ஆண்டவனே கொஞ்சம் அறிவைக் கொடு

ஒரு நிகழ்ச்சில வீணையிசையா கேட்டதிலிருந்து இந்தத் திருப்புகழ் மேல ஆர்வம். ரெண்டே வரிதான். ஒவ்வொரு வரியும் எட்டு சீர். லேசா நினைவுல வெச்சுக்க வசதியானது.

கருவூர்னு சொல்லப்படுற கரூர் திருப்புகழ். கரூர் சேரநாடா சோழநாடான்னு பலருக்கு குழப்பம். சேரநாட்டின் வட எல்லைதான் வஞ்சி(கரூர்). அப்பப்போ சோழன் வந்து சண்டை போட்டு பிடிச்சு வெச்சுக்குவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாட்டோட இருந்திருக்கு கரூர். இத்தனைக்கும் கரூரை சேர சோழ பாண்டிய நாட்டின் முக்கூடல்னு சொல்லலாம். ஊர் அமைஞ்சிருக்கும் எடம் அப்படி. அதுனாலதானோ என்னவோ கரூருக்கு வஞ்சி முற்றம்னு இலக்கியங்கள் பேர் சொல்லுது. ஆன்பொருநை ஆற்றக்கரையில் இருக்கும் ஊர். பின்னாளில் அமராவதின்னு மாத்தப்பட்டிருக்கு. பொருநைன்னு பேர் இருந்த ஆறுகளுக்கு மட்டும் பெயர் மாத்தியிருக்குறது ஏன்னு யோசிக்கிறேன். தெரியல. பொருநை -> தாமிரபரணி. ஆன்பொருநை -> அமராவதி.

கரூரை சேர நாட்டோட பழைய தலைநகரம்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுல எனக்கு உடன்பாடில்ல. மூன்று நாடுகளும் முக்கூடும் எடத்துல தலைநகரத்தை வைக்கிற அளவுக்கு சேரர்கள் இருந்திருக்க மாட்டாங்க. வஞ்சின்னு இன்னொரு ஊரும் உண்டு. இன்னைக்கு அதை கொடுங்காளூர்னு சொல்றாங்க. அதுதான் சேரனுடைய தலைநகரம் வஞ்சி. இந்த வஞ்சியைப் பத்தி இன்னொரு பொழுது பாக்கலாம். இப்ப கரூர் வஞ்சிக்கு வருவோம்.

Karur - 1கரூர் மக்களுக்கு தாந்தோனி மலை நல்லாத் தெரிஞ்சிருக்கும். தான் தோன்றி மலைன்னு பெயர்க்காரணம் வேற சொல்வாங்க. ஆனா அது தப்புன்னு எத்தனை பேருக்குத் தெரியும்? சங்க இலக்கியம் படிச்சா பல ஊர்களுக்குப் பின்னால் இருக்கும் பெயர் வரலாறு புரியும். தாமான் தோன்றி அந்த ஊரோட பேர். தாவுகின்ற மான் தோன்றும் ஊர். அங்க இருக்கும் மலை தாமான் தோன்றி மலை. அந்த ஊரை ஆண்ட சேரர் வழிச் சிற்றரசன் தாமான் தோன்றிக்கோன். தானாய்த் தோன்றிய மலைன்னு சொன்னா கேக்கும் போது அப்படியே புல்லரிக்கும். ஆனா எல்லா மலைகளுமே தானாய்த் தோன்றியதுதான்னு நாம யாரும் யோசிக்க மாட்டோம்.

Pasupatheeswarar-Temple-(17)_original_watermarkகரூர்ல சின்ன வயசுல இருந்திருக்கேன். பசுபதீசுவர் கோயில் வீட்டிலிருந்து நடக்குற தூரம். அந்தக் கோயில்ல நுழைஞ்சதும் உள்ள இருக்கும் மண் தரை ரொம்பப் பிடிக்கும். இப்பல்லாம் கல் பாவியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அந்தக் கோயில் முருகன் மேல அருணகிரிநாதர் பாடியதுதான் இந்தத் திருப்புகழ்.

சே… நமக்கு இன்னும் கொஞ்சம் அறிவிருந்தா எங்கயோ போயிருக்கலாம். இப்படி நாம எல்லாருமே எதோவொரு வேளையில நெனைச்சிருப்போம். இப்பவும் கூட நெனச்சுக்கிட்டிருப்போம். அருணகிரிநாதரும் நெனச்சிருக்காரு போல. அதான் எடுத்த எடுப்புலயே “மதியால் வித்தகனாகி”ன்னு தன்னோட விருப்பத்தைச் சொல்றாரு.

ஆனா பாருங்க, அடுத்து “மனதால் உத்தமனாகி”ன்னு கேக்குறாரு. இத நாம யாரும் பொதுவா விரும்ப மாட்டோம். ஏன் தெரியுமா? நாமள்ளாம் நம்மையே உத்தமர்கள்னு நம்புற அளவுக்கு சுயபோதை உள்ளவங்க. சுயமோகர்னும் சொல்லிக்கலாம். வேற யாரோட பேரோ நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை. இப்படி ஏற்கனவே உத்தமரா இருக்குற நாம ஏன் உத்தமனாகனும்னு கேக்கப் போறோம். ஆனா முருகக் கடவுளே வந்து பாடம் சொன்ன அருணகிரிநாதர் மனதால் உத்தமனாகனும்னு கேக்குறாரு.

இந்த வரிசைல ஒரு மறை பொருள் இருக்கு. மொதல்ல அறிவு வேணும். அறிவிருந்தா எதையும் கழட்டி மாட்டலாம். வேண்டியபடி செய்யலாம். ஆனா அறிவு நல்லதையும் அறியும். கெட்டதையும் அறியும். அப்படி அறிஞ்ச வித்தகன் நல்லது சொல்ற வழியில் போகனும்னா அவன் உத்தமனாகவும் இருக்கனும். இல்லாட்டி படிச்சவன் செய்ற தப்புதான் பெரிய தப்பாயிருக்கும். அறிவில்லாதவன் நல்லதும் செய்ய மாட்டான். கெட்டதும் செய்யமாட்டான். படிச்சவனைப் பாத்துதான் பயப்பட வேண்டியிருக்கு.

சரி. வித்தகனாயாச்சு. உத்தமனாயாச்சு. அடுத்து?

மனதில் சிவஞானம் பதிவாக வேண்டும். அப்ப வைணவர்களுக்கு? யாராக இருந்தாலும் இறைவனைச் சிந்திக்கிற எண்ணம் மனதில் பதிவாக வேண்டும். அப்படிப் பதிஞ்சாதான் பரயோகம் கிடைக்குமாம். பரயோகம்னா என்னன்னு புரியலைன்னா ஜென்நிலைன்னு வெச்சுக்கோங்க. ஜென்நிலை வேணும்னு கேக்குறாரு அருணகிரி.

முதல்ல வித்தகனாகி, பிறகு உத்தமனாகி, மனதில் இறைச்சிந்தனை பதிவாகி, ஜென்நிலையைக் கொடு!

இதுதான் முதல் வரி.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே!

அப்போ ரெண்டாவது வரி?

யார் கிட்ட இந்த வரத்தைக் கேக்குறாருங்குறதுதான் ரெண்டாவது வரி.

நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய் கதியே சொற்பரவேளே

என் செல்வமே! என்றைக்கும் நிலைத்திருக்கும் பொருளே! என் நினைவே! சிறந்ததில் எல்லாம் சிறந்த பெரும்பொருளே! என்னுடைய புகலிடமே! ஊர் புகழும் தலைவனே!

கருவூரிற் பெருமாளேகருவூரில் இருக்கும் முருகப் பெருமாளே!

அவ்வளவுதான் பொருள். இந்தத் திருப்புகழை நீங்க திரும்பத் திரும்ப படிக்கும் போது அதுக்குள்ள இன்னும் பல பொருள் படிமங்களாக உங்க அறிவுநிலைக்கு ஏத்த மாதிரி புரியலாம். ஆனா அடிப்படைப் பொருள் இதுதான்.

Murugan WOP 1ஆண்டவா! அறிவைக் கொடு. அந்த அறிவை வைத்து தவறு செய்யாமல் நல்லது மட்டும் செய்யும் உத்தமனாக்கு. உத்தமமான உள்ளத்தில் உன் நினைவைக் கொடு. அந்த நினைவினால் மேலான யோகநிலையில் என்னை நிலை நிறுத்து. ஆண்டவா! என் செல்வமும் நீ! என்றும் நிலைத்திருக்கும் அருளும் பொருளும் நீ! என் நினைவும் நீ! பேரின்பப் பொருளும் நீ! எனக்கு கதியும் நீ! உலகம் போற்றும் பெரும்பொருளும் நீ!

அருணகிரிநாதர் முருகனேன்னு போட்டிருக்காரு. நீங்க உங்களுக்குப் பிடிச்ச பேரைப் போட்டுக்கலாம்.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
           பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
நிதியே நித்தியமே என் நினைவே நற்பொருளாயோய்
           கதியே சொற்பரவேளே கருவூரிற் பெருமாளே

இந்தத் திருப்புகழை ஓதுவார் பா.சற்குருநாதன் அவர்கள் குரலில் கேட்க.

இந்தப் பாடலை கர்நாடக இசைப்பாடகர்களும் பாடியிருக்கிறார்கள். ஆனால் உத்தமனாகி என்பதை உதமனாகி என்று ஓடுகிறார்கள். ஓதுவார் பா.சற்குருநாதன் பாடியது சிறப்பாக இருக்கிறது. இவர் பாடி வலையேற்றியிருக்கும் மற்ற பதிகங்களும் அருமை.

அன்புடன்,
ஜிரா

Advertisements
Posted in அருணகிரிநாதர், இறை, இலக்கியம், கரூர், தமிழ், தாந்தோன்றிமலை, திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , , , , | Leave a comment

04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

DbsLhGvVQAA5_as1970களில் குழந்தைப் பாடகியாகவே அடையாளம் காணப்பட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. திக்குத் தெரியாத காட்டில் படப் பாட்டு அதை மேலும் உறுதி செய்தது. பாடகி புஷ்பலதாவை குழந்தைப் பாடகியாக எம்.எஸ்.வி ராஜபார்ட் ரங்கதுரையில் அறிமுகப்படுத்திய பிறகும் சில நல்ல குழந்தைப்பாடல்கள் இவர் குரலில் கிடைத்தன

ஒரு குடும்பம் காட்டுக்குப் போகிறது. அங்கு அவர்கள் செல்லமகள் தொலைந்து போகிறாள். அதே காட்டுக்குள் சிறையில் இருந்து தப்பித்த கைதிகள். அவர்களைப் பிடிக்க காவல்காரர்கள். காட்டுக்குள் விளையாட்டுத்தனமாய் வந்த இளைஞர் கூட்டம். காட்டு விலங்குகள். இதை வைத்து எடுக்கப்பட்ட படம் திக்குத் தெரியாத காட்டில். இந்தப் படத்தில் வாலி எழுதிய “பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா” பாடலை மெல்லிசை மன்னர் இசையில் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

நான் ஏன் பிறந்தேன் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் அவினாசி மணி எழுதிய “தம்பிக்கு ஒரு பாட்டு, அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு” என்ற பாடலை பேபி இந்திராவுக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடினார். இந்தப் பாடலில் மற்றொரு குழந்தைக்காக எல்.ஆர்.அஞ்சலி பாடினார்.

