பேலியோ என்பது வேலியோ கேலியோ

பேலியோ உணவுமுறை பற்றிய நண்பர் பலராமனின் பதிவில் என்னுடைய பின்னூட்டம். பேலியோ என்றழைக்கப்படும் உணவுமுறை பற்றிய என்னுடைய கருத்துகளை விரிவாகச் சொல்வதால் இங்கு பதிவாகவும் வைத்துவிட்டேன்.

பேலியோ என்று இன்று அழைக்கப்படும் உணவுப்பழக்கத்தின் மீது எனக்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. ஆனால் எப்படி பொது உணவின் மேல் ஐயங்களும் கருத்துகளும் உண்டோ, அதே போல மாவில்லா உணவுமுறை மீதும் உண்டு.

e62102e6c3a89a11194eee4ccd8bee11எனக்கு இந்த உணவு முறையை பேலியோ என்று அழைப்பதில் ஏற்பில்லை. பேலியோவில் வாழ்ந்த குகை மனிதனின் உணவுமுறை என்று அழைக்கப்படும் இந்த உணவுமுறையில் பேலியோத்தனம் எதுவுமில்லை என்பது என் புரிதல். நியோபேலியோ என்று சொல்லிக் கொள்வார்களானால் எனக்கு மறுப்பில்லை.

வேட்டையாடி உண்ட குகைமனிதன் சமைத்துச் சாப்பிட்டிருப்பானா என்பதே பெரும் ஐயம். ஒருவேளை நெருப்பில் எதையாவது வாட்டி உண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஒருநாளில் எத்தனை முறை உணவு உண்டிருப்பான் என்பதும் மிகப்பெரிய கேள்வி. கிடைத்த போது உண்ட குகை மனிதனின் உணவுமுறைக்கும் மூன்று முறை உண்பதற்கு அட்டவணை கொடுப்பதற்கும் எப்பொருத்தமும் இல்லை என்பதென் தெளிவு.

அத்தோடு பேலியோ மனிதனின் உடலுழைப்புக்கும் நம்முடைய இக்காலத்து உணவுமுறைக்கும் மிகப்பெரிய இடைவெளியும் உள்ளது. பேலியோ உண்டால் உடல் உழைப்பு தேவையில்லை என்று யாரும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் முறையான உடலுழைப்பு இருந்தால் பேலியோவுக்கு மாறவேண்டியதில்லை என்றும் நினைக்கிறேன்.

அசைவப்பேலியோவைக் கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சைவப்பேலியோவை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நிறைய பதிவுகளையும் விளக்கங்களையும் படித்தாலும் என்னுடைய மண்டையில் ஏறவில்லை. பாதாம் பருப்பை வறுத்துச் சாப்பிடுவது எப்படி குகைமனிதனின் உணவுப்பழக்கமாகும் என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவும் எனக்கில்லை. இப்படியான பல காரணங்களினால்தான் இந்த உணவுப்பழக்கத்தை பேலியோ என்றழைக்க யோசனையாக இருக்கிறது. மாவில்லா உணவுமுறை என்று என் புரிதலுக்காக அழைத்துக் கொள்கிறேன்.

சரி.. பெயரை விட்டுவிடுவோம். உணவுப்பழக்கத்தில் மேன்மை தாழ்வு என்று எதுவும் இல்லை என்று நினைக்கிறவன் நான். பேலியோ என்றழைக்கப்படும் மாவில்லா உணவுமுறைக்கும் அது பொருந்தும்.

paleo-foods-paleo-food-list-paleo-diet-recipesஉணவுப்பழக்கம் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமாக ஒத்துக்கொள்ளும். அவரவர்களுக்கு ஒத்துக்கொள்வது கொள்ளாதது என்று புரிந்து உணவுப்பழக்கத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அதே போல முடிந்தவரை உடலுழைப்பும் தேவை. உடலுக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட சமநிலை உணவும் உடலுழைப்பும் உணவின் அளவும் மிகக் கவனமாக ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவை.

