்ச்ச மாட்டாங்க. பாலைத்தான் காய்ச்சுவாங்க.

முளிதயிர் பிசைந்த – தயிருக்குள்ள கைய விட்டுப் பிசைய வேண்டியிருக்கு. ஏன்? தயிர் ரொம்பக் கெட்டி. அந்தக் காலத்துல மண்பானையிலதான் தயிர் இருக்கும். அதுல பானைல நீர்ச்சத்து லேசா கசிஞ்சி இந்தப் பக்கம் விட்டுரும். தொட்டுப் பாத்தா சில்லுன்னு இருக்கும். லேசா ஈரமாவும் இருக்கும். அதுல தேங்காச் சில்லு போட்டு வெச்சா கூட ஒரு நாளைக்குப் புளிக்காம இருக்கும். இதுதான் ஒருநாள் தயிராச்சே. தேங்காச் சில்லும் போடல. நல்லா கட்டியா இருக்கு. கைய விட்டுப் பெசஞ்சாதான் பக்குவம் வரும்.

சரி. புளிப்பான தயிரைப் பிசைஞ்சாச்சு. அடுத்து என்ன பண்ணனும்? தாளிச்சிட்டு அதுல தயிரைக் கொட்டனும். ரொம்பக் கொதிக்க விடக் கூடாது. மோர்க்கொழம்புக்கு ஒரு கொதி. புளிக்கொழம்புக்கு நல்லாக் கொதி.

அடடா. தாளிக்கனும்னா… சட்டிய அடுப்புல வைக்கனும். எண்ண ஊத்தனும். அதுல கடுகு உழுந்தெல்லாம் போடனும். அடுத்து காஞ்ச மெளகா ஒன்னு முழுசாப் போடனும். அப்புறந்தான் பிசைஞ்ச தயிர ஊத்தனும்.

ஆனா கையில தயிராயிருக்கே. அப்பல்லாம் அடுப்படி மேடையிலேயா குழாய் இருந்துச்சு? எல்லாம் கரித்துணிதான். அதுலதான் கையத் தொடைக்கிறது. அதுலதான் கரண்டியப் பிடிக்கிறது. அதுலதான் பாத்திரத்த எறக்குறது.

ஆனா இந்தப் பொண்ணு கட்டீருக்குற சேலையிலேயே தொடச்சிர்ரா. படக்குன்னு வேலையாக வேண்டாமா. வெளிய போனவன் பசிக்குதுன்னு கத்திக்கிட்டிருக்கான்.

காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
மெல்லிய காந்தள் மலர் போன்ற விரல்களைக் கலிங்கத்தில் (துணியில்) துடைத்துக் கொண்டு… அந்த அழுக்கான உடையையே உடுத்திக் கொண்டு வேலையைத் தொடர்ந்து செய்தாள். சமையல் ஆக வேண்டாமா? ஒவ்வொரு வாட்டியுமா கைகழுவ முடியும்?
கழாஅது உடீஇ – இதுல உடீங்கிறது உடுத்துறது.

கையத் தொடச்சாச்சு. சட்டிய வெச்சாச்சு. எண்ணெய் காஞ்சாச்சு. கடுகு உழுந்து வெடிச்சாச்சு. அடுத்து மெளகா வத்தல். படபடன்னு வெடிக்குது. பொகை. கண்ணு எரிச்சல். அப்படியே கண்ணீர் வருது. அதையெல்லாம் பாத்தா எப்படிக் கொழம்பு வைக்கிறது? அதான் “குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்”.

கொழம்பு வெச்சாச்சு. அதுதான் “தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்”. தீம்புளிப் பாகர்னு சொல்றத நல்லாக் கவனிக்கனும். மோர்க்கொழம்பு ரொம்ப ஒறைக்காது. பாலில் இருக்குற லேசான இனிப்பு தயிர் வழியா கொழம்புக்கும் வந்துருச்சு. ஆனா புளிப்பும் இருக்கு. அதான் தீம்புளிப்பாகர். அதுதான் மோர்க்கொழம்புக்குப் பழைய பேரு.

