2. யாழ் மண்ணில்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்.

யாழ்ப்பாணத்துல எறங்குனதும் எதோ தமிழ்நாட்டுக்கே திரும்ப வந்துட்ட மாதிரி இருந்தது. ஸ்டேஷன விட்டு வெளிய வர்ரப்போ டிக்கெட்டை கொடுத்துட்டு வந்துறனும். மொபைல் புரட்சிக்கு முந்தி இந்தியாவுலயும் இப்படித்தான் இருந்துச்சு. வெளிய ஆட்டோ பிடிக்கலாம்னு போனோம். ஒரு வயசான வெள்ளைக்காரம்மா தனியா வந்து அங்க நின்னுக்கிட்டிருந்தாங்க. பொதுவாகவே வெள்ளைக்காரங்களுக்கு பயணத்துணிச்சல் நிறைய. சட்டுன்னு பொறப்பட்டுப் போயிருவாங்க.

அங்க இருந்த ஆட்டோ நிறுத்தத்துல கமல்னு ஒருத்தர் தான் வர்ரவங்களக் கேட்டு ஆட்டோவுல ஏத்தி விட்டுட்டிருந்தாரு. Hotel Green Grassல நான் தங்க ஏற்பாடு. அது நடக்குற தூரம். அதுனால எனக்கு ஆட்டோ வேண்டாம்னு வழியை மட்டும் காமிச்சிட்டாரு.

16807269_987727314693982_6452581435285171411_nஅந்த வெள்ளைக்காரம்மா YWCA போகனுமாம். இருநூறு ரூபாய்னு கமல் அவங்க கிட்ட சொன்ன நினைவு. அந்த ஊருக்கு சரியான தொகைதான்னு கானா பிரபா சொன்னாரு. என்னைய ஹோட்டல்ல விட்டுட்டு கானா பிரபா அவரோட எடத்துக்குப் போனாரு. நான் போய் கை கால் கழுவிட்டு சாப்பிடப் போனேன். இலங்கைக்கு வந்த பிறகு நான் உருப்படியா சாப்பிட்டது அப்பதான். காலைல எதோ மசாலா பன்ன அமுக்கிட்டு இரயில் ஏறினேன். இரயில்ல வடையும் சமோசாவும். அதுனால நல்லா திருப்தியா சாப்பிடனும்னு நெனச்சேன்.

ஆனா யாழ்ப்பாணத்துல சாப்பாட்டு அளவு எனக்கு ஒரு பெரிய பிரச்சனையா இருந்தது. ஏன்னா.. கொண்டு வந்த வெச்சதுல பாதிதான் என்னால சாப்பிட முடிஞ்சது. வீணாக்கக்கூடாதேன்னு நானும் எவ்வளவோ பாடுபட்டேன். ஆனாலும் முடியல. பரிமாறியவர் கிட்ட “மன்னிச்சிருங்க. என்னால முடிக்க முடியல”ன்னு சொல்லிட்டு எந்திரிச்சேன். சாப்பாட்டை மிச்சம் வெச்சிட்டா எனக்கு அதுவே ரொம்ப நேரம் மண்டைல ஓடிக்கிட்டேயிருக்கும்.

சாப்பிட்ட பிறகு சுத்தியிருக்கும் நாலு தெரு நடந்து யாழ்ப்பாணம் எப்படியிருக்குன்னு பாக்க நினைச்சேன். ஆனா ஒம்பது மணிக்கே ஊர் அடங்கியிருந்துச்சு. எந்தப் பக்கம் திரும்பினாலும் அமைதி. நான் எதாவது மனசுக்குள்ள பேசுனாக்கூட கொழும்பு வரைக்கும் கேக்குமோன்னு தோணுற அளவுக்கு அமைதி. புது எடங்குறதால நானும் ரொம்ப தூரம் போகாம ரெண்டாவது தெருவோட திரும்பிட்டேன். வழில ஸ்டேஷன் வாசல்ல ஆட்டோ வேணுமான்னு ஒருத்தர் கேட்டாரு. வேண்டாம்னு சொன்னேன். நான் பேசுன தமிழ வெச்சு ”தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கீங்களா”ன்னு சரியாக் கேட்டுட்டாரு.  எதோ சொந்தக்காரங்களைப் பாத்த மகிழ்ச்சி அவர் முகத்துல. அவரோட பேரு பிரீத்தன். எங்க ஏது என்ன எந்த ஊருன்னு ஆர்வமாக் கேட்டாரு. ”காலைல எங்கயும் போகனும்னா சொல்லுங்க. இங்கதான் இருப்பேன்”னு சொன்னவருக்கு நன்றி சொல்லிட்டு ஹோட்டலுக்கு திரும்ப வந்துட்டேன்.

