இராசராசன் பள்ளிப்படை (சமாதி) – 1

இராசராசசோழனின் சமாதி பற்றி வலைத்தளங்களில் பல கருத்துகள் உலவுகின்றன. இராசராசன் சமாதி கேட்பாரற்று கிடப்பதாக பலர் வேதனைப்பட்டு வெதும்பி வருந்தியிருந்தார்கள். இது நீதிமன்றம் வரை சென்று நீதிபதிகளும் ஆய்வு மெற்கொள்ளும்படி தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஆய்வும் கூட தொடங்கிவிட்டது. இராசராசன் அடக்கம் செய்யப்பட்ட இடம் குறித்து சில நாட்களுக்கு முன்பு தெரிந்து கொண்ட தகவல்களை இங்கு தெரிவிக்கிறேன். நாளை ஆய்வுகளின் முடிவுகள் எப்படியிருந்தாலும் ஓரளவு எளிதாகப் புரிந்துகொள்ள இப்பதிவு உதவலாம்.

இந்தத் தகவல்கள் என்னுடைய ஆய்வின் முடிவுகள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி/எழுதி கேள்விப்பட்ட விவரங்கள். தேடிப்படித்த கல்வெட்டுகள் சொன்ன செய்திகள்.

முதலில் இராசராசனின் சமாதி என்று பலரால் சொல்லப்படும் உடையாளூரிலுள்ள சாய்ந்த லிங்கம் நடப்பட்டுள்ள இடத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக போரில் இறந்த மன்னர்களுக்கு நடுகல் நட்டு எழுப்பப்படுவதே பள்ளிப்படை எனப்படும். ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு சோழர்கள் பள்ளிப்படைக் கோயிலாக எழுப்பத் தொடங்கினார்கள். மன்னர்களுக்கு மட்டுமின்றி அவர்களது மனைவி மக்களுக்கும் புலவர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் எழுப்பும் வழக்கமும் வந்தது. சிவலிங்கம் வைத்து கோயிலாக செங்கற்றளி எழுப்புவது பெருவழக்கமாக இருந்தது.

சரி. இராசராசன் சமாதி எனப்படும் இடத்துக்கு வருவோம். பொதுவாக பள்ளிப்படைக் கோயில்களில் சிவலிங்கம் பீடத்தோடு அமைக்கப்படும் நிலையில், பீடம் இல்லாமல் சாய்ந்த நிலையில் லிங்கம் அமைக்கப்பட்டிருப்பது எதைக் குறிப்பிடுகிறது? சுற்றிலும் செங்கற்றளி இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமலிருப்பது எதனால்?

Udaiyaloor 1அகால மரணமடைந்தவர்களுக்கு எழுப்பப்படும் பள்ளிப்படையில் சிவலிங்கத்துக்கு பீடம் அமைப்பதில்லையாம். அதேபோல கூரை வைத்து கோயில் எழுப்பும் வழக்கமும் இல்லையாம். அதோடு லிங்கம் மேற்குப் பக்கம் சாய்ந்திருப்பது அகால மரணத்தையோ, இயற்கை மரணமாக இல்லாதிருப்பதையோ, கொலை செய்யப்பட்டிருப்பதையோ குறிக்குமாம். இராசராசசோழன் அகால மரணமடையவில்லை. மூப்பில் உண்டான இயற்கையான இறப்பு. இராசராசசோழன் அகால மரணமடையவில்லை. அப்படியானால் அது யாருடைய பள்ளிப்படையாக இருக்கக்கூடும்? கடம்பூரில் படுகொலை செய்யப்பட்ட ஆதித்த கரிகாலனின் பள்ளிப்படையாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இன்று அந்த சிவலங்கத்துக்கு பீடம் அமைப்பதும் கூரை வைத்து கோயில் எழுப்பும் வேலையும் நடந்துகொண்டிருக்கின்றன. அது ஆதித்த கரிகாலனின் பள்ளிப்படையாக இருப்பின் இவையெல்லாம் பள்ளிப்படை விதிகளுக்கு புறம்பாகச் செய்யப்படுபவை ஆகும். ஆதித்தகரிகாலன் பள்ளிப்படையை இராசராசன் பள்ளிப்படை என்று கூறுவது, அந்தப் பள்ளிப்படை அமைந்திருக்கும் இடத்துக்கு உரிமையாளர்களுக்குத்தான் வருமானம் கொடுக்கும்.

அப்படியானால் இராசராசனின் பள்ளிப்படை எங்கே? அப்படியொன்று இருக்கிறதா?

