செந்தில்நாதன் – 1 – Working From Home

யார் இந்தச் செந்தில்நாதன்னு நீங்க கேக்குறது எனக்கு நல்லாப் புரியுது. நீங்க கண்டிப்பாத் தெரிஞ்சிக்கனும். அவனோட அனுபவங்கள இனிமே அப்பப்போ கேக்கப் போறீங்களே. அவன்னு சொன்னதும் சின்னப்பையன்னு தப்பா முடிவு பண்ணீறாதீங்க. காலாகாலத்துல எல்லாம் நடந்து ரெண்டு பிள்ளைகளுக்கும் அப்பா. நான் படைப்பாளியாச்சா, அதுனால அவன் இவன்னு கூப்டலாம். ஆனா நீங்க அவர்ர்ர்ர்ர்னு மரியாதையாக் கூப்புடனும்.

செந்தில்நாதன் = வாயில்லாப் பூச்சி. பேசவே மாட்டானான்னு கேக்குறீங்களா? பேசீட்டுத்தான் இருந்தான். பத்து வருசத்துக்கு முன்னாடி எல்லாக் கடவுள்களும் அவன் மேல ஆத்திரமா இருந்த ஒரு சுபயோக சுபமுகூர்த்த நாளில் இருந்து பேசுறதில்லை. அவன் கதையெல்லாம் சொன்னா பத்து மகாபாரதம் எழுதலாம். இப்ப அதெதுக்கு.

சென்னைக்கு நடுவுல அவன் வீடு வாங்குனப்போ எல்லாரும் கொடுத்து வெச்சவன்னு பாராட்டுனாங்க. ஆனா ஊருக்கு வெளிய அவன் வேலைக்குப் போகனுங்குறத கண்டுக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட மூனு நாலு மணி நேரம் போக வரவே சரியாப் போகுது அவனுக்கு.
சரி. அறிமுகமெல்லாம் போதும். நேரா என்ன நடந்துச்சுன்னு பாப்போம்.

நிஷா, உஷா, ஆஷான்னு பலப்பல பேர்கள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வந்து ராத்திரியெல்லாம் தொடர்ந்து மழை பேஞ்ச ஒரு நாள். வீட்ட விட்டு வெளிய போக முடியலை. பொதுவாகவே எல்லாராலும் வெறுக்கப்படும் கடவுளாகிய மேனேஜரக் கூப்டு வேலைக்கு வரமுடியாதுன்னு அடக்கமாதான் சொன்னான். மேனேஜர்களுக்கும் பெரிய மனசு இருக்கும்னு நிரூபிக்கவோ என்னவோ அவரும் வீட்டுல் இருந்தே வேலையப் பாக்கச் சொல்லீட்டாரு.

காலை எழுந்தவுடன் காபி
பின்னர் சுட்டுக் கொடுக்கும் ரெண்டு தோசை
பகல் முழுவதும் வேலை
இதை வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா
இப்பிடித்தான் பழகியிருந்தான் செந்தில்நாதன். அதுவும் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. ஆனாலும் வந்துச்சு ஆப்பு. All because of working from home.

வேலைக்குப் போன எடத்துல வேலை செஞ்சாங்களா தூங்குனாங்களான்னு யாருக்கும் தெரியாது. ஆனா அன்னைக்குச் செந்தில்நாதன் வீட்டுல வேலை பாத்து உழைச்சத அவனுக்கு ”வந்தாளே மகராசியும்” அவன் ”குடியிருந்த கோயிலும்” பாத்துட்டாங்க. ரெண்டு பேருக்கும் அப்படியே பாசம் பொங்கி வழிஞ்சிருச்சு.
காலைல காபி கெடைச்சது. குடிச்சு கப்ப வெச்சதும் ”இந்தாங்க இதச் சாப்புடுங்க”ன்னு தட்டுல எண்ணிப் பன்னிரண்டு பாதாம் பருப்பும் பன்னிரண்டு கிசுமிசும் கொண்டந்து கொடுத்து அன்னைக்குக் கணக்கத் தொடங்குனது வந்தாளே மகராசி. தட்டுல போட்டதத் திங்குறதுக்கு மட்டும் வாயத் தொறக்குறவன் ஏன்னு கேப்பானா? பாதம் தனியாவும் கிசுமிசு தனியாவும், பிறகு ரெண்டையும் சேத்தும் அரையரைன்னு அரச்சான்.

