19. பிரியமுடியவில்லையா பிரியமானவளே

Keshav-19.jpg

Thanks to Keshav!

நப்பின்னைக்கு இப்போது அறத்துன்பம். உதவி என்று கோதை கேட்டுவிட்டாள். உதவித்தான் ஆகவேண்டும். ஆனால் தானாக எழுந்திருக்க விரும்பினாலொழிய மாயக்கண்ணனை யாரும் எழுப்பமுடியாது. இது நப்பின்னைக்கும் நன்றாகத் தெரியும். கோதை பாடுவது காதில் விழுந்தும் கண்ணன் பொய்த்தூக்கத்தில் இருக்கிறான். அதோடு நப்பின்னையையும் எழவிடாமல் அவள் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருக்கிறான். ஏதாவது செய்ய வேண்டுமே! ஆம். அதுவொன்றுதான் வழி.

கண்ணன் படுத்திருப்பது எந்த அறையென்று காட்டிக் கொடுத்துவிட்டால் அதற்குப் பிறகு கண்ணன் பாடு. கோதை பாடு. நப்பின்னையும் கண்ணனும் படுத்திருக்கும் அறையின் சாளரக் கதவு தானாக் திறக்கிறது. கோதையும் கண்டுகொண்டாள். கண்டதும் அவள் கண்ணில் நீர். ஏன்?

அந்த அறைக்குள்ளே குத்துவிளக்கு மெலிதாக எரிந்து கொண்டிருக்கிறது. யானைத் தந்தங்களைக் கால்களாக வைத்து செய்யப்பட்ட கட்டில். அதன் மேல் மலர்கள் தூவப்பட்ட மெத்தை. அந்த மெத்தை மேல் நப்பின்னை. அந்த நப்பின்னை மார்பின் மேல் கண்ணன். கண்ணனின் மார்பில் நப்பின்னையின் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்.

தன்னுடைய காதலனை இப்படியொரு கோலத்தில் கண்ட பின் எந்தக் காதலியின் கண்ணில் நீர் கசியாது!

கொத்துக் கொத்தாக மலர் சூடிய நப்பின்னையின் கூந்தலைப் பார்க்கிறாள். “மலரிட்டு நாம் முடியோம்” என்று நோன்பு நோற்றதால் தன் கூந்தலில் இருந்து அப்படியொரு மலர் உதிர்ந்து மாயவன் திருமார்பில் விழ வழியில்லையோ என்றொரு ஏக்கம்.

”கண்ணா, உன் திருமார்பை நப்பின்னைக்குக் கொடுத்தாய். உன் வாய்ச் சொல்லையாவது எனக்குத் தரமாட்டாயா? ஒரு பொய்யாவது சொல் கண்ணா, உன் காதலி நான் தான் என்று!”

கோதையால் வேறென்ன கேட்க முடியும். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்.

”கரிய அரிய மையைத் தடமாக இழுத்துக் கொண்ட அழகிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன்னுடைய மணவாளனை எப்பொழுதும் துயிலெழ விடாமல் உன்னுடனே வைத்துக்கொள்ள நினைக்கின்றாய். இரவு முழுதும் அவன் உன்னோடுதான் இருந்தான். இன்னமும் அவனைப் பிரிய முடியாமல் உன்னோடு வைத்திருக்கிறாயே! உனக்கு இது அழகா? முறையா? தகவா? சொல்.”

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் – குத்துவிளக்கு எரிய, ஆனைக் கொம்புகளால் நிற்கும் கட்டிலின் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் – மெத்தென்ற பஞ்ச சயனப் படுக்கையின் மேல் ஏறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் – கொத்துமலர்ப் பூங்குழல் நப்பின்னையின் கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் – பொருந்திக் கிடக்கின்ற மலர் மார்பனான கண்ணனே வாய் திறவாய்!

மைத் தடம் கண்ணினாய் – மை தீட்டிய அழகுக் கண்களை உடையவளே

நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் – நீ உன் கணவனை எப்போதும் துயிலெழுப்ப மாட்டாய்

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் – இவ்வளவு நேரம் அவனோடு இருந்தும் உன்னால் அவனைப் பிரியமுடியவில்லையா?