அண்ணன் ஆதித்த கரிகாலனின் பள்ளிப்படைக்கு மிக அருகில்தான் இராசராசனின் பள்ளிப்படையும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்தப் பகுதியில் பால்குளம் என்றொரு குளம் உள்ளது. அதன் அருகில் பால்குளத்து அம்மன் என்றொரு கோயிலும் உள்ளது. இராசராசனுக்கு பாற்படை செய்துவிட்டு இராசேந்திரச் சோழன் கைகளைக் கழுவிய குளமாதலால் பால்குளம் என்ற பெயர் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

paal-kulathamman.jpgபால்குளத்து அம்மன் கோயிலிருக்கும் ஒரு கல்வெட்டு மிகமிகக் குறிப்பிடத்தக்கது. அந்தக் கல்வெட்டு முதலாம் குலோத்துங்கச் சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டியில் வெட்டப்பட்டது. முதலாம் குலோத்துங்கச் சோழனுக்கு சுங்கம் தவிர்த்த சோழன் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. தந்தை வழியில்தான் மரபும் மரபணுவும் தொடர்கிறது என்று நம்புகிறவர்களுக்கு குலோத்துங்கன் தெலுங்கன். வரலாற்றார்வலர்களுக்கு இவன் சாளுக்கிய சோழன். இரண்டாம் இராசேந்திரச் சோழனின் மகள் அம்மங்கை தேவி வழிப் பேரன். இவனுக்குப் பிறகு சோழப் பேரரசு முடிவுக்கு வரும் வரையில் முதலாம் குலோத்துங்கனின் வழிவந்தவர்களே சோழநாட்டை ஆண்டவர்கள்.

முதலாம் குலோத்துங்கனின் இயற்பெயர் அநபாய சாளுக்கியன். இவனது தந்தை இராஜராஜ நரேந்திர சாளுக்கியன் என்னும் கீழைச் சாளுக்கிய மன்னன். ராஜமுந்திரி என்ற பேரூரை உருவாக்கியவன் இந்த மன்னனே.

கதைக்கு வருவோம். அநபாய சாளுக்கியனானவன் குலோத்துங்க சோழன் ஆனது எப்படி? இரண்டாம் இராசேந்திரச் சோழனின் மகன் இராசமகேந்திரன் தந்தைக்கு முன்பே இறந்துவிட்டான். அதனால் இரண்டாம் இராசேந்திரனின் தம்பி வீரராசேந்திரன் பதவிக்கு வருகிறான். அவனுக்குப் பிறகு அவனது மகனான அதிராசேந்திரன் பதவிக்கு வருகிறான். சோழ மன்னர்களிலேயே மிகக்குறுகிய காலம் ஆட்சி செய்தது இவனேயாவான். பதவியேற்ற அதே ஆண்டில் இறந்துவிடுகிறான்.

இவனுடைய இறப்பும் சற்று சர்ச்சைக்குரியது. சைவ வைணவப் பூசல் மிக மலிந்திருந்த காலகட்டம் அது. வைணவர்களுக்கு பலவிதமான இன்னல்களும் ஊறுகளும் உண்டாக்கப்பட்டதாகவும் அதற்கும் அதிராசேந்திரனின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள். இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதிராசேந்திரனுக்குப் பிறகு இராசராசன் வம்சத்தில் ஆண்வழி வந்த நேரடி மகன் இல்லாத சூழலில் சிலபல எதிர்ப்புகளையும் மீறி அநபாய சாளுக்கியன் தன்னை குலோத்துங்க சோழனாக முடிசூட்டிக் கொள்கிறான். சிறு வயதிலிருந்தே மாமா வீரராசேந்திரனோடு இருந்து வளர்ந்ததாலும் போர்க்களங்களுக்குச் சென்றதாலும் சோழநாட்டின் அமைப்பும் அரசியலும் நன்கு தெரிந்தவனாகவே இருந்திருக்கிறான். அன்று இருந்த அரசியல் சூழலில் குலோத்துங்கச் சோழன் இல்லாமல் இருந்திருந்தால் பாண்டியர்களால் சோழப் பேரரசு அப்போதே வீழ்ந்திருக்கலாம். அந்த வீழ்ச்சியை எட்டு தலைமுறைகளுக்கு தள்ளிப் போட்ட பெருமை முதலாம் குலோத்துங்கனுக்கு உண்டு. அதுமட்டுமின்றி சோழப் பேரரசை அரைநூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியவன். இராசராசனுக்கும் இராசேந்திரனுக்கும் கூட இந்தப் பெருமை கிடையாது.

அந்தக் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டுதான் பால்குளத்தம்மன் கோயிலில் உள்ளது. அந்தக் கல்வெட்டு என்னதான் சொல்கிறது?

paalkulathamman - 21 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்[பி]லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்

இந்தக் கல்வெட்டு முழுமையானதா எனத் தெரியவில்லை. இதோடு சேர்த்து வெட்டப்பட்ட மற்ற கல்வெட்டுகள் கிடைத்தால் இன்னும் பல விவரங்கள் தெரியலாம். போகட்டும். கல்வெட்டு சொல்லும் சுருக்கமான தகவலைப் பார்க்கலாம்.

