அபூர்வ ராகங்கள் – 1 – கபிகபி

நாமல்லாம் எத்தனையோ பாட்டு கேக்குறோம். எத்தனையோ மனசுல நிக்குது. எத்தனையோ மறந்து போகுது. எத்தனையோ பாட்டுகள் நல்லாயிருந்தும் நம் காதுக்கே எட்ட மாட்டேங்குது. கெடைக்கனுமே? கெடச்சாத்தானே காதுக்கு எட்டுறது. இப்பிடி நாம மறந்து போன, நமக்குக் கிடைக்காம ஒளிஞ்சிருக்கும் நல்ல அரிய பாட்டுகளைத் தேடி எடுத்து ஒங்களோட பகுந்துக்கிறதுக்குத்தான் இந்தப் பதிவு. அப்பப்ப பாட்டுகளைப் பாப்போம்.

மொதப் பாட்டா எந்தப் பாட்டைப் பதிவுல போடலாம்னு யோசிச்சப்ப போன சனிக்கிழமை, அதாவது ஜனவரி 7ம் தேதி (2012) நடந்த ட்வீட்டர் சந்திப்புல பேசுல ஒரு பாட்டோட நினைவு வந்துச்சு. அபூர்வ ராகங்கள்ள வர்ரதுக்கு எல்லாத் தகுதியும் உள்ள பாட்டு அது. அப்பிடியிருக்குறப்ப விட்டுருவோமா? 🙂

சரி. பாட்டுக்கு வருவோம். படத்தோட பேரு “அவர் எனக்கே சொந்தம்”. நல்ல கணவன் மேல மனைவி சந்தேகப்படுற கதை. பட்டாபிராமன்னு இயக்குனர். ஜெய்சங்கரும் ஸ்ரீவித்யாவும் கணவனும் மனைவியுமா நடிச்சிருக்காங்க. ஜெய்சங்கரோடு சேத்து வெச்சு சந்தேகப்படப்படும் பாத்திரத்துல படாபட் ஜெயலட்சுமி. முடிவு என்ன? தமிழ் சினிமா வழக்கப்படி படாபட் ஜெயலட்சுமி உயிரை விட, ஸ்ரீவித்யா திருந்தி ஜெய்சங்கரோட சேர்ந்துர்ராங்க.

படாபட் ஜெயலட்சுமியோட காதலனா விஜயகுமாரும் இன்னொரு சந்தேகப்படப்படும் விதவைப் பெண்ணாக ஒய்.விஜயாவும் சிறிய பாத்திரத்தில் நடிச்சிருக்காங்க.

படத்துல ஒய்.விஜயாவுக்குப் பாட்டு உண்டு. விஜயகுமாருக்குப் பாட்டு உண்டு. ஜெய்சங்கருக்குப் பாட்டு உண்டு. வி.கே.ராமசாமிக்குப் பாட்டு உண்டு. ஆனா கதாநாயகி ஸ்ரீவித்யாவுக்குப் படத்துல பாட்டே கிடையாது.

ஓரளவுக்கு நல்ல திரைக்கதை. பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட. இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. எல்லாப் பாடல்களுமே அருமை.

1. தேனில் ஆடும் ரோஜா நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக்கண்டேன் – பி.சுசீலா. இந்தப் பாடலைப் பற்றி இசையரசி  வலைப்பூவில் முன்பே ஒரு பதிவிட்டிருந்தேன். அவ்வளவு இனிய பாடல்.
2. தேவன் திருச்சபை மலர்களே – பூரணி
3. தேவன் திருச்சபை மலர்களே – ஏசுதாஸ்
4. சுராங்கனி சுராங்கனி – மலேசியா வாசுதேவன், பூரணி (சிங்கள பைலா பாடல். அதை ராஜா பயன்படுத்தியிருந்தார். அந்தக் காலத்துக் கொலைவெறி பாடல் இலங்கையிலிருந்து. ஆனால் ஒழுங்கான சிங்கள வரிகளோடு)
5. குதிரையிலே நான் அமர்ந்தேன் – டி.எம்.சௌந்தரராஜன் (இந்தப் பாட்டின் மெட்டை அண்ணனுக்கு ஜே என்ற படத்தில் ஏலே இளங்கிளியே அடடா தோளிரண்டும் தாமரையே என்று ராஜா மறுபடியும் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்வார்கள்)
6. ஒரு வீடு இரு உள்ளம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் (என்னளவில் படத்தின் சுமாரான பாடல் இது)

இந்த ஆறு பாட்டுல தேனில் ஆடும் ரோஜாவும் தேவன் திருச்சபை மலர்களே பாடலும் ரொம்பப் பேர் கேட்டிருப்பீங்க. ஆனா ஏழாவது பாட்டு நகைச்சுவை அட்டகாசம். பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி சிறு குறிப்பு. வந்த முதல் நான்கு ஆண்டுகள்ள டி.எம்.சௌந்தரராஜனை நிறைய பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. கமல், ரஜினி, ஜெயசங்கர், சிவாஜி என்று எல்லாருக்கும் டி.எம்.எஸ்சைப் பாட வைத்து வெற்றி கண்டிருக்கிறார் ராஜா.