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில் பாடுவதற்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் அதுவும் குழந்தைப் பாடலே. டி.ஆர்.ராமண்ணா இயக்கிய சக்திலீலை திரைப்படத்தில் “தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்” என்ற பாடலைப் பாடினார். பாட்டுக்கு நடித்த சிறுவனின் பெயர் தெரியவில்லை.

Nayakan_1987_posterபாடகர்களுக்கு வாய்ப்பு வருவதும் குறைவதும் விதியின் வழி என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமலகாசனுக்கு களத்தூர் கண்ணம்மாவில் முதன்முதலில் பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி, மீண்டும் கமலகாசன் படத்தில் பாடுவதற்கு 27 ஆண்டுகள் பிடித்தன.

இசைஞானி இளையராஜாவின் 400வது படம் என்ற பெருமையோடு வெளிவந்த படம் நாயகன். அந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் தான் மறந்த பாடகியின் குரலை மீண்டும் கேட்டது. புலவர் புலமைப்பித்தன் எழுதிய “நான் சிரித்தால் தீபாவளி” என்ற பாடலே அது. அந்தப் பாடலை ஜமுனாராணியோடு சேர்ந்து பாடினார். பாடல் நடக்கும் காலகட்டத்தைக் குறிக்க இளையராஜா எம்.எஸ்.ராஜேஸ்வரியையும் ஜமுனாராணியையும் பாடவைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிஎம்மின் பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் கார் கார் சூப்பர் கார் பாடலை அவர் சந்திரபோஸ் இசையில் பாடியிருந்தாலும், படத்தில் அந்தப் பாட்டின் சிறுபகுதி மட்டுமே வந்தது. அதேபோல் சந்திரபோஸ் இசையில் ”என்ன கத சொல்லச் சொன்னா” பாட்டை ஏவிஎம் நிறுவனம் தயாரித்த தாய் மேல் ஆணை படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஏசுதாசோடு பாடினார். இந்தப் பாட்டில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலுக்கு மாஸ்டர் மீனுராஜ் வாயசைத்து நடித்தார்.

கிட்டத்தட்ட தமிழகம் மறந்து போன குரலை 1990ல் முற்றிலும் எதிர்பார்த்திருக்காத ஒரு பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க வைத்தது. பாடல் + படத்தின் வெற்றி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலை மற்ற மொழிகளுக்கும் கொண்டு சென்றது. அந்தப் பாடல்…

அஞ்சலி படத்தில் பிரபலமான பேமி ஷாமிலிதான் துர்கா படத்தின் பெரிய மூலதனம். அதோடு குரங்கையும் நாயையும் வைத்து குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து பெருவெற்றி கண்டார் இராம.நாராயணன். அந்தப் படத்தில் பேபி ஷாமிலிக்காக எல்லாப் பாடல்களையும் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதிலும் குறிப்பாக வாலி எழுதிய “பாப்பா பாடும் பாட்டு” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

துர்கா படப் பாடலின் வெற்றியால் பேபி ஷாமிலியை வைத்து பல படங்கள் எடுத்தார் இராம.நாராயணன். அந்தப் படங்களில் எல்லாம் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடுவது என்பது வழக்கமாகிப் போனது. செந்தூரதேவி திரைப்படத்தில் இடம் பெற்ற “யக்கா யக்கா யக்கா யக்கா ஏலக்கா” பாட்டும் அப்படியே. படத்தை மக்கள் மறந்துவிட்டாலும் ஏலக்கா பாட்டு ஏலக்காய் மணம் போல இன்றும் இருக்கிறது.

மூன்று வயது பேபி ஷாமிலிக்கு குழந்தைக் குரலில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடும் போது அவருக்கு வயது 61. ஆனாலும் அவரது குரல் இளமையோடும் பொருத்தமாகவும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இராம.நாராயணனின் தைப்பூசம் திரைப்படத்தில் வந்த “அண்ணே அண்ணே அன்பு அண்ணே நாகராஜண்ணே” பாட்டும் அப்படிப்பட்டதுதான். இந்தப் பாடல்கள் மற்ற மொழியிலும் வெளியானது எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலை பக்கத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றது.

என்னதான் குழந்தைப் பாடகியாக அடையாளங் காணப்பட்டாலும், பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடல்கள் அவரை ஒரு சிறந்த பன்முகப் பாடகியாகவே அடையாளம் காட்டுகின்றன. இந்தப் பதிவுகளின் வழியாக நாம் பார்த்தது சில பாடல்களைத்தான். அவர் பாடிய காவியப் பாடல்கள் இருக்கும் வரை தமிழ் பேசும் பொன்னுலகம் அவரை நினைத்துக் கொண்டேயிருக்கும்.

DbsXOOpUwAAUIQY

அன்புடன்,
ஜிரா

Posted in இசைஞானி, இளையராஜா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், கே.ஜே.ஏசுதாஸ், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், திரையிசை, மெல்லிசைமன்னர், வாலி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 Comments

03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

1950களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசையில் மெல்லிசை அலை தொடங்கி ஆக்கிரமித்த காலகட்டம். டி.எம்.எஸ், பி.சுசீலா போன்றவர்கள் மிக வேகமாக முன்னணிக்கு வந்த காலகட்டம். எந்தக் காலத்திலும் முன்னணி இசையமைப்பாளர் பாட வைக்கும் கலைஞர்களுக்கே புகழும் மற்றவர்களிடமும் பாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் எம்.எஸ்.வி தனது ஆஸ்தான பாடகர்களாக டி.எம்.எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி என்று மாறிவிட்ட போது கேவி.மகாதேவனும் அதே வழியில் செல்ல நேர்ந்தது.

DbsCs5bVMAAWaSVஆர்.சுதர்சனம் வாய்ப்புகள் குறைந்ததும், ஜி.ராமநாதன் மறைவு, எஸ்.வி.வெங்கட்ராமன் போன்ற இசையமைப்பாளர்களின் பின்னடைவும் தவிர்க்க முடியாத சூழலில், எம்.எஸ்.ராஜேஸ்வரின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஏவிஎம் வழியாக இன்னொரு புதிய பாதை திறந்தது. ஒருவகையில் அது முருகன் காட்டிய பாதை. அதுதான் களத்தூர் கண்ணம்மா.

பதிபக்தியிலேயே மெல்லிசை மன்னர்களோடு பீம்சிங் இணைந்துவிட்டாலும் ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்துக்கு ஆர்.சுதர்சனம் இசை. அந்தப் படத்தில் நடிகர் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தைச் சிறுவன் அனாதை இல்லத்தில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்று முருகக் கடவுளைப் பார்த்துப் பாடும் பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கிடைத்தது. பாட்டைப் பார்த்தால் குழந்தைக் கமல் பாடுகிறாரா எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடுகிறாரா என்று நமக்கே ஐயம் வந்துவிடும். அப்படியொரு பொருத்தம்.

படத்தின் வெற்றியும் பாடலின் வெற்றியும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு குழந்தைகளுக்குப் பிள்ளைத் தமிழ் பாடும் பாடகியாக புதியதொரு பாதையைக் கொடுத்தது என்பதே உண்மை. அதே வகையில் அந்த ஆண்டே கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு குழந்தைப் பாடலைக் கொடுத்தார். கைதி கண்ணாயிரம் திரைப்படத்தில் மருதகாசி எழுதிய “சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்” என்ற பாட்டு அது. சிறுவனாக நடித்த பேபி சாவித்திரிக்கு எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் அழகாகப் பொருந்திப் போனது.

குழந்தைப் பாடலாக இல்லாவிட்டாலும் சற்றே குழந்தைக் குரல்தனமான பாடலொன்றை எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு குமுதம் படத்தில் கொடுத்தார் கே.வி.மகாதேவன். மருதகாசி எழுதிய மியாவ் மியாவ் பூனைக்குட்டி என்ற பாட்டுதான் அது.

DbsJfqWUwAAI0Ntகுழந்தைப் பாடல்களைப் பாடத் தொடங்கினாலும் மற்ற பாடல்களும் தொடர்ந்து கிடைத்தது. 1965ல் மெல்லிசை மன்னர் கொடுத்த பாடல் ஒன்று எம்.எஸ்.ராஜேஸ்வரியை நிரந்த குழந்தைப் பாடகியாகவே மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. படம் + பாடலின் வெற்றி அந்த வகை. இன்னும் சொல்லப் போனால் அதே படத்தில் பி.சுசீலாவும் ஒரு குழந்தைப் பாட்டு பாடினார். ஆனாலும் எம்.எஸ்.ராஜேஸ்வரி குழந்தைப் பாடகி முத்திரை தொடர்ந்தது.

ஏவிஎம் தயாரித்த குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் “கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டி கூட்டிலே” என்று குட்டி பத்மினிக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய கண்ணதாசன் பாடலே அது.

அடுத்த ஆண்டும் (1966) மெல்லிசை மன்னர் மற்றொரு குழந்தைப் பாடலைக் கொடுத்தார். அதுவும் எம்.எஸ்.ராஜேஸ்வரியை முதன்முதலில் ஏவிஎம்மில் அறிமுகப்படுத்திய குடும்ப நண்பரான பி.ஆர்.பந்துலு இயக்கிய எங்க பாப்பா திரைப்படத்தில். கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜனோடு சேர்ந்து பேபி ஷகீலாவுக்காக அழகாகப் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

அதே ஆண்டில் இசையமைப்பாளர் வேதாவும் மார்டன் தியேட்டர்சின் இரு வல்லவர்கள் திரைப்படத்தில் ஒரு குழந்தைப் பாட்டு கொடுத்தார். கண்ணதாசன் எழுதிய “குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா” என்ற பாட்டை மீண்டும் பேபி ஷகீலாவுக்காகப் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

கொஞ்சம் கொஞ்சமாக 1960களின் இறுதியில் குழந்தைப் பாடல்கள் என்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்பது நிலைத்துவிட்டது.

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

Posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மருதகாசி, மெல்லிசைமன்னர், வேதா, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 4 Comments

02. 50களில் மெல்லிசை அலையில் படகாக

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

கே.சோமு இயக்கத்தில் 1955ல் வெளிவந்தது டவுன்பஸ் திரைப்படம். இந்தப் படத்தில் அஞ்சலிதேவி பாடுவதாக அமைந்த ஒரு இனிமையான பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியை கே.வி.மகாதேவன் பாட வைத்தார். கா.மு.ஷெரிப் எழுதிய “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா” என்ற பாட்டுதான் அது. ஒருவகையில் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கே.வி.மகாதேவன் இசையில் முதல் பெருவெற்றிப்பாடல்.

1950களில் தமிழ்த் திரையிசையின் பாதை மாறத்தொடங்கியது. கே.வி.மகாதேவன் புகழடையத் தொடங்கினார். 1952ல் எம்.எஸ்.விசுவநாதன் தனியாகவும்(ஜெனோவா) பின்னர் டி.கே.ராமமூர்த்தியோடு இணைந்தும்(பணம்) இசையமைக்கத் தொடங்கினார். மெல்லிசை என்ற புதிய உத்தி திரையிசையின் போக்கை மாற்றத்தொடங்கியது. ஆடல் நாயகிகளுக்கும் காதல் நாயகிகளுக்கும் பாடிக் கொண்டிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு தாய்மை உணர்வு பொங்கும் அதியுன்னதமான ஒரு பாடலை மெல்லிசை மன்னர் பாடவைத்தார்.