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் – இது பெருமையன்று. எங்கள் முறையீட்டையும் கேட்டு கருணை செய்!

இந்தப் பாடலில் கண்ணனும் நப்பின்னையும் பஞ்ச சயனத்தில் படுத்திருப்பதாக வருக்கு. அதென்ன பஞ்ச சயனம்? ஐந்து படுக்கையா? அதற்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன.

மென்மை குளுமை நறுமணம் அழகு தூய்மை ஆகிய ஐந்து பண்புகளைக் கொண்ட படுக்கைக்குப் பெயர் பஞ்ச சயனம்.

அன்னச்சிறகு மயிலிறகு இலவம்பஞ்சு கோரைப்புல் மலர் ஆகியவற்றால் ஆன மெத்தையும் பஞ்ச சயனம் எனப்படும். அடியில் கோரைப்புல்லும் அதன் மேல் இலவம் பஞ்சும், அதற்கும் மேல் அன்னச்சிறகும் மயிலிறகும் வைத்துத் தைத்த மெத்தையின் மேல் மலர்கள் தூவிக் கிடந்தால் அதுதான் பஞ்ச சயனம்.

மலர் மார்பா என்று கண்ணனை அழைப்பதற்குக் காரணம் கண்ணன் மார்பில் இருந்த மலர். கண்ணனே சூடிக் கொண்டிருப்பானோ? இருக்காது. ”கொத்தலர் பூங்குழல் நப்பின்னை” என்று சொல்லி அந்த மலர் எங்கிருந்து வந்தது என்று காட்டிக் கொடுத்துவிடுகிறாள் ஆண்டாள்.

மைத்தடம் கண்ணினாய் என்பதற்கு இரண்டு பொருள். ஒன்று மை தீட்டிய கண்களை உடையவள் என்பது. மற்றொன்று இருட்டில் வழிதெரியாமல் இருந்தவளுக்குத் தடம் காட்டி கண்களைப் போல் உதவியவளே என்பது. மை என்றால் இருட்டு. மைத்தடம் என்றால் இருட்டு வழி. மைத்தடம் கண்ணினாய் என்றால் இருட்டு வழியில் கண்ணைப் போல் இருந்தவளே என்று பொருள். கண்ணன் எந்த அறையில் இருக்கிறான் என்று தெரியாமல் தவித்த நிலையில், சாளரத்தின் கதவைத் திறந்து காட்டியவள் நப்பின்னைதானே!

தத்துவம் அன்று தகவு என்பதற்குப் மூன்று விதமான பொருள் விளக்கங்கள் கண்டேன். அவைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் மேலே விளக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எளிமையான பொருள். இன்னமும் கண்ணனைப் பிரிய மனமில்லாமல் ஒன்றாக இருக்கிறாயே. அதுதான் உன் நிலையோ! இது பெருமையன்று!

இரண்டாம் மூன்றாம் பொருள் விளக்கம் பார்க்கும் முன் தத்வமசி பற்றி ஒரு சிறிய அறிமுகம். இது உத்தாலகர் என்னும் முனிவர் தன்னுடைய மகனும் சீடனுமான சுவேதகேதுவுக்கு உபதேசம் செய்த பாடம். பரமாத்மா எங்கே எங்கே என்ற கேள்விக்கு விடை சொல்வது போலச் சொன்ன உபதேசம். நீயே அதுவாகிறாய் என்பதுதான் தத்வமசி என்பதற்குப் பொருள். இந்த உபதேசத்தால் அறிவு தெளிந்து சுவேதகேது சொன்னதுதான் அகம் பிரம்மாஸ்மி. கடவுள் அகத்தின் உள்ளே இருக்கிறார் என்பது அதன் பொருள். இதுதான் அத்வைதம் என்னும் மதக்கோட்பாட்டின் மையக்கருத்து.

தத்வமசி = தத் + த்வம் + அசி = அதுவாய் + நீயே + ஆகிறாய்

சரி. இரண்டாவது விளக்கத்துக்கு வருவோம்.

