அமலன்

ஆழ்ந்த தூக்கம். அசையாத உடம்பு. சீரான மூச்சு. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த அமல்ராஜ் தனது மூளையின் ஓரத்தில் அழுதுகொண்டிருந்தான். அவன் உடம்பு சூடான உப்புக் கண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது.

”ஆண்டவரே! நான் உம்மை வேண்டிக் கூப்பிடுவது உமக்குக் கேட்கிறதா? எனக்காக ஒருமுறை என்னிடம் வர மாட்டீரா?”

மார்பு வரை நிரம்பிய கண்ணீர் நெஞ்சைக் கரித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கழுத்துக்கு மேல் ஏறிக்கொண்டிருந்தது. இன்னும் சிறுது நேரத்தில் உடம்பு கண்ணீரில் மூழ்கி மூச்சு முட்டி சாக நேரிடுமே என்ற கவலை அமல்ராஜுக்கு வந்ததுபோலத் தெரியவில்லை. குளிர்காலத்து பூனையின் ஏக்க அழைப்பினைப் போல விம்மி முனகி அழுதுகொண்டே ஆண்டவரிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தான்.

“எனக்காக.. எனக்காக.. ஏதாவது நீங்கள் செய்ய வேண்டும் ஆண்டவரே!”

கண்ணீர் மூக்கைத் தாண்டி மேலே ஏறி இமைகளின் சிறு இடைவெளி ஓரத்தில் கசிந்தது. அமல்ராஜ் சாகாமல் தப்பித்துக் கொண்டான்.

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மஞ்சள் பொன்னிறத்தில் பொறித்த கோழித்துண்டுகளை அமெரிக்கக் கடையொன்றில் அமல்ராஜ் வாங்கிக் கொண்டிருந்த போது அவனை அழைத்து யாரென்று மனது யோசித்துப் பார்த்தது. அவன் மாலுக்குள் நுழைந்த பிறகு இரண்டு மூன்று முறை பெயர் சொல்லி யாரோ அழைக்கக் கேட்டான். திமுதிமுவெனப் பெருகிய கூட்டத்தில் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை மறந்த நிலையில் தெளிவில்லாமல் குருடர்களைப் போல் எதையோ மாலுக்குள் தேடும் கூட்டத்தில் அவனைக் கூப்பிட்டவர் மட்டும் கண்களில் படவில்லை.

கோழித் துண்டுகளையும் குளிர்பானத்தையும் சிவப்பு நிறத் தட்டில் வாங்கிக் கொண்டு நடக்கும் போது, முன்னே நடந்த ஜீன்ஸ் அணிந்த போஷாக்கான பெண்ணின் புடைத்த டிஷர்ட் குமுகுமுவென முன்னோக்கி வளர்ந்தது. தட்டில் இடித்துவிடுமோ தன்மீது இடித்துவிடுமோ என்று அவன் பயந்த அந்த வினாடியில் தெளிவாகக் கேட்டது.

“அமலன்”

Jesus_1சட்டென்று திரும்பிப் பார்த்தவன் திடுக்கிட்டான். பிதாவின் சுதன் அங்கு நின்றிருந்தார். நரம்புகளில் வாழ்க்கை போட்ட முடிச்சுகள் எல்லாம் ஒரே இழுப்பில் அவிழ்ந்து தசைகள் தளர்ந்து நின்றான். சிகப்புத் தட்டு கீழே விழுந்து வறுத்த கோழிகள் ஓடின.

“ஆண்டவரே.. ஆண்டவரே..” உடம்பை முந்திக் கொண்டு உணர்வும், உணர்வை முந்திக் கொண்டு உயிரும் ஓடின. மீண்டும் அவன் மூளையின் ஓரத்தில் அழுதான். கண்கள் திறந்திருந்ததால் உடம்பில் கண்ணீர் தேங்கவில்லை. ஏசு கிருஸ்துவின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

தேவாலயங்களில் பார்த்த ஏசுநாதரைப் போல இல்லாமல் அரேபியக்காரரைப் போல தேவன் அவனுக்குத் தெரிந்தார். ஒரு சிறு கணப்பொழுதில் தோமாவைப் போலச் சந்தேகப்பட்டான்.

