04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

DbsLhGvVQAA5_as1970களில் குழந்தைப் பாடகியாகவே அடையாளம் காணப்பட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. திக்குத் தெரியாத காட்டில் படப் பாட்டு அதை மேலும் உறுதி செய்தது. பாடகி புஷ்பலதாவை குழந்தைப் பாடகியாக எம்.எஸ்.வி ராஜபார்ட் ரங்கதுரையில் அறிமுகப்படுத்திய பிறகும் சில நல்ல குழந்தைப்பாடல்கள் இவர் குரலில் கிடைத்தன

ஒரு குடும்பம் காட்டுக்குப் போகிறது. அங்கு அவர்கள் செல்லமகள் தொலைந்து போகிறாள். அதே காட்டுக்குள் சிறையில் இருந்து தப்பித்த கைதிகள். அவர்களைப் பிடிக்க காவல்காரர்கள். காட்டுக்குள் விளையாட்டுத்தனமாய் வந்த இளைஞர் கூட்டம். காட்டு விலங்குகள். இதை வைத்து எடுக்கப்பட்ட படம் திக்குத் தெரியாத காட்டில். இந்தப் படத்தில் வாலி எழுதிய “பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா” பாடலை மெல்லிசை மன்னர் இசையில் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

நான் ஏன் பிறந்தேன் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் அவினாசி மணி எழுதிய “தம்பிக்கு ஒரு பாட்டு, அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு” என்ற பாடலை பேபி இந்திராவுக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடினார். இந்தப் பாடலில் மற்றொரு குழந்தைக்காக எல்.ஆர்.அஞ்சலி பாடினார்.

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில் பாடுவதற்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் அதுவும் குழந்தைப் பாடலே. டி.ஆர்.ராமண்ணா இயக்கிய சக்திலீலை திரைப்படத்தில் “தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்” என்ற பாடலைப் பாடினார். பாட்டுக்கு நடித்த சிறுவனின் பெயர் தெரியவில்லை.

Nayakan_1987_posterபாடகர்களுக்கு வாய்ப்பு வருவதும் குறைவதும் விதியின் வழி என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமலகாசனுக்கு களத்தூர் கண்ணம்மாவில் முதன்முதலில் பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி, மீண்டும் கமலகாசன் படத்தில் பாடுவதற்கு 27 ஆண்டுகள் பிடித்தன.

இசைஞானி இளையராஜாவின் 400வது படம் என்ற பெருமையோடு வெளிவந்த படம் நாயகன். அந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் தான் மறந்த பாடகியின் குரலை மீண்டும் கேட்டது. புலவர் புலமைப்பித்தன் எழுதிய “நான் சிரித்தால் தீபாவளி” என்ற பாடலே அது. அந்தப் பாடலை ஜமுனாராணியோடு சேர்ந்து பாடினார். பாடல் நடக்கும் காலகட்டத்தைக் குறிக்க இளையராஜா எம்.எஸ்.ராஜேஸ்வரியையும் ஜமுனாராணியையும் பாடவைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிஎம்மின் பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் கார் கார் சூப்பர் கார் பாடலை அவர் சந்திரபோஸ் இசையில் பாடியிருந்தாலும், படத்தில் அந்தப் பாட்டின் சிறுபகுதி மட்டுமே வந்தது. அதேபோல் சந்திரபோஸ் இசையில் ”என்ன கத சொல்லச் சொன்னா” பாட்டை ஏவிஎம் நிறுவனம் தயாரித்த தாய் மேல் ஆணை படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஏசுதாசோடு பாடினார். இந்தப் பாட்டில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலுக்கு மாஸ்டர் மீனுராஜ் வாயசைத்து நடித்தார்.