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா….. (கண்ணதாசன்)
இப்படியொரு தாலாட்டுப் பாடலை எம்.எஸ்.ராஜேசுவரிக்குக் கொடுத்து அவர் குரலை இப்படியும் சிறப்பாக பயன்படுத்த முடியுமென்று காட்டினார் மெல்லிசை மன்னர்.

கண்ணதாசன் எழுதிய அந்தத் தாலாட்டுப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் மகாதேவி. சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கி எம்.ஜி.ஆர் நடித்த அதே படத்தில் மருதகாசி எழுதிய “காக்கா காக்கா மை கொண்டா” என்ற பாடலையும் எம்.எஸ்.ராஜேஸ்வரியை மெல்லிசை மன்னர் பாடவைத்தார். இதற்கு முன்பு எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கிடைத்த பாடல்களுக்கும் மகாதேவி கொடுத்த பாடல்களுக்கும் பெரும் வேறுபாடு இருப்பதை உணரலாம்.

இதோடு நிறுத்திவிடவில்லை மெல்லிசை மன்னர். கவியரசர் தயாரித்து பாடல்களை எழுதிய மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் மற்றொரு காவியப் பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குக் கிடைத்தது. துவண்ட உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற கவியரசரின் அந்தப் பாடல் சாகித்ய அகாதமியால் பதினாறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.
”மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்”

எம்.எஸ்.ராஜேஸ்வரியை மெல்லிசை மன்னர்கள் தாலாட்டுப் பாட்டு பாட வைத்ததை கே.வி.மகாதேவன் கவனித்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டே (1958) அவரும் ஒரு தாலாட்டுப் பாட்டு தந்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில் கே.முத்துசாமி எழுதிய “மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்குக் இலை பாரமா” என்ற இனிய தாலாட்டுப் பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குக் கிடைத்தது.

அதே போல ஒரு நல்ல பாட்டு படிக்காத மேதை படத்தில் கிடைத்தது. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” என்ற பாடல்தான் அது.

1950களிலும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு சிறப்பாகப் பேர் சொல்லும் இனிய பாடல்கள் கிடைத்தன. ஆனால் 1960களில்…

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

Posted in எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மெல்லிசைமன்னர், Uncategorized | Tagged , , , , , , , , | 4 Comments

01. ஏவிஎம் என்னும் ஏணி

MSRajeswariபாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி ஏப்ரல் 25, 2018 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்து பாடிக் கொண்டிருந்த ஒரு பாடகியின் மறைவுக்கு யாரும் சென்று மரியாதை செய்யாத நிலையில்தான் இன்றைய உலகம் இருக்கிறது. அவரைப் பற்றிய சில தகவல்களோடு அவர் பாடிய சில பாடல்களையும் இந்தப் பதிவின் வழியாக நினைவுகூர விரும்புகிறேன்.

எம்.எஸ்.ராஜேஸ்வரி என்றால் மதுரை சடகோபன் ராஜேஸ்வரி. மதுரை சடகோபன் – ராஜசுந்தரி தம்பதியிருக்கு சென்னை மயிலாப்பூரில் பிப்ரவரி 24, 1932ல் இவர் பிறந்ததாக விக்கிபீடியா தகவல் கூறுகிறது. சிறுவயதிலிருந்தே பாடுவதில் விருப்பமுள்ளவராக இருந்திருக்கிறார். குடும்ப நண்பர் பி.ஆர்.பந்துலு வழியாக திரைப்பட வாய்ப்பு 1946ல் கிடைக்கிறது. விஜயலட்சுமி திரைப்படத்தில் ”மையல் மிகவும் மீறுதே” என்ற பாடலை ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையமைப்பில் பாடினார்.

அந்தக் காலத்தில் உலகப்போரினால் ஏவிஎம் நிறுவனம் சிலகாலம் காரைக்குடியிலிருந்து இயங்கியது. இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் வழியாக ஏவிஎம்மின் அறிமுகம் கிடைத்து மாதச் சம்பளப் பாடகியாக வேலையில் சேர்கிறார். அதற்குப் பிறகு எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இசைவாழ்க்கையில் சிறப்பான ஏறுமுகம்.

இன்று குழந்தைப்பாடகி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் இசைப்பயணத்தின் தொடக்கத்தில் எல்லாவிதமான பாடல்களையும் பாடியிருக்கிறார். குறிப்பாக குமாரி கமலாவின் நடனத்துக்கு இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் அவரது முதல் சூப்பர்ஹிட் பாடலாக நாம் இருவர் பாடலைச் சொல்லலாம்.

1947ல் இந்தியா விடுதலையடைந்த பொழுது அதைக் கொண்டாடும் விதமாக ஏவிஎம் எடுத்த திரைப்படம் நாம் இருவர். படத்தில் நிறைய பாரதியால் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆர்.சுதர்சனத்தின் இனிமையான இசை. டி.ஆர்.மகாலிங்கம், டி.கே.பட்டம்மாள், டி.எஸ்.பகவதி போன்ற பெரிய பாடகர்கள் பாடியிருந்தாலும் நாம் இருவர் என்று சொன்னதுமே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பாடல் “மகான் காந்தியே மகான்”. கே.பி.காமாட்சிய எழுதிய பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடியிருந்தார். மகான் என்ற சொல்லை ம…ஹ்ஹான் என்று லேசாக எம்.எஸ்.ராஜேஸ்வரி இழுத்துப் பாடியது பிரபலமானது.

அடுத்த ஆண்டே ஏவிஎம்முக்கு மற்றொரு வெற்றிப்படம் வேதாள உலகம். ஒருவகையில் நகைச்சுவை ததும்பத் ததும்ப ஏவிஎம் இயக்கிய படம். Demon Land என்று படத்தில் தொடக்கத்தில் ஆங்கிலப்படுத்தப்பட்ட தலைப்பு வரும். சுவரொட்டிகளிலும் ஆங்கிலத்தில் விளம்பரம் செய்யப்பட்ட படம். ஏவிஎம் அறிமுகப்படுத்திய டி.ஆர்.மகாலிங்கம் இந்தப் படத்திலும் நடித்தார். இசை ஆர்.சுதர்சனம். இந்தப் படத்திலும் பாரதியார் பாடல்கள் நிறைய பயன்படுத்தப்பட்டன. கதையில் இல்லாவிட்டாலும் இணைக்கப்பட்ட வழக்கமான குமாரி கமலாவின் நடனம் படத்தில். படத்தில் ஐந்து பாடல்களை எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடியிருந்தாலும் டி.எஸ்.பகவதியோடு இணைந்து பாடிய ஓடி விளையாடு பாப்பா பாடல் இனியது.


அடுத்த ஆண்டு ஏவிஎம் ஆர்.சுதர்சனம் கூட்டணியில் மற்றொரு மாபெரும் வெற்றிப்பாடல். நடிகை வைஜயந்திமாலா அறிமுகமாகிய வாழ்க்கை திரைப்படத்தில் கே.பி.காமாட்சி எழுதி எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய ”எண்ணி பார்க்கும் மனம்” தான் அது.

”துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா”
பாவேந்தரின் நெகிழவைக்கும் இந்த வரிகளை யாரும் எளிதில் மறந்துவிடமுடியாது. இந்தப் பாடலை திரைப்படத்தின் வழியாக அழியாத காவியமாக மாற்றினார் ஆர்.சுதர்சனம். அறிஞர் அண்ணா எழுதிய ஓர் இரவு கதையை ப.நீலகண்டன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்தது. வழக்காமக பாரதியார் பாடல்களைப் பயன்படுத்தும் ஏவிஎம் இந்த முறை பாவேந்தர் பாரதிதாசனின் ”துன்பம் நேர்கையில்” பாடலைப் பயன்படுத்தினார். மற்ற பாடல்களை விட இந்தப் பாடலே பெருவெற்றி பெற்றது என்பது வரலாறு. வி.ஜே.வர்மாவோடு இணைந்து இந்தப் பாடலைப் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

தொடக்க காலத்தில் ஏவிஎம் நிறுவனமும் ஆர்.சுதர்சனமும் இணைந்து நல்ல பாடல்களைக் கொடுத்து எம்.எஸ்.ராஜேசுவரிக்கு தென்னிந்திய மொழிகளில் பாடகியாக சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அந்த வரிசையில் 1952ம் ஆண்டு வெளியான பாட்டு ஒன்று எம்.எஸ்.ராஜேஸ்வரியை இசைவரலாற்றில் நிலைபெறச் செய்தது.

”பராசக்தி”
இந்தத் திரைப்படத்தைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும் தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்றையும் எழுதவே முடியாது. கலைஞர் கருணாநிதியின் சமூகநீதி செறிந்த வசனங்களும், அவற்றைப் பேசி நடித்த அறிமுக நடிகர் (சிவாஜி) கணேசனும் பராசக்தி படத்தின் உயிர்நாடி என்றால், ஒரு குறிப்பிட்ட பாடல் தமிழ் ஒலிக்கும் முக்கு முடுக்குகளிலெல்லாம் ஒலித்தது. இன்றும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. இத்தனைக்கும் அது தாசி ஒருத்தி கதாநாயகனை மயக்குவதற்காக ஆடிப்பாடும் பாட்டு. கே.பி.காமாட்சி எழுதி ஆர்.சுதர்சனத்தின் இசையில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய “ஓ ரசிக்கும் சீமானே வா” என்ற பாட்டு காலகாலத்துக்கும் நிலைத்திருக்கும்.

ஆர்.சுதர்சனம், கோவர்தனம், நௌஷத், எஸ்.வி.வெங்கட்ராமன், எம்.எஸ்.ஞானமணி, ஜி.ராமநாதன், சி.ராமச்சந்திரா ஆகியோர் இசையில் பல பாடல்களைப் பாடிய எம்.எஸ்.ராஜேசுவரிக்கு 1955ல் கே.வி.மகாதேவன் ஒரு மாறுபட்ட பாடலைத் தந்தார். அது….

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

Posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, திரைப்படம், திரையிசை, பழைய படங்கள் | Tagged , , , , , , | 3 Comments

நோதலால் காதல் செய்தார்

மு.கு : இது சும்மா பொழுதுபோக எழுதியது. இதில் உப்பு உறைப்பு குறைவாகவோ கூடவோ இருந்தால் நிறுவனம் பொறுப்பேற்காது. 🙂

Chenni 4கல்லில் உரசிய பசுமஞ்சளை அலையடிக்கும் குளத்து நீர் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தது.

அடி அமுதா, உரசிய மஞ்சளை உடம்பில் பூசிக்கொள்ளாமல் அப்படி என்ன யோசனை?” தானுரசிய மஞ்சளை வானுரசும் நிலவைப் போல பூசிக் கொண்டே கேட்டாள் குமுதாள்.

பூமியே பொசுங்கும் பெருமூச்சோடு, “நான் மஞ்சளை உரசுவது உங்களுக்குத் தெரிகிறது. என் மனசை உரசுவது மட்டும் தெரியவில்லையே. எப்படிச் சொல்வேன்?” என்று இழுத்தாள் அமுதாள்.

உடன் குளித்துக் கொண்டிருந்த பெண்டுகளுக்கு இது காதல் மயக்கம் என்று புரிந்துவிட்டது. சில நாட்களாகவே மந்திரித்த கோழி போல் கிறுகிறுத்துப் போயிருக்கும் அமுதாளை அவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமுதாளின் மனதை உரசும் ஆள் யாரென்று குமுதாளுக்கும் தெரியும். ஆனாலும் மூச்சுவிடவில்லை. மற்ற பெண்டுகளுக்குதான் ஆர்வம் மண்டையைக் குடைந்தது. உறிக்கருவாட்டை மோப்பம் பார்க்காமல் பூனைதான் போகுமா?