“அமலன்”

அவன் அம்மா அப்படித்தான் அவனை அழைப்பாள். அந்த அழைப்புகளை காதுகள் உணர்ந்து காலம் பலவானாலும் மனமும் உணர்வும் இன்னும் மறக்காமலிருந்தது. அமல்ராஜ் என்று ஒருபோதும் அவள் அழைத்ததில்லை. ஊருக்கு அமல்ராஜாகவும் அவளுக்கு மட்டும் எப்போதும் அமலனாகவும் இருந்தான் அவன். இப்போது தேவனுக்கும்.

“அமலன். என் மீது சந்தேகம் கொள்கிறாயா?”

“தேவனே! இந்தப் பாவியை மன்னியுங்கள். ஆண்டவராகிய ஏசு கிருஸ்துவைச் சந்தேகித்த இந்தப் பாவியை நரகத்தின் வாயிலில் நுழைய விடாமல் தடுத்துக் காப்பாற்றுவீராக.”

“பயப்படாதே! நான் உன்னோடு கூட இருக்கிறேன். இதோ என் கைகளைப் பார். ஆணிகள் இறங்கிய துளைகளில் உன் விரலால் வருடிப் பார். என் விலாவில் ஈட்டி இறங்கிய இடத்தில் உன் விரலும் இறங்கி என்னை உனக்குக் காட்டட்டும்.”

தேவன் நீட்டிய திருக்கரங்களைப் பற்றித் தடவினான். அவனுடைய கண்ணீர் அவர் கைகளில் விழுந்து துளையினூடே வழிந்தது.

“எத்தனை நாள் தவிக்க வீட்டீர் என்னை. உத்தமராகிய உங்களோடு பேசுவதற்காக நான் துன்பத்தோடு காத்திருந்தேன். என்னுடைய வாக்கியங்களைப் பேசவிடாமல் பயம் என்கிற பிசாசு துரத்தியது. உமது கருணையால் பயம் விலக்கிப் போன இந்த நேரத்தில் என்னை ஆசீர்வதியும்.”

ஆண்டவருடைய அன்பான கரங்கள் அமலனின் தலையை வருடின. அன்பும் சமாதானமும் கொள்ளப் பிடிக்காமல் அவன் இருதயம் முழுக்க நிரம்பி வழிந்தது. தேவனின் சங்கீதத்தைப் பாடி அற்புதமான ஆனந்தத்தை அடைய மனம் துடித்தது.

“அல்லாத்தையும் கொட்டீட்டு ஏன் உயிர எடுக்குற? எனக்கு வேல வெக்கிறியே.” வள்ளென்று விழுந்தார் அங்கிருந்த துப்புரவுத் தொழிலாளி. கோழித் துண்டுகளை முறத்தில் எடுத்து குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு தரையில் தேங்கியிருந்த குளிர்பானத்தைத் துடைத்துக்கொண்டே அமலனின் உடம்பின் அவயங்களை இழிவுபடுத்தி  வாய்க்குள் முனங்கிக்கொண்டிருந்தார். ”எந்திரிச்சுப் போ” என்று சத்தமிட்டுக் கத்தினார்.

அவர் மீது அமலனுக்கு கோவம் வந்தது. தேவனைக் கொஞ்சம் கூட மதிக்காமல் அந்தத் தொழிலாளி தரையைத் துடைப்பது எரிச்சலை உண்டாக்கியது.

”அமலன், உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயக. எழுந்திருந்து என்னோடு வா.”

