தளிர் தவழும் தரளம் – கருமாரி வேண்டல்

Karumariநேற்றிரவு உறங்கும் முன் திருவேற்காட்டு கருமாரி அன்னையின் நினைவு உந்த இந்தப் பாடல் பிறந்தது. பாடலின் சந்தத்தையும் கொடுத்துள்ளேன். நன்றாகப் பாடக் கூடியவர்கள் பாடிக் கொடுத்தால் மகிழ்வேன். பாடலையும் பொருளையும் கீழ்க்கொடுத்துள்ளேன். கருமாரியின் அருள்மாரி உலகெங்கும் நிறைந்து கொரொனாவின் கொடுந்தாண்டவத்தையும் வென்று மக்களைக் காக்கட்டும். உலகெங்கும் வேதனையும் பீதியும் பற்றி எரிகின்ற இன்றைய சூழலில் அன்னையின் குளிர்ந்த கருணை மழை வேண்டி குளிர்ந்த பொருட்களை பாட்டில் நிறைய வைத்துப் பாடியிருக்கிறேன். அன்னையின் அருள் உலகைக் காக்கட்டும்.

தனன தன தனன தன தனன தன தானா
தனன தன தனன தன தனன தன தானா
தனன தன தனன தன தனன தன தானா
தனதான தனதான தனதான தானா

தளிர்த வழு தரள பனி குளிர்வி ழியின் தாயே
களர்கி ளறி உழும ழையின் கருமு கிலி மாயே
வெளிர்ம திய நிறங்க ளென வதன மொளிர்ந் தாயே
பழிபாவத் தடுமாற்றம் தடம்மாற்று வாயே!

துருவ முறை இம்பளிங் கில் வெருகு நடை போலே
பெருங்க வலை வலைவி ழுந்த தளர்ம னதி னாலே
அருந்து முலை அருள்கி டைக்க அழும்ம தலை நானே
கருமாரி பெயரோதக் கருதாத நாயேன்!

சுகந்த மிகுந் தகந்த மிழைக் கனகப் பதத் தாலே
அகந்தை அற தகுந்த படி எனைமி திக்க லாமே
மிகுந்த புகழ் முருகப் படை வனப்ப தியுன் ஊரே
எளியேனுங் கடைத்தேற வழிகாட்டு வாயே!

படிக்க ஏதுவாக சீர் பிரித்த பின்…

தளிர்தவழு தரளபனி குளிர்விழியின் தாயே
களர்கிளறி உழுமழையின் கருமுகிலி மாயே
வெளிர்மதிய நிறங்களென வதனமொளிர்ந்தாயே
பழிபாவத் தடுமாற்றம் தடம் மாற்றுவாயே!

பசுந்தளிர்களில் தவழுகின்ற முத்துப் போன்ற வெண்பனியின் குளிர்ந்த பார்வை கொண்ட தாயே! களர் நிலங்கள் கூட கிளறி உழுகப்படும் வகையில் விசையோடு பொழிகின்ற மழையைத் தருகின்ற கருமுகிலின் நிறத்தவளே! வெளிர் நிறத்து நிலவின் நிறங்களைப் போல் திருமுகம் ஒளிர்கின்றவளே! இந்த உலகத்தின் பழிபாவங்களில் தடுமாறி விழுந்து கொண்டிருக்கும் என்னை தடம் மாற்றுவாயே!
தரளம் – முத்து
மாயே – கருமையானவளே
மதியம் – நிலவு
வதனம் -முகம்

துருவமுறை இம்பளிங்கில் வெருகு நடை போலே
பெருங்கவலை வலைவிழுந்த தளர்மனதினாலே
அருந்து முலை அருள்கிடைக்க அழும்மதலை நானே
கருமாரி பெயரோதக் கருதாத நாயேன்!