யாரவன் என்று சொல்லடி. வெல்லக்கட்டியை மொய்க்கும் எறும்புக்குப் பேர் என்னடி?” அமுதாளை பிறாண்டினாள் வெள்ளித்தண்டை வேம்பு.

கட்டிக் கொள்ளப் போகிறவன் பெயரைச் சொல்வது பெண்களுக்கு வழக்கம் இல்லையடி” என்று வெட்கினாள் அமுதாள்.

பேரைச் சொல்லாவிட்டாலும் ஊரைச் சொல்லடி” என்று அகப்பையை அகப்பை போட்டு கிண்டினாள் உள்ளிக்காட்டு செல்லி.

சென்னிகுளநகர் வாசன்” குளத்தைப் பார்த்து, அதில் தெரியும் தன் முகத்தைப் பார்த்து, முகத்தில் வந்த முருவல் பார்த்துப் பாடினாள் அமுதாள்.

ஓ! சென்னிகுளத்தானா? மையலை வளர்த்தானா? தையலை வளைத்தானா? உனக்காக உள்ளம் தான் இளைத்தானா?” அடுக்கினாள் அகல்விளக்கு அஞ்சலை.

போதும் அஞ்சலை. அடுக்கி அடுக்கி நாக்கு தடுக்கப் போகிறது.” என்ற மாடி வீட்டு மாயள், “சென்னிகுளத்திலே அவன் என்ன செய்கிறான் என்று சொல்லடி” என அமுதாளைக் கேட்டாள்.

தமிழ் தேறும் அண்ணாமலை தாசன்” தொடர்ந்து பாட்டாகவே பாடினாள் அமுதாள்.

ஓ…. தமிழ் படிக்கிறவனா? அதுவும் அண்ணாமலையாரிடம். அப்படியானால் பாட்டு கட்டியே உன்னைக் கட்டுவான். பாவலனை காதல் காவலாக்கப் போகிறாய்.” செல்லி முழக்கினாள்.

தென்றல் கண்ட நாணல் போல தலையாட்டிவிட்டு, அமுதாள் தொடர்ந்து பாடினாள்.

செப்பும் செகமெச்சிய மதுரக்கவி அதனைப் புயவரையில் புனை தீரன். அயில் வீரன்.

பாட்டின் தாளத்துக்கு இசைவாக கால்களை குளத்து நீரில் அடித்தாள் குமுதாள். அப்படித் தெறித்த நீர் தன் மேல் பட்டதைக் கூட பொருட்படுத்தாமல், “ஆள் எப்படி? அழகெப்படி? உன்மேல் அன்பு எப்படி?” என்று வக்கணையாய் சொற்கணை தொடுத்தாள் வேம்பு.

வண்ண மயில் முருகேசன்
குறவள்ளி பதம் பணி நேசன்

Chenni 1திருக்குறளைப் போல மொத்தத்தையும் இரண்டடியில் அமுதாள் பாடியதைக் கேட்டு, “அடடடா” என்ற செல்லி, தொடர்ந்து, “முருகனைப் போல அழகனா? கொடுத்து வைத்தவளடி நீ. வேலையும் பிடிப்பான் உன் காலையும் பிடிப்பான் என்று வேறு சொல்கிறாய். தமிழ்க்குடியில் வள்ளிக்குப் பிறகு இந்தக் கள்ளிக்குதான் இப்படியொரு யோகம்” என்று பெருமூச்செரிந்தாள்.

யோகம் என்னடி யோகம்? அது யோகியருக்கு. போகம்தானடி இல்லறத்தாருக்கு யாகம்.” என்ற மாயாள், “அவனை எங்கு பார்ப்பாய்? எப்படிப் பேசுவாய்? விளக்கமாகச் சொல்லடி?” என்றாள்.

உரை வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே! சொல்வன் மாதே!

அமுதாள் பாடப்பாட அவளோடு சேர்ந்து காதற்குளத்தில் மூக்கு பிடிக்காமல் முழுகினார்கள் எல்லாரும்.

கழுகுமலை முருகன் கோயிலுக்கு நீ விளக்கு போடப்போகும் காரணம் இன்றுதானடி விளக்கமாகப் புரிந்தது. கோயிலில் நீ கழுகாசலபதியைப் பார்த்தாயோ! உனக்கு வரப்போகும் பதியைப் பார்த்தாயோ! மயிலாண்டிக்குதான் வெளிச்சம்!” மூச்சைப் பிடித்து முக்கினாள் செல்லி.

போதுமடி. சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இளம் பருவத்தால் மிளிரும் உருவத்தால் வரும் கருவத்தால் ஒருவரையொருவர் பருகத்தான் செய்த கதைகள் சொல்லுங்களடி. அவையாவும் சுவையாகுமடி!” என்று மடைமாற்றினாள் மாயாள். என்ன இருந்தாலும் மனையாள்கிறவள் அல்லவா.

வெட்கித்துக் குனிந்தாள் அமுதாள். எண்ணித் திளைக்க ஆயிரம் இருந்தாலும் சொல்லித் திளைக்க சொல்லில்லாமல் நாணினாள்.

Chenni 2அவளை விடுங்களடி. கோயில் குளப்படியில் மேற்படியானுக்கு படிப்படியாக இவள் கீழ்ப்படிந்த கதை நான் சொல்கிறேன்.” என்று குறும்பாகச் சொல்லிவிட்டு பாடினாள் செல்லி.

சந்நிதியில் துஜஸ்தம்பம்
விண்ணில் தாவி வருகின்ற கும்பம்

ஸ்தம்பம் எனும் போதும் கும்பம் எனும் போதும் செல்லி காட்டிய சைகளைக் கண்டு எல்லாரும் கிளுக்கென்று சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் அலையடித்து குளத்துத் தண்ணீர் தளுக்கென்று குதித்தது. ஒற்றைக்கால் கொக்காய் வெட்கமானது அமுதாளைக் கொத்தியது. ஆனாலும் செல்லி விடுவதாக இல்லை.

மிக உயர்வானது பெறலால்
அதில் அதிசீதள புயல் சாலவும் உறங்கும். மின்னிக் கறங்கும்.

உள்ளம் ஒப்பிய இருவர் ஒருவருக்கொருவரை ஒப்பிய நிலையில் தருதலும் பெறுதலும் உயர்தினும் உயர்ந்ததன்றோ. இனிதினிலும் இனியதன்றோ. அப்போது வீசும் மையல் புயலின் சுழலில் உயிரும் உடலும் உணர்வும் அடுத்தது இழுக்கப்பட்டு உலகே மறக்குமன்றோ. எல்லாம் வேலனும் வள்ளியும் பண்டு கண்டு சொன்ன பேரின்பங்களன்றோ! ஆதலால் நோதலால் காதல் செய்தாரன்றோ!

—-

பி.கு : இந்தப் பதிவால் யாருடைய மனமேனும் புண்பட்டிருந்தால் கழுகுமலை கோயில் குளப்படிகளில் தலைமுட்டி வேண்டுதல் செய்யின் முருகப் பெருமான் திருவருளால் புண்பட்ட மனம் பண்பட்டுப் போட்டும். அதோடு நல்ல பண் பட்டும் புண் போகும்.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தெனும் ஒப்பற்ற படைப்புகளிலிருந்து ஒரு பாடலை எடுத்து என் போக்குக்கு கற்பனையை ஓடவிட்டதனால் உண்டான பதிவு. அண்ணாமலையார் என்னும் தமிழ்ப் பாட்டனின் தமிழ்ச் சொத்தில் எனக்கும் உரிமை உண்டு என்பதால் எடுத்துச் செய்த பதிவிது.

நாட்டுக் காவடிச் சிந்தாகப் பாடாமல் செவ்விசைச் சாயலில் சுதா இரகுநாதன் பாடியிருப்பதை இங்கு கேட்கலாம். பாடலின் இயல்பான பொருளை தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களாக முழுப்பாட்டையும் சுருக்கமான பொருளோடு கீழே கொடுத்திருக்கிறேன்.

imageசென்னி குளநகர் வாசன், – தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் – செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன்; அயில் வீரன்.

சென்னிகுளத்தில் வாழும் அண்ணாமலை என்னும் தாசன் எழுதிய உலகம் போற்றும் தமிழ்ப் பாக்களை தன்னுடைய மலைபோன்ற தோள்களில் மாலையாகச் சூடிக்கொள்கின்ற முருகனே! வேலேந்தும் வீரனே!

வண்ண மயில்முரு கேசன், – குற
வள்ளி பதம்பணி நேசன் – உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
வாதே சொல்வன் மாதே!

வண்ண மயிலேறும் முருகேசனே! குறவள்ளியின் திருவடிகளில் அன்பு மிகுந்து பணியும் நேசனே! இப்படியெல்லாம் முருகனைப் புகழ்ந்து பாடுகின்ற திறத்தைக் கொடுக்கின்ற கழுகுமலை முருகன் கோயிலின் அருள் வளத்தை நான் மறக்க முடியுமா? சொல்கிறேன் கேள்!

கோபுரத் துத்தங்கத் தூவி, – தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி, – கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.

கழுகுமலைக் கோயிலின் தங்கக் கோபுரத்தின் உச்சியானது, அமரர்கள் வாழும் வானுகலத்துக் கோயில்களையும் தாண்டி அமரர்கள் கண்கள் கூசும்படி பேரொளி வீசி சிறக்கும்! உலகம் முழுவதும் வந்து குலவும் விலாசமாகத் திகழும்!

நூபுரத் துத்தொனி வெடிக்கும் – பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் – அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
நோக்கும் படி தாக்கும்.

கழுகுமலை திருக்கோயிலில் நுழையும் பொழுது, அழகிய நுண்ணிடை மாதர்களின் ஆடலால் சலங்களின் ஓசை வெடிக்கும். அங்கு செல்வோர் செய்யும் முழவு ஓசைகளைக் கேட்டால், உலகத்தைத் தாங்குகின்ற ஆதிசேடனே அஞ்சும்படியான இடியோசையோ எனும்படி இருக்கும்!

சந்நிதி யில்துஜஸ் தம்பம், – விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் – எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உச்சியில் கும்பத்தைக் கொண்டுள்ள கோயில் கொடிமரமானது விண்ணில் தோன்றுகின்ற கும்பம் மீனம் போன்ற விண்மீன் கூட்டங்களையே கொடிகளாகக் கொண்டு உயர்ந்தோங்கியது!

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
உம்பர் நகருக்கு மிஞ்சி – மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
உறங்கும்; மின்னிக் கறங்கும்.

கழுகுமலைக் கோயிலின் மதிலானது அமராவதியின் மதிற்சுவரை விடவும் சிறப்பானதாகையால், அதற்குள் கடுங்குளிர் மிகுந்த புயல்கூட தப்பிக்க முடியாதபடி மின்னிச் சுழலும்படி வலிவானதாகும்!

அருணகிரி நாவில் பழக்கம் – தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

திருமுருகனை வணங்க வரும் அடியவர் கூட்டத்தினர் பாடுகின்ற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழக்கமானது, அமராவதியில் இருக்கின்ற இமைக்காத அமரர்கள் கூட்டத்தினரின் காதுகளையும் அடைக்கும்! அண்ட கோளங்களையும் உடைக்கும்!

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் – கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்.