மேய்ப்பரின் பின்னால் செல்லும் ஆட்டுக்குட்டியைப் போலச் சென்றான். அவன் மண்டியிட்டபடி நடந்து செல்வதை மற்றவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அமலனுக்கு அது புதிதல்ல. உணர்வின் ஆழத்திலிருந்து விரும்பிச் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் போதும் சுற்றியிருப்பவர்கள் கருவாடு கண்ட பூனை போல விறுவிறுவென அவனை பார்ப்பது தினப்படி நிகழ்வு. அது நடக்காமல் இருப்பதோ அரியதொரு நிகழ்தகவு. ஒருவேளை தன்னுடைய வாழ்க்கையின் கடமையை அறிவுறுத்தி வழிகாட்டுவதற்காக ஆண்டவரால் அனுப்பப்பட்ட வானதூதர்கள் மானிட உருக்கொண்டு வந்தனரோ என்று அவர்களை அவனும் விறுவிறுவெனப் பார்த்தான். அவன் அவர்களைப் பார்க்கிறான் என்று கண்டுகொண்ட வினாடியே மிளகாயை முகர்ந்த நாயைப் போல திருப்பிக் கொண்டு விரைவார்கள்.

கூட்டமில்லாத ஒரு இடத்தில் ஏசு கிருஸ்து அவனிடம் “பேச வேண்டியதை எல்லாம் என் உடன் பேசு. கேட்க வேண்டியதை எல்லாம் என்னிடத்தில் கேள்.”

உச்சந்தலையில் பீறிட்ட கூச்சம் உடம்பு முழுவதும் பரவிச் சிலிர்க்க கைகளைக் கூப்பிக் கேட்டான். ”ஆண்டவரே என் ஆயர்! எனக்கு எதுவும் குறையில்லை. ஆனாலும் என்னுடைய பிழைகளுக்காகவும் பாவங்களுக்களுக்க்காகவும் என்னை மன்னியும்! ஆசீர்வதியும்!”

ஆண்டவர் பேசாதிருந்து அமலனைப் பேச வைத்தார்.

“தேவனே! இத்தனை காலம் நான் துடித்துக் கொண்டிருந்த போது நீங்கள் என் அருகிலிருந்தீரா? என் வேதனையை அறிந்தீரா?”

“அமலன்! நீ சிரித்த நேரங்களில் உன்னுடைய மகிழ்ச்சியாய் நான் இருந்தேன். நீ துன்பப்பட்ட வேளைகளில் உன் கண்ணீராய் வழிந்தேன். நீ வாதையால் வாடிய காலங்களில் உன் வேதனையாய்த் தளர்ந்தேன். நீ வாயால் பேசிய பேச்சுகளை விட மனதால் சொன்னவற்றை எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தேன்.”

“ஆவி ஆனவரே! அன்பின் ஆவி ஆனவரே! இப்போ வாரும்! இறங்கி வாரும் எங்கள் மத்தியினிலே!” சுடுநீர் ஊற்றுகளாக கண்களை மாற்றிக் கொண்டு பாடினான்.

அவன் பாடி முடிக்கும் வரை புன்னகையோடு பொறுத்திருந்தார் ஆண்டவர். பரவிய பரவசம் வடிகின்ற வரையில் பாடி முடித்தான் அமலன்.

“ஆண்டவரே! உங்களிடம் கேட்க என்னிடம் கேள்வியொன்று உண்டு.”

”கேள்” என்று புன்னகையாலே கேட்டார் ஏசு கிருஸ்து.

“கல்வாரி மலையிலே உம்மைச் சிலுவையில் நிறுத்தி பருத்த ஆணிகளைக் கொண்டு அறைந்த போது உமக்கு வலிக்கவில்லையா? அவர்களிடமிருந்து தப்பும் வல்லமை உமக்கில்லையா? ஏன் செந்நிறக் குருதி வழிய வழிய உயிரையும் ஒழிய விட்டீர்?”