மகன் காலைல எந்திருச்சதுமே வேலை செய்ற கொடுமையக் குடியிருந்த கோயிலின் பெத்த வயிறு தாங்கிக்க முடியலை. தம்மகன எல்லாரும் கொடுமைப்படுத்துறதா அந்தத் தாயுள்ளம் நினச்சுப் பதறிக்கிட்டே தேங்காத் துவையல், வெங்காயச் சட்டினி, கத்திரிக்கா கொத்சுன்னு மூனு வகைய செஞ்சிட்டாங்க. மகனுக்கு இட்டிலிய விட தோசைதான் பிடிக்கும்னு தேங்காத் துவையலுக்கு ரெண்டு, வெங்காயச் சட்டினிக்கு ரெண்டு, கொத்சுக்கு ரெண்டுன்னு சுட்டு அடுக்கி தட்டுல வெச்சிக் குடுத்தாங்க அந்தப் புண்ணியவதி.
அன்னபூரணியும் ”சோற்றா”ணிக்கரை பகவதியாகிய குடியிருந்த கோயில் குடுக்குறதாச்சே. அப்படியே வாங்கி முழுங்குனான் செந்தில்நாதன். முழுங்கி முடிச்சப்புறந்தான் இன்னைக்கு முழுக்கச் சாப்பாடு வேண்டாமோன்னு ஒரு எண்ணம் அவனுக்கு வந்துச்சு. ஆனா அது வந்தாளே மகராசிக்கும் குடியிருந்த கோயிலுக்கும் வரலையே!

என்ன நெனச்சாங்களோ ரெண்டு பேரும், கொஞ்ச நேரம் வேலையப் பாக்கனும்னு விட்டுட்டாங்க. கதவை வேறச் சத்தம் வராம இருக்கு சாத்தி வெச்சிருந்தாங்க. செந்தில்நாதனும் கம்பெனி குடுக்குற காசுக்கு அதிகமாவே வேலையச் செஞ்சிக்கிட்டிருந்தான். திடீர்னு மெதுவா கதவு தெறந்தது. வந்தாளே மகராசிதான்.
”மாமாவுக்குப் பதினோரு மணிக்கு டீ போடுவேன். அப்படியே ஒங்களுக்கும் போட்டுட்டேன். ஆபீஸ்ல நடூல டீக்குடிக்கப் போவீங்கள்ள.”
அதுக்கு மேல இதப் படிக்கிற ஆம்பளைங்க பேசீருக்க மாட்டீங்க. செந்தில்நாதன் மட்டும் எப்படிப் பேசுவான்? டீக்கப்பு வெறுங்கப்பாத்தான் வெளிய போச்சு.

இத்தனைக்கும் நடுவுல வந்தாளே மகராசி பதிபக்தியில் சின்ன வெங்காயம் போட்ட சாம்பார், இஞ்சி ரசம், அவரைக் கூட்டு, அப்பளம்னு செஞ்சு வெச்சிட்டு குளிக்கப் போனாங்க. அவங்க வர்ரதுக்குள்ள குடியிருந்த கோயில் மடமடன்னு வெண்டக்கா போட்டு மோர்க்கொழம்பு வெச்சி, மோர்மெளகாவும் வறுத்து வெச்சிட்டாங்க.

”என்னத்த! ஏற்கனவே சாம்பார் வெச்சிட்டேனே”ன்னு கேட்டதுக்குக் குடியிருந்த கோயில், “அவனுக்கு மோர்க்கொழம்புன்னா ரொம்பப் பிடிக்கும். மூனுவாட்டியும் அதையே ஊத்திச் சாப்புடுவான். இன்னைக்கு வீட்டுல இருக்குறதால சூடா சாப்புடுவானேன்னு வெச்சேன்”னு விளக்கம் குடுத்துட்டு தன்னோட வீட்டுக்காரருக்கு மோர்க்கொழம்பைக் கண்ணுல காட்டாம சாம்பாரும் அவரைக்கூட்டும் குடுத்தாங்க. மகனுக்கு இல்லாமச் சாப்புடுருவாரோன்னுதான்.