கருணை நிரம்பிய முருகனைப் போற்றி தங்களுடைய தோளின் மேல் காவடி சுமந்து அனலிட்ட மெழுகு போல உள்ளம் உருகி அன்போடு வருகின்றவர்கள், இந்த வாழ்க்கையில் சிறந்திருவர்! என்றும் இன்புறுவர்!

அன்புடன்,
ஜிரா

Posted in அண்ணாமலை ரெட்டியார், இறை, இலக்கியம், காவடிச்சிந்து, தமிழ், முருகன் | Tagged , , , , , , , , , , , | 2 Comments

சளிப்பெயர்ச்சி பலன்கள்

கலி கலி என்று கிலியோடு சொல்லப்படுகின்ற இந்தக் கேடுகெட்ட கலிகாலத்திலே, பகவான் எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தி நமக்கெல்லாம் பொழுது போக்காக இருந்திருக்கிறார். அப்படியான லீலைகளில் அனைவரிடத்திலும் ஈச்வரன் விளையாடிய விளையாடிக் கொண்டிருக்கும் இன்னும் விளையாடப் போகும் ஒரு திருவிளையாடலைத்தான் இன்று உங்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறேன்.

Chal 1க்ருஹங்களிலே எப்படி ஈச்வர பட்டம் பெற்றவராக சனீச்வர பகவான் இருக்கிறாரோ, அப்படியே ஜுரங்களிலேயே ஈச்வர பட்டம் பெற்றவராக சளீச்சுவர மூர்த்தி திகழ்கின்றார். இவருடைய திருவிளையாடல்களையும் பெருமைகளையும் தோஷங்களையும் பரிகாரங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள்.

ஜீவாத்மாக்களாகிய நாம் பாவாத்மாக்களாகி செய்யும் காரியங்களால் எத்தனையோ தோஷங்கள் நம்மைப் பிடித்து இடித்து கடித்து வைக்கின்றன. அந்த தோஷங்களிலேயே மோசம் ஜலகண்ட தோஷம். கண்ட ஜலங்களையும் கண்ட வேளையில் குடித்த தோஷம் கண்டத்திலே ஜலமாகத் தங்கிவிடும் தோஷம்தான் ஜலகண்டதோஷம். கண்டஜலதோஷம் என்றும் இதை புராணங்கள் சொல்கின்றன. சளீச்சுவர பகவானின் கோபத்தினால் உண்டாகும் மகாதோஷமிது.

Chal 2அமராவதியில் இருக்கக்கூடிய தேவேந்திரனாகப்பட்டவன், எப்போதும் ஊர்வசி ரம்பை மேனகை திலோத்தமை, ஸ்கார்லட் ஜோகன்சன், எம்மா வாட்சன் ஆகப்பட்ட அப்சரஸ்களின் சரசானந்தத்திலேயே மஜாக்கையாக இருப்பதால் நித்யஜலகண்ட தோஷத்தினால் பீடிக்கப்பட்டான். சளீச்சுவர நிந்தனையால் உண்டான இந்த தோஷம் விலக வேறு வழியே இல்லாமல் சோமபான போகமும் சுராபான போகமும் செய்ய வேண்டிவந்தது. தேவேந்திரனுக்கே இந்த கதி என்றால் மண்ணில் சொல்ப காலம் வாழப் போகும் அல்பமாகிய நம்மைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

சளீச்சுவர பகவான் நம்மையெல்லாம் பீடிக்கும் ப்ரீத்தி ஸ்தலங்கள் எவை என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஸ்பரிச தோஷமாகவும் ஸ்வாச தோஷமாகவும் சளீச்சுவரர் பீடிக்கிறார். கழுவாத கை, கதவுகளின் கைப்பிடிகள், மொபைல் ஃபோன், ரெஸ்டாரண்ட் மெனு, ஈ மொய்க்கும் பண்டம் என்று பலவிதமான ப்ரீத்திஸ்தலங்கள் சளீச்சுவர வாசஸ்தலங்கள். மற்ற தேவதைகளுக்கு இல்லாதவொரு சிறப்பு சளீச்சுவரருக்கு உண்டு. தன்னுடைய தோஷக்காரர்கள் இருக்கும் ஸ்தலங்களையெல்லாம் தன்னுடைய ப்ரீத்திஸ்தலங்களாக மாற்றிக்கொள்ளும் மகாவல்லபராக சளீச்சுவரர் இருக்கிறார். ஆகையால் சகதோஷக்காரர்களை தூரவிலக்கு என்கிறது ஜலபுராணம்.

Chal 3சளீச்சுவர பகவான் திசை நடக்கின்ற இரண்டு தோஷக்காரர்கள் ஒரேயிடத்தில் இருந்தால் அந்த இடத்தை டீவியில் தமிழ் சீரியல் ஓடக் கண்ட அறிவாளி போல கடந்துவிட வேண்டும். இல்லையேல் தானும் சகதோஷக்காரர் ஆகும் துர்பாக்கியம் ஏற்படும். சளீச்சுவரர் ஒட்டுவார் ஒட்டி மட்டுமல்ல. ஒட்டாரையும் ஒட்டி. ஆகவே எச்சரிக்கை அவசியம்.

சளீச்சுவரர் பீடிப்பதால் தோஷக்காரருக்கு சாதக பாதக நலன்கள் இரண்டுமே இருந்தாலும் பெரும்பாலானவை பாதகப் பலன்களே. கண்ட ஜலத்தினால் உண்டாகும் தோஷம் என்பதால் நாசி வாய் வழியாக அடிக்கடி சளீச்சுவரர் போவதும் வருவதுமாக இருப்பார். முடிந்தவரையில் அவரை வெளியே அனுப்ப வேண்டும். சில தோஷக்காரர்கள் புரியாமல் மூக்கை உறிஞ்சி உறிஞ்சி வெளியே செல்லத் துடிக்கும் சளீச்சுவரரை மண்டைக்குள்ளேயே ஏற்றி வைத்துக் கொள்வார்கள். இது தவறாகும். இது சைனச தோஷத்தில் முடிக்கூடும். ஆகவே விரைவில் தோஷநிவர்த்தி வேண்டுவோர் எப்போதும் சளீச்சுவரரை வழியனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

Chal 7அவருடைய மனதை இளக வைக்க சில பரிகார காரியங்களும் உண்டு. தோஷக்காரர்கள் கையில் எப்போதும் ஒரு கைக்குட்டையோ டிஷ்யூபேப்பரோ வைத்திருப்பது நன்று. சளீச்சுவரருக்கு கைக்குட்டை, துணி, டிஷ்யூ பேப்பர் போன்றவை பிரீத்திஸ்தலங்கள் ஆகும். ஆகையால் தோஷக்காரர் உடம்பிலிருந்து அடிக்கடி அவர் இடம் பெயர்ந்து கைக்குட்டைக்கும் டிஷ்யூ பேப்பருக்கும் செல்லும் வாய்ப்புகள் நிறைய உண்டு.

க்ருஹபலன்கள் காரணமாக சிலரைப் பீடிக்கும் சளீச்சுவரர் மனம் கல்லாகி இறுகியிருப்பார். அதுபோன்ற வேளைகளில் சூரிய பகவான் அக்னி பகவான் பார்வை பட்டால் சளீச்சுவர் மனம் இளகி சளிதோஷம் குறையும். தூய்மையான பாத்திரத்திலே சுத்த ஜலத்தை நிரப்பி அக்னியின் மீது வைத்து அக்னியின் சூட்டை அந்த நீருக்கு ஏற்ற வேண்டும். குருபகவானின் பிரீத்திவஸ்துவாகிய மஞ்சள் பொடியை அந்த நீருடன் கலந்து அடர்ந்த நிறமுடைய துணியை போர்த்திக் கொண்டு முகத்தைக் காட்டி நீராவியை நாசியின் வழியாக உள்ளே இழுக்க வேண்டும். பிறகு வெளியே விட வேண்டும். இதை அடிக்கடி செய்யும் போது சளிதோஷம் விரைவில் நீங்கும். இது பாரததேசத்தில் மட்டும் நடக்கும் வழக்கமன்று. மேற்கத்திய முறைகளில் விக்சு அமிர்தாஞ்சனம் ஆகிய தோஷ நிவர்த்தி பஸ்பங்களையும் சுடுநீரில் கலந்து நாசிஸ்வாசம் செய்வார்கள். மேற்கத்திய பஸ்பங்களைப் பயன்படுத்துவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். எந்த ஆச்சாரக் கோளாறும் வராது.

Chal 4சில தோஷக்காரர்களுக்கு கண்டத்தில் ஜலம் கட்டிக் கொண்டு தொண்டைக்குள் எதோ சிக்கிக் கொண்ட காக்கையைப் போல இருமிக் கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கான பரிகார முறைகள் வேறு. கண்டத்திலே விக்சு அமிர்தாஞ்சனம் ஆகிய பஸ்பங்களை பூசிக் கொள்வதும் வெதுவெதுவென்று ஜலம் அருந்துவதும் நல்ல பலனைத் தரும். சுக்கு மிளகு திப்பிலி தூதுவளை மாதிரியான மந்திரவஸ்துகளை தூய ஜலத்தில் சேர்த்து கொதிக்க வைத்து பரிகார பனங்கற்கண்டு சேர்த்துப் பருகுவதும் சுகம் கொடுக்கும். மேற்கத்தியர்கள் இதை எளிமையாக்கி பெனட்ரில் கோரக்ஸ்டிஎக்ஸ் என்று திவ்யதீர்த்தங்களாகச் செய்திருக்கிறார்கள். இவற்றைப் பருகுவதும் தோஷநிவர்த்திக்கு உதவும். ஆனால் சிலபல நேரங்களில் ஆச்சார தோஷம் உண்டாக்கி தோஷக்க்காரருக்கு நித்ராதேவி ஆலிங்கனம் உண்டாகும்.

இந்தப் பரிகாரங்களை எல்லாம் செய்து வந்தால் ஒரே வாரத்தில் சளிதோஷம் நீங்கும். இல்லையென்றால் ஏழு நாட்களாவது அவதிப்பட நேரிடும். சளீச்சுவரரைப் போல கெடுப்பவரும் இல்லை. கொடுப்பவரும் இல்லை. இத்தனை உபாதைகளை தோஷக்காரருக்குக் கொடுத்தாலும் அலுவலகத்திலும் வீட்டு வேலைகளிலிருந்தும் தோஷகாலத்தில் ஓய்வும் வாங்கிக் கொடுத்துவிடுவார். சளிதோஷ பாதகங்கள் மந்தமாக இருந்தாலும் தோஷக்காரர்கள் பலர் அதீதமாக நடித்து எப்படியாவது விடுப்பு பெற்றுக்கொள்வார்கள்.

Chal 6பீடிக்கத் தொடங்கும் காலத்தில் மங்குசளியாகத் தொடங்கி உச்சத்தில் பொங்குசளியாகி விலகும் காலத்தில் மீண்டும் மங்குசளியாகி விலகுவது சளீச்சுவரரின் சுபாவமாகும். சளீச்சுவர தோஷகாலத்தில் உடல்வலி தலைவலி போன்ற உபாதைகளும் உடன்வரக்கூடும். அதுபோன்ற நேரத்தில் ஓபிஎஸ் சமேத ஈபிஸ் ஆசனம் செய்வது (அதாவது கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொண்டு சொன்ன பேச்சைக் கேட்டு உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருப்பது) மிகுந்த பலனைக் கொடுக்கும். சில உத்தமர்கள் பொது இடங்களுக்குப் போகும் போதும் பிறருடன் பழகும் போதும் தம்முடைய வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு (இதற்கேற்ற டிஸ்போசபிள் மாஸ்க்குகள் உண்டு) செல்வார்கள். அவர்களை சளீச்சுவரர் அதிகம் படுத்துவதில்லை. அடுத்தவர் இருக்கும் இடத்தில் தோஷக்காரர்கள் தும்புவது துப்புவது போன்ற பாவ காரியங்களைச் செய்தால் சளிவக்கிர தோஷம் தொடர்ந்து அடிக்கடி பீடிக்கும் என்பது விதி.