அனைத்து உலகங்களுக்கும் சக்கரவர்த்தியான ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவரின் நாற்பத்தியிரண்டாவது ஆட்சியாண்டில், ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதரசேகரதேவரின் திருமாளிகை முன்பு, பெரிய மண்டபம் ஜீர்நித்தமையால் (சிதைந்தமையால்) பிடவூரைச் சேர்ந்த வேளாளனான அரிகேசவனான கச்சிராஜன் இந்த மண்டபத்தை எடுப்பித்தார். அரிகேசவனான கச்சிராஜனுக்காக சோழநாட்டிலுள்ள (ஜயசிங்கன் குலத்தை அழித்தவரின் வளநாட்டைச் சேர்ந்த குளமங்கல நாட்டைச் சேர்ந்த) சாத்தமங்கலத்து பிடாரனான (சிவன்கோயில் பூசாரி) நாடறிபுகழன் இந்த வேலையை விரதங்கொண்டு மேற்கொண்டார். அவரோடு இவ்வூர் பிடாரர்களில் ராஜேந்திரசோழன் உதையநாயகனான ஈசான சிவரும் தேவன் அபயம் ஆன அறங்காட்டி பிச்சரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.

அதாவது சிவபாதசேகரமங்கலத்தில் (இன்றைய உடையாளூரில்) இராசராசனின் திருமாளிகை ஒன்றிருந்திருக்கிறது. அதன் முன்பிருந்த மண்டபம் விழுந்துவிட்டபடியால் பிடவூரைச் சேர்ந்த வேளாளன் அரிகேசவன் என்னும் கச்சிராஜன் எடுத்துக் கட்டுகிறான். அதாவது அவன் பொருள் அளிப்பவன். அவன் கொடுத்த பொருட்களைக் கொண்டு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பிடாரன் நாடறிபுகழனும், சிவபாதசேகரமங்கலத்து உள்ளூர் பிடாடர்களான ஈசான சிவரும் அறங்காட்டி பிச்சரும் மண்டபத்தை எடுத்துக் கட்டுகிறார்கள்.

இராசராசனுடைய விருப்பப் பெயர் சிவபாதசேகரன். தன்னை அப்படி அழைத்துக் கொள்வதை அவன் மனம் மிகவும் விரும்பியிருக்கிறது. இராசேந்திரனுக்கும் சிவசரண சேகரன் என்றொரு பெயருண்டு.

இராசராசனின் மாளிகை இருந்ததால் ஊருக்கும் சிவபாதசேகரமங்கலம் என்றே பெயராகிவிட்டது. அந்நாளில் மங்கலம் என்று முடியும் ஊர்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேய ஊர்களாக இருக்கும். இன்றும் இவ்வூரில் பால்குளத்துக்கு அருகில் ஒரு அக்கிரகாரம் உண்டு. அங்குதான் வடக்கிலிருந்து அழைத்து வந்த பாசுபத சைவ பிராமணர்களை இராசராசன் குடிவைத்தான். அவர்களின் வழித்தோன்றல்கள் இன்னும் அங்கிருக்கிறார்களாம். ஆனால் நடையுடை பாவனை மொழி உணவு என தமிழர்களாகத்தான் இருக்கிறார்கள். அருகில் ஒரு கைலாசநாதர் கோயிலும் இருக்கிறது.

இந்தக் கைலாசநாதர் கோயில்தான் இராசராசனின் பள்ளிப்படை என்பது சில வரலாற்றாய்வளர்களின் முடிவு. இக்கோயில் இராசராசனின் பள்ளிப்படை இல்லை என்பது வேறுசில ஆய்வாளர்களின் முடிவு. இருவரும் சொல்லும் காரணங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
ஜிரா

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in ஆதித்த கரிகாலன், இராசராசச் சோழன், உடையாளூர், ஊர்கள், தஞ்சை, பழையாறை, முதலாம் குலோத்துங்கச் சோழன், ராஜமுந்திரி, வரலாறு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இராசராசன் பள்ளிப்படை (சமாதி) – 1

  1. Pingback: இராசராசன் பள்ளிப்படை (சமாதி) – 2 | மாணிக்க மாதுளை முத்துகள்

  2. நாகராஜன் says:

    நண்பா,
    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள அருள்மிகு தென்திருக்காளத்தி நாதர் கோயிலைப்பற்றின வரலாறு ஏதும் தெரியுமா?
    தெரிந்தால் பதிவிடவும் ???

I am eager to hear what you want to say. Please say it. here. :)