கிட்டத்தட்ட தமிழகம் மறந்து போன குரலை 1990ல் முற்றிலும் எதிர்பார்த்திருக்காத ஒரு பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க வைத்தது. பாடல் + படத்தின் வெற்றி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலை மற்ற மொழிகளுக்கும் கொண்டு சென்றது. அந்தப் பாடல்…

அஞ்சலி படத்தில் பிரபலமான பேமி ஷாமிலிதான் துர்கா படத்தின் பெரிய மூலதனம். அதோடு குரங்கையும் நாயையும் வைத்து குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து பெருவெற்றி கண்டார் இராம.நாராயணன். அந்தப் படத்தில் பேபி ஷாமிலிக்காக எல்லாப் பாடல்களையும் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதிலும் குறிப்பாக வாலி எழுதிய “பாப்பா பாடும் பாட்டு” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

துர்கா படப் பாடலின் வெற்றியால் பேபி ஷாமிலியை வைத்து பல படங்கள் எடுத்தார் இராம.நாராயணன். அந்தப் படங்களில் எல்லாம் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடுவது என்பது வழக்கமாகிப் போனது. செந்தூரதேவி திரைப்படத்தில் இடம் பெற்ற “யக்கா யக்கா யக்கா யக்கா ஏலக்கா” பாட்டும் அப்படியே. படத்தை மக்கள் மறந்துவிட்டாலும் ஏலக்கா பாட்டு ஏலக்காய் மணம் போல இன்றும் இருக்கிறது.

மூன்று வயது பேபி ஷாமிலிக்கு குழந்தைக் குரலில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடும் போது அவருக்கு வயது 61. ஆனாலும் அவரது குரல் இளமையோடும் பொருத்தமாகவும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இராம.நாராயணனின் தைப்பூசம் திரைப்படத்தில் வந்த “அண்ணே அண்ணே அன்பு அண்ணே நாகராஜண்ணே” பாட்டும் அப்படிப்பட்டதுதான். இந்தப் பாடல்கள் மற்ற மொழியிலும் வெளியானது எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலை பக்கத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றது.

என்னதான் குழந்தைப் பாடகியாக அடையாளங் காணப்பட்டாலும், பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடல்கள் அவரை ஒரு சிறந்த பன்முகப் பாடகியாகவே அடையாளம் காட்டுகின்றன. இந்தப் பதிவுகளின் வழியாக நாம் பார்த்தது சில பாடல்களைத்தான். அவர் பாடிய காவியப் பாடல்கள் இருக்கும் வரை தமிழ் பேசும் பொன்னுலகம் அவரை நினைத்துக் கொண்டேயிருக்கும்.

DbsXOOpUwAAUIQY

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இசைஞானி, இளையராஜா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், கே.ஜே.ஏசுதாஸ், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், திரையிசை, மெல்லிசைமன்னர், வாலி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)

  1. இந்த மாதிரி இசைக் கலைஞர்களுக்கு மரணமே இல்லை. எம்.எஸ்ஸின் சுப்பிரபாதமும், டி.எம்.எஸ்சின் கல்லானாலும் திருசெந்தூரில் கல்லாவேனும், சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டிக் கவசமும் ஒலிக்கும் வரை அபவர்கள் புகழ் மங்காது. அருமையான நீண்ட பதிவுக்கு மிக்க நன்றி.
    சுஷிமா சேகர்

  2. நல்லோதொரு அர்ப்பணம் எம்எஸ் ராஜெஸ்வரிக்கு. நான் அத்தனை பதிவுகளிலும் மூழ்கிப்போனேன்.என்னே ஒரு மெனக்கெடல் ஜிரா இம்மாதிரி ஸ்டெப் பை ஸ்டெப்பா விளக்கி கூறுவதற்கு !. ஹேட்ஸ்ஃப் உங்களுக்கு.நன்றி நன்றி . வாழ்த்துக்கள். எம் =எஸ் ராஜேஸ்வரியின் புகழ் என்றென்றும் நீடித்து இருக்கும்

I am eager to hear what you want to say. Please say it. here. :)