சளீச்சுவர பகவானைப் பற்றியும் தோஷங்கள் பரிகாரங்கள் பற்றியும் இன்னும் எடுத்துச் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் சொல்கிறவருக்கும் கேட்கின்றவருக்கும் நேரம் தான் இல்லை. ஆகவே சளீச்சுவர தோஷத்துக்கு ஆளாகாமல் பரிகாரப் ப்ரீத்தி செய்து அமோகமாக எல்லோரும் வாழ வேண்டும்.

சளிபகவான் கிரஹஸ்துதி
அமிர்தாஞ்சன பாமா பூசும்; ஜலே புத்ரம்; தும்முனா ஹச்சும் ஹச்சாய; நமாமி சளீச்வரம்;

சளி காயத்ரி
டாக்டர் விசிட்டாய வித்மஹே; டிஷ்யூ ஹஸ்தாய தீமஹி! உடம்போ மந்தம் ரெஸ்டெடுய்யா;

அன்புடன்,
ஜிரா

Posted in நகைச்சுவை | Tagged | 7 Comments

Is NEET Neat?

நீண்ட நாட்களாக எழுத நினைத்த பதிவு. இனி எழுதி என்ன ஆகப் போகிறது என்று நினைத்திருந்தேன். ஆனால் அனிதாவின் உயிரழப்பு இந்தப் பதிவை எழுதவைத்துவிட்டது.

neet-suicide-647_090117051848நீட் ஒரு சமூக அநீதி என்பது என் கருத்து. அதுமட்டுமல்ல அது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் திட்டம் என்பதும் என் கருத்து. ஆனால் இவைகளைப் பற்றி நான் இப்போது பேசப் போவதில்லை.

நீட் அக்டோபஸ் எப்படியெல்லாம் சமூகத்தை வளைத்து நெறிக்கப் போகிறது என்று ஒரு சின்ன கோடு மட்டும் போட்டுக் காட்டவே எண்ணம்.

முதலில் கல்வித்தரம் பற்றிப் பார்க்கலாம். சி.பி.எஸ்.ஈ தரத்துக்கு தமிழகக் கல்வியின் தரம் இல்லை என்பது நீட் ஆதரவாளர்கள் தொடர்ந்து சொல்லும் காரணம். அது உண்மைதானா என்று எனக்கும் ஒரு ஐயம் இருந்தது. எனக்குத் தெரிந்த சில சி.பி.எஸ்.ஈ பள்ளி ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டேன். சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்துக்கும் சமச்சீர் பாடத்திட்டத்துக்கும் என்னதான் வேறுபாடு? உண்மையிலேயே சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் உன்னதமானதா? இந்தக் கேள்விகளைத்தான் நான் அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் சொன்ன பதில்களை என்னுடைய நடையில் சொல்கிறேன்.

சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்துக்கும் சமச்சீருக்கும் ஒரேயொரு முக்கிய வேறுபாடுதான் உண்டு. சி.பி.எஸ்.ஈயில் செய்முறைகளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சமச்சீரில் தியரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மற்றபடி அடிப்படைப் பாடத்திடம் இரண்டிலும் ஒன்றுதான். நீட் மாதிரியான தேர்வுகளுக்கு செய்முறை வழியிலான பயிற்சி உதவும். அந்த ஒருவகையில் தான் சமச்சீர் சற்று பின் தங்குகிறது.

நான் பேசிய சி.பி.எஸ்.ஈ ஆசிரியர்கள் தியரியை மாணவர்களுக்கு எளிதாகப் புரியவைக்க சமச்சீர் புத்தகங்களை படித்துவிட்டு பின்பற்றுகிறார்கள். ஆக சி.பி.எஸ்.ஈ செய்முறைகளை முன்னிறுத்தினாலும் தியரிகளை விளக்குவதில் சமச்சீர் புத்தகங்கள் அளவுக்கு சிறப்பாக இல்லை என்பதே அவர்கள் கருத்து.

சி.பி.எஸ்.ஈயின் செய்முறைகளும் சமச்சீரின் தியரியும் இணையும் போது அது சிறப்பாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.

சரி. சி.பி.எஸ்.ஈ படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிடலமா? ஏனென்றால் சி.பி.எஸ்.ஈ மிக உன்னதமான பாடத்திட்டமாக முன்னிறுத்தப்படுகிறதே.

இந்தக் கேள்வியை நீட்டில் வெற்றி பெற்றவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் கேட்டுப்பார்த்தால் உண்மை விடை தெரியும்.

நீட் தேர்வுக்கென்று தனிப்பயிற்சி மிகவும் தேவை. முன்பு தமிழகத்தில் மருத்துவம்/பொறியியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு இருந்தது. அதற்கு பயிற்சி கொடுப்பதற்கென்றே நிறைய தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் சென்னை தியாகராய நகரில் இருந்த பிரில்லியண்ட் டுட்டோரியல் மிகவும் புகழ் பெற்றிருந்தது. அங்கு சும்மாவா சொல்லிக் கொடுத்தார்கள்? காசு கொடுத்துதான் படிக்க வேண்டும்.

ஒரு வகையில் இது மாணவர்களுக்கு சுமைதான். ஏற்கனவே +2ல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற முனைப்பில் மாணவர்கள் அரும்பாடுபட்டு படிக்கும் நிலையில், +2ல் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எந்த வகையில் தரம் குறைந்தவர்கள் ஆவார்கள்?

பிறகு ஏன் +2 தேர்வு எழுத வேண்டும்? நேரடியாக நீட் தேர்விலேயோ அல்லது நுழைவுத் தேர்விலேயோ அனைவரும் மோதிக்கொள்ளலாமே!!!!

ஆண்டு முழுவதும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களை தரம் குறைந்தவர்கள் என்று சொல்கிறவர்கள் மூடர்களாக இருந்தால் மட்டுமே தங்களைக் கொடியவர்கள் என்று உணராமல் இருப்பார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு நீட் ஆதரவாளர் யாரிடமும் நேர்மையான நேரடியான பதில் கிடைக்கப்போவதில்லை. அவர்களிடம் எதிர்பார்ப்பதும் வீண். தூங்குகிறவர்களைத்தானே எழுப்ப முடியும்.

neet7அப்போது இருந்த டுட்டோரியல்களுக்கு பதிலாக இனி கோச்சிங் செண்டர்கள் நிறைய முளைக்கத் தொடங்கும். ஏற்கனவே விளம்பரங்கள் வரத்தொடங்கிவிட்டன. ஒவ்வொரு பெற்றோரும் குறைந்த பட்சம் ஒன்று முதல் இரண்டு லட்சங்கள் வரை செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நாடு முழுவதிலும் பன்னிரண்டு லட்சம் மாணவர்கள் 2017ம் ஆண்டு நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை உயரலாம்.

ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால் பன்னிரண்டு லட்சம் மாணவர்களுக்கு எவ்வளவு என்று யோசித்துப் பாருங்கள். அதாவது 1200 கோடி. நீட் பயிற்சி என்ற வகையில் நாடு முழுவதும் பெற்றோர்கள் செலவழிக்கப் போகும் பணம் 1200 கோடியாகும். இந்தப் பணம் யாருக்குப் போகும், யாருக்கு கப்பம் கட்டப்படும் என்றெல்லாம் யோசித்தால் நீட் பின்னணியில் இருக்கும் பண அரசியலின் மூலம் புரியும்.

நீட் ஆதரவாளர்களே, நாளை நீங்களும் உங்கள் உறவினர்களும், உங்கள் பிள்ளைகளும் பணம் செலவழிக்கத்தான் போகிறார்கள். போட்டி அதிகரிக்க அதிகரிக்க செலவழிக்க வேண்டிய தொகையும் அதிகரிக்கும்.

இதைப் புரிந்து கொண்டால் நுழைவுத் தேர்வுகளை ஒழித்தது எப்படிப்பட்ட செயல் என்று உங்கள் உள்மனதுக்கும் புரிந்திருக்கும்.

மத்திய அரசு நடத்தும் பணித்தேர்வில் தமிழே தெரியாமல் தமிழ்நாட்டுக்கான தேர்வில் வடவர்கள் வெற்றி பெற்ற கோமாளித்தனங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நீட் தேர்வில்….. சரி. உங்கள் அறிவுக்கே விடை தெரியும்.

இனி ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பு என்பது மிகமிகக்கடினம் தான்.

தமிழகத்தின் நலனுக்கு மட்டும் நீட் எதிரி என்பது இல்லை. குறிப்பாக தென்மாநிலங்கள் அனைத்துக்கும் இழப்பு உண்டு. இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள சிலகாலம் ஆகும். புரிந்தபிறகு எதுவும் நல்லது ஆகுமா ஆகாதா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நீட்டினால் கிடைக்க வாய்ப்புள்ள கப்பத்தின் அளவை நினைத்துப் பார்த்தால், இனி நீட் எல்லா வழியிலும் நிரந்தரமாக்கப்படும் என்றே தெரிகிறது. ஆனாலும் போராடும் வரை போராடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

கையறுநிலையுடன்,
ஜிரா

Posted in சமூகம், பொது | Tagged | 2 Comments

18. ஹாப்பி ஷாப்பிங் & டாட்டா ஸ்ரீலங்கா

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

பகல்ல ஊரைச் சுத்திட்டு மாலையில் கொழும்பில் நண்பர்களைச் சந்திப்பதாகத் திட்டம். டினேசன், சங்கீதா, கானாபிரபாவைச் சந்திக்கிறதாகத் திட்டம். ஆனா டினேசன் தான் பாவம், ஆயிரம் வாட்டி பாத்த கொழும்பை ஆயிரத்தோரவது வாட்டி என் கூட சேந்து சுத்துறாரே. அதுனால ஹோட்டலுக்குப் போறதுக்கு முன்னாடி கடைசியா காலி முகத்திடல்னு சொல்லப்ப்டுற Galle Face Beachக்குப் போனோம். ஊருக்குள்ள இருக்கும் கடற்கரை. அதுனால கூட்டம் நிறைய வருது. அழகான கடற்கரை. நிறைய சாப்பாட்டுக் கடைகள். கடலோரமா நடைபாதை. ஒரு கோலகலமான சூழ்நிலை.
DSC00033
அங்க இருக்குற நடைபாதைக் கடைகள் ரொம்பவே பிரபலமாம். அதுல இறால் வடை, நண்டு வடை, அந்த வடை, இந்த வடைன்னு பேர் தெரியாத பலகாரங்கள் சுடச்சுட வித்துக்கிட்டிருக்கு. சிலுசிலுன்னு காத்து. கொஞ்ச நேரம் கடல் காத்தை அனுபவிச்சிட்டு நேரா சாப்பிட கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ரேணுகா போனோம். நல்ல கலகலப்பா பொழுது போச்சு. நேரம் போறது தெரியாம ரொம்ப நேரமாப் பேசிட்டு இருந்தோம். மொத்தத்தில் அதுவொரு இனிய மாலை.