16864160_987727338027313_5978766344542814359_nஅடுத்தநாள் காலைல குளிச்சு எந்திரிச்சு complementary breakfastக்கு வந்தேன். இடியாப்பம், பிட்டு, இட்லி, தோசை, சொதி, சாம்பார், சிக்கன் குருமா, சட்னி, சம்பல், வடை, பிரட், பட்டர், ஜாம், பழங்கள் எல்லாம் இருந்தது. ஆனா எல்லாமே ஆறியிருந்தது. ஆனா ஆம்லெட் மட்டும் கேட்டதும் போட்டுத் தர்ராங்க. இடியாப்பம் பிட்டெல்லாம் சிவப்பரிசில செஞ்சது. எனக்கு சம்பல் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. கிட்டத்தட்ட தேங்காப்பொடி மாதிரி இருந்தது. தொட்டுக்கிட்டு சாப்பிடுறதுக்கு சம்பல் சரியான பொருத்தம். வரும் போது அரைக்கிலோ வாங்கிட்டு வராமப் போயிட்டோமேன்னு இப்ப வருத்தமா இருக்கு.

நான் சாப்பிட்டு தயாரா இருக்குறப்போ கானாபிரபாவும் வந்துட்டாரு. இரயில்வே ஸ்டேஷன் வாசல்ல ஆட்டோ எடுத்தோம். வந்து இறங்குறப்போ இருந்த கமல் தான் ஆட்டோ பிடிச்சுக் கொடுத்தாரு. பிரீத்தன் அப்ப இல்ல. அதுனால  இன்னன்ன இடங்களுக்கெல்லாம் போகனும்னு சொல்லியே பிரபா ஆட்டோவைக் கேட்டாரு. இந்த மாதிரி மொத்தமாப் பேசி ஆட்டோ எடுத்துக்குறது ஊர் சுத்திப்பாக்க நல்லது.

16830728_987729488027098_8082257602839457098_nநேரா நாங்க போன மொதல் எடம் நல்லூர். தைப்பூசத்தன்னைக்கு காலைல நல்லூர்க் கந்தசாமி கோயில் வாசல்ல கொண்டு போய் நிறுத்தினார் கானா பிரபா. அவருக்கு நான் என்னன்னு நன்றி சொல்றது? எல்லா நன்மைகளையும் முருகன் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கொடுக்கட்டும்.

தைப்பூசமா இருந்தாலும் நல்லூர்க் கோயில்ல கூட்டமேயில்ல. வாரநாளா இருக்குறது மட்டுமில்லாம சாயங்காலம் தான் அங்க கூட்டம் திருவிழால்லாம் இருக்குமாம்.

dsc09317யாழ்ப்பாண அரசின் தலைநகரமா இருந்த ஊர் நல்லூர். யாழ்ப்பாணத்துல இருந்து பருத்தித்துறை போற வழில நல்லூர்ல சாலை வளைவாகத் திரும்பும் எடத்துல கோயில் அமைஞ்சிருக்கு. கோயிலுக்கு முன்னாடி பெரிய திடல். அதுல ஒரு கொப்பரைல சூடம் எரிஞ்சிக்கிட்டேயிருக்கு. யாராவது வந்து சூடத்தைப் போட்டுக்கிட்டேயிருக்காங்க. அதுக்கு முன்னாடி ஒரு கல்லு. அந்தக் கல்லுல தேங்காயை விடலை போடுறாங்க. எனக்கு விடலையெல்லாம் போட்டுப் பழக்கமில்ல. ஆசைக்கு நல்லூர்ல தேங்காயை வாங்கிட்டேன். சுத்தி மண்ணா இருக்கே.. நாம போடுற காய் கல்லுல பட்டுச் செதறுமான்னு ஒரு எண்ணம். ரொம்ப யோசிக்கக்கூடாதுன்னு படார்னு வீசுனேன். தேங்காய் தெறிச்சு ஒரு துண்டு தள்ளிப் போய் விழுந்துச்சு. நல்ல காய். மகிழ்ச்சி.

கோயிலுக்குள்ள நுழைஞ்சா மணி அடிக்குது. பத்தரை மணிக்கு பூசையாம். நம்மூர்கள்ள கிராமங்கள்ள பூசைன்னு சொல்ற மாதிரி இலங்கைத் தமிழர்கள் எல்லாருமே பூசைன்னுதான் சொல்றாங்க. பூ செய்வதனால் பூசைன்னு படிச்ச நினைவு. அதுக்கேத்த மாதிரி யாழ்ப்பாணத்து உச்சரிப்புல பூசெய்னுதான் கேக்குது.