கருமாரி என்கின்ற உன் பெயரை என்றும் ஓதிடக் கருதாத நாயைப் போன்றவன் நான்! ஏனென்றால் பசித்து அன்னையின் முலையமுதம் வேண்டுகின்ற குழந்தையைப் போல நான் அழுதுகொண்டிருக்கிறேன். அதற்கு என்ன காரணம்? மானுட வாழ்வில் இன்பதுன்பங்களால் உண்டாகும் பெருங்கவலை என்னும் வலையில் விழுந்து, துருவங்களில் உறைந்திருக்கின்ற பனியாலான பளிங்குத் தரையினிலே நடக்கின்ற பூனைப் போன்று தளர்ந்த மனத்தவனாய் இருக்கிறேன்!
துருவமுறை – துருவம் + உறை
இம்/ஹிம் – பனி (ஹிமாச்சலம், ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், ஹிமாம்பசந்த் மாம்பழம் – ஹிம் + ஆம் + பசந்த்)
வெருகு – பூனை
மதலை – குழந்தை

சுகந்த மிகுந்த கந்தமிழைக் கனகப் பதத்தாலே
அகந்தை அற தகுந்த படி எனைமிதிக்கலாமே
மிகுந்த புகழ் முருகப் படை வனப்பதியுன் ஊரே
எளியேனுங் கடைத்தேற வழிகாட்டுவாயே!

தாயே, நறுமணம் கமழும் சந்தனம் இழைக்கப்பட்ட உன்னுடைய பொன்னடிகளால், என்னுடைய அகந்தை அற்றுப் போகும்படி தகுந்த வகையில் என்னை மிதிக்கலாமே! உன் திருவடி பட்டால் உய்ய மாட்டேனா!!!
மிகுந்த புகழ் கொண்ட வேற்காட்டுப் பதி உன் ஊர். அங்கு வந்தாலும் வராவிட்டாலும் முட்டாளாகிய நான் கடைத்தேற வழிகாட்டுவாயே!
சுகந்தம் – நறுமணம்
கந்தம் – சந்தனம்
கனகம் – பொன்/தங்கம்
பதம் – திருவடிகள்
முருகப்படை – வேல்
வனம் – காடு
முருகப்படை வனம் – வேல் + காடு = வேற்காடு
பதி – இடம்/ஊர்

பாட்டிலும் பொருளிலும் இருக்கும் நிறைக்கும் குறைக்கும் அவளே பொறுப்பு! எனக்குத் தெரிந்து ஓரிடத்தில் சந்தம் பிசகியிருக்கிறேன். அதையும் வேறு பிசகுகளையும் கண்டால் சொல்லுங்கள்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அம்மன், இறை, திருவேற்காடு and tagged , , , , . Bookmark the permalink.

7 Responses to தளிர் தவழும் தரளம் – கருமாரி வேண்டல்

  1. dagalti says:

    சிறப்பு ஜிரா!
    முருகப்படை வனம்  போன்ற அழகான coinageகளை ரசித்தேன்.
    கருமுகில் வெளிர்மதி – வழமையான முரண்தொடைவெருகு நாயேன் -புதுமையான முரண்தொடை 

    சந்தம்

    புளிமா விளம் புளிமா விளம் புளிமா விளம் தேமா  X 3புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் தேமா 
    (வெண்டுறை)
    இது இரண்டாம் ஸ்டான்ஸாவில் பல வரிகளில் வரவில்லையே.நீங்கள் ஒரு இடத்தில் மட்டும் சந்தம் பிசகியிருப்பதாக சொல்லியிருப்பதால் கேட்கிறேன்.

    உதாரணமாக
    பெருங்க வலை வலைவி ழுந்த தளர்ம னதி னாலே
    புளிமா விளம் புளிமா தேமா புளிமா விளம் தேமா

    ஒரு வேளை ழுந்த என்பதில் ஒற்று நீக்கி ‘விளம்’ என்று கொள்ளவேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா?
    அப்படியென்றால் சந்தம் கெடாது.
     Proof of the pudding உரக்கச் சொல்லிப் பார்த்தால், எனக்கு எந்த இடத்திலுமே சந்தம் குறைந்ததாகத் தெரியவில்லை 🙂 ஆனால் ஏதோ ஒரு இடத்தில் பிசகு இருப்பதாக நீங்களே சொல்கிறீர்கள்.  
    ஒரு வேளை
    அருந்து முலை அருள்கி டைக்க அழும்ம தலை நானே
    என்ற வரியில்  ‘டைக்க’ என்ற சொல்
    தேமா – விளம் வேண்டும்
    How about பொருந்து முலை அருந்தி டவே அழும்ம தலை நானே