அடுத்த நாள் காலைல டினேசன் என்ன ஷாப்பிங் கூட்டீட்டுப் போறேன்னு சொல்லியிருந்தாரு. அதுனால அறைக்குப் போனதுமே பொட்டி கட்டத் தொடங்கிட்டேன். அடுத்த நாள் நேரமிருக்குமோ இருக்காதோ. எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டுதான் தூக்கம்.
IMG_9723
அடுத்தநாள் காலைல டிபன் சாப்டு முடிக்கவும் டினேசன் வரவும் நேரம் சரியா இருந்தது. மொதல்ல House of Fashion கடைக்குப் போனோம். இந்தியாவிலிருந்து யார் வந்தாலும் அந்தக் கடைக்குப் போகாம இருக்க மாட்டாங்களாம். துணி வாங்குறதுக்கு அவ்வளவு கூட்டம் போகுது. குறைந்த விலைக்கு விதவிதமான துணிகள். அங்க என்னோட ரசனைக்கு ஏத்த மாதிரி கண்ல படல. ஆனா நிறைய நல்ல துணிகள் இருந்தது. சரின்னு அடுத்து Odelனு ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனாரு டினேசன். நல்ல எலைட் ஸ்டைல் கடை. சும்மா சுத்திப் பாத்துட்டு அங்க இருந்த கஃபேல டீ குடிச்சோம். (Odelல நல்ல சாக்கலேட் கிடைக்குது. சாக்கலேட் ரசிகர்கள் மறக்காம வாங்கிக்கோங்க). அதுக்குள்ள சாப்பாட்டு வேளை. சங்கீதாவுக்கு அப்போ கொஞ்சம் ஓய்வு கெடைச்சதால அவங்களும் வந்து சேந்துக்கிட்டாங்க. Arpico Food Court இந்த முறை. மறுபடியும் சிங்கள உணவு. நம்ம எதையெதையெல்லாம் சொல்றமோ அதையெல்லாம் தட்டுல போட்டுக் கொடுப்பாங்க. கிட்டத்தட்ட மீல்ஸ் மாதிரி. அதுல சம்பல் மட்டும் நான் நிறைய வேணும்னு கேட்டு வாங்கினேன்.

3bff18bfசில சிங்களப் பட டிவிடிகள் வேணும்னு கேட்டிருந்தேன். பக்கத்துல ஒரு கடைக்கு என்னை டினேசனும் சங்கீதாவும் கூட்டீட்டுப் போனாங்க. ரெண்டு டிவிடி வாங்கினேன். ரெண்டுமே நடிகை பூஜா நடிச்ச படங்கள். ஒரு படத்துக்கு “பத்தினி”ன்னு பேரு. சிலப்பதிகாரத்தை அடிப்படையா வெச்சு எடுத்த படம். ஆனாலும் பௌத்தக் காப்பியமான மணிமேகலையையும் கலந்துகட்டி பௌத்தத்தை தாளிச்சுக் கொட்டி ஒரு தினுசா எடுத்திருந்தாங்க. இன்னொரு படம் “குச பாப”. இதுவும் ஒரு சரித்திரப்படம். இந்தியா வந்து இந்த ரெண்டு படத்தையும் பாத்துட்டேன். ஆக சிங்கள மொழிப் படத்தையும் பாத்தாச்சு. “ஒலகப் பட ரஜிகர்”ங்குற பட்டத்தை தக்க வெச்சாச்சு.
IMG_9744
சங்கீதா மறுபடியும் வேலைக்குப் போக வேண்டியதால, அவருக்கு அங்கயே விடை சொல்லிட்டு நானும் டினேசனும் லக்சல(Laksala). நினைவுப் பொருட்கள் வாங்க ரொம்ப அருமையான இடம். மத்த எடங்களை விட விலையும் குறைவு. ஆகையால souvenir எல்லாம் ஏர்ப்போர்ட்ல வாங்கிக்கலாம்னு நினைக்காதீங்க. யோசிக்காம லக்சல போங்க. லக்சல முடிச்சிட்டு நேரா Glitz. அங்க பிடிச்ச மாதிரி துணிகளை வாங்கிட்டு நேரா வில்லாவுக்குப் போனோம். மடமடன்னு எல்லாத்தையும் பொட்டி கட்டினேன்.

கொழும்பு போக்குவரத்து நெரிசல் காரணமா ஏர்ப்போர்ட் போக ரெண்டு முதல் ரெண்டரை மணி நேரம் ஆகும். அதோட விமானம் பொறப்படுறதுக்கு நாலு அல்லது அஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி ஏர்ப்போர்ட்ல இருக்கனுமாம். எனக்கு நள்ளிரவு 12 மணிக்கு விமானம். ஏழு மணின்னு கணக்கு வெச்சு நாலரை மணிக்கு வில்லாவிலிருந்து கிளம்ப டாக்சி சொல்லியிருந்தேன். டாக்சியும் சரியான நேரத்துக்கு வந்தது. அதுவரைக்கும் கூட இருந்து வழி அனுப்பினாரு டினேசன். இவர் ஒரு எனர்ஜி பாக்கெட்னு சொல்லனும். அடிக்கிற வெயில்ல என்னோட ஊர் சுத்திய டினேசனுக்கும் சங்கீதாவுக்கு நன்றி ‘O நன்றி. இந்தியாவுக்கு சுற்றுலா வாங்க மக்களேன்னு ரெண்டு பேரையும் கேட்டுக்கிட்டேன். எங்கிட்ட பேசிப் பழகிய பிறகு வர்ரதுக்கு யோசிப்பாங்கன்னு நெனைக்கிறேன். ஆனாலும் துணிச்சலா வந்தா தில்லா வரவேற்போம்.
IMG_9752
ஏர்ப்போர்ட்ல செக்கின் கவுண்ட்டரை சரி பார்த்து நில்லுங்க. நான் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சீருடை அணிஞ்சிருக்குற பெண் உட்கார்ந்திருந்ததால அந்த வரிசைல நின்னேன். முன்னாடியும் பின்னாடியும் சைனாக்காரங்க. என்னடான்னு பாத்தா அது ஏர் ஏஷியா கவுண்ட்டராம். நல்லவேளைன்னு சரியான செக்கின் கவுண்ட்டருக்கு மாறினேன். சந்தேகம் இருந்தா கேட்டுருங்க. முடிஞ்ச வரைக்கும் தெளிவாகவே சொல்றாங்க. Immigration section கொஞ்சம் குழப்பமா இருந்தது. வர்ரவங்க எல்லாம் முதல் ரெண்டு வரிசைலையே நின்னாங்க. ஆனா உள்ள போனா இன்னும் சில வரிசைகள் இருக்கு. வெளிய இருந்து பாத்தா அந்த வரிசைகள் தெரியல.

Immigration முடிஞ்சதும் இலங்கைல சந்திச்ச நண்பர்கள் அனைவருக்கும் ஃபோன் போட்டு போயிட்டு வர்ரேன்னு சொன்னேன். நண்பர்களைச் சந்திக்கிறதே இனிய அனுபவம். இந்த மாதிரியான பயணங்கள்ள நண்பர்களைச் சந்திக்கிறது இன்னும் இனிய அனுபவம். இத்தனைக்கும் கானாபிரபாவைத் தவிர யாரையும் முன்னாடி சந்திச்சதில்ல. நன்றி நண்பர்களே. நீங்கள்ளாம் இல்லைன்னா இந்த இலங்கைப் பயணம் முழுமையடைஞ்சிருக்காது.

Boarding Gateல் சில வருத்தமான நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியிருந்தது. ஒன்னுமில்ல. எல்லாம் நம்ம மக்கள்தான். குருவிகள்னு சொல்வாங்களே. அவங்கதான். ஹேண்ட் லக்கேஜில் ஓவர் வெயிட். எக்கச்சக்கமான சரக்கு பாட்டில்கள். சிகரெட் பெட்டிகள். அங்க இருந்தவர் எல்லாரையும் ஒழுங்கு படுத்தப் பாக்குறப்போ அவரைப் பாத்து விசிலடிக்கிறது அது இதுன்னு அவங்களைக் கடுப்படிச்சிட்டாங்க. வரிசை வரிசையா உள்ள வரச்சொன்னா குறுக்க புகுந்து நுழைஞ்சு தப்பிக்கப் பாக்குறதுன்னு ஒரே களேபரம். ஆனாலும் அவங்க எல்லாரையும் சரியாப் பிடிச்சிட்டாங்கன்னு வெச்சுக்கோங்களேன். வேற எந்த boarding gateலயும் இல்லாம சென்னை விமானத்துக்கு மட்டும் இப்பிடி நடந்தது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. ஏற்கனவே நம்மளை ஒருமாதிரி பாக்குறான். இப்பிடியெல்லாம் நடந்துக்கிட்டா நம்மளை என்னன்னு நெனைப்பான்னு தோணுச்சு. என்னவோ போங்க தலையெழுத்துன்னு விமானத்தில் ஏறினேன்.

விமானத்தில் நல்ல தூக்கம். ஆனா தூங்க விடாம சட்டுன்னு சென்னை வந்துருச்சு. இறங்கி வீட்டுக்கு வந்தபிறகு “Home Sweet Home”ன்னு சந்தோஷமா இருந்தது.

மறுபடியும் இலங்கை போகனும். பாக்காம விட்ட இடங்களையெல்லாம் பாக்கனும். இந்த மாதிரி தொடர் பதிவுகள் எழுதி ஒங்களையெல்லாம் பாடாப் படுத்தனும். நான் நல்ல தமிழ்ல பதிவுகள் எழுதலைன்னு எழுத்தாளர் ரிஷான் வருத்தப்பட்டாரு. ஆகையால அடுத்த பயணம் போனா, செந்தமிழ்ல பதிவுகள் வரும்னு இப்பயே எச்சரிக்கிறேன். 🙂

அன்புடன்,
ஜிரா

Posted in அனுபவங்கள், இலங்கை, கொழும்பு, பயணம் | Tagged , , , | 5 Comments

17. அழகி ஒருத்தி எளநி விக்கிற கொழும்பு வீதியிலே

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்து சேரும் போது எட்டு மணிக்கு மேல ஆயிருச்சு. புதுசா எனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு பெட்டியை பத்திரமா இடம் மாத்தி வெச்சிருக்காங்க. நடக்குற தூரம்னாலும் சொன்னபடி வேலையை சரியாகச் செஞ்சிருக்காங்க. நான் வில்லா மேனேஜருக்கு ஃபோன் போட்டு நன்றி சொன்னேன்.
DSC09928
நல்ல அலுப்பு. தூங்கி எந்திரிச்சுப் பாத்தா கொழும்பு ரொம்பப் பரபரப்பா இயங்கிக்கிட்டிருந்தது. அன்னைக்குதான் கொழும்புல நண்பர் டினேசனைச் மாலையில் சந்திக்கும் திட்டம். குளிச்சிட்டு அவருக்கு ஃபோன் பண்ணேன். சம்பிரதாயமாகப் பேசீட்டு கொழும்புல பாக்குறதுக்கு நாலு எடம் சொல்லுங்கன்னு கேட்டேன். சாயந்திரம் அவரைப் பாக்குறதுக்குள்ள ரெண்டு மூனு எடம் பாத்திறலாம்னு திட்டம்.