சோறு ஏற்கனவே பொங்கியாச்சு. கணவனை உக்கார வெச்சி, எலையப் போட்டுச் சோறப் போட்டுப் பரிமாறுறா. இவ புதுசா சமைக்கிறவ. கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கு. இருந்தாலும் இந்தப் பய காஞ்சமாடு கம்பங்கொல்லைல மேஞ்ச மாதிரி ருசிச்சி ருசிச்சிச் சாப்புடுறான்.

“இன்னைக்கு நானே மோர்க்கொழம்பு வெச்சேன். ஒன்னும் சொல்லாமச் சாப்புடுறீங்களே”

“அட. இவ்வளவு நல்லாருக்கு. எடுத்துச் சாப்டப் பெறகு இன்னும் சாப்புடத் தோணுதே தவிர.. பேச்சே வர மாட்டேங்குதே. இதுக்குத்தான் நீ நல்லாச் சமைக்கக் கூடாதுன்னு சொல்றது.”

அவளுக்கு அப்படியே பறக்குறாப்புல இருக்கு. மொகமெல்லாம் மலர்ச்சி.

இப்பிடி ஒரு இன்பம். குடும்பந்தானே. எல்லாம் இருக்க வேண்டியதுதான்.

அதுதான் “இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே”

இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகன்
இந்த இடத்துல மகிழ்ச்சியை விளக்க முடியாது. ஒரு இங்கிதமான மகிழ்ச்சி. அதான் நுண்ணிய மகிழ்ச்சின்னு சொல்றாரு புலவரு. கதைப்படி செவிலித் தாய்.

ஒள்நுதல்னா என்ன? ஒளி பொருந்திய நுதல். நுதல்னா நெற்றின்னு சொல்ல வேண்டியதில்லைன்னு நெனைக்கிறேன். நுதல்விழியான் கோட்டம்னு மதுரைல இருந்த சிவன் கோயிலுக்கு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துல சொல்றாரு.
முகன் – முகம்.

இதுதாங்க பாட்டோட பொருள்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இலக்கியம், கதை, குறுந்தொகை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள். Bookmark the permalink.

6 Responses to செந்தில்நாதன் – 2 – தமிழ்க்கொழம்பு

  1. இந்தா பாரு. எங்கூரு ஆளுங்களைப் பத்தி தொணதொணக்கற வேலை எல்லாம் தப்பு. பேயாம இருந்தியானா அது நல்லது. புரியுதா…

    அம்பி சங்கர்ராமா, ஜிராவுக்கு ஒரு பொட்டலம் அல்வா வாங்கியாந்து குடு.

    ஆமாம், யாருலே சொன்னா வெண்டைக்காய வத்தக்கொழம்புல போட முடியாதுன்னு சொன்னது. நாங்க போடுவோம். அப்படியேவும் போடுவோம். அதை மோர் சேத்து காய வெச்சு, எண்ணெயில பொரிச்சு எடுத்தும் போடுவோம். விசயம் தெரியாமப் பேசறதே பொழப்பாப் போச்சு.

    விடு, தூத்துக்குடி காரய்ங்க கிட்ட போயி நல்ல சாப்பாட்டைப் பத்திப் பேசுதேன்பாரு. என்னியத்தேன் சொல்லணும்…. 🙂

    • GiRa ஜிரா says:

      அண்ணா, சங்கர்ராமன் நல்லவருதான். 🙂 செந்தில்நாதனுக்கு அப்பளக்கட்டு வத்தல் காப்பி எல்லாம் குடுக்குறாரே. 🙂

      ஒரு பொட்டலம் அல்வாவா… ஆகா. ஆகா. பேஷாத் திம்பேனே 🙂

      வெண்டக்காய வத்தக்கொழம்புல போட்டு இப்பத்தான் கேள்விப்படுறேன். வெண்ட வத்தல் தெரியும். அதையும் கொழம்புல போடலாம்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். 🙂