    பொருந்து as in பொருத்தமான

    ———-வாழ்த்துகள் I will watch this space for more 🙂

    • G.Ra ஜிரா says:

      படித்து விரும்பியமைக்கு நன்றி. 🙂

      வெருகு நாயேன் தொடர்பையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். கவனிப்பாரும் உண்டு என்று அடையாளம் காட்டி விட்டாள் கருமாரி.

      பிசகு என்று நான் சொன்னது இம்பளிங்கில். இம் என்ற சொல் மண்டைக்குள்ளே உட்கார்ந்து கொண்டேயிருந்ததால் வலுக்கட்டாயமாக அதைப் பயன்படுத்தினேன். இல்லையேன் வேறு விதமாக வந்திருக்கும்.

      முருகப்படை வனம் – என்ன சொன்னாலும் எழுதினாலும் முருகன் வந்து உட்கார்ந்து கொள்கிறான். வேற்காடு என்று சொல்ல இடமில்லை. அதனால் உண்டாக்கிய பெயர். 🙂

  2. dagalti says:

    ஒரு பொதுக்கேள்வி: வகையுளி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பொதுவாக அதை குறைவாக பயன்படுத்தவேண்டும் என்று சொல்வார்கள்.
    நான் எழுத முயல்வதில் இதை அனேகமாக கடைபிடிக்க முயல்கிறேன்.

    Sample 1: http://dagalti.blogspot.com/2020/02/blog-post_21.html
    Sample 2: http://dagalti.blogspot.com/2020/01/blog-post_5.html
    Sample 3: http://dagalti.blogspot.com/2019/03/blog-post.html

    ஓரளவு இவற்றின் ஓசை எனக்கு (நான் தானே முதலில் ரசிக்கவேண்டும்!) பிடித்தால், ஒருவித monotony வந்துவிடுகிறது. வெண்பா கூட கிட்டதிட்ட விருத்தம் போல (கடைசி வரி வரை) ஒலிக்கிறது. வகையுளியை தவிர்க்கவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வால் ஒரே சந்தம், ஒரு சீருக்கு ஒரு சொல் என்று குறுகுகிறது.

    உ.வே.சா’வின் என் சரித்திரத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஆங்காங்கே அவர் எழுதிய செய்யுட்களையும், அவர் காலத்து புலவர்கள் பிறரின் செய்யுட்களையும் எழுதுகிறார். யாருமே ‘வகையுளியை தவிர்க்கவேண்டும்’ என்றெல்லாம் எண்ணவில்லை.

    மாறாக அதை வைத்தி வித்தை காட்டி இருக்கிறார். மிக லாவகமாக சொல்லைப் பிளந்து விரித்து ஓசையைக் கொடிகட்டி பறக்கவிட்டிருக்கிறார்கள்.

    அதை படிக்க படிக்க, தேவையில்லாத ஒரு ‘விதியை’ உள்வாங்கிக் கொண்டு, இப்போது unlearn செய்யமுடியாமல் சிரமப்படுவதாக எனக்கு இப்போது தோன்றுகிறது.

    உங்கள் பாடலில் (இதை மட்டும் தான் படித்திருக்கிறேன், பிற இனி தான் உங்கள் ப்ளாகில் துழாவ வேண்டும்!) அனாயாசமாக வகையுளியை கவிதை உத்தியாகவே கையாண்டிருக்கிறீர்கள். அதனால் கேட்டேன்.

    Did you also have a journey from hesitation to embrace?