தத்துவம் என்பதைத் தத் + த்வம் என்று பிரிக்க வேண்டும். தத் என்னும் அதனோடு(பரம்பொருளோடு), த்வம் என்னும் நீ நீங்காமல் இருப்பது. இந்த இடத்தில் தத் என்னும் கண்ணனோடு த்வம் என்னும் நப்பின்னை எப்போதும் பிரியாமல் (எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்) இருப்பது போல நாங்களும்(கோதை கூட்டம்) இருக்க விரும்புகிறோம். அப்படி இல்லாமல் நாங்கள் இருப்பது தகவு(பெருமை) அன்று. ஆகவே பரம்பொருளாகிய பரவாசுதேவனிடம் எங்களுக்குக்காக பரிந்துரை கேள்(ஏல்). அதை எப்போதும் நாங்கள் மறவோம்(ஓர்) எம் பாவையரே!

நப்பின்னை கண்ணனோடு ஒன்றியிருப்பது போல கோதையர் கூட்டமும் ஒன்றியிருக்க விரும்பி, அதற்காக நப்பின்னையின் பரிந்துரையை(புருஷகாரம்) வேண்டுகிறார்கள்.  இதுதான் இரண்டாவது விளக்கம்.

இப்போது மூன்றாவது விளக்கம்.

அத்வைதம் என்பது உத்தாலகர் சுதகேது தொடங்கி ஆதிசங்கரர் வழியாக இராமானுசருக்கு முன்பு வரை பின்பற்றப்பட்ட சமயக் கொள்கை. அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு அல்ல. இரண்டும் ஒன்றே என்பது. அகம் பிரம்மாஸ்மி என்பதுதான் அதன் கருத்து. ஆதிசங்கரருக்குப் பிறகு வந்த உடையவரான இராமானுசருக்கு அத்வைத விளக்கங்கள் நிறைவானதாக இல்லை. அதனால் அவர் சொன்ன கொள்கைதான் விசிஷ்டாத்வைதம். அதாவது விசிஷ்ட அத்வைதம். சிறப்பான அத்வைதம் என்பது அதன் பொருள். அத்வைதக் கருத்துகளில் இருப்பதாகக் கருதப்பட்ட இடைவெளிகளை நிரப்பியதால் இது விசிஷ்டாத்வைதம் எனப்பட்டது.

தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் – தத்+த்வம் என்னும் இரண்டும் ஒன்றே என்று சொல்லும் அத்வைதம் சிறந்த வழி அன்று. தகவுடைய விசிஷ்டாத்வைதம் கேள்(ஏல்). கேட்டு நெஞ்சில் நிறுத்து(ஓர்) என்பதே அதன் விளக்கம்.

இந்த மூன்றாவது விளக்கம் சற்று விவாதத்துக்கு உரியது. ஏனென்றால் ஆண்டாள் மட்டுமல்லாமல் ஆழ்வார்களின் காலத்தில் விசிஷ்டாத்வைதம் என்ற கொள்கையே கிடையாது. அது இராமனுசர் காலத்தில் வந்த கொள்கை. ஒருவேளை ஆழ்வார்கள் பின்னால் வரப்போவதை முன்பே தெரிந்து பாடினார்கள் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டால், அது இராமானுசருக்கு முந்தைய ஆச்சார்யர்களுக்கு ஆழ்வார்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கருத்தில் புரிதல் இல்லை என்று தவறாகக் கருத வேண்டியிருக்கும். ஆனாலும் இந்த விளக்கம் விசிஷ்டாத்வைதத்தில் மிகவும் பிரபலமானது.Paavai-19
************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
கோட்டுக்கால் – கோடு(ஆனைத் தந்தம்) + கால்
கொத்தலர் – கொத்து + அலர்
தகவு – தகுதி/பெருமை
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

10 Responses to 19. பிரியமுடியவில்லையா பிரியமானவளே

  1. amas32 says:

    இன்றைய பாசுர விளக்கம் அருமையிலும் அருமை. புரியும்படியான எளிய விளக்கம், சற்றே கடினமான தத்துவத்துக்கு!

    amas32

    • GiRa ஜிரா says:

      நன்றிமா 🙂

      தேடிய தகவல்கள் தேடி வந்தன. வந்ததை எனக்குப் புரியவைத்து.. எனக்குப் புரிந்ததைப் பதிவில் தந்தேன் 🙂

  2. பாவை வணக்கம்!

