03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

1950களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசையில் மெல்லிசை அலை தொடங்கி ஆக்கிரமித்த காலகட்டம். டி.எம்.எஸ், பி.சுசீலா போன்றவர்கள் மிக வேகமாக முன்னணிக்கு வந்த காலகட்டம். எந்தக் காலத்திலும் முன்னணி இசையமைப்பாளர் பாட வைக்கும் கலைஞர்களுக்கே புகழும் மற்றவர்களிடமும் பாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் எம்.எஸ்.வி தனது ஆஸ்தான பாடகர்களாக டி.எம்.எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி என்று மாறிவிட்ட போது கேவி.மகாதேவனும் அதே வழியில் செல்ல நேர்ந்தது.

DbsCs5bVMAAWaSVஆர்.சுதர்சனம் வாய்ப்புகள் குறைந்ததும், ஜி.ராமநாதன் மறைவு, எஸ்.வி.வெங்கட்ராமன் போன்ற இசையமைப்பாளர்களின் பின்னடைவும் தவிர்க்க முடியாத சூழலில், எம்.எஸ்.ராஜேஸ்வரின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஏவிஎம் வழியாக இன்னொரு புதிய பாதை திறந்தது. ஒருவகையில் அது முருகன் காட்டிய பாதை. அதுதான் களத்தூர் கண்ணம்மா.

பதிபக்தியிலேயே மெல்லிசை மன்னர்களோடு பீம்சிங் இணைந்துவிட்டாலும் ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்துக்கு ஆர்.சுதர்சனம் இசை. அந்தப் படத்தில் நடிகர் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தைச் சிறுவன் அனாதை இல்லத்தில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்று முருகக் கடவுளைப் பார்த்துப் பாடும் பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கிடைத்தது. பாட்டைப் பார்த்தால் குழந்தைக் கமல் பாடுகிறாரா எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடுகிறாரா என்று நமக்கே ஐயம் வந்துவிடும். அப்படியொரு பொருத்தம்.

படத்தின் வெற்றியும் பாடலின் வெற்றியும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு குழந்தைகளுக்குப் பிள்ளைத் தமிழ் பாடும் பாடகியாக புதியதொரு பாதையைக் கொடுத்தது என்பதே உண்மை. அதே வகையில் அந்த ஆண்டே கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு குழந்தைப் பாடலைக் கொடுத்தார். கைதி கண்ணாயிரம் திரைப்படத்தில் மருதகாசி எழுதிய “சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்” என்ற பாட்டு அது. சிறுவனாக நடித்த பேபி சாவித்திரிக்கு எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் அழகாகப் பொருந்திப் போனது.

குழந்தைப் பாடலாக இல்லாவிட்டாலும் சற்றே குழந்தைக் குரல்தனமான பாடலொன்றை எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு குமுதம் படத்தில் கொடுத்தார் கே.வி.மகாதேவன். மருதகாசி எழுதிய மியாவ் மியாவ் பூனைக்குட்டி என்ற பாட்டுதான் அது.

DbsJfqWUwAAI0Ntகுழந்தைப் பாடல்களைப் பாடத் தொடங்கினாலும் மற்ற பாடல்களும் தொடர்ந்து கிடைத்தது. 1965ல் மெல்லிசை மன்னர் கொடுத்த பாடல் ஒன்று எம்.எஸ்.ராஜேஸ்வரியை நிரந்த குழந்தைப் பாடகியாகவே மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. படம் + பாடலின் வெற்றி அந்த வகை. இன்னும் சொல்லப் போனால் அதே படத்தில் பி.சுசீலாவும் ஒரு குழந்தைப் பாட்டு பாடினார். ஆனாலும் எம்.எஸ்.ராஜேஸ்வரி குழந்தைப் பாடகி முத்திரை தொடர்ந்தது.

ஏவிஎம் தயாரித்த குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் “கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டி கூட்டிலே” என்று குட்டி பத்மினிக்காக எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய கண்ணதாசன் பாடலே அது.

அடுத்த ஆண்டும் (1966) மெல்லிசை மன்னர் மற்றொரு குழந்தைப் பாடலைக் கொடுத்தார். அதுவும் எம்.எஸ்.ராஜேஸ்வரியை முதன்முதலில் ஏவிஎம்மில் அறிமுகப்படுத்திய குடும்ப நண்பரான பி.ஆர்.பந்துலு இயக்கிய எங்க பாப்பா திரைப்படத்தில். கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜனோடு சேர்ந்து பேபி ஷகீலாவுக்காக அழகாகப் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

அதே ஆண்டில் இசையமைப்பாளர் வேதாவும் மார்டன் தியேட்டர்சின் இரு வல்லவர்கள் திரைப்படத்தில் ஒரு குழந்தைப் பாட்டு கொடுத்தார். கண்ணதாசன் எழுதிய “குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா” என்ற பாட்டை மீண்டும் பேபி ஷகீலாவுக்காகப் பாடினார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

கொஞ்சம் கொஞ்சமாக 1960களின் இறுதியில் குழந்தைப் பாடல்கள் என்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்பது நிலைத்துவிட்டது.

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மருதகாசி, மெல்லிசைமன்னர், வேதா, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்

  1. தமிழ் சினிமாப் பாடல்களின் ஃபில்ம் நியுஸ் ஆனந்தன் நீங்கள் ஜிரா 🙂
    சுஷிமா சேகர்

  2. Pingback: 04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி) | மாணிக்க மாதுளை முத்துகள்

  3. Pingback: 04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி) – TamilBlogs

  4. அருமை அருமை. ஏன் நினைவுகளை பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டீர்கள்.. நன்றி ஜிரா. வாழ்த்துக்கள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)