கோயில்ல கந்தனைச் சரியாகப் பாக்க முடியல. கூட்டத்துனால இல்ல. உள்ள தள்ள்ள்ள்ளி முருகன் இருக்க, நமக்கும் முருகனுக்கும் அவ்வ்வ்வ்வளவு இடைவெளி. நம்ம அவனைப் பாக்குறோமோ இல்லையோ, அவன் நம்மளைப் பாத்தாப் போதாதா!

நம்ம ஊர்க்கோயில்கள் மாதிரி “இந்துக்கள் மட்டும் வரவும்”னு எழுதி வைக்கல. வெள்ளைக்காரங்கள்ளாம் உள்ள வர்ராங்க. ஆனா சாமி கும்புடுறவங்களுக்கோ பூசைக்கோ எடஞ்சல் இல்லாம பாத்துட்டுப் போறாங்க. கோயில் பராமரிப்பு மிக அருமை. துப்புரவா இருக்கு. மக்களும் கண்டதையும் கண்ட எடத்துல போடுறதில்ல.

கோயில் கோபுரம் தமிழ்க் கட்டிடக் கலையின் படி இருந்தாலும் கோயில்ல எதோவொரு மேற்கத்திய தாக்கம் தெரிஞ்சது. உள்ள தொங்கும் சரவிளக்குகள் அலங்கார வளைவுகள்னு குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இப்போ இருக்கும் நல்லூர்க் கோயில் காலத்தால கொஞ்சம் புதுசு. இன்னும் சரியாச் சொல்லனும்னா இது நாலாவது கோயிலாம்.

முதல் கோயில் கட்டப்பட்டது பத்தாம் நூற்றாண்டா பதிமூன்றாம் நூற்றாண்டான்னு ஒரு குழப்பம். இருக்கு. புவனேகபாகு என்னும் மன்னன் முதலாம் கோயிலை குருக்கள் வளவுங்குற எடத்துல கட்டியதாகச் சொல்லப்படுது. இந்தக் கோயிலை பதினைந்தாம் நூற்றாண்டில் படையெடுத்த சம்புமல் குமராயா அழித்துவிட்டாராம். பிறகு அவரே ஒரு கோயிலை எழுப்பினாராம். அதுதான் இரண்டாவது கோயில். ஆனா முதல் கோயில் இருந்த எடத்துல கட்டவில்லை. இப்போ சங்கிலியான் தோப்புன்னு அழைக்கப்படும் எடத்துல கட்டினாராம்.

பதினேழாம் நூற்றாண்டுல போர்ச்சுக்கீசியர்களால் அந்தக் கோயிலும் இடிக்கப்பட்டது. “கோயிலை இடிக்காம இருக்க எவ்வளவு வேணும்னாலும் பணம் தர்ரோம்”னு மக்கள் கேட்டுப் பாத்திருக்காங்க. ஆனா மக்கள் கேக்கக் கேக்கதான் போர்ச்சுக்கீசிய தளபதி பிலிப்டி ஒலிவெரா-வுக்கு கோயிலை அடித்தளத்தோட இடிக்கனும்னு தோணியிருக்கு. பிறகென்ன.. இடிச்சுத் தள்ளிட்டாரு. கோயில் இருந்த அதே எடத்துல ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டியிருக்காரு. அது இன்னமும் இருக்கு.

அதுக்குப் பிறகு டச்சுக்காரர்கள் இலங்கையைக் கைப்பற்றியிருக்காங்க. டச்சுக்காரர்கள் புரோட்டஸ்டேண்ட் கிருஸ்துவர்களாக இருந்திருக்காங்க. போர்ச்சுக்கீசியர்களைப் போல இவங்க மதக் கெடுபிடியோட இருக்கல. பழைய கோயிலை இடிச்சிட்டாலும் நம்ம மக்கள் பக்கத்துல சின்னதா மடம் ஒன்னு அமைச்சு வேல் நட்டி வழிபட்டிருக்காங்க. ஆனா மறுபடியும் யாராவது இடிச்சிருவாங்களோன்னு பெருசா எடுத்துக் கட்டல. இதுதான் மூனாவது கோயில்.

தமிழர்களோட விடா முயற்சியால முதன்முதலா கோயில் இருந்த குருக்கள் வளவில் புதுசா ஒரு கோயில் கட்டிக்க டச்சுக்காரர்கள் அனுமதி கொடுக்குறாங்க. அது எதோ நல்லெண்ணதுனால இல்ல. கிருஸ்துவ தேவாலயம் பக்கத்துல இருக்கும் கந்தமடாலயத்தைக் கிளப்புன மாதிரியும் ஆச்சு. குருக்கள் வளவுல அப்ப இருந்த வியாபாரப் போட்டியாளர்களான முஸ்லீம்களையும் கிளப்புன மாதிரியும் ஆச்சு. எல்லா மதங்களையும் அரவணைச்சுப் போறதா வேடம் போட்ட மாதிரியும் ஆச்சு. இப்படித்தான் நான்காம் கோயில் எழுப்பப்பட்டது.