    • G.Ra ஜிரா says:

      // ஒரு பொதுக்கேள்வி: வகையுளி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? //
      வகையுளியை தவிர்க்க வேண்டும் என்று நான் நினைப்பதேயில்லை. இப்போது மட்டுமல்ல… பாக்கள் எழுதிக் கொண்டிருந்த சென்ற தசாப்தத்திலும் தான். எங்கு தானாகத் தவிர்கிறதோ அங்கு தவிர்ந்துவிட்டுப் போகட்டும் என்பதே என் நிலை. வலிந்து தவிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வகையுளி சிலபல இடங்களில் சொற்சிலம்பம் ஆடவும் உதவும். சற்று நினைத்துப் பார்த்தால் வகையுளியால் ஒரு ஓசைநயம் உண்டாவதாகவும் படுகிறது. இந்தக் கருத்துக்கு பாவலர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ! அவர்கள் கண்ணில் இது பட்டால்தானே. :))))))))

      உங்களுடைய பாக்களையும் படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். குறிப்பாக அந்தச் சிலேடை… அடடா… என்ன சுவை என்ன சுவை.

      // Did you also have a journey from hesitation to embrace? //
      இது வகையுளியைப் பற்றிய கேள்வியா என் நம்பிக்கையைப் பற்றிய கேள்வியா என்று தெரியவில்லை.

      வகையுளி பற்றியது என்றால்… விடை No. வகையுளியைப் பயன்படுத்துவதில் சுவைப்பதில் எப்போதும் தயக்கம் இருந்ததேயில்லை.

      நம்பிக்கை பற்றியது என்றால்… விடை No. சிறுவயதிலிருந்தே நம்பிக்கையில் ஊற வைக்கப்பட்டவன் என்றாலும், என் நம்பிக்கையில் எனக்குத் தடுமாற்றமில்லை. அதே நேரத்தில் என் நம்பிக்கையை விட மனிதம் பெரிது என்று நினைப்பவன்.

      • dagalti says:

        வகையுளி பற்றி தான்.

        /வகையுளி சிலபல இடங்களில் சொற்சிலம்பம் ஆடவும் உதவும்/
        இது எனக்கு மிகத் தாமதமான புரிதல்.
        குறிப்பாக பிரிமொழி சிலேடை எல்லாம் எழுத முனைந்தால் அனேகமாக வகையுளி இல்லாமல் எழுதவே முடியாது போல தோன்றுகிறது. இனி ஒரு கை பார்க்கிறேன் 🙂

  3. புரா says:

    ஆகா. மாரி போல்
    வளமை
    செழுமை
    இனிமை
    அருமை ஜீரா வாழ்த்துக்கள் ….

  4. dagalti says:

    /அவர்கள் கண்ணில் இது பட்டால்தானே/
    🙂

    கண்படும் வெங்கரியின் தோலுரித்த செந்தழலான்
    கண்படும் என்றொதுங்கி நின்றானோ வேரகத்தில்
    கண்படும் சுந்தரனும் ஓங்காரம் தானுரைத்தான்
    கண்படும் நல்லிடமாய் வாய்த்திடவே வாழ்த்துவனே! 

    கண்பு அடும் -> கண்பு புற்களை மிதித்து சேதமாக்கி அழிக்கும்
    வெங்கரி –> (மதம் பிடித்தாடிய) கோபமான ஆண் யானையின் தோலை உரித்த
    தழலை மேனியாகக் கொண்டவனின்

    கண் படும் –> நெற்றிக் கண் தன் மீது பட்டுவிடுமோ
    என்றொதுங்கி –> என்று பயந்து ஒதுங்கி விட்டானா என்ன
    கண்படும் சுந்தரனும் –> கண்ணேறு படுமளவு அழகான முருகன்
    (மாறாக)திருவேரகத்தில் (அப்பனுக்கே) ஓம்கார பொருள் உரைத்தான்

    (அதுபோல உங்களுக்கு)

    கண்படும் – (உங்கள் கருத்துகளும், வகையுளி சிறப்புற விளங்கும் உங்கள் பாட்டும், பாவலர்) கண்ணில்  படும்படியாக நல்ல தளம் வாய்க்க வாழ்த்துகிறேன் 🙂

    நாராயண ! நாராயண!

I am eager to hear what you want to say. Please say it. here. :)