      தூத்துக்குடி குறைச்சலா? அந்த மக்ரூனும் தேங்காபன்னும் வேற எங்கயும் கெடைக்காதே! போன வாட்டி திருச்செந்தூர் போனப்போ ஒரு டசன் தேங்காபன்னு வாங்கி பிரிஜ்ஜுல வெச்சி வெச்சி மைக்ரோவேவ் அவன்ல சுட்டு சுட்டுத் தின்னேனே 🙂

  2. கீரைக்கும் மோருக்குக்கும் பாடி “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் மொரமொரெனவே புளித்த மோரும் கிடைத்தால்” உலகையே ஈடாகத்தரலாம் என்ற அவ்வை வாழ்ந்த பூமியல்லவா..!
    ;-))
    உண்மைதான்.. புளிக்கொழும்பை சற்றே காரம்தூக்கலாக செய்தால் அது காரக்கொழம்பு தான்..! நானே பண்ணிருக்கேனே..!

  3. கொஞ்சம் காலம்தாழ்த்தி சொல்றேன், இருக்கட்டும்! 😉

    “உணவு” மனிதனின் வாழ்வில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றும், அன்றும் ஒருவர் வாழ்ந்த வாழ்கையை, அவர் உண்ட உணவை கொண்டு சிறப்பிதோ, சில வேலைகளில் தூற்றியோ பேசுவது இயல்பு.

    இப்போதும் கூட, எந்த பெரிய சாதனைகளுக்கும் (சிறியவற்றுகும்) உணவகங்களுக்கு சென்று விருந்து கொடுப்பது நடைமுறைதானே!

    இலக்கியங்களில் எவ்வளவு பாடல்கள் இது போல இருக்கும் ?! தெரிஞ்சவங்க யாரவது சொல்லுங்க.

    நான் படித்து நினைவில் இருக்கும் பாடல் ஒன்னு, ஒளவையார் சொன்னது:

    காணக் கண்கூசுதே கையெடுக்க நாணுதே
    மாண்ஒக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கு என்
    என்பெல்லாம் பற்றி எரியுதே ஐயையோ
    அன்பில்லாள் இட்ட அமுது.

    இதில், “அன்பில்லாள்” என்ற வார்த்தையை அன்பு மிகுந்த இல்லாள் என்று பிரித்து ஒரு பொருளும், அன்பு இல்லாதவள் என்று பிரித்து வேறு ஒரு பொருளும் கொள்ளலாம்.

    இன்னுமொரு நாலடியார் பாடலில் செல்வ நிலையாமை வலியுறுத்த ஒருவர் உண்ட உணவை சுட்டி (அறுசுவை உணவும், கூழையும்) கூறுவர்.

    அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
    மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
    சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று
    உண்டாக வைக்கற்பாற் றன்று.

    கலவிக்கு பின் உணவு தான் மனிதனுக்கு பரவசத்தை எளிதில் தரக்கூடியது.

    • GiRa ஜிரா says:

      காலத்தில் தாழ்ந்ததும் இல். உயர்ந்ததும் இல்.

      ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 🙂 அடியார்க்கு மிகவே 🙂

      நீங்க பின்னூட்டம் இட்டது மகிழ்ச்சியளிக்கிறது. 🙂

      மிக அழகான பாடல்களைச் சொல்லி விளக்கியிருக்கின்றீர்கள். உண்மை. உணவு என்பது கலவிக்கு அடுத்து அனைவரையும் உடனே இன்புற வைப்பது. கலவியாவது பருவத்தில் மட்டும் சிறக்கும்.

      குழவி முதல் கிழவி வரை சுவைத்து அனுபவிப்பது உணவே.

      ஆனாப்பட்ட அவ்வைக் கிழவியே வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்னு முருங்கைக் கீரைக்கு மயங்கியிருக்கும் போது நாமெல்லாம்…. 🙂

      க்க்வ்க

I am eager to hear what you want to say. Please say it. here. :)