நான் எடங்களைக் கேட்டதுமே டினேசனே மதியம் 12.30க்கு வந்து அவரே கூட்டீட்டுப் போறதாகச் சொன்னாரு. இதுக்கு மேல என்ன வேணும்? டினேசன் வாழ்கன்னு மனசுக்குள்ள வாழ்த்திட்டு பக்கத்துல கொஞ்சம் நடந்துட்டு வரலாம்னு போனேன். வில்லா இருந்த ரோட்டிலிருந்து நேரா நடந்தா பீச். அந்த பீச் வரைக்கும் நடைந்தேன். பீச்ல நடக்கலாமான்னு யோசிச்சேன். அந்த யோசனையை மாத்தீட்டு மறுபடியும் மெயின் ரோடுக்கு வந்தேன். அங்கருந்த கடைகளைப் பாத்துக்கிட்டே நடந்தேன். Glitz துணிக்கடை கண்ல பட்டது. கண்டில போன அதே கடை. உள்ள நுழைஞ்சிட்டேன். கண்டி அளவுக்கு கொழும்பு Glitzல விதவிதமான துணிகள் இல்லைன்னு தோணுச்சு. ரொம்ப நேரமாயிரக்கூடாதேன்னு எதுவும் வாங்காம வில்லாவுக்கு வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்தேன். வந்து பாத்தா… டினேசன் புன்னகை மன்னனா அங்க வந்து காத்துக்கிட்டிருக்காரு.

டினேசன் ஒரு உயர்ந்த மனிதன். உள்ளத்துல மட்டும் இல்ல. உயரத்திலயும் தான். எல்லாரையும் தலை நிமிர வைக்கிற திறமை அவருக்கு உண்டு. என்னென்ன மாதிரியான எடங்கள் பாக்கனும் என்னென்ன மாதிரியான பொருட்கள் வாங்கனும்னு கேட்டு மனசுக்குள்ளயே ஒரு திட்டம் போட்டுக்கிட்டாரு. நேரா போன எடம் Majestic City Mall. அங்க கொஞ்சம் சுத்திப் பாத்துட்டு என்னோட மொபைலுக்கு case & scratch guard மாத்துனேன். சும்மாச் சொல்லக்கூடாது. மாத்திக் கொடுத்த பையன் தொழில் சுத்தம்.

IMG_9692அங்கருந்து நேரா போன எடம் Crescat Mall Food Court. பசி வேளையாச்சே. இந்தியாவில் கிடைக்காத சிங்கள உணவு சாப்பிடனும்னு சொன்னேன். அதோட பலன் என்னோட தட்டுல Lamprais. சோறு, கறிக்கொழம்பு, கத்திரிக்கா கறி, சீனி சம்பல் இதையெல்லாம் வாழையிலையில் வெச்சு மடிச்சு பொட்டலம் மாதிரி கட்டி, அந்த வாழையிலையை தணல்ல வேக வைச்சுக் கொடுக்குறதுதான் Lamprais. வாழையிலையோட வாசமும் சாப்பாட்டு வாசமும் கலந்து பசியை பயங்கரமாக் கெளப்புது.

டச்சுக்காரர்கள் இலங்கைல இருந்தப்போ அங்க இருந்த மக்களோட கலந்து புது இனம் உருவாச்சு. De Saram Family பத்தி பாத்தோமே. அது மலாய் – டச்சு கலப்பு மக்கள். அதே மாதிரி சிங்கள – டச்சு கலப்பு மக்கள் உருவானாங்க. இவங்க டச்சுக்காரங்களோட ஹாலந்துக்குப் போகாம இலங்கைலயே தங்கிட்டாங்க. இவங்களோட கண்டுபிடிப்புதான் Lamprais. ரொம்பப் பிரபலமாயிருச்சு இப்போ. Vegetarian Lamprais கூட கிடைக்குது.

DSC09864திருப்தியா சாப்டுட்டு, நேராப் போனா எடம் கங்காராமய விகாரை(Gangaramaya Vihara). பெய்ரா ஏரி(Beira Lake) பக்கத்துல இருக்கும் அழகான விகாரை. வெளிநாட்டு மக்கள் டிக்கெட் வாங்கனும். கண்டிப்பாகப் போக வேண்டிய விகாரை. Jayasuriya Goonewardane de Silvaங்குற முதலியார் ஒருத்தர் 19ம் நூற்றாண்டுல இந்த எடத்தை விலைக்கு வாங்கி விகாரை கட்டியதாக வரலாறு சொல்லுது. மொதல்ல சின்னதாகக் கட்டினாலும் கொஞ்சம் கொஞ்சமா நல்ல பெரிய விகாரை ஆயிருச்சு. இந்த விகாரைல யானைத் தந்தங்கள், அரிய பொருட்கள், பலவிதமான புத்தர் சிலைகள், வெளிநாட்டிலிருந்து வந்த பரிசுகள்னு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. இதோட இன்னொரு பகுதி ஏரிக்கு நடுவில் இருக்கு.  மெயின் விகாரைல டிக்கெட் வாங்குற டிக்கெட் ஏரிக்கு நடுவில் உள்ள கோயிலுக்குப் போகவும் செல்லும்.

DSC09913அடுத்து போன இடம் Independent Memorial Hall. நிறைய சினிமாக்களில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. தீ படத்துல ரஜினி இது பக்கத்துல நின்னு எதோ பேசுவார்னு நினைக்கிறேன். இலங்கைக்கு விடுதலை கிடைச்ச பிறகு அதன் ஞாபகார்த்தமா எழுப்பப்பட்ட கட்டிடம் இது. கண்டி அரண்மனையில் இருந்த மண்டபத்தை அடிப்படையா வெச்சு இதை வடிவமைச்சிருக்காங்க.

DSC09940அதுக்குப் பக்கத்துலயே Independent Square Arcadeனு ஒரு மால் இருக்கு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டுல ஒரு மனநோய் மருத்துவமனை. காலப்போக்குல அந்த மருத்துவமனை வேற எடத்துக்குப் போயிருச்சு. இந்தக் கட்டிடத்தில் பல்கலைக்கழக கல்லூரி, Sri Lanka Broadcast Corporationனு மாறி மாறி இருந்திருக்கு. 2012ல இந்தக் கட்டிடத்தை முந்தி இருந்த மாதிரியே புனரமைச்சிருக்காங்க. 200 இராணுவவீரர்கள் ஆறு மாசத்துல அந்த வேலையைச் செய்ததாகச் சொல்றாங்க.

மனநோயாளிகளுக்கான மருத்துவமனையா இருந்ததாலோ என்னவோ, இந்தக் கட்டிடத்துக்குள்ள எந்த அலங்காரங்களும் இல்ல. செங்கல் வெச்சுக் கட்டி சுண்ணாம்பு பூசிய கட்டிடம். வெள்ளையடிச்சிருக்காங்க. அவ்வளவுதான். ஆனாலும் ஒரு கம்பீரமான அழகு. அங்க இருந்த கடைகளை ஒவ்வொன்னாப் பாத்தோம். டீ குடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. டினேசன் அந்த மால்ல இருந்த Dilmah நிறுவனத்தோட Tea Shopக்கு கூட்டீட்டுப் போனாரு. ரொம்ப அழகான எடம். இந்த மாதிரி எடத்துல என்ன விட்டுட்டா சோம்பேறியாகி எந்திரிக்கவே மாட்டேன். அப்படியொரு எடம். Prince of Kandyங்குற டீ ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னதால அதையே கொண்டுவரச் சொன்னேன். அந்த Tea Pot அவ்வளவு ரசனையா இருந்தது. பயன்படுத்தவும் அவ்வளவு எளிது. டீ போடுறதுக்கு அத வாங்கீட்டு வராமப் போயிட்டோமேன்னு இன்னும் வருத்தமா இருக்கு.
DSC09966
அடுத்ததா போன இடம் விஹர மஹா தேவி பூங்கா (Vihara Maha Devi Park). இந்தப் பூங்கா வெள்ளைக்காரன் உருவாக்கியது. அப்போ அவன் வெச்ச பேர் விக்டோரியா பூங்க. அவங்க ராணி பேரு. விடுதலை வாங்கிய பிறகும் அதே பேர் இருக்குமா? சிங்கள ராணி பேரை வெச்சிட்டாங்க. விஹர மஹாதேவிங்குறது துட்டகமுனு-ங்குற மன்னனோட தாய். இந்த துட்டகமுனுதான் எல்லாளனை வென்ற போது கதிர்காமத்தில் கோயில் கட்டியதாகவும் ஒரு கதை உலவுது. கதை உலவுற மாதிரி பூங்காவில் கொஞ்சம் உலவினோம். நெடுந்தீவில் மட்டும் இருக்கும் ஒரு வகை குட்டைக் குதிரையை இந்தப் பூங்காவில் ஒரு இடத்தில் பாக்கலாம். நல்ல அருமையான பராமரிப்பு கொண்ட பூங்கா.
DSC09998
பூங்காவுக்கு வணக்கம் சொல்லிட்டு நேரா போன எடம் பொன்னம்பலவானேசுவரர் கோயில். கொழும்பில் கொச்சிக்கடை என்னும் இடத்தில் இருக்கு இந்தக் கோயில். தமிழர்கள் நிறைய இருக்கும் இடம்னு நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொன்னம்பல முதலியார் என்ற செல்வந்தர் கட்டிய கோயில். அவருடைய மூத்த மகன் குமாரசாமி முதலியார் தொடர்ந்து கோயிலைக் கட்டுகிறார். அவருடைய தம்பி பொன்னம்பலம் இராமநாதன் கோயிலை முழுசாகக் கட்டி முடிக்கிறார். இலங்கையில் முழுக்க முழுக்க கல்லால் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுதான். வேற எந்தக் கோயிலுக்குமோ விகாரைக்குமோ இந்தப் பெருமை கிடையாது. திராவிடக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட கோயில். நல்ல துப்புரவாவும் இருக்கு. கொழும்பு போகிறவர்கள் கட்டாயம் போக வேண்டிய கோயில்.

பொன்னம்பலம் இராமநாதன் பற்றி ஒரு தகவல். இவர் பிரிட்டிஷ் இலங்கையில் ஒட்டுமொத்த இலங்கைக்கும் பிரதிநிதியாக அரசாங்கத்தில் இருந்திருக்கிறார். ஒருமுறை சிங்களர்களும் இலங்கை மூர்களுக்கும் (தமிழ் முஸ்லீம்கள்) கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்தை உண்டாக்கியது சிங்கள அரசியல் தலைவர்கள் என்பதை வெள்ளைக்கார அரசு தெரிந்து கொண்டு அவர்களுக்கு மரணதண்டனை வழங்கியது. அப்போது பிரிட்டிஷ் அரசுடன் வாதாடி அந்த அரசியல் தலைவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். சிறையிலிருந்து வெளிவந்த சிங்கள அரசியல் தலைவர்கள் அவரை அப்போது தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள். அப்படிச் சுமந்த அரசியல் தலைவர்கள்தான் பின்னாளில் விடுதலைக்குப் பிறகு இலங்கையை ஆளத் தொடங்கி இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
Sacn
பொன்னம்பலவானேசுவரருக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்து போன இடம் கொச்சிக்கடை புனித அந்தோணியார் கோயில். அங்கயும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேராகப் போன எடம் காலி முகத்திடல்னு சொல்லப்படுற Galle Face Beach.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

சில படங்கள் பார்வைக்கு…

இதுதான் அந்த டீ பாட் 🙂

IMG_9722

Posted in அனுபவங்கள், இலங்கை, கொழும்பு, பயணம் | Tagged , , , , , | 10 Comments