இதுதான் நல்லூர் கந்தசாமி கோயிலோட சுருக்கமான வரலாறு. இன்னும் விரிவாகப் படிக்கனும்னா கானா பிரபா எழுதிய தொடர் பதிவுகளைப் படிங்க. நிறைய ஆதாரங்களோட விரிவா அருமையா எழுதியிருக்காரு.

16708552_987729394693774_7496557987279805218_nஇப்படியான நல்லூர்க் கோயில்ல சாமியப் பாத்துட்டு வெளிய வந்தா மண்டபத்துல பாட்டுக் கச்சேரி. பித்துக்குளி முருகதாசைப் போலத் தோற்றம். அருமையான எளிமையான தமிழ்ல முருகன் பாட்டுகளைப் பாடுனாரு. நான் தூணோரமா உக்காந்து கொஞ்ச நேரம் கண்ண மூடிக் கேட்டேன். இலக்கண சுத்தமான இசையை விட மனசுக்குள்ள இருந்து நேர்மையா வர்ர இசைக்கு இனிமையும் வலிமையும் கூடுதல். இவர் பாடிய பாட்டுகளும் அப்படித்தான் இருந்தது. இவர் யாருன்னு தெரியல. தெரிஞ்ச யாழ்ப்பாணத்துக்காரங்க சொல்லுங்க.

பிறகு வெளிய வந்து வெயிலுக்கு இதமா செவ்விளநீர் குடிச்சோம். அப்பதான் ஒன்னு கவனிச்சேன். நம்மூர் மாதிரி இல்லாம எளனிய காம்புப் பக்கமா வெட்டுறாங்க. அதுல என்ன வசதின்னா… ஸ்டிரா இல்லாமலே சொட்டு கூட வீணாகாமக் குடிக்க முடியுது.

அடுத்து பக்கத்துலயே செல்லப்பா சுவாமிகள் நினைவாலயத்தைப் பாத்துட்டு காத்திருந்த ஆட்டோவில் ஏறி ஊர் சுத்தப் பொறப்பட்டோம்.

தொடரும்…

அடுத்த பகுதியை இங்கு படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அனுபவங்கள், இலங்கை, நல்லூர், பயணம், யாழ்ப்பாணம் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to 2. யாழ் மண்ணில்

  1. amas32 says:

    செல்லப்பா சுவாமிகளின் நினைவாலையத்தைப் பார்த்தீர்களா? உங்களுக்கு என் வணக்கம். அவரின் சீடர் சிவயோகசுவாமியின் சீடர் தான் ஹவாயில் நந்தினாதப் பரம்பரையின் 162வது சத்குருவாக சைவ ஆதீன மடம் நிறுவியிருக்கும் சிவாயா சுப்பிரமுனிய சுவாமி. அவர் மீது எனக்கு மிகுந்த ஈட்பாடும் நம்பிக்கையும் உண்டு.

    முருகனருள் முன்னிற்க நல்ல ஒரு பயணத்தை மேற்கொண்டது கண்டு ரொம்ப மகிழ்ச்சி :-}

    amas32

    • GiRa ஜிரா says:

      ஆமாம் அம்மா. செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தைப் பார்த்தேன். சிவயோகசுவாமி பற்றியும் சிவாயா சும்பிரமுனிய சுவாமி பற்றியும் அங்கு பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

  2. yarlpavanan says:

    யாழ் வருகை, பயண அனுபவம் நன்று

  3. பகீரதன் says:

    ஒன்பது மணிக்கே ஊர் அடங்கும் காரணம் சில காலத்திற்கு முன்பு வரை இருந்த ஊரட‌ங்கு உ‌த்தரவு தான்.
    நீங்கள் எதிர்பார்த்து வந்த யாழ்ப்பாணம் இது தானா என்பதை அடுத்த பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்

    • GiRa ஜிரா says:

      நான் எதிர்பார்த்துப் போனேனா என்று தெரியவில்லை. வெள்ளைத் தாளாகத்தான் சென்றேன். எழுத்துகள் எல்லாம் அங்கு உணர்ந்தவையே. பார்த்தவையே. தொடர்ந்து படித்து கருத்தில் தவறுகள் இருப்பின் திருத்துங்கள்.

  4. Pingback: 3. வடுக்களை வருடிப் பார்த்தோம் | மாணிக்க மாதுளை முத்துகள்

  5. Pingback: தென்னிலங்கை மங்கை – 1 | மாணிக்க மாதுளை முத்துகள்

Leave a reply to amas32 Cancel reply