“வல்லமை என்பது இன்னொருவருக்கு வலியைக் கொடுப்பதற்கல்ல. வலியையும் மீறிய வலிமையைப் புரிய வைப்பதற்கு. நான் ஒருவன் அன்று துன்பம் அடைந்ததை உள்ளத்தில் பாசத்தோடு நினைத்துப் பார்க்கின்றவர் உங்களில் ஒருவராக இருந்தால் அவர் என்றும் எந்தவகையிலும் பிறருக்குத் துன்பம் கொடுக்க மாட்டார். அன்பையே தருவார். அதுவே உங்களைப் பரலோக சாம்ராஜ்யத்துக்குக் கூட்டிச் செல்லும். உங்களை அங்கு கூட்டிச் செல்வதற்காகவே அன்று நான் என்னைச் சிலுவையில் பூட்டிக்கொண்டேன்.”

உலகின் அன்புக்கெல்லாம் ஆளுகை ஆனவரின் திருக்கரங்களை அன்போடு முத்தமிட்டான்.

”ராஜாவே! கர்த்தாவே! சிலுவையில் மரித்து மீண்டும் உயிர்த்தவரே! மரணத்தைக் காட்டி எங்களையெல்லாம் பயப்படுத்துகிறார்கள். மரணம் இப்படி இருந்தது என்று சொல்லும் வல்லமை உமக்கே உண்டு. உமக்குத் தோத்திரம் சொல்லிக் கேட்கிறேன். உண்மையைக் கூறுவீர். மரணம் எப்படியிருந்தது? பயம் கொடுத்ததா? படபடப்பாக இருந்ததா? மூச்சு முட்டியதா?”

நீதியின் ராஜாவாகிய கிருஸ்து புன்னகை செய்தார். “அமலன், மரணம் என்பது பயப்படுவதற்கு அல்ல. வலிகளோடும் வேதனைகளோடும் சிலுவையில் உயிரோடு இருந்த போது நான் கடைசியாக வேண்டியது நினைவிருக்கிறதா?”

“நன்றாக நினைவிருக்கிறது இஸ்ரவேலின் ராஜாவே! தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று வேண்டினீர்!”

“ஆம். பிதாவின் கையில் என் உயிரை ஒப்படைத்தேன். பிதாவே கொடுத்தார். அவரிடம் நான் திருப்பிக் கொடுத்தேன். எந்தவிதமான வாதையும் அப்போது என்னிடம் இருக்கவில்லை. மரணிக்கின்ற அந்த நொடியில் ஆனந்தமாய் ஒரு வலி வந்தது. அதோடு நான் வெளிச்சமும் ஆனந்தமுமாய் நிறைந்திருக்கும் தேவசாம்ராஜ்யத்தில் இருந்தேன்.”

புரிந்தும் புரியாமலும் யாக்கோபின் ராஜாவிடம் கேட்டான் அமலன், “ஆண்டவரே! ஆனந்தமாய் வலிப்பது என்றால் என்ன?”

“சுமக்க முடியாமல் தன்னுடைய குழந்தையை வயிற்றில் தாங்கிக் கொள்ளும் வலிதான் ஆனந்தமான வலி. அந்தக் குழந்தை பிறந்த பிறகு எல்லா இடங்களுக்கும் தோள்வலிக்கத் தூக்கிச் செல்வதுதான் ஆனந்தமான வலி. தன்னுடைய மனைவி மக்களுக்காக உடல் நொறுங்க உழைத்துக் களைக்கும் தந்தை அனுபவிப்பதுதான் ஆனந்தமான வலி. அந்த ஆனந்தமான வலியோடுதான் மரணித்தேன். என் உயிரை பிதாவிடம் ஒப்படைத்தேன்.”

“பாவத்தின் சம்பளம் மரணம் என்பது பயப்படுத்துகிறதே. மரணத்தைக் கண்டு பயப்படுவது நல்லதா?”

“பாவம் செய்தவர்களுக்கும் நன்மை செய்தவர்களுக்கும் ஒன்றுமே செய்யாதவர்களுக்கும் வருவதே மரணம். மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். பிறந்த எல்லாருக்கும் உண்டாவதே மரணம். அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். வாழ்க்கையைக் கண்டு அச்சப்படுங்கள். வாழ்க்கையில் பாவங்கள் செய்யாமல் இருக்க பயப்படுங்கள்.”