பசிக்காமலே புசிக்கிறத அன்னைக்குத்தான் செந்தில்நாதன் தெரிஞ்சிக்கிட்டான். ஆனாலும் குடியிருந்த கோயில் சொன்ன மாதிரியே மோர்க்கொழம்ப மூனுவாட்டி ஊத்தித்தான் தின்னான்.

திரும்ப வேலை. திரும்பவும் மூனு மணி வாக்குல ஒரு டீ. திரும்பவும் வேலை. நடுவுல பள்ளிக்கூடத்துல இருந்து வந்த கொழந்தைக்கள “அப்பா வேலை பாக்குறாரு”ன்னு ஒரு உலக அதிசயத்தைச் சொல்லி அந்தப் பக்கமே வரவிடலை வந்தாளே மகராசி.

ஒரு அஞ்சு மணி இருக்கும். மெல்லக் கதவைத் திறந்துக்கிட்டு வந்தாளே மகராசி உள்ள வந்தாங்க.
“என்னங்க. இந்தாங்க. ஓட்ஸ் களி சாப்புடுங்க. ஒடம்புக்கு நல்லது.”
“என்னது ஓட்ஸ்ல களியா? வயித்துல எடமே இல்லையே. அப்புறமாச் சாப்புடட்டுமா?”ன்னு தெரியாமல் கேட்டான்.
“ஆமா. நல்லதெல்லாம் தொண்டைல எறங்காதே. ஒங்கம்மா தாளிச்சுக் கொட்டி உப்பு புளி நெறையப் போட்டுச் செஞ்சா நல்லா எறங்கும். ஒடம்புக்கு நல்லதுன்னு ஒரு பொருளைக் குடுத்தா நூறு பேச்சு. பழம் எறங்காது. பால் எறங்காது. பச்சைக் காய்கறி போட்ட சாலட் எறங்காது”ன்னு குரல் எறங்காமலே ஓட்சுக்கு ”விலையில்லா” விளம்பரம் செஞ்சாங்க.

வந்தாளே மகராசிக்கு ரொம்ப நாளா ஒரு வருத்தம். குடியிருந்த கோயில் மோர்க்கொழம்பு வெச்சாலும் மீன்கொழம்பு வெச்சாலும் தண்ணியாவுமில்லாம கெட்டியாவுமில்லாம ஒரு பதத்துல இருக்கு. அடையாறுல இருந்து அண்ணாநகர் வரைக்கும் விக்குற சமையல் புத்தகத்தைப் பாத்துச் செஞ்சாலும் தனக்குச் சரியாவே வர மாட்டேங்குதேன்னு லேசா ஒரு பொறாமை. அத்தோட கல்யாணமான புதுசுல கோழிக் கொழம்பு வெச்சதுக்கு இங்கிதம் தெரியாம கோழிரசமா என்று செந்தில்நாதன் கேட்டது இன்னும் நெஞ்சுக்குள்ள ஆறாம இருக்கு. அப்படிக் கேட்டதுக்குத்தான்னு தெரியமாலேயே பலவாட்டி செந்தில்நாதன் பழிவாங்கப்பட்டிருக்கான்.
அதுனால புதுசா ஏதாச்சும் செய்யலாம்னு ஓட்ஸ் உருண்டை பிடிக்கத்தான் பாத்தாங்க. ஆனா கைக்கு வரனுமே. அதுக்குக் களின்னு பேர் சூட்டி செந்தில்நாதன் வயித்துக்குள்ள தள்ளப்பட்டது.

கிட்டத்தட்ட இதே மாதிரி அன்புக் கொடுமைகள் ராத்திரி தூங்குற வரைக்கும் செந்தில்நாதனை விடலை. வந்தாளே மகராசியின் கைவண்ணத்தில் ஆப்பிரிக்கா ஐரோப்பா வரைபடச் சப்பாத்தியும் கொண்டக்கடலைக் கொழம்பும் செந்தில்நாதனோடு “நீயா நானா” விளையாடுச்சு. தூங்குறத்துக்கு முன்னாடி வந்தாளே மகராசி கொண்டு வந்த புதுத்திட்டமான பால். தூங்குற நேரத்துல மகனுக்கு கொழுப்புள்ள பால் கொடுக்குறாளேன்னு குடியிருந்த கோயில் தெனமும் வருத்தப்படுறது யாருக்கும் தெரியாது.

