சடங்குகள்

சடங்குகள் என்பவை மனிதர்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பிரிக்க முடியாத பகுதி. பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது, சேய்நெய் வைப்பது, தொட்டில் இடுவது, வசம்பு கட்டுவது என்று தொடங்கி, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சடங்குகள் உண்டு.

சடங்குகள் தோன்றத் தொடங்கிய பொழுது மிக எளிமையாகவே இருந்திருக்க வேண்டும். சற்று ஆழந்து நோக்கினால், நீராட்டுவது என்பது எல்லாச் சடங்குகளுக்கும் அடிப்படைச் சடங்காக இருந்திருக்குமோ என்றும் கூட தோன்றுகிறது. பிறப்பு, வயதுக்கு வந்த சடங்குகள், மஞ்சள் நீர் ஊற்றுவது, இறப்பு என்று எத்தனை.

கல்லெடுத்து சிலை வடிக்கையில் நீர்ப்படை என்றும் இறந்தவர்களை எரித்ததும்/புதைத்ததும் பாற்படை என்றும் இருக்கக் காண்கிறோம். இயற்கையிலிருந்து விலகி மெய்யியலுக்குள் நுழைந்த பொழுது மனிதர்களுக்கு ஆனதை கடவுளுக்கும் ஆக்கிவைத்தார்கள்.

எளிய மக்களின் சடங்குகளாகத் தொடங்கியவை மதங்களின் சடங்குகளாக உள்ளிழுக்கப்பட்டு இன்றும் அப்படியே அடையாளப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் எல்லா மதங்களிலும் இதுதான் நிலை. ஒரு குறிப்பிட்ட மதச்சடங்கு அந்த மதம் தொடங்கிய நிலப்பரப்பின் மக்களின் வாழ்வியல் சடங்காக இருந்திருக்கும்.

அதே போல் மாலை போடுவதும் எளிமையாகத் தொடங்கியதே. கலப்பை, வேல்கம்பு, அடுப்பு, பாத்திரம் என்று தத்தமது கருவிகளுக்கு தூய்மைப் படுத்துவதும், அழகு படுத்துவதும், மலர் சூட்டுவதும் தொடக்க நிலை சடங்காக இருந்திருக்கக் கூடும். அது மனிதர் நடுகல் சிலை என்று பரிணமித்திருக்கக் கூடும்.

யார் கண்டார், இன்னும் கொஞ்ச நாளில் மாலை போடுவது என்பது “இந்த” மதத்தின் சடங்கு என்று கூட யாரேனும் சொல்லி சிரிப்பு மூட்டக்கூடும். எங்கள் ஊரில் பாட்டிகள் காலத்தில் வீட்டில் தினமும் காலையில் விறகடுப்புகள் சாம்பல் நீக்கப்பட்டு தூய்மையாக்கப்பட்டு கோலம் போட்டு நான் கண்டிருக்கிறேன்.

இப்படி அனைத்திலும் சடங்காகவே வாழ்ந்து பழகிய மனிதனிடமிருந்து சடங்குகளைப் பிரிப்பது என்பது ஆகாத வேலை. இதை மதங்களைப் போலப் புரிந்து கொண்டவர்களும் பயன்படுத்திக் கொள்கிறவர்களும் யாருமில்லை. சடங்குகள் என்பது வாழ்க்கையில் தேவையென்றே தோன்றுகின்றது.

சடங்குகள் என்பது எதோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமானது என்று நான் நம்பவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் எதோவொரு வகையில் சடங்குகளைப் பின்பற்றுவதிலிருந்து சடங்குகளின் தொன்மையை மிக அழகாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

சடங்குகளை மனிதர்களிடமிருந்து பிரிக்க முடியாது என்றான பிறகு சடங்குகளை எப்படி மேம்படுத்துவது செம்மைப்படுத்துவது என்பதே அறிவுடையோர் எண்ணமாகவும் செயலாகவும் இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த வாழ்வியல் சடங்குகளும் வழிபாட்டுச் சடங்குகளும் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.