    இரவென்பதால், கிடுகிடுவென்று வாசிக்கத் துவங்கினேன்!
    ஆனால், ஆழங்கால் கண்டபின்..
    துயிலொத்தி வைத்து, சுவாசிக்கவும் தொடங்கினேன்!

    /தன்னுடைய காதலனை இப்படியொரு கோலத்தில் கண்ட பின் எந்தக் காதலியின் கண்ணில் நீர் கசியாது?/
    :))))

    கோதையின் கண்களில் நீர்த்துளி காணக் கடினமாய் உள்ளதெனினும்..
    அஃது அவளுக்கு இறுதியில் நன்மையே செய்யும்!
    —–

    இதை, வேண்டுகோளாய் வைக்கின்றேன்:

    நப்பின்னை
    = இவள் குறித்து, தனித்த ஆய்வுப் பதிவு ஒன்றை எழுதிப் பதிக்க விண்ணப்பம்!

  3. சிற்சில குறிப்புக்கள்:

    1. குத்துவிளக்கு

    இன்று குத்து விளக்கு புனிதம் ஆக்கப்பட்டு விட்டது:) ஆனால் அன்று, படுக்கை அறைக்கும் குத்து விளக்கே!
    சாலச் சிறந்தது! குத்தி நிற்கும்! தொலைவில் குத்தி இருத்தினால், பிற தீபங்கள் போல், கை படாது/விழாது, Safe!

    ஒளி மங்கல்!
    மங்கலிற் கூடல் இனிது எனும் சங்கத் தமிழ்:)
    —–

    2. கோட்டுக் கால்

    மரபு வியாக்யான பலரும் யானைத் தந்தத்தால் செய்த கட்டில்கால் என்ற பொருளே சொல்கிறார்கள்!
    இது, ஒரு வித அழகிய Fancy குடுத்தாலும்.. நடைமுறை அறிவியல் உண்மை வேறு!

    யானைத் தந்தத்தின் Tensile Strength குறைவே!
    அது Extension of Teeth, அவ்வளவே!
    யானை, முறிப்பது/ஒடிப்பது.. பலவும் தன் துதிக்கையால் தான் செய்யும்!
    சொல்லப்போனால், மூங்கிலின் Tensile Strength= 2மடங்கு அதிகம், யானையை விட!

    இப்படியொரு Tensile Strength குறைவான யானைத் தந்தத்தால், கட்டில் கால் செய்தால், “காதல்வேகத்தை” அது தாங்குமோ, என்னமோ?:)
    வேண்டுமானால், மரக்காலில், அலங்கார Ivory ஒட்டி அழகு செய்யலாம்!

    *கோட்டுக்கால்= வளைந்த கால்
    *கோடுதல்= வளைதல்
    “கோடாமை” சான்றோர்க்கு அணி – என்னும் குறள்
    நேரான காலாய் இல்லாது, சினிமாவில் காட்டப்படும் சில ஆசனங்கள் போல், வளைந்து, கேள்விக்குறி வடிவில் ? உள்ள கால்!
    —–

    3. பஞ்ச சயனம்

    மிக அழகான பொருள் சொன்னீர்கள், இதற்கு நன்றி! கீழிருந்து மேலாக..
    *அன்னச்சிறகு
    *மயிலிறகு
    *இலவம்பஞ்சு
    *கோரைப்புல்
    *மலர்
    என்று கட்டிலை எண்ணிப் பார்க்கவே இனிமை! இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா.. என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது:)

    சயனம்= வடசொல் போல் தோற்றம் அளித்தாலும், அல்ல!
    அஃது தமிழ்ச் சொல்லே!
    சாய்வதால் > சாயனம், சயனம் (Chayanam)
    பஞ்ச சயனம்= பஞ்சால் செய்த சயனம் எ. மொழிஞாயிறு பாவாணர் விளக்குவார்!

    பஞ்ச= 5 என்ற சம்ஸ்கிருதப் பொருளாக எடுத்துக் கொண்டு.. பின்னாளில், இப்படியொரு படுக்கை-அடுக்கை, திவாகர நிகண்டு செய்து விட்டதாக, பாவாணர் ஆய்வுக் கூற்று!