ஒரு பேட்டியில் ராஜா இப்படிச் சொன்னார். “டி.எம்.எஸ்சைப் போல இசையமைப்பாளருக்குப் பொருத்தமான பாடகர் கிடையாது. மெட்டு சொல்லிக் கொடுத்தாலே போதும். இசையமைப்பாளர் பாட்டில் எதிர்பார்ப்பதெல்லாம் வந்துவிடும்.”

ராஜா வருவதற்கு முன்பே டி.எம்.எஸ் பெரிய பாடகர். நிறைய பாடல்களையும் பாடியிருக்கிறார். அவரை மற்றவர்களிடமிருந்து வித்யாசமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ராஜா.

ஒரு அரங்கத்தோட திறப்பு விழா. மொதப் பாட்டா தியாகராஜர் கீர்த்தனையப் பாடனும்னு சபாக்காரர் வேண்டுகோள். பாகவதர் வி.கே.ராமசாமி வந்தாச்சு. ஆனா வாத்தியக் கூட்டம் வரலை. அடுத்த கச்சேரிக்கு வந்த சினிமா ஆர்க்கெஸ்ட்ரா அங்க இருக்கு. அத வெச்சுக்கிட்டு தொலி நேனு ஜேங்குற கீர்த்தனையப் பாடுறாடு பாருங்க. அடடா! அப்போ வி.கே.ராமசாமியோட முகபாவங்கள் கலக்கல்.

நல்லவேளையா வாத்தியக்காரங்க வந்துர்ராங்க. ஆனா ஒரு சிக்கல். ரெண்டாவது பாட்டா சினிமாப் பாட்டைப் பாடச்சொல்லி பாகவதரைக் கேக்குறாங்க மக்கள். அவரும் வேற வழியில்லாம தெருவுல கேட்ட “கபி கபி மேரே தில் மே” பாட்டைக் கர்நாடக சங்கீதப் பாட்டு மாதிரி பாடுறாரு. அட்டகாசக் காமெடி. டி.எம்.எஸ் கலக்கீருப்பாரு. நீங்களே கேட்டுப் பாருங்க. கேட்டுப் பாத்துட்டுச் சொல்லுங்க. 🙂

அன்புடன்,

ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இசைஞானி, இளையராஜா, ஏழிசைவேந்தர், டி.எம்.சௌந்தரராஜன், திரையிசை, நகைச்சுவை and tagged , . Bookmark the permalink.

8 Responses to அபூர்வ ராகங்கள் – 1 – கபிகபி

  1. அருமை பாஸ்.. அருமையான தெரிவு..! இந்த பாடலுக்கு அப்போ ஏதும் எதிர்ப்பு வந்ததா..!? அதும் அந்த கபி கபி மேரா தில் லு மே காயாலு ஆத்தா கே.. really wonderful… after i used to this hindi song.. it still seems to be a Masterpiece from that Master…!

    Please Do continue this அபூர்வ ராகங்கள்…!
    Anand Raj

    • GiRa ஜிரா says:

      இல்ல. இந்தப் பாட்டுக்கு எதிர்ப்பு வரலை. எதிர்ப்பு வந்த இளையராஜா பாட்டு “ஓரம்போ ஓரம்போ” பாட்டுக்குதான்.

      அபூர்வராகங்கள் கண்டிப்பா தொடரும். நம்மூர்ல நிறைய இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள், கவிஞர்கள் இருக்காங்களே. 🙂

  2. ஸரி கம ஸரி கம நீ நீ அடிக்கடி நிக்கற நீ உக்காரு நீ..ஹா ஹா… அட்டகாசம். கபி கபி என்கிற ஹிந்திப் பாடலை பிரித்து மேய்ந்திருப்பது நல்ல ரசனை. மிக அரிய பாடல் தான். தேவன் திருச்சபை மலர்களே எனக்கு மிகவும் பிடித்த பாடல். இணையத்தில் இந்தப் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவுக்கு நன்றி

    • GiRa ஜிரா says:

      இணையத்தில் இந்தப் படத்தை நானும் பார்த்ததில்லை. இந்த டீவிடியை ஏதோ ஒரு கடையில் எப்பொழுதோ வாங்கினேன். அதனால் இந்தப் பாடல் கிடைத்தது. 🙂

  3. இந்த பாட்டை இதுக்கு முன்னாடி கேட்டுயிருக்கேன், ஆனா இளையராஜா இசைனு தெரியாது! ரொம்ப அருமையா இருக்கு. இன்னும் கேக்க விருப்பம். நன்றி!

    • GiRa ஜிரா says:

      கேளுங்க. கேளுங்க. கேட்டுக்கிட்டேயிருங்க 🙂

  4. அனுஷா says:

    இந்தப் பாட்டைக் கேட்டா, கர்னாடக சங்கீதத்தை fusionன்னு இப்போ album போடறதுதான் ஞாபகம் வருது. உங்க youtube albumல இருக்கற பாட்டெல்லாம் நல்லாயிருக்கு.

    • GiRa ஜிரா says:

      ஆமா. இதுவும் fusion தான்.
      பாடல்களை ரசித்தமைக்கு நன்றி

I am eager to hear what you want to say. Please say it. here. :)