“நல்லது ஆண்டவரே. ஆனால் என்னை வாழவிடாமல் விரட்டிய இந்த உலகத்தை என்ன செய்வது? என்னை எங்கு சென்றாலும் துரத்தும் தீயவர்களை என்ன செய்வது? என்னைக் கேவலமாகத் திட்டியவர்களை என்ன செய்வது? என்னுடைய உணவைத் தட்டிவிட்டவர்களை என்ன செய்வது? என்ன செய்வது? என்ன செய்வது?”

”அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். அப்படியே விடு. அவர்கள் தமக்கான பாவமூட்டைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பரலோகத்தில் அந்த மூட்டைகளை முதுகு வலிக்கச் சுமக்கப் போவது அவர்கள்தான். பாவமூட்டைகளின் கனம் பரலோக சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு நொடியும் கூடிக்கொண்டேயிருக்கும். அதனால் அவர்களை மற. உனக்கு தேவன் விதித்த காரியங்களைச் செய். அதுவே பெலனும் அடைக்கலனும் ஆகும்.”

”பரிசுத்தமானவரே! உங்கள் மந்தையில் பரிசுத்த மாணவனாக நான் இல்லையே. உம்முடைய கைகள் என்னையும் இரட்சிக்குமா?”

கர்த்தரின் முகத்தில் பொன்னொளியும் புன்னகையும் பரவியது. “அமலன், அதனால்தான் உன்னோடு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உனது துன்பத்தை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன். உன்னுடைய கேடயமும் இரட்சிப்பும் நானே!”

கர்த்தாவை நோக்கி தோத்திரம் சொன்னான் அமலன். “கடவுளே! உமது பெயரின் வளமையால் எம்மைக் காப்பாற்றும். உமது ஆற்றலினால் எமது நேர்மையை நிலைநாட்டும். மாறும் உலகில் மாறத உம் உறவே நிரந்தரம்!”

தூக்கத்தில் மூளையின் நடுவில் அழத் தொடங்கினான் அமலன். கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலுக்குள் நிறைந்து கொண்டிருந்தது. நெஞ்சு வரை நிரம்பிய கண்ணீர் இருதயத்தையும் நிரப்ப ஆரம்பித்தது. இருதயம் இரத்தத்துக்குப் பதிலாக நாளங்களில் கண்ணீரைச் செலுத்தியது. தூங்கிக் கொண்டிருந்த அமலனுக்குத் தாகம் எடுத்தது. “தாகமாய் இருக்கிறது” என்று சொன்னான்.

“எல்லாம் நிறைவேறிற்று” என்று ஆண்டவர் சொன்னார்.

அந்த நொடியில் அவனுக்கு ஆனந்தமாக வலித்தது.

அன்புடன்,
ஜிரா

Picture Courtesy – http://homebrew.us/Jess/inspirational/sketches_of_Jesus.htm

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in கதை, சிறுகதை. Bookmark the permalink.

8 Responses to அமலன்

  1. amas32 says:

    வேற லெவல்! அருமையான, ஆழமான கருத்துக்களை வெகு சுவாரசியமாக கதையின் ஓட்டத்தில் பின்னிப் பிணைத்து உள்ளீர்கள். புனித வெள்ளிக்கு உகந்த ஒரு அருமையான கதை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    amas32

    • GiRa ஜிரா says:

      நன்றிமா. கொஞ்சம் புதுசா எழுதலாமேன்னு முயற்சி செஞ்சேன் 🙂

  2. nparamasivam1951 says:

    May be written for Easter. But the historical incidents occured in Europe and the part played during Stalin regime and the support he received from the powers that be, bely the hidden subject of the story. OK, let it be past. The story may be told in different languaged, at least in India, that peaceful co-existence may be exercised in Indian sub-continent.

Leave a reply to GiRa ஜிரா Cancel reply