  4. 4. கொத்தலர் பூங்குழல்

    தனியொரு ரோசாப் பூவைச் சூடுதலை விட..
    கொத்தாகச், சரமாகச் சூடுதல் = பேரின்பம்!
    அதிலும், இரவில்.. அவள் தலையில் சூடிய கொத்துச் சரம்= அவன் கழுத்தில் சிக்கி மாலையாகும் இன்ப நாடகங்கள்:)

    அலர் என்ற சொல், முக்கியம்!
    *மலர்= அப்போதே பூத்த பூ
    *அலர்= பூத்த பின், இன்னும் நன்றாக விரிந்து, “மகரந்தம்” அலர்த்தும் போது

    அதனால் தான் காதல் கிசுகிசு, ஊர் அறியத் துவங்குதலை= “அலர்” என்று அழைத்தது சங்கத் தமிழ்! நன்றாகப் பரவி விட்டதே:)

    இங்கே நப்பின்னை…
    *நேத்து இராத்திரி சூடும் போது= மலர்
    *இன்று அதிகாலை விழிக்கும் போது= அலர்
    ——

    5. அலர்

    பூ என்பது பொதுவான பெயர்! ஆனா அதுக்குப் பல நிலைகள்! அதைத் தமிழ் படம் பிடிச்சிக் காட்டும்!

    * அரும்பும் போது = அரும்பு
    -அது அரும்பி பனியில் நனையும் போது = நனை
    -அது நனைந்து முத்தாகும் போது = முகை!
    -அது வெடிக்கத் தயாரா இருக்கும் போது = மொக்குள்!

    * அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது = போது
    * மணம் வீசத் தொடங்கும் போது = முகிழ்

    * மலர்ந்த பின் = மலர்
    * இன்னும் நல்லா மலர்ந்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது = அலர்

    * கூட்டமாய் மலர்ந்தால் = பொதும்பர்
    * வீழும் போது = வீ
    * உதிர்ந்து கிடக்கும் பூக்கள் = பொம்மல்
    * பழுப்பாய் வாடிய பின் = செம்மலர் (செம்மல்)
    ——

    6. நப்பின்னை கொங்கை மேல்

    நப்பின்னை= தங்கள் ஆய்வுப் பதிவாய்ப் படிக்க ஆசை.. அதனால் விரித்துரையாது..
    “கொங்கை” என்பது பற்றி மட்டும்!

    கொங்கு= தேன்
    பல உணவு உண்டு, “தேன்” போல் திரட்டிச் சேர்த்த= அன்னையின் தாய்ப்பால்!
    அதனால்.. பெண்ணின் மார்புக்கு= “கொங்கை” என்றே சொல்லிய தமிழ்!
    இதைச் சொல்ல அவைக்கூச்சம் தேவை இல்லை!

    கொங்கை குற மங்கையின்
    சந்த மணம் உண்டிடும்
    கும்பமுனி கும்பிடும் தம்பிரானே – என்ற திருப்புகழின் ஈற்று, என் நெஞ்சை என்னமோ செய்யும்! சந்த மணம்! மணத்தை யாராவது உண்ண முடியுமா?
    ஆழ்ந்த காதலில் உண்ண முடியும்! காட்டுவது அருணகிரி!

    கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா.. வாய் திறவாயே!

  5. “மதம்” விளக்கத்துக்குச் செல்ல “மனம்” இல்லை:)
    எனினும், சிற்சில தகவற் பிழைகள் என்பதால், சரி செய்ய இசைவு தாருங்கள்!
    —–

    1. /தத்வமசி.. உத்தாலகர் என்னும் முனிவர் தன்னுடைய மகனும் சீடனுமான சுவேதகேதுவுக்கு உபதேசம் செய்த பாடம்.
    இந்த உபதேசத்தால் அறிவு தெளிந்து சுவேதகேது சொன்னது தான் அகம் பிரம்மாஸ்மி/

    அல்ல!:)
    தத்வமசி = சரியே
    அஹம் பிரம்மாஸ்மி= சுவேதகேது சொன்ன வரி அல்ல!

