கள்ளழகர் கவசம்

உலகில் அனைவரும் நலம் பெற வேண்டி திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளும் கள்ளழகர் மீது அருள் வேண்டி எழுதிய கவசம். நிறை குறை அனைத்தும் அவன் பொறுப்பு. எழுதிய கருவி என்று மட்டுமே என் இருப்பு.

பல்லவி
மாமதுரை ஓரத்திலே ஓர் மலையோ அழகர்மலை
மூலிகைகள் வேர்பிடித்தே ஓங்கியதோர் மருந்துமலை
நோயதனை தீர்த்திடுதே சீர் மலையே அழகர்மலை
நூபுரத்தின் ஓசையிலே பாய்ந்து வரும் கங்கைமலை

அனுபல்லவி
மலையடிவாரத்திலே நின்றநெடுங்கோலத்திலே
கள்ளழகர் காட்சி தரும் அழகுமலை
அமுதமும் ஊற்றெடுக்கும் உடல்நலம் தேற்றிவைக்கும்
கள்ளழகர் காவல் தரும் கருணைமலை
அந்தமலை நாயகனே அன்பினிலே தாயவனே
கண் திறந்து பார்த்துவிட்டால் குறையுமில்லை

கவசம்
உச்சந்தலையும் சிகைமுடி மண்டையும்
நெற்றிப் பகுதியும் இருபுறப் புருவமும்
ரெட்டைக் கண்களும் வளிவழி நாசியும்
எட்டும் ஒலிகளை பற்றிடும் செவிகளும்
செப்பிடும் வாயும் பற்களின் கூட்டமும்
கன்னக் கதுப்பும் அசையுறுந் தாடையும்
உண்டி விழுங்கும் ஒற்றைத் தொண்டையும்
அண்டி வந்தெங்கள் அழகர் காக்க

வலதிடமாக வளர் எழில் தோள்களும்
செய்யெனச் செய்யும் சீரிய கைகளும்
பகலிரவாகத் துடித்திடும் இதயமும்
உயிர்வளி நிரம்பிய இரு நுரையீரலும்
கூடெனக் காத்திடும் மார்பெனுங் கவசமும்
தனைப் புதுப்பிக்கும் அருங் கல்லீரலும்
குருதியின் கழிவுகள் நீக்கும் மண்ணீரலும்
உறுதி கொண்டெங்கள் அழகர் காக்க

நிமிர்ந்திடச் செய்யும் நீள்தண்டுவடமும்
வயிற்றின் கூரையாம் உதரவிதானமும்
உண்டது செரித்திட உதவிடும் இரைப்பையும்
சுருள்சுருளான சிறுகுடல் நீளமும்
கழிவினைத் தேக்கும் பெருங்குடற் பாதையும்
உப்புநீர் உறிஞ்சும் இரு சிறுநீரகம்
மலசலம் நீக்கும் உடலியற் பகுதியும்
சலபதி எங்கள் அழகர் காக்க

அமர்ந்திடச் செய்யும் புட்டமும் இடுப்பும்
மானிடர்க்கான உயிர் பிறப்புறுப்பும்
மேலுடல் தாங்கும் மாவலித் தொடையும்
நீட்டி மடக்கிடும் முழங்கால் மூட்டும்
முட்டியின் கீழ்வளர் கெண்டைக்கால்களும்
செழுங்கணுக்காலும் நடைபயில் பாதமும்
வெண்ணிற எலும்பும் அக்கும் ஆணியும்
குருதி சுரக்கும் எலும்பினுள் மஜ்ஜையும்
உணர்வுகள் கடத்தும் நீள் நரம்புகளும்
உயிர்ச் செந்நீரும் குருதியின் நாளமும்
அடிமுதல் முடிவரை அனைத்துப் பாகங்களும்
அன்பு கொண்டெங்கள் அழகர் காக்க

பெயர் தெரியாத பலவித நோய்களும்
உயிர்வரை உறுத்தும் உடலின் வாதையும்
உணர்வுகள் மரக்கும் மனவலி வேதனை
சனமும் நெருங்காது வேங்கடன் காக்க
சுடுகிற அனலும் குளிர்நிறை புனலும்
பெருவளிக் காற்றும் பொறுமை நிலமும்
உலகம் பரந்த முகிற்றொகை விசும்பும்
வெக்கையும் வெயிலும் தென்றல் காற்றும்
அன்னையின் அமுதாய் பொழியும் மழையும்
எட்டுத் திசையும் சுடர்க்கதிர் நிலவும்
எப்பவும் துணையாய் எட்டெழுத்து காக்க

தெரிந்தும் தெரியாமல் எழுகிற பகையும்
அறிந்தும் அறியாமல் புரிகிற பிழையும்
விடாது தொடரும் பாவபுண்யங்களும்
நமை அண்டாது அழகரின் பார்வையில்
அறிந்ததும் சிறிது தெரிந்தது சிறிது
உலக வாழ்க்கையினில் புரிந்ததும் சிறிது
எது எது நமக்கு தீங்கென ஆகுமோ
அது அது நம்மை நீங்குதல் ஆக்குமாம்
சௌந்தரராஜப் பெருமாள் நாமம்
எப்பொழுதாயினும் எத்திசையாயினும்
எந்நிலையாயிலும் எவ்விடமாயினும்
எண்ணிய பொழுதும் எண்ணாத பொழுதும்
புள்ளேறும் அரையன் புரிந்தெமைக் காக்க

எழுதிய கருவியாம் எளியவன் நானும்
படித்திடும் மானிடர் எவரெவர் ஆயினும்
குடும்பத்துடனே நலம் பெறக் காக்க
துயர்களும் களைந்திட தூயவன் காக்க
உடல் நலம் தேற உத்தமன் காக்க
மனநலம் வளம் பெற மாலவன் காக்க
அறிவினில் சுடர் வர அச்சுதன் காக்க
பலநலம் பெருக பத்மநாபன் காக்க
எட்டெழுத்தானே நாரணன் காக்க
திருமகள் துணைவன் திருமால் காக்க
வலம்புரி காக்க சுதர்சனம் காக்க
ஆண்டவன் சுமக்கும் கருடப்புள் காக்க
மாலிருஞ்சோலை மாயவன் காக்க
வெண்ணை வழிந்திட நூறு தடாவில்
பொங்கல் வைத்ததோர் கோயிலும் காக்க
வைகை இறங்கும் வள்ளல் காக்க
அழகர் நாமம் அனைவரைக் காக்க
நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க

—- முற்றும் —

அருள் வேண்டி,
ஜிரா

Pdf வடிவில் தரவிறக்கம் செய்ய…


About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அழகர்கோயில், இறை, தமிழ், திருமாலிருஞ்சோலை, பக்தி, விஷ்ணு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கள்ளழகர் கவசம்

  1. அன்புடன் பாலா says:

    உம் கவசத் தமிழின் ஈரச்செழுமை
    அருமை அருமை, ஜிரா.
    உம்மை அறிந்ததில் எமக்குப் பெருமை
    இன்னுமோர் நூற்றாண்டிரும்

    அன்புடன்
    பாலா

I am eager to hear what you want to say. Please say it. here. :)