பலவித காரணங்களால் உடல் பருத்தவர்கள் பொது இடங்களிலும் பள்ளி கல்லூரிகளிலும் தாழ்வு மனப்பாங்கோடு இருந்திருப்பார்கள். அந்தத் தாழ்வு மனப்பாங்கு நீக்க மாவில்லா உணவுமுறை பலருக்கும் உதவியதில் மிக்க மகிழ்ச்சி. நீரிழிவு நோயும் பலருக்குக் கட்டுப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

இந்த மாவில்லா உணவுமுறை உண்மையிலேயே மிகச்சரியான முறையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரு மருந்து முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர பத்து வருடங்கள் ஆகின்றன. புதிய முறை உணவுப்பழக்கத்துக்கும் சாதக பாதகங்கள் புரிய பத்து ஆண்டுகளாவது ஆகும். ஆனால் மாவில்லா உணவுமுறையை முறைப்படி ஆராய்ந்து முடிவு சொல்ல யார் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

எந்தப் புதுக்கருத்து வந்தாலும் எதிர்ப்புகளும் வருவது வழக்கம். மாவில்லா உணவுமுறை மீதும் தீவிர எதிர்ப்புகளைப் பார்க்கிறோம். நாம் நண்பர்களை விட எதிர்களைத்தான் எதிர்நோக்க வேண்டும். அவர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகளும் தாக்குதல்களும் நம்மிடமிருக்கும் கருத்தை இன்னும் பட்டை தீட்டும். நம்மிடம் நேர்மை இல்லாத போதுதான் எதிரிகளின் மீது தாக்குதலில் இறங்குவோம். ஆகவே பட்டை தீட்டிக்கொண்டு முன்னேற விரும்புகிறவர்கள் எதிரிகளுக்குத்தான் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும்.

மாவில்லா உணவுமுறையை  முறையான கருத்துகளோடும் ஆதாரங்களோடும் தீவிரமாக எதிர்க்கின்றவர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அப்படியில்லாத எதிர்ப்புகளை மாவில்லா உணவுமுறைக்காரர்களும் மற்றவர்களும் புறந்தள்ளல் நன்றே.

cave-man-diet-cartoon-433pxமாவில்லா உணவுமுறையும் எதிரிகளின் எதிர்ப்புகளைப் படிக்கல்லாக்கிக் கொண்டு முன்னேறி வருமா என்பதைத் தீர்மானிக்கப் போவது காலம் தான். ஆகையால் அவரவருக்குத் தக்க வகையில் உணவுப்பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

மாவில்லா உணவுமுறையை இப்போதைய நிலையில் என்னால் பின்பற்ற முடியாது. ஆனால் வெள்ளைச் சர்க்கரை, இனிப்புகள், பால் (தயிர், மோர், வெண்ணெய், நெய் அல்ல), காப்பி, குளிர்பானங்கள் ஆகியவற்றை விலக்கிவிட்டேன். முடிந்த வரை ஜங்க் எனப்படும் தீய உணவுகளை உண்பதில்லை. இப்போதைக்கு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.

எங்காவது போனால் உபசரிப்பில் இனிப்புகளும் காப்பியும் வரும் போது சாப்பிடுவதில்லை என்று சொல்வது வழக்கமாகிப் போனதால் மாவில்லா உணவுப்பழக்கம் உள்ளவர்கள் வெளியில் போகும் போது படும் சிரமத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நல்லதைச் சாப்பிடுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஆண்டவன் அருள் அனைவருக்கும் ஆகட்டும்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in உணவு, சமையல் and tagged , . Bookmark the permalink.

10 Responses to பேலியோ என்பது வேலியோ கேலியோ

  1. amas32 says:

    நல்ல அலசல். நிறைய பேர் சைவ பேலியோவைப் பின்பற்றி பயனடைவதைப் பார்த்து நானும் ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் தான் பாலோ செய்தேன். எனக்கு அதுவே தாங்கிக் கொள்ள முடியவில்லை. வயிற்ருப் போக்கும், உடல் பலவீனமும், நடுக்கமும் என்னை சுழற்றிப் போட்டுவிட்டது. மாவுச்சத்து உடலில் இருந்து குறைந்ததால் ஏற்பட்ட விளைவு இது, அதற்குப் பேர் carb flu என்றார்கள். சிலருக்குப் பத்துப் பதினைந்து நாட்கள் வரை இப்படி இருக்கும், பிறகு சரியாகிவிடும் என்றார்கள். நான் அன்று இருந்த நிலையில் மூன்றாம் நாளே தாங்கிக் கொள்ளும் கதியில் இல்லை. நிறுத்தி விட்டேன்.அதனால் ஒவ்வொருவருக்கும் எது சரிப்பட்டு வருமோ அதைத் தான் தொடர முடியும்.