    *தத் த்வம் அஸி = சாம வேதம்/ சாந்தோக்ய உபநிஷத்
    *அஹம் பிரம்மாஸ்மி = யஜூர் வேதம்/ பிருஹத் ஆரண்யக உபநிஷத்

    இரண்டும் வெவ்வேறு Context!
    *தத் த்வம் அஸி = நீங்கள் சொன்னது போல், உத்தாலகர், அவர் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொன்னது
    *அஹம் பிரம்மாஸ்மி = ஆரண்யத்தில் (காட்டில்), சுய தியானம் குறித்து, பிற முனிவர்கள் எழுப்பும் கேள்விக்கு, இன்னொரு முனிவர் உரைப்பது
    ——

    2. /தத்துவம் என்பதைத் தத் + த்வம் என்று பிரிக்க வேண்டும்.
    தத் என்னும் நீ,
    த்வம் என்னும் அதோடு(பரம்பொருளோடு) நீங்காமல் இருப்பது/

    அல்ல:)
    *தத்= அது (பரம்பொருள்)
    *த்வம்= நீ
    மாற்றிச் சொல்லி விட்டீர்கள் போல!
    ——

    3. /விசிஷ்ட அத்வைதம். சிறப்பான அத்வைதம் என்பது அதன் பொருள்.
    அத்வைதக் கருத்துகளில் இருப்பதாகக் கருதப்பட்ட இடைவெளிகளை நிரப்பியதால் இது விசிஷ்டாத்வைதம் எனப்பட்டது/

    “சிறப்பான அத்வைதம்” என்ற பொருள், ஓரளவு சரியே!

    தமிழாக்கம்:
    *அத்வைதம்= அல்லிருமை
    *த்வைதம்= இருமை
    *விசிஷ்ட அத்வைதம்= விதப்பொருமை

    ஆனா, அத்வைத “இடைவெளி” நிரப்பியதால், அப்பெயர் அன்று!
    நீயே = இறைவன் கிடையாது;
    நீ= இறைவனில் ஒரு பகுதி..
    என்று “விதப்பாகச்” சொல்லியதால், அந்த “விசிஷ்ட” என்னும் அடைமொழி!
    விசிஷ்டம்= “குறித்துச்” சொல்லுதல்!
    இறைவனில், ஒரு பகுதி மட்டுமே என்று குறித்ததால்!
    ——

    4. /முன்பு, விசிஷ்டாத்வைதம் என்ற கொள்கையே கிடையாது.
    அது இராமனுசர் காலத்தில் வந்த கொள்கை/

    அல்ல!:)
    இராமானுசர், விசிஷ்டாத்வைதம் என்பதைப் “பிரபலப்”படுத்தியவர்; அவ்வளவே!

    இராமானுசருக்குப் பலப்பல நூற்றாண்டுகள் முன்னரே..
    *போதாயனர்
    *டங்கர்
    *திரமிடர்
    *குகதேவர்
    *பரூசி
    வியாச காலத்து முனிவர்கள், விசிஷ்டாத்வைத கொள்கை உரைத்துள்ளனர்!

    இராமானுசருக்குச் சற்று முன்பும், ஆளவந்தார்.. அதை முன்னெடுத்துள்ளார்!
    ஸ்ரீ பாஷ்யம் எனும் உரை எழுதியதால்..
    விசிஷ்டாத்வைதம்= இராமானுசர் எ. பிரபலம் ஆகி விட்டது! அவ்வளவே!:)

    சொல்லப் போனால், “விசிஷ்டாத்வைதம்” எ. சொல்லே இராமானுசர் காலத்துக்குப் பின்னால் தான் உருவானது:))
    Srutha Prakasika Bhattar என்பவர், இராமானுசரின் ஸ்ரீ பாஷ்யத்துக்கே பாஷ்யம் எழுதும் போது (உரைக்கே உரை).. தெளிவு கருதி, இச்சொல்லை உருவாக்கினார்!
    ——

    ஆழ்வார்களின் ஈரத் தமிழை, வேறு மாதிரி நுணுக்கி, அதற்கும் விசிஷ்டாத்வைதம் “ஒட்ட” வைப்பார்கள்:)
    நான் அங்கு செல்லவில்லை! அதில் எனக்கு உடன்பாடும் இல்லை! (இராமானுசரே ஆயினும், தமிழ்/மனிதத் தொண்டு என்கிற அளவில் மட்டுமே எனக்கு உடன்பாடு:))