அடுத்தநாள் காலைல செந்தில்நாதன் மேனேஜர் கடவுளுக்கு போன் போட்டான்.
“சார். வயித்து வலி. இன்னைக்கு வர முடியாது. ஒரு நாள் லீவு போட்டுக்கட்டுமா?”
“சரி. சரி. இன்னைக்கு லீவு போட்டு நல்லா ஒடம்பப் பாத்துக்கோ. take care. நாளைக்கு வந்துரு. வேலைகள் நெறைய இருக்கு.”

குடியிருந்த கோயிலுக்கு ஓட்ஸ் களி மேலதான் ஒரு சந்தேகம். அதுதான் வயித்துவலியா வந்திருக்கும்னு. மோர்க்கொழம்ப மூனுவாட்டி செந்தில்நாதன் சாப்பிட்டப்போ முழிச்சு முழிச்சு பாத்த வந்தாளே மகராசிக்கு மோர்க்கொழம்பு மேலதான் சந்தேகம்னு சொல்லித்தான் தெரியனுமா.
இந்தப் பிரச்சன ஓயாதுங்க. பாவம் செந்தில்நாதன்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

13 Responses to செந்தில்நாதன் – 1 – Working From Home

  1. கலக்கல் 🙂 மொக்கை நாடகம் எல்லாம் போட்டு பண்ற டார்ச்சர் இல்லையே. அதுவரைக்கும் செந்தில்நாதன் தப்பிச்சான்.

    • GiRa says:

      இவந்தான் உள்ள உக்காந்து கருமமே கருமமாயினானாச்சே. அதுனால மங்கலப் பேச்சுகள் பொங்கும் தொலைக்காட்சித் தொடர்களின் தமிழ் அவனோட காதுகள்ள விழல. 🙂

  2. sukumar,s says:

    வந்தது வரட்டும் என்று ஆபீசுக்கு ஓடிவிடுவதே மேல்!

    • GiRa says:

      அந்த அளவுக்கு செ.நாதனுக்கு விவரம் பத்தலை. அப்பிராணி அம்பளை.

  3. sudgopal says:

    வி..வி..சிரித்தேன்…நல்லா இருங்க செந்தில்னாதன்

    • GiRa says:

      ஏதோ ஒங்கள மாதிரி நாலு பேரு வாழ்த்துறதுனாலதான் அவன் வாழ்க்கையும் நல்லாப் போகுது.

  4. anandraaj04 says:

    சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு வலி வரலே .. பாவம் வீ வீ வா ப. மறுநாள் கதை என்னாச்சி..!? வயிறு வலி தொடருமா. !

    • GiRa says:

      மறுநாள் ஒரு தனிக்கதை. அடுத்து இன்னும் எங்கயாச்சும் மாட்டுறதுக்குன்னே நேந்து விடப்பட்ட ஆளுதானே செ.நாதன். அந்தச் சுவையான நிகழ்ச்சிக்குக் காத்திருப்போம்.

      ஆமா.. அதென்ன வீ வீ வா ப?

  5. Anusuya says:

    //கோழிக் கொழம்பு வெச்சதுக்கு இங்கிதம் தெரியாம கோழிரசமா என்று செந்தில்நாதன் கேட்டது இன்னும் நெஞ்சுக்குள்ள ஆறாம இருக்கு.//

    🙂 🙂 🙂 🙂

  6. Simply superb! நீங்க இவ்வலவு ஹாஸ்யமா எழுதுவீங்கன்னு தெரியாது 🙂 வாழ்த்துகள்! செம வாழ்க்கை அனுபவம்னு நினைக்கிறேன் 🙂

    amas32

  7. அருமை. படிக்க சுவையாக இருந்தது. ரசித்தேன். சுற்றுபுரங்களில் என்ன நடக்கின்றது என்று உன்னிப்பாக கவனிக்காமல் நம்மில் எத்தனை பேர்கள் ரசனை இல்லாமல் உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இதை ஒருமுறை படித்துணர வேண்டும். நன்றி உங்களுக்கும் @anandraaj04.

  8. மேனேஜர் work from home கொடுத்து பழிவாங்கினதும் செந்தில்நாதனுக்கு தெரியலை பாவம். இந்த மேனேஜர்களே இப்படித்தான்.. கரெக்டா 😉

  9. Pingback: செந்தில்நாதனும் மாமியார் வருகையும் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)