தமிழில் சடங்குகள் வேண்டாம், வேற்று மொழியில் தான் சடங்குகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் அவரவர் விருப்பத்துக்கு செய்து கொள்ளுங்கள். ஆனால் வாழ்வியல் வழிபாட்டுச் சடங்குகள் தமிழில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கருத்தை முதலில் மதித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

தமிழில் மந்திரங்கள் சொல்லி திருமணம் குடமுழுக்கு புதுமனைபுகுவிழா என்று ஒவ்வொன்றையும் தமிழில் செய்வதற்கு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பயிற்சி பெறுகின்றவர்களிடம் சாதி வேறுபாடு பார்க்கக் கூடாது. முறையாக பயிற்சி பெற்றவரா என்ற தகுதியே பெரிது.

வீட்டுச் சடங்குகளில் தொடங்கி கோயில்களின் வழிபாட்டுச் சடங்கிலும் இந்த முறை கொண்டுவரப்பட வேண்டும். இந்தச் முறை தமிழகத்தில் தமிழை முன்னிறுத்துவது மட்டுமன்றி சாதிய வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் களையும் என்றே நான் நம்புகிறேன்.

இந்தச் சீர்திருத்தத்தை ஆதரிப்பவர்கள் ஏற்பவர்கள் முன்னெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க விரும்புகிறேன். மாறானவர்களை கொள்கையளவில் நான் மறுதலிக்கிறேன். ஏற்கனவே தமிழ் மந்திரங்கள் சொல்லி நடந்த திருமணங்கள் கண்டிருக்கிறேன். அது பெருக வேண்டும். பரவ வேண்டும்.

இந்தச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துவிட்டு சாதீய உயர்வுதாழ்வுகளை நீக்குகின்றவர்கள் மட்டும் “மதத்தவர்களே ஒன்றுபடுங்கள்” என்று கூவினால் தான் அதில் சிறிது அடிப்படை நேர்மையாவது இருக்கும். இதுதான் என் எண்ணவோட்டம்.

என் வாழ்நாளில் இது நடக்குமென்று தோன்றவில்லை. இதை யாரேனும் முன்னெடுத்து பரப்பி வருங்காலத்திலாவது நடைமுறைப் படுத்தினால் தமிழுள்ளளவும் புகழ் வாழ்பவர் ஆவர் என்று நான் வணங்கும் முருகக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். எதிர்ப்பவர்க்கு நான் சொல்ல ஏதுமில்லை. கந்தனே பதில்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in எண்ணங்கள், சமூகம் and tagged , . Bookmark the permalink.

1 Response to சடங்குகள்

  1. Tulsi Gopal says:

    வீட்டைபொறுத்தவரைப் பொதுவான சடங்குகளை வீட்டுப்பெரியவர்களேதான் செஞ்சு வைப்பாங்க. அதனால் அந்தக் குடும்பத்துப் பேசும் மொழியில் சடங்குகள் இருக்கும். மற்றபடி கொஞ்சம் பெரிய சமாச்சாரங்களை (கல்யாணம், சாவு…) இதுக்குன்னு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு நடத்திக்கும் வழக்கம் வந்ததால்….பண்டிதர் அவர் கற்ற மொழியின்படி செஞ்சு வைக்கிறார். இங்கே நியூஸியில் நம்ம வைதீக முறைப்படி மந்திரம் சொன்னாலும் அதை அப்பப்ப இங்லிஷில் மொழி பெயர்த்துக்கிட்டே இருப்பாங்க. மத்தவங்களுக்கும் புரியணுமே!

    எனக்குத் தெரிஞ்சு நம்ம கோவிகண்ணன் வீட்டுக் கிரஹப்ரவேசத்தில் தமிழில் மந்திரம் சொல்லி நடத்தி வச்சார் ஒரு சிவாச்சாரியார்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s