    கோதை, பிற ஆழ்வார்களை எழுப்புவதெல்லாம், சம்பிரதாய “நயம்” மட்டுமே:)

    ஆண்டாள் சொல்லும், “தத்துவம் அன்று! தகவேலோ” = இத்துணை மெனக்கடல் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே! அதற்காக மத நூலார் உரிமையில், குறுக்கே நிற்க மாட்டேன்:)

    அது இயல்பான தத்துவம் எ. வடசொல்!
    தத்துவம்= உண்மைப் பொருள்
    நீ மட்டுமே இன்புறுவது உண்மைப் பொருளல்ல தாயே! தகவல்ல அம்மா! எங்களுக்கும் கதவைத் திற -என்ற “இயல்பான” பொருளில், ஆண்டாள் தமிழ்!:)

    மாறாகச் சொல்லியிருப்பின் மன்னிக்கவும்!
    நனி மிகு நன்றி.. இந்தக் குத்து விளக்காம், “நப்பின்னை” பாடலுக்கு!

  6. Kamala says:

    ஜிரா, உங்களுடைய பாடல் விளக்கம் மிக அருமை. கண்ணபிரான் ரவிசங்கரின் தகவல்களும், ,கேசவ்ஜியின் ஒவியமும் இந்தப் பதிவிற்கு மேலும் மெருகூட்டுகின்றன. தொடரட்டும் உங்கள் சொல்லோவியம்.

  7. //”கண்ணா, உன் திருமார்பை நப்பின்னைக்குக் கொடுத்தாய். உன் வாய்ச் சொல்லையாவது எனக்குத் தரமாட்டாயா? ஒரு பொய்யாவது சொல் கண்ணா, உன் காதலி நான் தான் என்று!”

    கோதையால் வேறென்ன கேட்க முடியும். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்.//
    ஜிரா, நாயகி பாவத்துக்கே மாறி விட்டீர்கள், ஆஹா, அருமை 🙂

  8. // இந்த இடத்தில் தத் என்னும் கண்ணனோடு த்வம் என்னும் நப்பின்னை எப்போதும் பிரியாமல் (எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்) இருப்பது போல நாங்களும்(கோதை கூட்டம்) இருக்க விரும்புகிறோம்
    //
    சரியான விளக்கம். தத்துவம் = தத் + த்வம் = பரமாத்மா + பிராட்டி (திருமகள், மண்மகள், நீளாதேவியாகிய நப்பின்னை ஆகிய மூவரும் பிராட்டிகளே. மார்பில் உறைந்த திருமகள் பெரிய பிராட்டி). பிராட்டிகள் மூவரையும், உயர் ஜீவாத்மாக்கள் என்று கொள்ளலாம்.

  9. ஜிரா,
    தத்துவம் அன்று தகவு என்பதற்கு தங்களின் 3 விதமான விளக்கங்கள் நன்று. அறியத் தந்தமைக்கு நன்றியும்.

    விசிஷ்டாத்வைதம் என்பதை Qualified Dualism (த்வைதம்) எனலாம். “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் கோட்பாடு இருப்பதாகச் சொல்லலாம். இதை வைத்தே உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரங்களை அணுகி, பொருள் கொள்ளவேண்டும் என்பதே எந்தை இராமனுசமுனி சொன்ன கருத்துகளில் முக்கியமானாது. அதோடு, உணர்வுள்ள (வெளிப்படுத்தும்/படுத்தாத) உயிர்களிலும், ஜடப்பொருள்களிலும் என்று எல்லாவற்றிலும் பரம்பொருள் விரவியிருக்கும் தன்மை என்பது விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படையாகும். இருந்தும், சித், அசித், ஈஸ்வர (பரமாத்ம வடிவம்) என்பவை வேறானவையே, உண்மையே! இதுவே தத்வத்ரயம் (முப்பொருள் உண்மை) என்ற ஆதார தத்துவம்

    அன்புடன்
    பாலா

Leave a reply to எ.அ.பாலா Cancel reply