    பலர் {including Balaraman} சில காரணங்களுக்காக பேலியோ உணவை நிறுத்தி விட்டேன், அனால் பின்னால் ஒரு நாள் கண்டிப்பாகத் தொடர்வேன் என்று சொல்லக் கேட்கிறேன். நிறுத்த என்ன காரணம் என்று சொல்லுவதில்லை. பின்னால் தொடர்வார்களா என்றும் உண்மையில் நமக்குத் தெரியாது. இந்த உணவு முறையை தொடர்பவர்களின் அதீத மல்டி லெவல் மார்கெடிங் தனம் என்னை அச்சுறுத்துகிறது. நட்பாக இருந்த சிலர் பேலியோ உணவு முறை எனக்கு சரிப்படவில்லை என்று சொன்னால் நட்பை முறித்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.

    amas32

    • psankar says:

      நான் மரக்கறி பேலியோ ஒரு வாரம் பின்பற்றி விட்டு நிறுத்தி விட்டேன். சில தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைத்தது (acidity, flatulence, constipation, etc.). காலை: வெண்ணெய் + பால் / பாதாம், மதியம்: முட்டைக்கோசு / கொஞ்சம் சாதம் + நிறைய காய்கறிகள், இரவு: பாதாம் / பனீர். மூன்று நான்கு நாட்களிலேயே சாப்பாட்டு மேல் வெறுப்பு வந்து விட்டது. இரவு பனீர் தின்னவே பிடிக்கவில்லை. இது ஒத்து வராது என்று நிறுத்தி விட்டேன். புலால் உண்பவர்களுக்குத்தான் இது பிடிக்கும், குறைந்தது முட்டை. நனிசைவத்துக்கு ஒத்தே வராது.

      • amas32 says:

        உங்களை மாதிரி காரணம் சொல்லி நிறுத்துபவர்கள் வெகு குறைவு. ஏன் இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நிறுத்தியதற்கான காரணத்தை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி.

        amas32

    • //அதீத மல்டி லெவல் மார்கெடிங் தனம்// அப்படியா இருக்கு? எனக்கு தெரியவில்லை.
      //நட்பை முறித்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.// இப்படியெல்லாம் இருக்கிறார்களா?
      எனக்கு தெரிந்து யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. உணவு முறை என்பது அவரவர் விருப்பம். நானும் கூடவே இம்முறையை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒத்துப்போகிறது. கொல்ஸ்டிரால் பிரச்சனை மாத்திரையில்லாமல் காணாமல் போய்விட்டது.

    • balaraman says:

      நான் பேலியோ தீவிரவாதி இல்லை. நான் விட்டதுக்கு என் வீடும் நேரமின்மையும் தான் முக்கிய காரணம். வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்க அவர்களிடம் கலந்துரையாடி வருகிறேன். இப்போது கொஞ்சம் கேட்கிறார்கள். எனவே மீண்டும் தொடர்வேன் என்றும் தோன்றுகிறது. பார்க்கலாம். 🙂

  2. jeevagv says:

    Whatever benefit claimed is because is because of avoiding processed foods – I believe that’s the secret behind this.

  3. //கிடைத்த போது உண்ட குகை மனிதனின் உணவுமுறைக்கும் மூன்று முறை உண்பதற்கு அட்டவணை கொடுப்பதற்கும் எப்பொருத்தமும் இல்லை என்பதென் தெளிவு.// யாரையும் 3 வேளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொல்வதில்லை. பசிக்கும் போது மட்டுமே சாப்பிடச்சொல்கிறார்கள். நம்மவர்கள் பலரும் 3 வேளை சாப்பாட்டுக்கு பழகியாகிவிட்டது அதனால் அப்படி கொடுக்கிறார்கள்.100 கிராம் பாதாம் எனக்கு சில நாட்கள் 3 மணி நேரம் தாங்கும் சில நாட்கள் 2 மணி நேரம் தான் தாங்கும். சிலருக்கு 4 மணி நேரம் கூட தாங்குவதாக சொல்கிறார்கள்.
    பிரச்சனை இருந்தால் முயலுங்கள் இல்லாவிட்டால் பழைய உணவுமுறையிலேயே இருங்கள் என்று தான் சொல்கிறார்கள்.எதிலும் கட்டாயம் இல்லை.பாதி கார்ப் மீதி கொழுப்பு என்று சாப்பிட்டுவிட்டு பேலியோ மீது பழி போடாமல் இருந்தால் சரி. 🙂

    • GiRa ஜிரா says:

      // .பாதி கார்ப் மீதி கொழுப்பு என்று சாப்பிட்டுவிட்டு பேலியோ மீது பழி போடாமல் இருந்தால் சரி. //

      ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்து.

  4. balaraman says:

    அருமையான பதிவு. என் பதிவில் நான் உணவுமுறையைப் பற்றி பேசவில்லை. ஏனென்றால் அதை பலர் அலசி ஆராய்ந்துவிட்டனர். அதை எதோ ‘கொள்கை பரப்பும் புரட்சி’ போல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதைக் கொஞ்சமும் தெரியாமல் கிண்டல் அடிப்பதும் ஏற்பிள்லை. அதைப் பற்றி மட்டுமே எழுதினேன்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)